என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday 22 August 2020

Swiggy விவகாரம்

Swiggy விவகாரம்


Swiggy ஊழியர்களின் நிலை பரிதாபகரமானது.

இன்று குடும்பங்கள் சிதைவுண்டு ஆளுக்கொரு திசையில் சென்றுகொண்டிருக்கின்றன. கணவன்-மனைவி இருவருக்குமே தங்கள் குடும்பங்களின் மீது இருக்கும் நம்பிக்கையைவிட, தாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வேலை மீது இருக்கும் நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. இந்த நிலைப்பாடு தான் இங்கே பிரச்சனைகளை பல்வேறு கோணங்களில் திருப்பி விடுகிறது.

நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் மதிய உணவை ஒரு குழு 8 டாலர் விலையில் அலுவலகத்துக்கே சப்ளை செய்கிறார்கள். அவர்கள் வைத்திருக்கும் வாட்ஸாப் குழுவில் இணைத்து கொள்ள வேண்டும். நமக்கு உணவு தேவை என்றால் 11 மணிக்கு முன்பாக, அதில் சொல்லிவிடவேண்டும். ஒரு பெண் தினம் தினம் மூன்று வாங்குகிறார். ஒன்று மதியத்துக்கு. மற்ற இரண்டு இரவுக்கு, அவரது கணவனுக்கும் சேர்த்து. அதற்காகப் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை விட வேண்டும் என்று சொல்லவில்லை. ஹோட்டல் சாப்பாடு என்றோ ஒரு நாள் என்றால் பரவாயில்லை. தினம் என்றால் நாம் யோசிக்க வேண்டும். சம்பாதித்துச் சேர்த்த பணத்தையெல்லாம் மருத்துவமனையில் தருவதற்கு எதற்கு சம்பாத்தியம் என்பது என் கேள்விகளுள் ஒன்று.

ஆயிரக்கணக்கானவர்கள் தெருவில் இறங்கிப் போராடும் நிலைக்கு தள்ளியிருக்கிறது இந்த swiggy நிறுவனம். பார்க்கப்போனால் இது இன்று-நேற்று பிரச்சனை அல்ல. ஒரு காலத்தில் (சுமார் பத்தாண்டுகளுக்கு முன்) ஏகப்பட்ட பேரை வேலைக்கு எடுத்தது வங்கிகள். கொடுக்கப்பட்ட லோன்களுக்கான வட்டியை வாடிக்கையாளரின் வீட்டுக்கே சென்று பெற்று வங்கிக்கு வரவு வைப்பது தான் வேலை. அதிலாவது Basic Pay என்று ஒன்று இருந்தது. முடிக்கும் லோன் அளவுக்கு ஏற்ப incentives பெற முடியும்.

இங்கே நம்மூர்க்காரர்களின் நிலைப்பாட்டைப் பற்றிச் சொல்வது பொருத்தமாக இருக்கும். நம்மூர்க்காரர்கள் செய்யும் 'தொழிலில்' ஒரு சாசுவதமான 'இடம்'  (அதாவது மாதா மாதம், மாதச்செலவுகளுக்கான பணம்) வந்தவுடன் அக்கடா என்று இருந்துவிடுவார்கள். "அந்த வேலை போய்விட்டால் என்னாகும்?" என்ற முன்யோசனை துளியும் இருக்காது. வீட்டுக்கு கேபிள் கனெக்ஷன் இழுத்து பிக் பாஸ் பார்க்கத்துவங்கிவிடுவார்கள். இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறேன் என்று எண்ணுகிறேன்.


இங்கே நாம் ஒரு வேலையில் இருந்தபடியே இன்னொரு வேலைக்கு விண்ணப்பிக்கும் போது கேட்கும் கேள்வியை swiggy ஊழியர்கள் ஸ்ட்ரைக் என்று கிளம்பும்போதுதான் கேட்கிறார்களோ. அதுவரை, காட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டுவிட்டு இருந்திருக்கிறார்களோ என்று தோன்ற வைக்கிறது. தனியார் நிறுவன வேலைகளைப் பொறுத்தவரை எதுவும் நிரந்தரமில்லை. மூன்று ஆண்டுகள் முன்வரை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் திவாலாகும் என்று எந்த பொருளாதார நிபுணரும் கணித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அந்த நிறுவனம் இன்று திவால் தான். அதை யாரும் மறுப்பதற்கில்லை.

Swiggy, zomato மட்டுமல்ல, எல்லா தனியார் பணியிடங்களும் நிரந்தரத்தன்மை இல்லாதவைகளே. ஆகையால், செய்யும் 'தொழிலில்' ஒரு சாசுவதமான 'இடம்' வந்துவிட்ட பிறகு, 'ஒருவேளை இந்த வேலை போனால் என்ன?' என்கிற கேள்விக்கான பதிலுக்காக ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என்பதைத்தான் ஆலோசனையாகத் தர வேண்டி இருக்கிறது. 

Swiggy மீண்டும் தன் பழையை payout ஐ தர வேண்டும் என்று கோஷமிட்ட ஒருவர் தனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருப்பதாகச் சொன்னார். ஒரு குடும்பஸ்தனாக அவர் தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கும் அந்த வார்த்தைகள் உள்ளார்ந்த அர்த்தங்கள் வாய்ந்தவை. இது போன்ற சூழல்கள் யாருக்கும்  நேர்ந்துவிடக்கூடாது தான்.

ஆனால் தீர்வை எங்கு வைப்பது?

Swiggy போன்ற நிறுவனங்கள் Strike செய்யும் போது ஊழியர்களுக்குச் சொல்லும் எகத்தாள பதில்களை, அந்த  நிறுவனங்களின் அவர்கள் வந்து சேரும் முதல் நாளிலேயே 'நிலையற்ற வேலை', 'நிச்சயமற்ற ஊதியம்' போன்ற  ரிஸ்குகளை, அவருக்குப் புரிந்த மொழியில் அவரை அமர வைத்து, சொன்னால் தான் என்ன? ஆனால் இங்கே தான் கார்ப்பரேட் நிறுவனங்களின் கயமைத்தனம் வெளிப்படுகிறது.

அப்படிச்சொன்னால் எவனும் வரமாட்டான். ஆதலால் , அதற்கு sugar coated வார்த்தைகளை புழக்கத்தில் வைத்திருக்கிறார்கள். permanent position, contract position, delivery partner இப்படிப் பல பெயர்கள். ஊழியர்கள் தான் இவைகளைத் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும்.

சரி. குறைந்தபட்சம் இதுவாவது நடக்கலாம். ஊழியர் குறை தீர் மன்றங்கள், labor union போன்றவைகள் ஆறு மாதத்துக்கொருமுறை இதையெல்லாம் எல்லா ஊழியர்களுக்கும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். இது அரசாங்கத்தின் கடமை. எதையெதையோ செய்யும் அரசாங்கம் இதைச் செய்யலாம். எது எதற்கோ விளம்பரம் செய்யும் அரசாங்கம் இதழ்கும் விளம்பரம் செய்யலாம். ஆனால் அரசாங்க தொலைக்காட்சி தூங்கி வழிகிறது. தனியார் செய்தி நிறுவனங்கள் இதையெல்லாம் மறைக்கின்றன.

ஒரு நாட்டின் அரசாங்கமும், சமூகமும், மீடியாவும், தனியாரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து பொது ஜனத்தின் மீது தன் கயமைத்தனத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் சூழலில் ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும் என்றால் அது வேறு வழியே இன்றி அந்த ஊழியர்களைப் பார்த்துத்தான் 'நீயாச்சும் இதை தெரிந்துவைத்துக்கொள்ளேன்' என்று கேட்க வேண்டி இருக்கிறது.