என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday 25 August 2020

நண்பேன்டா!!


நண்பேன்டா!!



பத்தியின் தலைப்பு தான் ' நண்பேன்டா'வே ஒழிய இது நண்பனாயிருந்து எதிரியானவனைப்பற்றியது.

அப்போது எட்டாம் வகுப்பு காலாண்டுத்தேர்வு.  சரித்திரம் என்று நினைக்கிறேன். அன்று அந்தப் பரீட்சை. அப்போதே சரித்திரம் எனக்குப் பிடிக்காத பாடம் தான். எவன் வேண்டுமானாலும் என்னவேண்டுமானாலும் எழுதி ஆவணப்படுத்திவிடக்கூடும் என்கிற இப்போதைய நிலைப்பாட்டிற்கு அப்போதே ஆழமான வேர் ஊன்றியிருந்தது. ஆதலால் எத்தனை முயன்றும் கவனமெடுத்துப் படிக்கவில்லை. படித்தாலும் நினைவிலேயே நிற்கவில்லை.

ரங்கநாதன் வீடும் சைதாப்பேட்டை தான். ஜோன்ஸ் ரோடு தாண்டி வந்தால் என் வீடு என்பதால் அசால்டாக அவன் என் வீடு வருவதும் நான் அவன் வீடு செல்வதும் சேர்ந்து படிப்பதுமாக இருப்போம். அவன் அப்பா ஆட்டோ ஓட்டுனராக இருந்தார்.  சைதாப்பேட்டை - சி.ஐ.டி நகரை இணைக்கும் பாலத்துக்கு நேரெதிரால் அவன் வீடு. பக்கத்துலேயே விநாயகர் கோயில். என் வீட்டுக்குப் பக்கத்தில் காரணீஸ்வரர் கோயில். இரண்டு கோயில்களிலும் விழுந்து விழுந்து வணங்கியும், சன்னதிக்கு பின்புறம் கரியால் 'IX' என்று எழுதியும், அவன் போடுகிறானே என்று ஆயிரத்தெட்டு முறை 'ஆஞ்சனேயாய  நமஹ' என்று எழுதி போதறவாக வெட்டி மாலையாக்கி ஆஞ்ச நேயர் கழுத்தில் வாரா வாரம் இட்டும், அந்தக் கோயில் பூசாரி துளசி தீர்த்தம் என்கிற பெயரில் தண்ணீரில் கற்பூரத்தைக் கரைத்துத் தருவது தெரிந்தும் பக்தி சிரத்தையாக உள்ளங்கையில் வாங்கி பாயாசம் போல் குடித்தும், சாரதா வித்தியாலயாவில் படித்த பக்கத்து வீட்டு சங்கீதாவிடம் மாடல் கொஸ்டின் பேப்பர் கேட்டும், ஸ்கூல் ராங்க் வாங்கிய சீனியரின் பயன்படுத்திய ஜியாமென்ட்ரி பாக்ஸை சென்டிமென்டுக்காக வாங்கி அதில் பேனா, ரப்பர் எல்லாம் வைத்தும், இப்படி எத்தனையோ தந்திரங்கள் செய்தும் சரித்திரம் புரியவில்லை.

அதிலும் முக்கியமாக அந்த பாபர், அக்பர் பேர் குழப்பம் கடைசி வரை கூடப் புரியவில்லை.

இருந்தாலும் அசறாமல், முடிந்தவரை மனப்பாடம் செய்தும், இன்னமும் படிக்க நிறைய பாடங்கள் மிச்சமிருந்தது. கடைசியாக வேறு வழியே இன்றி 'பிட் அடிப்பது' என்று முடிவு செய்துகொண்டோம். எல்லா பாடத்துக்குமான பிட்டை உடம்பில் எல்லா இடங்களிலும் வைத்தால் மாட்டிக்கொள்ள வேண்டி வரும் என்று திட்டமிட்டு ஆளுக்கு கொஞ்சம் என்று ஏரியா பிரித்துக்கொண்டோம். moghul empire பற்றிய பிட் அவனிடம் இருந்தது. தமிழகத்து மன்னர்கள் பற்றிய பிட் என்னிடத்தில். (இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். தமிழகத்து வீர தீர மன்னர்கள் என்று வீர பாண்டி கட்ட பொம்மன் பற்றி படித்து வைத்திருந்திருக்கிறேன். அடப்பாவத்த!!)

தேர்வுக்கு போனோம். சரித்திரம் தெரியாததால் தமிழகம் இப்போது போல் அப்போதும் கைவிட்டுவிட்டது.

கேள்வித்தாளில் moghul empire பற்றிய கேள்வியே வந்திருந்தது. "இங்க இருக்கிற வேளச்சேரியையே தாண்டப்போறதில்லை. அப்புறம் எதுக்குடா moghul empire?" என்கிற உண்மையெல்லாம் எவனுக்குப் புரிகிறது? சரி நண்பன் தானே என்று கீச்சுக்குரலில் கேட்டால் 'எழுதிட்டு தரேன்' என்று பதில் வந்தது.

நானும் பிட் வரும் வரை தீவிரமாக எழுதுவது போல் இல்லாத நகத்தை கடிப்பதாய்ப் பாவனை செய்து, தோலைப் பிய்த்து தின்று கொண்டிருந்தேன். மிதமிஞ்சித் தின்றதில் விரல்களில் எல்லாம் ரத்தம். மொத்தம் மூணு மணி நேரம். எத்தனை யோசித்தும் எழுத எதுவுமே தோன்றவில்லை. "ஸ்டவ்வு மேல கடாயி......" போன்ற கருத்தாழமிக்க பாடலெல்லாம் அப்போதெல்லாம் யாரும் எழுதியிருக்கவில்லை. எழுதியிருந்தால் , அதையாவது மனப்பாடமாய் எழுதியிருக்கலாம். என்ன செய்வது? இப்போது போல் அப்போது அத்தனை கற்பனை வளமும் இல்லை. இருந்திருந்தால், ஏதேனும் மேத்தமேடிக்கல் ஃபிக்ஷன் எழுதி பேப்பர் திருத்தும் ஆசிரியரை வேறுப்பேற்றியிருக்கலாம். அந்த ஆள், இந்தக் கொடுமையெல்லாம் வாசித்து இருக்கும் கொஞ்ச நஞ்ச கணக்கையும் மறக்கடித்துக்கொள்வானேன் என்று பத்திக்கு ஒரு மார்க் வீதம் கொடுத்திருப்பார்.  நானும் பாஸாகியிருப்பேன்.

தேர்வரையில் எங்களைத்தவிர எல்லோரும் படித்திருந்தார்கள் போல. இரண்டரை மணி நேரத்தில் என்னையும், ரங்க நாதனையும் தவிர எல்லோரும் விடைத்தாளை மடித்துக்கொடுத்துவிட்டுப் போய்விட்டிருந்தார்கள். அப்போதுதான் தெரிந்தது, அந்தத் தேர்வுக்கு எவ்வளவு மோசமாகத் தயார் செய்திருக்கிறேன் என்று. வீட்டில் இனிக்க இனிக்கப் பேசி moghul empire பிட்டை தனதாக்கிக்கொண்டவன் கடைசி வரை காட்டவே இல்லை. பிட் காட்டமாட்டேங்குறான் என்று invigilator யிடம் கம்ப்ளெயின்டா கொடுக்க முடியும். வசமாக மாட்டுக்கொண்டுவிட்டேன்.

வீட்டுக்கு வந்து ரொம்ப யோசித்தேன்.  நாம் சைட் அடிக்கும் ஆளிடம் மொக்கை போடத்துடிப்பவனைக்கூட நம்பிவிடலாம். பிட் தராதவனை எப்படி நம்ப முடியும்.?! பிட்!! அது எப்பேற்பட்ட அறிவுச்சொத்து? அதைக்கூட பகிராதவன் எப்படி நண்பனாக இருக்க முடியும்?

அன்று முடிவு செய்ததுதான். அண்ணாமலை ரஜினிகாந்த் போல் 'இனிமேல் ஒவ்வொரு எக்ஸாம்லயும் உன் பிட் இல்லாமயே படிச்சு, முன்னேறி , உன்னை விட பத்து மார்க்காச்சும் வாங்கிக்காட்டலைன்னா, என் பேரு ராம்பிரசாத் இல்லடா" என்று சபதம் எடுத்தேன். அன்றிலிருந்து, அவன் சரத்பாபுவா தெரியாது. ஆனால், நான் அண்ணாமலை ஆகிவிட்டேன். அண்ணாமலை படத்தில் நடந்தது போல் எல்லாமும் நடந்தது (பாத்ரூமில் குஷ்புவை ஒட்டுத்துணியில்லாமல் பார்ப்பது தவிர).

அந்த ஒரு அனுபவம், அதன் பிறகு எந்தப் பயலையும் தேர்வரையில் நம்ப விடவில்லை. அப்போதுவரை ராங்க் பட்டியலில் பத்தாவது ராங்க், பன்னிரண்டாவது ராங்க் என்று வந்துகொண்டிருந்த என் பெயர், அதன் பிறகு  முதல் மூன்றில் வந்துவிடத்துவங்கியிருந்தது. அதை அப்படியே மெருகேற்றி, தொடர்ந்து முதல் ராங்க் வாங்குவதை வழக்கமாக்கிக்கொண்டேன்.

"சும்மா இருந்தவனை சொறிஞ்சி விட்டுட்டோமோ" என்று அவன் பிற்பாடு நினைத்திருக்கக்கூடும். அப்புறம் எப்படி எப்படியோ என்னிடம் வந்து ஒட்டப் பார்த்தான். அண்ணாமலை ரஜினியாய் மன்னித்திருக்கலாம்.  நான் ரொம்ப யோசித்தேன்.  நாம ஏன் அண்ணாமலை ரஜினி மாதிரி நடந்துக்கணும்? அண்ணாமலை ரஜினிக்கு நடந்ததெல்லாம்  நமக்கும் நடந்திடுச்சா? குறிப்பா அந்த பாத்ரூம் - குஷ்பு மேட்டர்? நடக்கலைல்ல. ஆதலால் நானும் மன்னிக்க வேண்டியதில்லை. ஆது தான் நீதி. (இந்த இடத்தில் " நீதி வழங்கும்போது அண்ணன், தம்பி, சொந்தம் பந்தம், பணக்காரன் ஏழை எதையுமே பாக்கக்கூடாதுடா... நாயத்தை மட்டும் தாண்டா சொல்லோனும்" என்கிற நாட்டாமை வசனத்தை நினைவூட்டிக்கொள்ளவும்.)

ஆதலால் அப்போது கத்தரித்தது தான் அந்தப் பயலின் நட்பை. அதன் பிறகு பத்தாவதில் சயின்ஸ் குருப் எடுக்கவும், பன்னிரண்டாவதில் எஞ்சினியரிங் சீட் மெரிட்டில் எடுக்கவும் அந்தப் பயல் 'சொறிந்து விட்டது' தான் உதவியது...

இப்போது, சரித்திரமோ , பூகோளமோ எதுவும் கடினமில்லை. இந்தப் பத்தியின் கருத்தும் இதுதான்.


"அண்ணாமலை ரஜினிக்கள்  தானாக உருவாவதில்லை. பிட் தராத ஒருவனால் உருவாக்கப்படுகிறார்கள்!!!"