என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday 23 March 2020

வதுவை - வாசிப்பு அனுபவம் - அருணா சுப்ரமணியன்

வதுவை  - வாசிப்பு அனுபவம் - அருணா சுப்ரமணியன் 


"வதுவை" குறுநாவல் குறித்தான எனது அனுபவத்தை இங்கு பதிவிடுகிறேன்.

திருமணத் தகவல் மையத்தில் புதிதாக வேலைக்கு சேரும் கதையின் நாயகன் அர்ஜுன் சந்திக்கும் மனிதர்கள், அவனது முதல் பணி அதன் மூலம் அவனுக்கு கிடைக்கும் அனுபவங்கள், காதல்,  இன்றைய காலக்கட்டத்தில் திருமணத்திற்கான எதிர்ப்பார்ப்புகள்  என்று விரியும் கதைக்களம். இதுவரையில் எங்கும் சொல்லப்படாத வித்தியாசமான கதைக்களம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. வழக்கமான கதைக்களங்களை தேர்வு செய்யாது முற்றிலும் புதிய, வேறுபட்ட கோணத்தில் இந்நாவல் படைக்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

தனது நேர்முகத்தேர்வில் "out of the box" பதில் ஒன்றைக் கூறி திருமணத் தகவல் மையத்தில் தனக்கொரு வேலையைத் தேடி கொள்ளும் அர்ஜுன் ஒரு ஆவலுடன் இந்த கதைக்குள் நம்மை ஈர்க்கிறான். தொடர்ந்து ஆணும் பெண்ணுமாய் நால்வர் சேர்ந்து வாழும் ஒரு வீட்டில் ஐந்தாவது நபராய் நுழையும் அர்ஜுன் மூலம் நமக்கு என்ன என்ன அனுபவங்கள் சொல்லப்பட இருக்கின்றன என்ற ஆவலை தூண்டுகிறது.



கதையின் நாயகன் அர்ஜுன் மூலம் விரிவான உளவியல் தர்க்கங்கள் கதையெங்கும் நம்முன் வைக்கப்படுகின்றன.  இந்த தர்க்கங்கள் நவீனம் என்ற போர்வையில் நாம் வழமையாக்கத் துடிக்கும் சில வாழ்க்கைமுறைகளை கேள்விக்குட்படுத்துகின்றன.  அர்ஜுன் மூலம் மட்டுமல்லாது கிருஷ்ணா மூலமும் இப்படியான கேள்விகள் நம்முன் வைக்கப்படுகின்றன. சராசரிக்கும் அதிகமாய் அநேகமாய் தகுதிகளை தன்னிடத்தில் வைத்திருக்கும் கிருஷ்ணா திருமணச்சந்தையில் புறக்கணிக்கப்படுவதன் காரணம் என்ன?    கிருஷ்ணாவை புறக்கணிக்கும் பெண்கள் தேர்வு செய்யும் ஆண்கள் யார்? அவர்களைக்  காட்டிலும் கிருஷ்ணா எந்த விதத்தில் தகுதி குறைவானவன் என்ற கேள்விகளுக்கு விடைகளை நாம் கண்டுகொண்டாலே இந்த நாவலின் நோக்கம் நமக்கு புலனாகும்.

ஆரம்ப காலகட்டங்களில் தனக்கான ஆண்மகனை பெண் தான் தேர்வு செய்தாள். வீரம், ஆள்பலம், விவேகம் என்று  பெண்ணால் தேர்வு செய்யப்பட்ட தகுதியுடைய  ஆண்கள் மூலம் அடுத்த  அடுத்த தலைமுறைகள் வலுவாக அமைந்தன.  இப்படியான தேர்வில் தகுதியில்லாத ஆண்கள் புறக்கணிக்கப்பட்டனர். இவ்வாறு  புறக்கணிக்கப்பட்ட ஆண்களுக்கும் பெண் கிடைக்கும் வழிமுறைகளைத் தான்  இடைப்பட்ட காலங்களில் குடும்பம் என்னும்  அமைப்பு செய்து கொண்டிருக்கின்றது. பெண்ணை அடக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மானுடம் கண்டுகொண்ட வழியிது.  ஆணுக்குப்பெண் நிகர் என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் இந்த நவீன காலகட்டத்திலும் தன் துணையை தானே தேர்வு செய்யும் நிலை முற்றிலும் பெண்களிடம் இல்லை என்பது தான் உண்மை.  ஆனால் அப்படியான வாய்ப்பு கிடைக்கப்பெற்றிருக்கும் பெண்களும் அந்த வாய்ப்பை ஒரு நல்ல துணையை  தேர்வுசெய்ய பயன்படுத்துகிறார்களா என்பதே இந்த நாவல் முன்வைக்கும் கேள்வி.

சராசரிக்கும் அதிகமான தகுதிகளைகொண்டிருந்தும்  பல  பெண்களால் புறக்கணிக்கப்பட்ட கிருஷ்ணாவை  தனது தெளிவானபுரிதலில் தேர்ந்தெடுக்கும்  தனுஜா ஒரு மாடல். இத்தொழில் பெரும்பான்மை ஆண்களின் தேர்வாக  இருக்காது என்று அர்ஜுன் சொல்கையில் தகுதியுடைய ஆண் கிடைப்பின் என்னை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்பதை ஒரு ஆய்வுக்குட்படுத்த மனம் விழைகிறது.  கதையின் முடிவில் தனது சம்பாத்தியங்களை கிருஷ்ணாவிடம் ஒப்படைத்து இனி மாடலிங் செய்வதில்லை வீட்டிலேயே இருக்கலாம் என்று நினைக்கிறன் என்று தனுஜா சொல்வது நெருடலாகிறது.
இதுவும் தனக்கு ஏற்றவளாய் பெண்ணை வடிவமைத்துக்கொள்ள ஆணினம் கட்டமைத்து வைத்திருக்கும் இன்னும் ஒரு வழிமுறை தானே  என்று என் பெண்மனம் கேள்வி எழுப்புவதை தவிர்க்க முடியவில்லை.

முடிவாக,  "வதுவை"  பல அடுக்குகளை கொண்டுள்ள இச்சமூகத்தை ஒரு கிராஸ் செக்ஷனல் ஸ்டடிக்கு உட்படுத்தி நம்முன் பல தரவுகளை வைத்துள்ளது. பெண்களின், பெண்களின் பெற்றோர்களின்  தேர்வுகளையும் கேள்விக்குட்படுத்தி நமக்குள் பல சிந்தனைகளை தூண்டிவிடுகின்றது. நாவலில் சிற்சில குறைபாடுகள் இருப்பினும் இக்கதையின் நோக்கம் ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க நாம் என்ன செய்யலாம் என்ற  வழிக்காட்டுதலை முன்மொழிவது பாரட்டத்தக்கதொன்று.

-அருணா சுப்ரமணியன்