என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday, 17 October 2009

ப‌டுக்கைய‌றைக் கொலை - 3

ப‌டுக்கைய‌றைக் கொலை - 3


ஊருக்கு தெரிய வேண்டாத துன்பத்தை சுமந்தபடி சன்னமாய் அழுதது அந்த வீடு. நடு வீட்டுல் கயிற்றுக்கட்டிலில் எலும்பும் தோலுமாய் வற்றிப்போய் சுயநினைவின்றி கிடந்தார் அப்பா. மாரடைப்பு. இன்னும் நினைவு திரும்பவில்லை. கட்டிலருகே அழுதபடி துவண்டு கிடந்தாள் அம்மா. சற்று தள்ளி, தன் இருகால்களினிடையே முகம் புதைத்து விம்மிக்கொண்டிருந்தாள் புவனா.

இதற்கெல்லாம் காரணம் வைரவன். ஊரில் முக்கிய புள்ளி. தோட்டம் வயல்வெளி என்று பரம்பரை சொத்து ஏராளம். 38 வயதுக்குமேலும் திருமணம் செய்யாமல் ஊரெல்லாம் வப்பாட்டி வைத்து, புடுபுடுவென புல்லட் சத்தம் காதைக்கிழிக்க பவனி வரும் ஒரு உதவாக்கரை. ஏழ்மை காரணமாக புவனா அதே ஊரில் ஒரு கருவாடு, இரால் பண்ணையில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தாள். என்ன‌தான் இரால் ப‌ண்ணையில் வேலை என்றாலும் புவ‌னாவிற்கு ம‌ன‌சு ரொம்ப‌ பெருசு. த‌ன்னால் முடிந்த‌வரை, யாரென்றும் பாராமல் தைரியமாய் எல்லோர்க்கும் உத‌வுவாள். அதே ஊரில் பைத்திய‌மாய்த் திரிந்து கொண்டிருந்த மஞ்சு என்ற ஒரு பெண்ணை ஒரு ம‌ழை நாளில் சில‌ பொறுக்கிக‌ள் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்பார்க்க‌, அதைத் த‌ந்திர‌மாய்த் த‌டுத்து அவ‌ளை அன்று முத‌ல் பாதுகாப்பாய் த‌ன் வீட்டிலேயே த‌ங்க‌ வைத்த‌வ‌ள். என்ன‌தான் ம‌ஞ்சுவிற்கு பைத்திய‌ம் தெளிந்தாலும், ஊர் ந‌ம்ப‌ ம‌றுக்க‌ த‌ன் ச‌கோத‌ரியாய் அவ‌ளைத் த‌ன் ஒத்தாசைக்கு என்று கார‌ண‌ம் சொல்லித் த‌ன்னுட‌னேயே வேலைக்கு வைத்துக்கொண்டாள். வீடுவீடாய் ட்ரை சைக்கிளில் சென்று இரால், க‌ருவாடு விற்ப‌துதான் வேலை. ம‌ஞ்சுவும் புவ‌னாவும் மாறி மாறி செய்வார்க‌ள்.


உதவி கேட்க ஆயிரம் பேர் இருந்தும் ஓரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் வேறு வழியின்றி இவனிடம் பண உதவி கேட்டு, திருப்பிதர முடியாமல் போகவே, அந்த பணத்திற்கு ஈடாக நன்றாய் வளர்ந்து ஆளாகியிருந்த, அழகு மயில் புவனாவை 'வைத்துக்கொள்வதாக' வைரவன் கட்டாயப்படுத்த, அதனால் வந்த மாரடைப்பில் விழுந்தவர்தான், இதோ வீடே துக்கவீடாய் மாறியிருந்தது.
அந்த மோசமான சூழ் நிலையிலும், கொஞ்ச‌ம் கூட‌ ம‌ன‌சாட்சியின்றி புவ‌னாவை த‌ன் வீட்டுக்கு வ‌ர‌ச்சொல்லி ஆள் அனுப்பியிருந்தான். கேட்டதெல்லாம் தருவதாகச் சொல்லி அருணா என்கிற பெண்ணை தூது அனுப்பி, அதிலும் தன் அனுபவத்தை காட்டியிருந்தான். புவனாவிற்கு சகலமும் புரிந்துபோனது. அவன் நிறுத்தப்போவதில்லை. அவன் ஒரு மிருகம். மிருகத்திடம் மனசாட்சி எதிர்பார்க்க முடியாது.

தூதாய் வந்த பெண்ணிற்கு இதில் நல்ல அனுபவம் போல. பக்குவமாய் புரிய வைத்தாள். புவனா ஒரு முடிவிற்கு வந்தாள். அங்கீகரிப்பாய் புன்னகை செய்தாள். அதில் பல அர்த்தங்கள் உள்ளடக்கினாள். கடைக்குச்சென்று மீடியம் சைஸ் சட்டை ஒன்றை வாங்கி தூது வந்தவளிடம் தந்தனுப்பினாள். யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ளும்படி வைரவனிடம் சொல்லச்சொல்லி அனுப்பினாள்.


அருணா புன்சிரிப்பாய் அந்த ச‌ட்டையை வைர‌வ‌னிட‌ம் த‌ர‌, அவ‌னுக்கு புரிந்துவிட்ட‌து. த‌ன் ஆஜானுபாகு உட‌ல் இளைக்க‌வேண்டும், இள‌ந்தோற்ற‌ம் வேண்டுமென்று அவ‌ள் குறிப்பால் உண‌ர்த்திய‌து புரிந்துகொண்டு உட‌ல் இளைத்தான். ப‌டித்த‌ பெண் அல்ல‌வா? விருப்ப‌த்திலும், அதை வெளிக்காட்டுவ‌திலும் தெரிந்த‌ முதிர்ச்சி க‌ண்டு அதிச‌யித்தாள் அருணா. அவ‌ளும் ஒரு கால‌த்தில் விப‌சாரியாய் இருந்த‌வ‌ள் தான். இருந்தாலும் இத்துணை நெளிவு சுளிவு தெரிந்த‌வ‌ளாய் அவ‌ள் இருக்க‌வில்லை. இந்த கால‌த்துப்பெண்க‌ள் மிக‌வும் தெளிவுதான்.

என்ன‌ இருந்தாலும் ஒரு பாத‌க‌னுக்கு ப‌டுக்கைய‌றைப்பாவையாக‌ இருக்க‌ப்போவ‌தை நினைத்து அவள் வெதும்பியிருக்க‌வேண்டும். புவ‌னா இளைத்துக்கொண்டே போனாள். உட‌ல் மெலுந்து கொண்டே போன‌து. ஆனால், புவ‌னா அதைப‌ற்றிக் க‌வ‌லைப்ப‌ட்ட‌தாக‌த் தெரிய‌வில்லை.

வைர‌வ‌னைத் த‌ன் வீட்டுக்கு வ‌ர‌ வேண்டாமென்றாள். தானே ஒரு நாள் அவ‌ன் வீட்டுக்கு வ‌ருவ‌தாக‌ச் சொன்னாள். ஒரே வீட்டில் இருந்த‌தினால், ம‌ஞ்சுவுக்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்ப‌து புரியாம‌ல் இல்லை. புவ‌னா, அவ‌ளுக்கு தெய்வ‌ம். புவ‌னாதான் என்ன‌ செய்வாள் ஒற்றை ஆளாய், அதுவும் பெண்ணாய். அவ‌ளைச்சொல்லிக் குற்ற‌மில்லை. எல்லாம் வைர‌வ‌னால்தான். இதுபோல் எத்த‌னை பெண்க‌ளை சீர‌ழித்திருப்பான். த‌ன்னைக் காப்பாற்றிய‌ புவ‌னாவை காப்பாற்ற‌ வேண்டும். அவ‌ளை ம‌ட்டும‌ல்ல‌, எல்லா பெண்க‌ளையும். அத‌ற்கு வைர‌வ‌ன் கொல்ல‌ப்ப‌ட‌ வேண்டும். யாருக்கும் தெரியாமல் தான் கொன்றுவிட்டால், போலீஸ் க‌ண் த‌ன் மீது விழாது. ஏனெனில் தான் ஒரு பைத்திய‌ம் என்ப‌தாக‌த்தான் ஊரில் எல்லோருக்கும் நினைப்பு. அப்ப‌டியே தெரிந்தாலும் பைத்திய‌த்திற்க்குதான் ம‌ருத்துவ‌ சிகிச்சை த‌ருவார்க‌ள். இந்த ப‌ண‌ப்பைத்திய‌ங்க‌ளுக்கு ம‌த்தியில் பைத்திய‌க்கார‌ ஆஸ்ப‌த்திரி எவ்வ‌ள‌வோ மேல். ம‌ஞ்சு வ‌ஞ்ச‌ம் கொண்டாள். அவ‌னைக் கொல்ல‌ ச‌ம‌ய‌ம் பார்த்தாள். நாள் குறித்தாள்.

இர‌ண்டு நாள், க‌ழித்து ஒரு மாலை வேளையில், ம‌ஞ்சு த‌ன் இடுப்பில் கூர்மையான‌ க‌த்தியை ம‌றைத்து வைத்து வைர‌வ‌ன் வீட்டுக்கு ட்ரை சைக்கிளில் இரால், க‌ருவாடு இற‌க்க‌ சென்றாள். செல்லும் வ‌ழியெங்கும் ச‌ன‌ம் த‌ள்ளிப்போன‌து நாற்ற‌த்துக்கு ப‌ய‌ந்து. வாலிப‌ர்க‌ள் பைத்திய‌த்திற்கு ப‌ய‌ந்து ஒதுங்கினார்க‌ள். ச‌த்த‌மாய் பாட்டுப்பாடி, த‌லையை இப்ப‌டியும் அப்ப‌டியுமாய் அசைத்து, சிரித்த‌வாறே ம‌ஞ்சு வைர‌வ‌ன் வீட்டை நெருங்கினாள். கொல்லைப்புற‌த்தில் வ‌ண்டியை நிறுத்திவிட்டு, இடுப்பில் ம‌றைத்த‌ க‌த்தியுட‌ன் வைர‌வ‌னை தேடினாள். ஹால், வ‌ராண்டா, ரூம், சாமிய‌றை, ச‌மைய‌ற்க‌ட்டு, தோட்ட‌ம் என் எங்கு தேடியும் வைர‌வ‌ன் கிடைக்க‌வில்லை.

எங்கு போயிருப்பான்? ச்சே, இவ‌னுக்கெல்லாம் நேர‌ம் ச‌ரியாய் அமைகிற‌தே? த‌ப்பிவிட்டானே.. மாட்டாம‌லா போவான். நாளையோ நாளை ம‌று நாளோ நிச்சயம் மாட்டுவான். புவ‌னாவை க‌ள‌ங்க‌ப்ப‌ட‌ விட‌க்கூடாது. அத‌ற்குள் அவ‌னை கொன்றுவிட‌லாம். நாளையே கொன்றுவிட‌லாம் என்று முடிவு செய்து வ‌ண்டியை திருப்பினாள், க‌டைக்கு. க‌டைதாண்டி ஒரு குப்பைமேட்டை ஒட்டிய‌ வாய்க்காலில் விற்ற‌து போக‌ மீதியைக் கொட்டிவிடுவ‌து வ‌ழ‌க்க‌ம்.

வாய்க்காலை ஒட்டி வ‌ண்டி நின்ற‌தும் இராலும், கருவாடு மூட்டையும் மெல்ல அசைந்தது கண்டு மஞ்சு துணுக்குற்றாள். நொடிகள் செல்ல செல்ல பலமாக அசைந்தது. சற்று நேரத்தில் இராலை, க‌ருவாடைக் க‌லைத்துக்கொண்டு புவ‌னா இற‌ங்குவ‌தைக்க‌ண்டு ம‌ஞ்சு அதிர்ச்சிய‌டைந்தாள். வ‌ண்டியில் வைர‌வ‌னின் உயிர‌ற்ற‌ உட‌ல் க‌ருவாடுக‌ளுக்கு ம‌த்தியில் தெரிந்த‌து. ‌புவ‌னா, வைர‌வ‌னின் பிரேத‌த்தோடு ஒரு பெரிய‌ க‌ல்லைக் க‌ட்டி சாக்க‌டையில் த‌ள்ளினாள். கையோடு வைத்திருந்த கொடிய விஷம் நிறைந்த குப்பியை சாக்கடையில் வீசினாள்.‌ பின், கடைக்கு வந்து தண்ணீர் தெளித்து தன் காது மடல்களை மிகக்கவனமாக சோப்பு போட்டு கழுவினாள்.

ம‌ஞ்சுவுக்கு புரிந்துவிட்ட‌து. தான் வைர‌வ‌னைக் கொல்ல‌, அவன் வீடு நோக்கி ட்ரைசைக்கிளில் சென்ற‌போதே புவ‌னா ட்ரைசைக்கிளில் தான் இருந்திருக்கிறாள். அவ‌ள் உட‌ல் மெலிந்து போயிருந்த‌தால் வித்தியாச‌ம் தெரிய‌வில்லை. மஞ்சு வீட்டினுள் வைரவனைத் தேடிக்கொண்டிருந்தபோது, புவ‌னா வைர‌வ‌னை அவன் படுக்கையறையில் ச‌ந்தித்திருக்க‌ வேண்டும். புவனாவை நெருங்கிய வைரவன் அவள் கன்னத்தில் முத்தம் பதித்துக்கொண்டே அவள் காது மடல்களை பொங்கி வந்த காமத்தில் கடித்திருக்கவேண்டும். விஷம் தடவப்பட்ட காதுமடல்களிலிருந்த‌ கொடிய விஷம் அவனைக் கொன்றிருக்க வேண்டும். வைரவனின் உயிரற்ற உடலை புவனா ட்ரைசைக்கிளில் கருவாட்டு மூட்டைகளுக்கு மத்தியில் மறைத்து தானும் ஒளிந்திருக்கவேண்டும். வைரவன் ஏற்கனவே மெலிந்திருந்ததால், வித்தியாசமாய் தெரிந்திருக்கவில்லை.


இப்போது புரிந்தது மஞ்சுவிற்கு, புவனா வைரவனை ஏன் இளைக்கச் சொன்னாள் என்று.

- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.(ramprasathtcs@gmail.com)

Sunday, 4 October 2009

படுக்கையறைக் கொலை - ௨ - கீற்று

படுக்கையறைக் கொலை - 2
http://www.keetru.com/index.php/2009-08-09-04-42-53/2009-08-16-08-14-01/575--2.html

பெட்ரூமில் தொங்கிக்கொண்டிருந்த சீலிங் ஃபேனை தாங்கிப்பிடிக்கும் ஸ்க்ரூக்களை மிகவும் கவனமாக ஸ்க்ரூ ட்ரைவரால் திருகி லூசாக்கிக்கொண்டிருந்தான் வைத்தி என்கிற வைத்தியனாதன். வைத்தி அந்த வீட்டின் ஓனர் சாந்தினியின் மாமா. சாந்தினியின் கணவன் ராகவுடன் பிஸினஸ் செய்கிறான். சாந்தினியின் அப்பாவின் உயில்ப‌டி சாந்தினி தான் 50 கோடி ரூபாய் சொத்துக்கு அதிப‌தி. இந்த‌ வீடும் அந்த‌ சொத்தில் அட‌க்க‌ம்.
வீட்டில் யாரும் இல்லை. யாரும் வ‌ருவ‌த‌ற்க்குள் காரிய‌த்தை முடிக்க‌வேண்டும். இதோ, இந்த‌ ஸ்க்ரூவைத் தள‌ர்த்தி,ஆன் செய்த‌ 10 நிமிட‌ங்களுக்குள் விழுந்துவிடுமாறு செட் செய்துவிட‌வேண்டும். ம‌ணி இப்போது 1. மதியம் 2 ம‌ணிக்குள் ஷாப்பிங் சென்ற சாந்தினி வ‌ந்துவிடுவாள். மதியமானால் சாப்பிட்ட‌தும் ஒரு குட்டித்தூக்க‌ம் போடுவ‌து அவ‌ள் வ‌ழ‌க்க‌ம். வ‌ந்த‌தும் சாப்பிட்டுவிட்டு ஃபேன் ஆன் செய்து ப‌டுத்துவிடுவாள்.

ஸ்க்ரூ லூசாகிவிட்ட‌ ஃபேன், அடுத்த‌ 10 நொடிக‌ளுக்குள் சாந்தினியின் மேல் விழும். அதிக‌ ப‌லுவான கண்ணாடி விளக்குகள் பதித்த டுயல் ஃபேன் விழுந்த‌தும் கூர்மையான கண்ணாடிகளால் அவள் உடல் கிழிக்கப்பட்டு இற‌ந்துவிடுவாள். போன வாரம் தான் சரி செய்யப்பட்ட ஃபேன் என்பது எல்லோருக்கும் தெரியும்.சாந்தினி பெட்ரூமில் அவள் இற‌ந்தால், ப‌ல‌ன‌டைய‌ப்போவ‌து அவ‌ள் க‌ண‌வ‌ன் ராக‌வ். ஏனெனில் அவ‌ளின் 50 கோடி சொத்து. மேலும் அது சாந்தினியின் படுக்கையறை. அதில் சகல உரிமை உள்ளவன் ராகவ் தானே. அத‌னால் போலீஸின் முத‌ல் ச‌ந்தேக‌ம் ராக‌வ் மீது தான் விழும். ராக‌வ் தான் கொலையாளி என்ப‌த‌ற்கு இவைக‌ளே கார‌ண‌ங்க‌ளாகிவிடும். அவ‌ன் ஜெயிலுக்கு சென்ற‌தும் கார்டிய‌ன் என்கிற‌ பெய‌ரில் சொத்தை அனுப‌விக்க‌லாம்.

எல்லாம் செய்தாகிவிட்ட‌து. இனி அவ‌ள் வ‌ர‌ வேண்டிய‌து தான். ஃபேன் போட‌வேண்டிய‌து தான். சாக‌வேண்டிய‌துதான். ஆட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் வேட்டை ஒநாயைப்போல் காத்திருந்தான் வைத்தி. சாந்தினியின் கார் ச‌த்த‌ம் கேட்க‌வே, அவ‌ள் வ‌ரும் நேர‌ம், பேச்சுக்கொடுக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லாத‌வாறு தூங்குவ‌து போல் பாசாங்கு செய்ய‌லானான்.

அவ‌ள் உள்ளே வ‌ரும் அர‌வ‌ம் கேட்ட‌து. தொட‌ர்ந்து பாத்ரூமில் த‌ண்ணீர் ச‌ல‌ச‌ல‌ப்பும், கிச்ச‌னில் பாத்திர‌ங்கள் உருளும் ச‌த்த‌மும் கேட்டன. அவள் முகம் கை கால் கழுவிவிட்டு சாப்பிடுகிறாள். அவ‌ன் எதிர்பார்த்தப‌டியே எல்லாம் ந‌ட‌ப்ப‌தாய் அவ‌னுக்கு உண‌ர்த்தின‌.

சிறிது நேர‌ம் க‌ழித்து, அவ‌ள் பெட்ரூம் க‌த‌வுக‌ள் சாத்த‌ப்ப‌டும் ஓசை கேட்ட‌து. வைத்தியை இன‌ம் புரியாத‌ ஒரு உண‌ர்வு தொற்றிக்கொண்ட‌து. என்ன நடக்குமோ என்கிற ஆர்வ‌மா, ஒரு உயிரை சாக‌டிக்க‌ப்போகிற‌ ப‌த‌ட்ட‌மா தெரிய‌வில்லை. காத்திருந்தான். திடீரென்று டெலிபோன் ம‌ணி அடிக்கும் ச‌த்த‌ம் கேட்ட‌து.

அய்யோ, இந்த‌ நேர‌ம் பார்த்தா டெலிபோன் அடிக்க‌ணும். ச்சே..

டெலிபோன் அழைப்பின் ம‌றுமுனையில், ராக‌வ் இட‌து கையில் இருந்த‌ மொபைல் ஃபோனால் வீட்டு லாண்ட்லைனை அழைத்த‌ப‌டி, வ‌ல‌து கையில் இன்னொரு ஃபோனால் ச்ந்த்ருவுக்கு க‌ட்ட‌ளையிட்டுக்கொண்டிருந்தான். ச‌ந்த்ரு, த‌ன் காதுக‌ளில் மாட்டியிருந்த‌ வ‌ய‌ர்ல‌ஸ் சாத‌ன‌த்தில் கேட்டுக்கொண்டே குழல் துப்பாக்கியால் மறைவாக நின்றபடி சாந்தினி வீட்டு டெலிஃபோன் ஸ்டாண்டை குறிவைத்து காத்திருந்தான்.
'ச‌ந்த்ரு, க‌ன்ஃப‌ர்ம்ட். அவ‌ சிவ‌ப்பு க‌ல‌ர்ல‌ சுடிதார் போட்ருப்பா. வீட்ல இருக்குற ஒரே பொம்பளை அவ தான். கால் வந்தா அவ தான் எடுப்பா. டெலிஃபோன‌ எடுத்த‌தும் போட்ரு'.

ரிசீவ‌ரை ம‌றுமுனையில் அவ‌ள் எடுக்க‌ காத்துக்கொண்டே ச‌ந்த்ருவையும் காத்திருப்பில் வைத்திருந்தான். வீட்டில் இருப்ப‌து சாந்தினியும் அவ‌ள் மாமாவும். இன்னொருத்த‌ர் வீட்டில் விருந்தாளியாய் த‌ங்கியிருப்ப‌தால், சாந்தினி இருக்க‌, அவ‌ர் ஃபோன் எடுக்க‌ மாட்டார். சாந்தினி தான் எடுப்பாள். சாந்தினியின் மாமா துப்பாக்கி சுடுத‌லில் கைதேர்ந்த‌வ‌ர் என்ப‌து எல்லோருக்கும் தெரியும். அவ‌ர் கைவ‌ச‌ம் வைத்திருந்த தோட்டாக்க‌ளைத்தான் ச‌ந்த்ரு துப்பாக்கியில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்போகிறான். ஃபாரென்ஸிக்கில் தோட்டாவிற்க்கான துப்பாக்கி வைத்தியினுடையது என்பது கண்டுபிடிக்கப்படும். சாந்தினி கொலையானால் நிச்ச‌ய‌ம் மாட்ட‌ப்போவ‌து அவ‌ள் மாமா தான். அத‌ற்க்கு பிற‌கு சொத்து முழுவ‌தும் த‌ன‌க்குத்தான் என்றெண்ணிய‌ப‌டியே ப‌த‌ட்ட‌மாய் காத்திருந்தான் ராக‌வ்.

எட்டு முறை அலறிவிட்டு அமைதியானது ஃபோன். 'இவள் எப்போதுமே இப்படித்தான். ஃபோன் அடித்தால் உடனே எடுக்கமாட்டாள்' என்று கருவியபடியே மீண்டும் தன் வீட்டு லாண்ட்லைனை அழைத்தான் ராகவ்.

ரிஸீவ‌ர் எடுக்க‌ப்ப‌ட்ட‌து. உட‌னே ச‌ன்ன‌மாய் ச‌ந்த்ருவுக்கு சிக்ன‌ல் கொடுத்தான். ஃபேன்சிக்காய் பொறுத்தப்பட்ட வண்ணக்கண்ணாடி ஜன்னல் வழியே சிவப்பு கலர் துணியை கிழித்து ஸைல‌ன்ச‌ர் பொறுத்த‌ப்ப‌ட்ட‌ துப்பாக்கி அமைதியாய் த‌ன் வேலையைச் செய்த‌து. பேச‌ப்ப‌ட்ட‌ மீதிப்ப‌ண‌த்தை வாங்கிக்கொண்டு த‌லைம‌றைவானான் ச‌ந்த்ரு.

தான் அனுபவிக்கப்போகும் ராஜ வாழ்க்கைக்கு கடைசி முதலீடாய், மனைவி சாவுக்கு புரண்டு புரண்டு அழுது நடிக்க ஆயத்தமானவாறே அவ‌னை அனுப்பிவிட்டு த‌ன் வீடு நோக்கி ந‌ட‌ந்தான் ராக‌வ். வீட்டை நெருங்க‌ நெருங்க‌ ப‌த‌ட்ட‌ம் அதிக‌மான‌து. வீட்டு புல்வெளியைத்தாண்டி ம‌தில் சுவ‌ரோர‌ம் நின்று ப‌க்க‌த்து வீட்டு மாமியிட‌ம் கதைக்கும் பெண்ணைப்பார்த்ததும் தூக்கிவாரிப்போட்ட‌து ராக‌விற்கு. கார‌ணம், அந்த‌ பெண் சாந்தினி போல‌வே இருந்ததுதான். கிட்ட‌ப்போக‌ போக‌ ராக‌விற்கு வ‌யிற்றில் புளியைக்க‌ரைத்த‌து போலிருந்த‌து. அந்த‌ பெண் சாந்தினியேதான்.

இவ‌ள் எப்ப‌டி உயிருட‌ன். ஃபோனில் சுட்டுவிட்ட‌தாக‌ சொன்னானே ச‌ந்த்ரு. பொய் சொல்லிவிட்டானா. அட‌ப்பாவி, அவ‌ள் செத்த‌தை உருதிப்ப‌டுத்தாம‌ல் அவ்வ‌ள‌வு பெரிய‌ தொகை கொடுத்துவிட்டோமே. அத‌ற்க்கு சாந்தினி க‌ண‌க்கு கேட்டால் என்ன‌ சொல்வ‌து என்று ப‌ல‌வாறு யோசித்த‌ப‌டியே வீட்டினுள் நுழைந்தான். வீடே அமைதியாயிருந்த‌து. வெய்யிலில் சென்று வ‌ந்த‌து புழுக்க‌மாயிருந்த‌து. சந்த்ரு ஏமாற்றியது கோபம் வந்தது. வெறுப்பாய் ஃபேன் ஸ்விட்ச் த‌ட்டிவிட்டு சோபாவில் அம‌ர்ந்தான்.

ச்சே, ஏமாற்றிவிட்டானே. அவ‌னை என்ன‌ செய்ய‌லாம்? அய்யோ, அவ‌னை இப்போது எங்கிருந்து பிடிப்ப‌து. இவ‌னை மாதிரி நாடோடிக‌ளை எப்ப‌டிப்பிடிப்ப‌து.

விய‌ர்வை வ‌ழிவ‌து நிற்க‌வில்லை. நெற்றிப்புருவம் சுறுங்க‌ அப்போதுதான் க‌வ‌னித்தான்.ஃபேன் ஓட‌வில்லை. க‌ர‌ண்ட் இல்லை. ஏதோ தோன்றி எழுந்து சென்று டெலிஃபோன் ஸ்டாண்டைப்பார்த்த‌வ‌ன் உறைந்தான். அங்கு வைத்தி ர‌த்த‌ம் ப‌டிந்த‌ சிவ‌ப்பு ஜிப்பாவில் ம‌ல்லாந்து இற‌ந்துகிட‌ந்தான். தான் முத‌ல் த‌ட‌வை அழைத்தபோது, கரண்ட் போயிருக்க வேண்டும். காற்றோட்டத்திற்காக சாந்தினி வெளியில் வந்திருக்கவேண்டும். சாந்தினிக்கு ப‌திலாக‌ வைத்தி டெலிஃபோனை எடுத்திருக்க‌ வேண்டும். ஃபேன்சி வ‌ண்ண‌க்க‌ண்ணாடி வ‌ழியே, ஜிப்பாவில் வைத்தியை சாந்தினி என்று நினைத்து ச‌ந்த்ரு சுட்டிருக்க‌ வேண்டும். ராக‌விற்கு புரிந்துபோன‌து. நடந்ததை அவன் மனம் ஜீரணிக்க சிறிது நேரம் பிடித்தது. அதிர்ச்சி அவ‌னை ஆசுவாச‌ம் கொள்ள‌ பின்னோக்கி த‌ள்ளிய‌து.

மெல்ல‌ மெல்ல‌ அவ‌ன் விய‌ர்வை அட‌ங்குவ‌து போலிருந்த நொடிகளில் க்ள‌க் என்ற‌ ச‌த்த‌த்துட‌ன் ஃபேன் பார‌ம் தாளாம‌ல் ஸ்க்ரு நெகிழ்ந்த‌து. பின்னோக்கி உந்த, தன்னையும் அறியாமல் பெட்ரூமினுள் வந்த அவன் மீது விழுந்த‌து ஃபேன். ‌ராக‌வ் ர‌த்த‌ வெள்ள‌த்தில் சிறிது நேர‌ம் துடித்துப்பின் மெல்ல‌ அட‌ங்கிப்போனான்.

கரண்ட் வந்து 10 நொடிகள் தாண்டியிருந்தது.
வாச‌லில் இது ஏதும் அறியாம‌ல் சாந்தினி, ப‌க்க‌த்து வீட்டு மாமியிட‌ம் க‌தைத்துக்கொண்டிருந்தாள்.

- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.(ramprasathtcs@yahoo.co.in)

Thursday, 17 September 2009

படுக்கையறைக் கொலை - கீற்று

படுக்கையறைக் கொலை - சிறுகதை
http://www.keetru.com/2009-08-09-04-42-53/2009-08-16-08-14-01/421-2009-09-11-00-54-00.html


'என்ன திமிரு இவளுக்கு? இன்னொரு நாட்டுல இருக்கோம்னு கூட இல்லாம இப்படியா அலைவா ஒரு பொம்பள? இருக்கட்டும். இவள என்ன பண்றென்னு பாரு' மனதிற்க்குள் கருவியபடி வராண்டாவை தாண்டிக் கொண்டிருந்தான் சுனில்.

சுனில் திருமணமானவன். மனைவி பெயர் மது என்கிற மதுமிதா. மதுவை ஒரு ஒவியக்கண்காட்சியில் பார்த்து அவளின் கண்கவர் ஓவியங்கள் பிடித்துப்போய் பெற்றோருடன் பேசி முடித்த திருமணம். சுனிலுக்கு கென்யா நாட்டில் ப்ராஜெக்ட். இருவரும் ஒரே ஐ.டி. நிறுவனத்தில் வேலை என்பதால் இருவருக்கும் ஒரே நாட்டில் ஆன்சைட் பிடிப்பது சுலபமானது. விளைவு, இருவரும் கென்யா நாட்டில். கலவியலுக்கு பெயர் பெற்றவர்கள் கென்யா நாட்டு கருப்பர்கள். கென்யா ஆன்சைட் இவர்கள் எதிர்பாராதது, ஆனால் அதுதான் இருவரும் ஒன்றாய் பறப்பது போல் கிடைத்தது. ஆனால் சுனிலுக்கு ஏனோ இங்கு வருவது மதுவின் ஆசையோ என்றொரு எண்ணம் முதலிலேயே வந்தது. காரணம் இதற்கு உதவிய மதுவின் தோழி, கொஞ்சம் அப்படி இப்படி என்று கேள்விபட்டிருக்கிறான். மதுவிடம் கேட்டபோது யார் எப்படி இருந்தால் என்ன என்பதே பதிலாய் வந்தது. அதை அப்போதைக்கு சுனிலும் விட்டுவிட்டான்.

சுனிலின் தற்போதைய கோபத்திற்கு காரணம், முந்தினம் அவன் பெட்ரூமில் கண்ட காட்சிதான். உண்மையில் அவன் அப்போது வீட்டில் எதிர்பார்க்கப்படாத தருணம். அந்நேரம் அவன் ஆபிஸில் தான் இருப்பான். ஆவளும் தான். அன்று தான் எடுக்க மறந்த ஃபைலை எடுக்க வீட்டுக்கு வந்தவன், காரிடாரில் ஜன்னல் வழியே கண்ட காட்சியில் வந்த துவேஷம் தான் இது. அவன் பார்த்தது, இரவு போல் அடர்த்தியாய் திரைச்சீலையால் மூடிக்கிடந்த பெட்ரூமில் மது ஒரு கறுப்பனோடு கட்டித்தழுவிக்கிடந்த காட்சிதான். திரைச்சீலை ஓரமாய் ஒதுங்கியிருந்த இடைவெளியில் சில‌ நொடிக‌ளே அவ‌ன் பார்த்தாலும் அவ‌னை உலுக்கியெடுத்துவிட்ட‌து.

உட‌னே அவளைக் கொன்று போட‌த்தோன்றிய‌து. அந்த கறுப்பனை ஒரு விதத்தில் குறை சொல்ல முடியாது. அவனவன் ஃப்ரியாய் கிடைத்தால் பினாயிலைக்கூட குடிக்கிற காலத்தில் தளதள தக்காளியாய் மது மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா எவன் சும்மா இருப்பான். இவளுக்கு எங்கே போச்சு புத்தி. அவளைக்கொன்று போடத்தான் வேண்டும். ஆனால் தான் கொலை கேஸில் மாட்டிவிட்டால், பாதியில் வ‌ந்த‌வ‌ளுக்காக‌ த‌ன் எதிர்கால‌ம் சிறையிலா?, அத‌ற்காக‌ அவ‌ளை அப்ப‌டியே விட்டுவிடுவ‌தா? வேண்டாம், சாவு தான் அவ‌ளுக்கு ச‌ரி ஆனால் தான் இதில் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டு விட‌க்கூடாது, சுவ‌டே தெரியாம‌ல் காரிய‌ம் செய்ய‌வேண்டும். நிமிட‌ நேர‌த்திற்குள் அவ‌ன் மூளை கிரிமின‌லாக‌ வேளை செய்த‌து. உட‌னே ஆபிஸ் திரும்பினான். திரும்பும் வ‌ழி முழுதும் அவளை எப்படிக்கொல்லலாம் என்றே சிந்தனை போனது.

வ‌ரும் வ‌ழியில் அடுக்கு மாடிக்க‌ட்டிட‌ம் க‌ட்டிக்கொண்டிருந்தார்க‌ள். சுனில் ம‌ன‌தில் ஒரு மின்னல் வெட்டிய‌து. மெல்ல‌ அந்த‌ க‌ட்டிட‌ம் ‌முழுக்க‌ சுற்றிப்பார்த்தான். கைதேர்ந்த கொலைகார‌னாய் ம‌ன‌ம் வேலை செய்த‌து.‌ ஆபிஸில் வேலையில் ம‌ன‌ம் செல்ல‌வில்லை. பேச்சில‌ராக சுற்றித்திறிந்த கால‌த்தில் விளையாட்டாய் ப‌ழ‌கிய துப்பாக்கி நினைவுக்கு வ‌ந்த‌து. கல்லூரி நாட்களில் செய்த சில எலெக்ட்ரானிக் சமாசாரங்களுடனும் சில புல்ல‌ட்களுடன் ப்ளான் ரெடி. சாய‌ந்திர‌ம் 5 ம‌ணிக்கே வீட்டிற்கு கிள‌ம்பிவிட்டான். முத‌லில் அந்த அடுக்கு மாடிக்க‌ட்டிட‌ம் இரண்டாவ‌து மாடி ஏறினான். அங்கிருந்து பார்த்தால், அவ‌ன் வீட்டு பெட்ரூம் தெரிந்த‌து. லாவ‌க‌மாய் ஒரு டைம‌ருடன், மறக்காமல் சைலன்சருடன், காலை 6 மணிக்கு ஆட்டோமாடிக்காக வேலை செய்வதுபோல் செட் செய்தான்.‌ க‌ட்டிட‌ம் க‌ட்டுகிறார்க‌ள். சுவ‌ர் வேலை ந‌ட‌க்கிற‌து. நாளைப்பொழுது விடிந்த‌தும் சுவ‌ர் வைத்து விடுவார்க‌ள்.

ராத்திரி அவள் சன்னலோரம் படுத்திருப்பாள். சரியாய் காலை 6 மணிக்கு துப்பாக்கி வெடிக்கும். அவள் மெளனமாக செத்துப்போவாள். சைலன்சர் பொருத்தியிருப்பதால் சத்தமே கேட்காது. உடனே துப்பாக்கியை அகற்றிவிட வேண்டும். 8 மணிக்கெல்லாம் சுவர் எழுப்பத் தொடங்கிவிடுவார்கள். எப்படியும் இவள் செத்த விவரம் தெரிய குறைந்தது 12 மணி நேரம் ஆகும். அதற்க்குள் எழுப்பப்படும் சுவர் துப்பாக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை மறைத்து விடும். போலீஸ் வ‌ந்து பார்த்தால் சின்ன‌ க்ளூ கூட‌ கிடைக்காது. தானும் இந்த‌ 12 ம‌ணி நேர‌ம் வெளியில் இருப்ப‌தாய் எவிட‌ன்ஸ் க்ரியேட் செய்து விட்டால் போதும். ப்ளான் சூப்ப‌ர். ம‌ட‌ ம‌ட‌ வென‌ காரிய‌ம் முடித்தான். ந‌ண்ப‌னுட‌ன் த‌ண்ணி பார்ட்டி என்று அவ‌ள் தோழிக்கு வேண்டுமென்றே போன் செய்து மறுநாள்தான் திரும்பப்போவதாக அவ‌ளுக்கு க‌ன்வே செய்துவிடும்ப‌டி சொல்லி கூடுதல் எவிடன்ஸ் க்ரியேட் செய்துவிட்டு நண்ப‌ன் வீட்டுக்கு சென்றுவிட்டான்.

இர‌வு அவ‌னுக்கு நீள‌மான‌தாகக் க‌ழிந்த‌து. ந‌ன்றாக‌ குடித்திருந்த ந‌ண்ப‌ன் எழுந்திருக்க‌‌ நேர‌மாகும். காலை 5 ம‌ணிக்கே புற‌ப்ப‌ட்டான். அவ‌ள் சாவ‌தை பார்த்து ர‌சிக்க‌வேண்டும். ச‌த்த‌மில்லாம‌ல் ரூம் திரும்ப‌வேண்டும். போலீஸ் கேட்டால் அவ‌ன் ந‌ண்ப‌னும், அவ‌ள் தோழியும் தான் எவிடென்ஸ்.

ம‌ணி 5:56.

ச‌த்த‌மில்லாம‌ல் அவ‌ன் ப்ளாட் நெருங்கினான். 5:59:59 ம‌ணி வ‌ரை குண்டு பாயாது. சாகும் முன் கடைசியாக அவ‌ளை ஒரு முறையாவ‌து பார்த்துவிட‌ வேண்டும் என்று தோன்றிய‌து. 5:59:59 க்கு முன் குண்டுக்கு வழிவிட்டு ந‌க‌ர்ந்து விட‌ வேண்டும். அவ‌ள் செத்த‌தும் ம‌ற‌க்காம‌ல் அந்த‌ துப்பாக்கியையும் காலி செய்துவிட‌ வேண்டும். அக்கம் பக்கம் பார்த்தான்.

ம‌ணி 5:58:45

மெல்ல‌ ‌காரிடார் தாண்டி ச‌ன்ன‌லை நெருங்கினான். திரைச்சீலை அகன்று முழுக்க திறந்திருந்தது. அந்த விடிகாலையிலும் முன்தின‌ம் பார்த்த‌து போல் அவ‌ள் அந்த‌ க‌ருப்ப‌னுட‌ன்‌ க‌ட்டிப்பிடித்து ப‌டுத்திருந்தாள்.

ம‌ணி 5:59:15

அடிப்பாவி, ச‌ண்டாளி..இன்னிக்குமா?

அவ‌னுக்கு ஏதோ வித்தியாச‌மாய் ப‌ட்ட‌து. இவ‌ர்க‌ள் ஏன் நேற்று பார்த்த‌ அதே போஸில் ப‌டுத்திருக்கிறார்க‌ள். அதுவும் இம்மிகூட‌ ஆடாம‌ல் அசையாம‌ல். ஒரு நிமிட‌ம் ம‌ன‌ம் குழ‌ம்பிய‌து. அதே நேர‌ம் ஹாலில் யாரோ இருப்ப‌து போல் தோன்ற‌ அங்கே பார்த்தான். ம‌து எதையோ க்ளீன் செய்து கொண்டிருந்தாள். அப்போ இது யார். மீண்டும் ப‌டுக்கையை பார்த்தான். மெல்ல‌ விடிந்து கொண்டிருந்த‌ நேர‌த்தில், மெல்ல ப‌ர‌விக்கொண்டிருந்த‌ வெளிச்ச‌த்தில் அது தெரிந்த‌து. அது வண்ணங்களால் வரைந்தெடுக்கப்பட்ட ஒரு மெத்தை விரிப்பு. ம‌து 3டி ஓவிய‌ங்க‌ள் வ‌ரைவ‌தில் கில்லாடி என்ப‌து நினைவுக்கு வ‌ந்த‌து. வெளிச்ச‌ம் ப‌ர‌வ‌ ப‌ர‌வ‌, அந்த ஓவிய‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் புரிந்துகொண்டிருந்த‌து.‌ இருவ‌ர், அரை நிர்வாண‌மாய், ஒன்று ம‌து, ம‌ற்றொன்று, க‌ருப்ப‌ன‌ல்ல‌. வெளிச்ச‌த்தில் அது த‌ன்னைப்போல‌வே இருந்த‌து. இருளில் க‌ருப்பாய் தெரிந்திருக்கிற‌து. 3டி ஓவியம் பார்ப்பதற்கு அச்சு அசலாக இருந்தது. விரிப்பின் வ‌ல‌து ஓர‌ம் ப‌ளிச்சிட்ட‌து அந்த‌ வாச‌க‌ம் 'ஹாப்பி ப‌ர்த்டே சுனில்'. சுனிலின் மூளை நினைவ‌டுக்குக‌ளில் அவ‌ன் பிற‌ந்த‌ நாளை தேடிக்கொண்டிருந்த‌ நேர‌த்தில்....

ம‌ணி 6:00..... ப்ள‌ப்...

சுனில் சாய்ந்து விழுந்துகொண்டிருந்தான், ம‌ண்டையில் குண்டு துளைத்த ஓட்டை வ‌ழியே ர‌த்த‌ம் குபுகுபுவென‌ வ‌ந்துகொண்டிருந்த‌து...‌

Monday, 27 July 2009

திற‌வாத‌ க‌த‌வுக‌ள் - சர்ரியலிஸ கவிதை

திற‌வாத‌ க‌த‌வுக‌ள் - சர்ரியலிஸ கவிதை


வார்த்தைகளைச் சரமாய்க்கோர்த்து
உன் பதில்களுக்கான
கேள்விகளாக்கி
அச்சிலேற்றுகிறேன் மின்னஞ்சலில்...
அவ்வார்த்தைக‌ளின்
கொல்லைப்புரக்க‌த‌வு வ‌ழியே
ஒடுகிறாய்
த‌லைவாச‌ல் க‌த‌வுக‌ளைத்
தாழிட்டுவிட்டு...
திற‌க்க‌ சாவியின்றி
தொட‌ர்ந்து த‌ட்டுகிறேன்
அக்க‌த‌வுக‌ளை,
வெகுநேரமாய்...

திடீரென்று அவ்வ‌ழியேபோன‌
க‌ருத்த‌ மேக‌த்திலிருந்து
இற‌ங்கி வ‌ருகிறாய்
ஏதும் ந‌ட‌வாத‌துபோல்...
திற‌வாத‌ க‌த‌வுக‌ளைப்ப‌ற்றி
ஏதும் கேளாம‌ல்
மெள‌ன‌மாய்த் தொட‌ர்கிறேன்
உன்னை...
பின்னாளில் அதே க‌த‌வுக‌ளுக்கு
சாவி நீயே த‌ருவாய்
என்று...


- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.(ashwin_i1980@yahoo.co.in)

Saturday, 18 July 2009

வித‌வை ம‌றும‌ண‌ம் - விகடன்

வித‌வை ம‌றும‌ண‌ம்

http://youthful.vikatan.com/youth/ramprasath13072009.asp


வேலியில்லா பூவையும்,
துடுப்பில்லா மிதவையும்
போலத்தானிந்த‌
மாங்கல்யமில்லா விதவையும்.


இளம்பெண்ணென்றழைத்த‌
நாவாலினி கூசாமல்
கைம்பெண்ணென்றழைக்கும்
மூட சமூகமினி
முக்காடிட்டு முகத்தை மூடி
வெட்கமின்றி அவளை
இரவுக்குமழைக்கும்
ஓரக்கண்களால்...


அபசகுனமிவளென்று
ஒதுக்கிவைக்கும்,
அவ்வாறொதுக்குவதே தங்களுக்கும்
அபசகுனமென்றறியாமல்...


நிறங்களை நிராகரிக்கச்சொல்லி,
உப்பில்லா உணவுண்ண‌ச்சொல்லி,
நான்கு சுவ‌ர்க‌ளுக்குள் அடைந்து
அறுசுவைகளையும் மறந்து
கைதியைப்போலொரு வாழ்க்கை
வாழ்ந்தால் மட்டுமே
உத்தமியென்போமென்கிறது உலகம்...


பட்டமுடித்தபின் பள்ளிப்பாடம்
என்பதுபோல,
மணமுடித்து மனவிளிம்புகளையும்
தாண்டித்தளும்பி நிரையும்
அன்பை உடலில் ஏந்தி
பரிமாரப் பழகியவளுக்கெதற்கு
இந்திரியங்களை அடக்கும்
பயிற்சி மீண்டும்...


வெம்மையின் வெக்கையுள்ள‌வ‌ரை
உட‌ல் த‌டுமாறும்
உட‌லில் வேட்கையுள்ள‌வ‌ரை
ம‌ன‌ம் த‌டுமாறும்,
வாழ்க்கை த‌ட‌ம்மாறும்.
ம‌ண‌முறிந்த‌ பெண்ணுக்கித‌னை
ம‌ன‌முவ‌ந்து அளித்திட‌வேண்டா.


ம‌றும‌ண‌மொன்றே
ஈடுசெய்யுமவள் இழந்தவைகளை,
அது முறையாக்கும‌வ‌ள்
உட‌ல் வேட்கைக்கான வ‌டிகாலை.
அஃதொன்றே திருப்பித்தருமவள்
மனம் களைந்தவைகளை.


ம‌ண‌முறிவென்ப‌தோர்
ப‌க்க‌த்தின் முடிவே...
அத்தியாய‌த்தின் அடுத்த‌ ப‌க்க‌ங்க‌ளில்
எதிர்பார்ப்புக‌ளைப் புதைத்து வைத்து
வாழ்க்கைப் புத்த‌க‌ம்
தொட‌ர‌வே செய்யும்.
அந்தப் ப‌க்க‌ங்க‌ளில்
த‌ன் வ‌ரிக‌ளைச்சேர்க்கும் உரிமை
அவ‌ளுக்கும் உண்டு,
ஓர் ஆணைப்போல‌‌...


- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.(ashwin_i1980@yahoo.co.in)http://www.ramprasathkavithaigal.blogspot.com/

Wednesday, 22 April 2009

உடற்பயிற்சி - சில உண்மைகள் - விகடன்

உடற்பயிற்சி - சில உண்மைகள்...
http://youthful.vikatan.com/youth/bcorner5.asp

தான் செய்யும்/ செய்ய நேரும் ஒவ்வொரு காரியத்தையும் நியாயப்படுத்தவேண்டிய கட்டாயம் தனக்கு இருப்பதாகவே ஒவ்வொரு மனிதனும் நினைத்துக்கொள்கிறான். நாடு, மொழி, இன வேறுபாடுகளையும் கடந்து உலகம் முழுவதும் மனிதர்கள் இப்படி நினைப்பவர்களாகத் தான் உள்ளார்கள். இப்ப‌டியான‌ செய்கைகளுக்கு டிஃப‌ன்சிவ் (defensive attitude) அட்டிடுட் என‌க் கொள்ள‌லாம்.

உதாரணமாக, நேற்று ஜிம்மிலிருந்து திரும்பி வீட்டிற்க்குள் நுழைந்தேன். நண்பர் ஒருவர் வந்திருந்தார். நண்பருடன் இன்னொரு நபரும் வந்திருந்தார். வழக்கமான உபசரிப்புகளுக்குப் பிறகு உடற்பயிற்சி பற்றிய பேச்சு வந்தது. நானும் நண்பரும் உடற்பயிற்சி தேக ஆரோக்யம் என்றும் எல்லோரும் செய்ய வேண்டிய ஒன்று என்றும் வலியுறுத்திக் கொண்டிருக்க அந்த இன்னொரு நபர், ஜிம் என்பது பயனற்ற நேர விரயம் என்றும், தேகப்பயிற்சி செய்யாதவர்கள் ஆரோக்யமற்றவர்களா? எனக் கேள்வி எழுப்பியும், பெண்களை வசப்படுத்த விரும்பும் ஆண்கள் மட்டுமே செய்ய விரும்பும் ஒன்று என்பன உட்பட பல எதிரான கருத்துக்களையே சொல்லிக்கொண்டிருந்தார்.[ தேக‌ ஆரோக்ய‌ம் பேணுத‌ல் என்ப‌து ஒரு ந‌ல்ல‌ பாராட்ட‌ப்ப‌ட‌ வேண்டிய‌ செய்கை. யாரோ ஒரு சில‌ர் செய்யும் த‌வ‌றுக‌ளுக்காக‌, ஜிம் செல்லும் அனைவ‌ருமே இப்ப‌டித்தான் என்று கொள்வ‌து த‌வ‌றான‌து. ஆனால், இந்த‌ போக்கு ஆண்/பெண் வித்தியாச‌மின்றி அனைவ‌ரிட‌மும் உள்ள‌து. மேலும், பெரும்பாலும் தேகப்பயிற்சி செய்யும் ஆண்மகனைப் பற்றி இவ்வாறு தவ‌றாக எண்ணுவது எளிதாக மேற்கொள்ளப்படுகிறது.]

ஆழ்ந்து யோசித்ததில் விஷயம் இவ்வளவுதான்.

ஆங்கில‌த்தில் கணிதத்தில் ப்ராப‌பிலிட்டி (probability) என்று சொல்வார்க‌ள். அதன்படி யோசித்தால், நூறு பேரில் ஒரு பகுதியினருக்கு தேக ஆரோக்யம் பற்றிய சிந்தனையே இருப்பதில்லை. மீதம் உள்ளவர்களில் பலரை சோம்பேரித்தனம் தடுக்கிறது. அவர்களையும் கழித்துவிட்டு பார்த்தால், இன்னும் பலருக்கு இருக்கும் கெட்ட பழக்கங்களால் தேகப்பயிற்சி செய்ய லாயக்கற்றவர்களாகி விடுகிறார்கள். மீதம் உள்ளவர்களில் ஒரு சிலருக்கே தேகப்பயிற்சி செய்ய காரணங்கள் நிறைய இருக்கின்றன. ஆரோக்ய‌மும் அழ‌கான‌ உட‌லையும் வெறுப்ப‌வ‌ரும் உண்டோ?
ஆனால், இவ்வாறு இல்லாத‌ ம‌னிதர்கள்தாம், தேகப்பயிற்சி செய்ய முடியாத த‌ன் நிலையை நியாய‌ப்ப‌டுத்தவும், தேகப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஆரோக்யம் மற்றும் அழகான உடலால் கவனிக்கப்படுவதை ஜீரணிக்கமுடியாமலும் ஜிம் நேர விரயம் என்றும், பெண்களை வசப்படுத்த விரும்பும் ஆண்கள் செய்ய விரும்பும் ஒன்று என‌வும் ப‌ல‌வாறாக‌ கார‌ண‌ம் க‌ற்பிக்கிறார்கள்.

வில‌ங்கியல் மற்றும் தாவரவியலில் ஜென‌டிக்ஸ் (genetics) என்று ஒன்று வ‌ருகிற‌து. டி.என்.ஏ (DNA) என்று சொல்வார்க‌ள். டெக்னிக‌லாக‌ பார்த்தால் இது ஒரு இர‌ட்டை வ‌ட‌ ச‌ங்கிலித் தொட‌ர் ஆகும். இதில், அடினைன், குயின‌ன், ச‌யிட்டோசைன், தைம‌ன் என்கிற‌ நான்கு வேதிப்பொருள்க‌ள் தங்களுக்குள்ளேயே இரண்டிரண்டாக ப‌ல்வேறு துணைக‌ளாக‌ அடுக்க‌டுக்காக‌ உள்ள‌ன. எவ்வாறெல்லாம் துணைகளாக இருக்கலாம் என்பதை காம்பினேஷன் (combination) என்கிற கணித முறைப்படி அறியலாம். இவைக‌ள் தான் பிற‌க்கும் குழந்தையின் உருவ‌ம், எடை, வ‌ள‌ர்ந்த‌பின் அத‌ன் குண‌ம் முத‌லான‌ அனைத்தையும் முடிவு செய்கின்ற‌ன‌.

ந‌ன்றாக‌க் கூர்ந்து க‌வ‌னித்தால், ஒரு உண்மை புரிகிற‌து. அது, தேக‌ப்ப‌யிற்சி தொடர்ச்சியாக‌ செய்யும்போது அந்த‌ செய‌லுக்கான‌ சார‌ம், அதாவ‌து, நிறைய‌ ஆக்சிஜன் உட்கொள்ளும் தன்மை, சீரான‌ ர‌த்த‌ ஓட்ட‌ம், க‌டின‌மான‌ வேலையை தொட‌ர்ச்சியாக‌ செய்யும் திற‌ன், அவ்வாறு செய்யும் போது பல்வேறு ஹார்மோன்கள் சீராக சுரக்கும் தன்மை, ர‌த்த‌ நாள‌ங்க‌ளில் அடைப்பு ஏற்ப‌டாத‌வாறு ர‌த்த‌ம் ஒடும் த‌ன்மை முத‌லான‌ சார‌ங்க‌ள் இந்த‌ டி.என்.ஏ ச‌ங்கிலித்தொட‌ரில் கால‌ப்போக்கில் ப‌திந்து விடுகிற‌து. இவ்வாறு ப‌திந்த‌ சார‌ங்க‌ள் அடுத்த‌ த‌லைமுறைக‌ளுக்குக் க‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌.

இவ்வாறு க‌ட‌த்த‌ப்ப‌டும் சார‌ங்க‌ள் தான் விளையாட்டுத் துறையில் மற்றும் ஃபாஷன் உலகில் ப‌ல்வேறு சாத‌னையாள‌ர்க‌ள் உருவாக‌க் கார‌ண‌ங்க‌ள் ஆகின்ற‌ன‌. இத்துறைக‌ளில் ப‌ல்வேறு ம‌னித‌ர்க‌ள் பிற‌ப்பிலேயே அத்துறையில் சிற‌ந்து வ‌ருவ‌த‌ற்க்கான‌ உட‌ல்வாகைப் பெற்றவ‌ர்க‌ளாக‌ இருப்ப‌தைக் காண‌லாம். முன்னாள் டென்னிஸ் வீர‌ரின் ம‌க‌ள் ஃபாஷ‌ன் ம‌ற்றும் சினிமா உல‌கில் சிற‌ப்பாக‌ இருப்ப‌தை நாம் க‌ண்கூடாக‌க் காண்கிறோம். ஆத‌லால், தேக‌ப்ப‌யிற்சி செய்வ‌தில் ப‌ல‌ ந‌ன்மைக‌ள் இருக்கின்ற‌ன‌ என்ப‌தை நாம் ஆழ‌மாக‌ப் புரிந்து கொள்ள‌வேண்டும்.
உண்மையில், தேக‌ ப‌யிற்சி என்ப‌து க‌ட்டாய‌ம் இல்லை. செய்வ‌து ந‌ல்ல‌து. கட்டாய‌ம் செய்ய‌வேண்டும் என்றில்லை. தேக‌ ப‌யிற்சி செய்வோரை, ஒரு ந‌ல்ல‌ செய‌லை நேர‌ம் ஒதுக்கி, சிரமேற்கொண்டு முய‌ற்சிப்போர் என்று கொள்வ‌தே உசித‌ம். மணமானவுடன் குழந்தைகளின் எதிர்காலத்திற்கென்று கஷ்டப்பட்டு ஓடியோடி பணம் சேமிக்கும் மனிதர்கள், இது போன்று தேகப்பயிற்சி மேற்கொண்டால், தனக்கும், தன் சந்ததியருக்கும் பொக்கிஷமாய் ஆரோக்யத்தின் சாரத்தை சேகரித்து வழங்குவது, கோடானு கோடி பணம் சேமித்துத் தருவதற்க்குச் சமம். மேலும், அடுத்த‌ த‌லைமுறையின் ச‌ர்வைவ‌லுக்குத் தேவையான‌ அத்தியாவ‌சிய‌மான‌ ஆரோக்ய‌த்தின் சார‌ங்க‌ளை இது எளிதாக‌த் த‌ருமானால் இதை சிரமேற்கொண்டு செய்வ‌து முக‌வும் வ‌ர‌வேற்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஒன்று என்ப‌தில் எள்ளள‌வும் ச‌ந்தேக‌மில்லை.
- ராம்ப்ரசாத், சென்னை.
http://www.ramprasathkavithaigal.blogspot.com/

Friday, 10 April 2009

கார‌ண‌ங்க‌ளும் காரிய‌ங்க‌ளும் - விகடன்

கார‌ண‌ங்க‌ளும் காரிய‌ங்க‌ளும்...
http://youthful.vikatan.com/youth/ramstory09042009.asp

உலகில் எல்லாமும் எல்லாவற்றுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையதாகவோ அல்லது சார்ந்தோ தான் இருக்கிறது. உதாரணத்திற்கு, என் நண்பர் சென்னை வடபழனியில் வீடு வாங்கினார். அவர் அங்கு வீடு வாங்குவதற்கும், சென்னையில் நூறடிசாலையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் ஒரு நாள் வருமானம் குறைவதற்க்கும் கூட தொடர்பு உண்டு எனலாம்.

எப்படி என்றால், கடலூரிலிருந்து வேலை தேடி, நெர்காணலுக்கு வரும் என் நண்பரின் உறவுக்காரர், என் நண்பர் சென்னையில் இல்லாதிருந்தால், அந்த ஹோட்டலில் தான் தங்கியிருப்பார். ஆனால், இப்போது அப்படி இல்லை. இப்போது, அவருக்கு என் நண்பர் வீட்டில் தங்குவதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு காரணம் உறவுகாரரை சந்திப்பது, இன்னொன்று நண்பர் வீட்டில் தங்குவதன் மூலம் மாமாவுடனான நேசத்தைக் காண்பிப்பது. மறைமுகக் காரணம், ஹோட்டலில் தங்கும் செலவை குறைப்பது.

இந்த காரணங்களே ஒரு மிகப்பெரிய விஷயங்களாக உள்ளன. சரியாக யோசித்துப்பார்த்தால், காரணங்கள் என்பது மனிதர்க்கு மனிதர் மாறுபடும் விஷயமாக தான் உள்ளது. ஆங்கிலத்தில் இதனை relative concept என்பர். இதைத்தான் ஐன்ச்டின் விதி என்று ஆங்கிலேய‌ர்க‌ள் குறிப்ப‌ர்.[ ஆனால், ப‌ல‌ ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌தாக‌வே, த‌மிழ் இல‌க்கிய‌ங்க‌ளில் வாழ்விய‌ல் முறைக‌ளில் இதைத் தெளிவாக‌ உண‌ர்த்தியுள்ள‌ன‌ர். ஏனோ ந‌ம் ம‌க்க‌ளுக்கு ஆங்கிலேய‌ர்க‌ள் கண்டுவிடித்துச் சொன்னால் ம‌ட்டுமே புரிகிற‌து!!!!]

காரணங்கள் என்பது, இன்னும் பல விஷயங்களைச் சார்ந்த ஒரு விஷயமாகவும் உள்ளது. சரி/தவறு, நல்லது/கெட்டது என்பன போன்றவைதான் அவைகள். எல்லோருக்கும், ஒரே விஷயம் சரியாக படுவதே இல்லை.

உதாரணத்திற்கு, உறவுக்காரர் பகட்டு ஆசாமியாக இருப்பின், அல்லது, செலவாளியாக இருப்பின், அல்லது நண்பருடனான உறவு சுமூகமாக இல்லாதிருப்பின், வேண்டுமென்றே ஹோட்டலில் தங்கவும் செய்யலாம். அவரைப் பொருத்தவரை அதுவே அவருக்கு சரி என்று பட்டிருக்கும்.

இதுவே, அவ‌ருக்கு நண்பருட‌ன் ந‌ல்ல‌ ந‌ட்பிருப்பின், ஹோட்ட‌லில் த‌ங்குவ‌துதான் த‌வ‌று என்றாகியிருக்கும். அத‌லால், இந்த ச‌ரி/த‌வ‌றுக‌ளும் கூட‌ ஐன்ச்டின் விதிப்படி, மேலும் சில‌ கார‌ண‌ங்க‌ளைச் சார்ந்து இருக்கிற‌து. அந்த கார‌ண‌ங்க‌ள், த‌ன் ப‌ங்கிற்கு வேறு சில‌ கார‌ண‌ங்க‌ளையோ அல்ல‌து சில‌ விதிக‌ளையோ சார்ந்து இருக்கின்ற‌து. இது ஒரு சுழ‌ற்சி. ஆங்கில‌த்தில் cyclic behaviour என்பார்க‌ள்.

உண்மைதான். சற்றே ஆழமாக தொடர்புபடுத்தி யோசித்தால், உலகில் சற்றேர‌க்குறைய, எல்லாமே இந்த சுழற்சி முறையில் தான் இயங்குகின்றது என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும். காய்கறிக்கடைக்காரனின் பிள்ளையை பள்ளியில் சேர்த்துக்கொள்ள நன்கொடை வாங்கும் துணைவேந்தர், அந்தப் பணத்தை கல்லூரி செல்லும் தன் பேரன்களுக்குக் கைச்செலவுக்குத் தருகிறார். பேரன்கள் அந்த பணத்தை சிறப்பு வகுப்புகள் நடத்தும் பேராசிரியர்களுக்குத் தருகிறார்கள். அப்பேராசிரியரின் மனைவி அந்த பணத்தைக் கொண்டு காய்கறிகாரனிடம் கறிகாய் வாங்குகிறாள். இதுவே சுழற்சி என்பது. இதே கருத்தைத்தான் ஷ்ரி கிருஷ்ணரின் கீதா உபதேசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ' நேற்று உன்னுடையதாயிருந்தது இன்று வேறொருவருடையதாகிறது. நாளை அது மற்றொருவருடையதாகும்'. இன்னும் சொல்லப்போனோல், இது போன்ற பல சாரங்களை, இறைவனின் படைப்பு விதிகளை, மனிதர்களின் இயல்புகளை கீதா உபதேசத்தில் தெள்ளத் தெளிவாகக் காணலாம்.

இதை மானுட‌ம் தெரிந்துகொள்ள‌வேண்டும், வாழ்க்கையை எளிதாக‌ வாழ‌ வேண்டும் என்ப‌ன‌ போன்ற‌ ப‌ல‌ க‌ருத்துக்க‌ளை வ‌லியுருத்தித் தானோ அன்றைய‌ ந‌ம் முன்னோர்க‌ள் இறைவ‌னின் பெய‌ரால் க‌தையாக‌ச் சொல்லி இல‌க்கிய‌மாக‌ ப‌ல‌ த‌லைமுறைக‌ள் ப‌ய‌ன்ப‌டுத்த‌ பாதுகாத்து வைத்தார்க‌ள்.

யோசித்துப்பார்த்தால், நாம் எல்லோரும் கால‌த்தின் வெவ்வெறு க‌ட்ட‌ங்க‌ளில், அவ‌ர‌வ‌ர்க்கு உள்ள‌ நிறை/குறைக‌ளுட‌ன், பல்வேறு கார‌ண‌ங்க‌ளால் விளையும் சூழ்நிலைக‌ளில் அந்தந்த நெர‌த்திற்கேற்ப‌ ந‌ம்மை நாம் வெளிப்ப‌டுத்திக்கொள்கிறோம். க‌ணித‌த்தில் ஆங்கில‌த்தில் permutation and combination என்று சொல்வார்க‌ள்.

ஒரு குறிப்பிட்ட‌ குணாதிச‌ய‌ங்க‌ளைக் கொண்ட‌ ப‌ல்வேறு வஸ்துக்க‌ளை ஒன்றாக‌ ஒரு ஜாடியில் போட்டுக் குலுக்கினால், அந்த வ‌ஸ்துக்க‌ள் ஒன்றோடோன்று எவ்வாறெல்லாம் முட்டிக்கொள்கின்ற‌ன‌, எவ்வாறெல்லாம் விளைவுக‌ள் உண்டாகின்ற‌ன‌ என்ப‌துதான் இது. இது போல‌த்தான் நாம் எல்லொரும் உல‌க‌ம் என்னும் ஜாடியில் அவ‌ர‌வ‌ர்க்கு உண்டான‌ த‌ன்மைக‌ளையும், ச‌ரி த‌வ‌று முத‌லான‌ கோட்பாடுக‌ளுட‌ன் சந்தித்துக்கொள்ளும்போது ப‌ல‌ விளைவுக‌ள் உண்டாகின்ற‌ன‌.

ஆழ்ந்து யோசித்துப்பார்த்தால், உல‌கின் த‌ன்மையையும், ம‌னித‌னின் த‌ன்மையையும் ச‌ரியாக‌ப் புரிந்துகொண்டால், வெற்றிக்கான‌ வ‌ழி கிடைக்கும் என்றே தோன்றுகிற‌து.


இன்னும் எழுதுவேன்.........................

Sunday, 15 March 2009

அவள் - யூத்புல் விகடன்

அவள்
http://youthful.vikatan.com/youth/rampoem160209.asp

கோடையில் பட்டப்பகலில்
கரு கரு இருளில்
பளிங்கு வெள்ளை நிலவு ...
பர்தாவில் அவள் ....
*************************************************

தார் ரோட்டிலும்
தாமரை மலரும் ...
பேருந்துக்கென நீ நிற்பதால்...
*************************************************

ஓடுகிற நதியில்
மலர்ந்தது தாமரை ...
குளிக்கிறாள் என்னவள் ...
*************************************************

அவள் கருவிழி சூரியன்
பார்த்தே மலரும்
தாமரை நான் ....
*************************************************

சமூகம் - யூத்புல் விகடன்

சமூகம்
http://youthful.vikatan.com/youth/ram270209.asp

சூரியனின் உஷ்ணம்
ஏற ஏற
பகல் பொங்கி,
நுரைக்க ஆரம்பித்திருந்த
காலை ..

விடியலின் போது
அழகிய பெண்ணொருத்தி
இமைகளில் இட்டு கொள்ளும்
கருமை போல படர
ஆரம்பித்திருந்த இரவு...

இடைப்பட்ட
குறுகிய நேரத்தில்
எத்தனை ஆயிரம்
மனிதர்கள் ...
ஒவ்வொருவருக்கும்
எத்தனை ஆயிரம்
முகங்கள் ...

முகமூடி கொண்டு
முகத்தை மூடிக்கொண்டு
திறமையாய் நடிக்கும்
முகங்கள் ...

ஏமாறுபவன் பாவியாம்
ஏமாற்றுபவன் அப்பாவியாம் ...
முகமூடிகளை பார்த்தே
உச்சு கொட்டுகிறது
சமூகம்...

முகமூடிகளுக்கென்று
தர முத்திரை கொண்டு
நிஜ முகங்களை தரம்
பிரிக்கும் முட்டாள்
சமூகம்...


வளர்ப்பதென்றால் சுய நலம் ...
வளைப்பதென்றால் விளை நிலம்...
இப்படியே கழிகிறது
பலருக்கு
முன்னேற்ற அளவுகோல் ...

பாசம் ஒரு முழம்
பந்தம் ஒரு முழம்
என்று கணக்கு பார்க்கிறது
ஒரு வட்டாரம் ,
நட்பென்று பெயர்
சூட்டிக்கொண்டு....

இரக்க உள்ளம்
கை அளவு...
இருக்கும் உள்ளங்கள்
உள்ளங்கையளவு ...

உலகம் இவ்வளவுதான்
என்று நினைத்துவிடுகிறது
மனம்...
அது அப்படிதான்
என்று சொல்லி சிரிக்கிறது
சமூகம்...

சீர்தூக்கி ஆராய்ந்ததில்
நாம் இருக்கவேண்டிய சமூகம்
இப்படி இருக்கவேண்டியதில்லை
என்பதே உண்மையென்றே
தோன்றுகிறது ...

ராம்ப்ரசாத், லண்டன்.