படுக்கையறைக் கொலை - 2
http://www.keetru.com/index.php/2009-08-09-04-42-53/2009-08-16-08-14-01/575--2.html
பெட்ரூமில் தொங்கிக்கொண்டிருந்த சீலிங் ஃபேனை தாங்கிப்பிடிக்கும் ஸ்க்ரூக்களை மிகவும் கவனமாக ஸ்க்ரூ ட்ரைவரால் திருகி லூசாக்கிக்கொண்டிருந்தான் வைத்தி என்கிற வைத்தியனாதன். வைத்தி அந்த வீட்டின் ஓனர் சாந்தினியின் மாமா. சாந்தினியின் கணவன் ராகவுடன் பிஸினஸ் செய்கிறான். சாந்தினியின் அப்பாவின் உயில்படி சாந்தினி தான் 50 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி. இந்த வீடும் அந்த சொத்தில் அடக்கம்.
வீட்டில் யாரும் இல்லை. யாரும் வருவதற்க்குள் காரியத்தை முடிக்கவேண்டும். இதோ, இந்த ஸ்க்ரூவைத் தளர்த்தி,ஆன் செய்த 10 நிமிடங்களுக்குள் விழுந்துவிடுமாறு செட் செய்துவிடவேண்டும். மணி இப்போது 1. மதியம் 2 மணிக்குள் ஷாப்பிங் சென்ற சாந்தினி வந்துவிடுவாள். மதியமானால் சாப்பிட்டதும் ஒரு குட்டித்தூக்கம் போடுவது அவள் வழக்கம். வந்ததும் சாப்பிட்டுவிட்டு ஃபேன் ஆன் செய்து படுத்துவிடுவாள்.
ஸ்க்ரூ லூசாகிவிட்ட ஃபேன், அடுத்த 10 நொடிகளுக்குள் சாந்தினியின் மேல் விழும். அதிக பலுவான கண்ணாடி விளக்குகள் பதித்த டுயல் ஃபேன் விழுந்ததும் கூர்மையான கண்ணாடிகளால் அவள் உடல் கிழிக்கப்பட்டு இறந்துவிடுவாள். போன வாரம் தான் சரி செய்யப்பட்ட ஃபேன் என்பது எல்லோருக்கும் தெரியும்.சாந்தினி பெட்ரூமில் அவள் இறந்தால், பலனடையப்போவது அவள் கணவன் ராகவ். ஏனெனில் அவளின் 50 கோடி சொத்து. மேலும் அது சாந்தினியின் படுக்கையறை. அதில் சகல உரிமை உள்ளவன் ராகவ் தானே. அதனால் போலீஸின் முதல் சந்தேகம் ராகவ் மீது தான் விழும். ராகவ் தான் கொலையாளி என்பதற்கு இவைகளே காரணங்களாகிவிடும். அவன் ஜெயிலுக்கு சென்றதும் கார்டியன் என்கிற பெயரில் சொத்தை அனுபவிக்கலாம்.
எல்லாம் செய்தாகிவிட்டது. இனி அவள் வர வேண்டியது தான். ஃபேன் போடவேண்டியது தான். சாகவேண்டியதுதான். ஆட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் வேட்டை ஒநாயைப்போல் காத்திருந்தான் வைத்தி. சாந்தினியின் கார் சத்தம் கேட்கவே, அவள் வரும் நேரம், பேச்சுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாதவாறு தூங்குவது போல் பாசாங்கு செய்யலானான்.
அவள் உள்ளே வரும் அரவம் கேட்டது. தொடர்ந்து பாத்ரூமில் தண்ணீர் சலசலப்பும், கிச்சனில் பாத்திரங்கள் உருளும் சத்தமும் கேட்டன. அவள் முகம் கை கால் கழுவிவிட்டு சாப்பிடுகிறாள். அவன் எதிர்பார்த்தபடியே எல்லாம் நடப்பதாய் அவனுக்கு உணர்த்தின.
சிறிது நேரம் கழித்து, அவள் பெட்ரூம் கதவுகள் சாத்தப்படும் ஓசை கேட்டது. வைத்தியை இனம் புரியாத ஒரு உணர்வு தொற்றிக்கொண்டது. என்ன நடக்குமோ என்கிற ஆர்வமா, ஒரு உயிரை சாகடிக்கப்போகிற பதட்டமா தெரியவில்லை. காத்திருந்தான். திடீரென்று டெலிபோன் மணி அடிக்கும் சத்தம் கேட்டது.
அய்யோ, இந்த நேரம் பார்த்தா டெலிபோன் அடிக்கணும். ச்சே..
டெலிபோன் அழைப்பின் மறுமுனையில், ராகவ் இடது கையில் இருந்த மொபைல் ஃபோனால் வீட்டு லாண்ட்லைனை அழைத்தபடி, வலது கையில் இன்னொரு ஃபோனால் ச்ந்த்ருவுக்கு கட்டளையிட்டுக்கொண்டிருந்தான். சந்த்ரு, தன் காதுகளில் மாட்டியிருந்த வயர்லஸ் சாதனத்தில் கேட்டுக்கொண்டே குழல் துப்பாக்கியால் மறைவாக நின்றபடி சாந்தினி வீட்டு டெலிஃபோன் ஸ்டாண்டை குறிவைத்து காத்திருந்தான்.
'சந்த்ரு, கன்ஃபர்ம்ட். அவ சிவப்பு கலர்ல சுடிதார் போட்ருப்பா. வீட்ல இருக்குற ஒரே பொம்பளை அவ தான். கால் வந்தா அவ தான் எடுப்பா. டெலிஃபோன எடுத்ததும் போட்ரு'.
ரிசீவரை மறுமுனையில் அவள் எடுக்க காத்துக்கொண்டே சந்த்ருவையும் காத்திருப்பில் வைத்திருந்தான். வீட்டில் இருப்பது சாந்தினியும் அவள் மாமாவும். இன்னொருத்தர் வீட்டில் விருந்தாளியாய் தங்கியிருப்பதால், சாந்தினி இருக்க, அவர் ஃபோன் எடுக்க மாட்டார். சாந்தினி தான் எடுப்பாள். சாந்தினியின் மாமா துப்பாக்கி சுடுதலில் கைதேர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் கைவசம் வைத்திருந்த தோட்டாக்களைத்தான் சந்த்ரு துப்பாக்கியில் பயன்படுத்தப்போகிறான். ஃபாரென்ஸிக்கில் தோட்டாவிற்க்கான துப்பாக்கி வைத்தியினுடையது என்பது கண்டுபிடிக்கப்படும். சாந்தினி கொலையானால் நிச்சயம் மாட்டப்போவது அவள் மாமா தான். அதற்க்கு பிறகு சொத்து முழுவதும் தனக்குத்தான் என்றெண்ணியபடியே பதட்டமாய் காத்திருந்தான் ராகவ்.
எட்டு முறை அலறிவிட்டு அமைதியானது ஃபோன். 'இவள் எப்போதுமே இப்படித்தான். ஃபோன் அடித்தால் உடனே எடுக்கமாட்டாள்' என்று கருவியபடியே மீண்டும் தன் வீட்டு லாண்ட்லைனை அழைத்தான் ராகவ்.
ரிஸீவர் எடுக்கப்பட்டது. உடனே சன்னமாய் சந்த்ருவுக்கு சிக்னல் கொடுத்தான். ஃபேன்சிக்காய் பொறுத்தப்பட்ட வண்ணக்கண்ணாடி ஜன்னல் வழியே சிவப்பு கலர் துணியை கிழித்து ஸைலன்சர் பொறுத்தப்பட்ட துப்பாக்கி அமைதியாய் தன் வேலையைச் செய்தது. பேசப்பட்ட மீதிப்பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவானான் சந்த்ரு.
தான் அனுபவிக்கப்போகும் ராஜ வாழ்க்கைக்கு கடைசி முதலீடாய், மனைவி சாவுக்கு புரண்டு புரண்டு அழுது நடிக்க ஆயத்தமானவாறே அவனை அனுப்பிவிட்டு தன் வீடு நோக்கி நடந்தான் ராகவ். வீட்டை நெருங்க நெருங்க பதட்டம் அதிகமானது. வீட்டு புல்வெளியைத்தாண்டி மதில் சுவரோரம் நின்று பக்கத்து வீட்டு மாமியிடம் கதைக்கும் பெண்ணைப்பார்த்ததும் தூக்கிவாரிப்போட்டது ராகவிற்கு. காரணம், அந்த பெண் சாந்தினி போலவே இருந்ததுதான். கிட்டப்போக போக ராகவிற்கு வயிற்றில் புளியைக்கரைத்தது போலிருந்தது. அந்த பெண் சாந்தினியேதான்.
இவள் எப்படி உயிருடன். ஃபோனில் சுட்டுவிட்டதாக சொன்னானே சந்த்ரு. பொய் சொல்லிவிட்டானா. அடப்பாவி, அவள் செத்ததை உருதிப்படுத்தாமல் அவ்வளவு பெரிய தொகை கொடுத்துவிட்டோமே. அதற்க்கு சாந்தினி கணக்கு கேட்டால் என்ன சொல்வது என்று பலவாறு யோசித்தபடியே வீட்டினுள் நுழைந்தான். வீடே அமைதியாயிருந்தது. வெய்யிலில் சென்று வந்தது புழுக்கமாயிருந்தது. சந்த்ரு ஏமாற்றியது கோபம் வந்தது. வெறுப்பாய் ஃபேன் ஸ்விட்ச் தட்டிவிட்டு சோபாவில் அமர்ந்தான்.
ச்சே, ஏமாற்றிவிட்டானே. அவனை என்ன செய்யலாம்? அய்யோ, அவனை இப்போது எங்கிருந்து பிடிப்பது. இவனை மாதிரி நாடோடிகளை எப்படிப்பிடிப்பது.
வியர்வை வழிவது நிற்கவில்லை. நெற்றிப்புருவம் சுறுங்க அப்போதுதான் கவனித்தான்.ஃபேன் ஓடவில்லை. கரண்ட் இல்லை. ஏதோ தோன்றி எழுந்து சென்று டெலிஃபோன் ஸ்டாண்டைப்பார்த்தவன் உறைந்தான். அங்கு வைத்தி ரத்தம் படிந்த சிவப்பு ஜிப்பாவில் மல்லாந்து இறந்துகிடந்தான். தான் முதல் தடவை அழைத்தபோது, கரண்ட் போயிருக்க வேண்டும். காற்றோட்டத்திற்காக சாந்தினி வெளியில் வந்திருக்கவேண்டும். சாந்தினிக்கு பதிலாக வைத்தி டெலிஃபோனை எடுத்திருக்க வேண்டும். ஃபேன்சி வண்ணக்கண்ணாடி வழியே, ஜிப்பாவில் வைத்தியை சாந்தினி என்று நினைத்து சந்த்ரு சுட்டிருக்க வேண்டும். ராகவிற்கு புரிந்துபோனது. நடந்ததை அவன் மனம் ஜீரணிக்க சிறிது நேரம் பிடித்தது. அதிர்ச்சி அவனை ஆசுவாசம் கொள்ள பின்னோக்கி தள்ளியது.
மெல்ல மெல்ல அவன் வியர்வை அடங்குவது போலிருந்த நொடிகளில் க்ளக் என்ற சத்தத்துடன் ஃபேன் பாரம் தாளாமல் ஸ்க்ரு நெகிழ்ந்தது. பின்னோக்கி உந்த, தன்னையும் அறியாமல் பெட்ரூமினுள் வந்த அவன் மீது விழுந்தது ஃபேன். ராகவ் ரத்த வெள்ளத்தில் சிறிது நேரம் துடித்துப்பின் மெல்ல அடங்கிப்போனான்.
கரண்ட் வந்து 10 நொடிகள் தாண்டியிருந்தது.
வாசலில் இது ஏதும் அறியாமல் சாந்தினி, பக்கத்து வீட்டு மாமியிடம் கதைத்துக்கொண்டிருந்தாள்.
- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.(ramprasathtcs@yahoo.co.in)