Honorable Mention
Saturday, 27 July 2024
Honorable Mention Certificate - L. Ron Hubbard
Monday, 22 July 2024
நோய் - சிறுகதை - வாசகசாலை
வாசகசாலை இதழில் எனது 'நோய்' சிறுகதை வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தெரிவு செய்து வெளியிட்ட வாசகசாலை இதழின் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
"“இங்கே மனிதர்களாகிய நாம் வாழ்கிறோம் என்று நினைக்கிறீர்களா?.. இல்லை.. உண்மையிலேயே இங்கே வாழ்பவர்கள் தாவரங்களும் மரங்களும்தான். இங்கே மட்டுமல்ல, இந்த பூமி முழுவதுமே அவைகளின் வாழ்விடம்தான்” என்றான் துலான்"...
சிறுகதையை வாசிக்கப் பின் வரும் சுட்டியைச் சொடுக்கவும்.
Friday, 12 July 2024
எழுத்தாள நண்பர்களின் கவனத்திற்கு: பாகம்2
எழுத்தாள நண்பர்களின் கவனத்திற்கு: பாகம் 2
ஆங்கில இதழ்களிலும் எழுதுவதால் சில நண்பர்கள் நான் ஏதோ ஆங்கிலத்துக்கு முன்னுரிமை தருவதைப் போலத் சித்தரிப்பதாகத் தெரிகிறது. வரிகளின் உள்நோக்கம் அதுவாக இருக்காது என்று நம்புகிறேன். ஆயினும், கேள்வி என்று வந்துவிட்டபிறகு தெளிவு படுத்துவதுதான் சரியாக இருக்குமென்று தோன்றுகிறது.
1. புழங்கும் இடத்தில் நம் மரியாதை, நம்மை மற்றவர்கள் எப்படிப் புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதில் இருக்கிறது.. ஆங்கிலேயர்கள், தமிழ் தெரியாத ஆங்கிலம் தெரிந்தவர்கள் புழங்கும் இடத்தில் அவர்கள் மொழியில் நம் ஆக்கங்கள் இருந்தால், நம் திறன் என்ன என்பது அவர்களுக்கும் புரியும் என்பது ஒரு காரணம்.
2. நாம் எழுதும் எழுத்து சர்வதேச தரத்திலானது என்பதை எப்படி நிரூபிப்பது? அது உண்மையென்றால், அது சமகால ஆங்கில அறிபுனை இதழ்களில் வெளியாக வேண்டும். அல்லவா?
3. தமிழ் எழுத்துலகமும், தமிழ் வாசகர்களும் தமிழ் எழுத்தாளர்களை சிருமைப் படுத்தவே செய்கின்றன. அவனது ஆக்கத்தை, சிந்தனையைத் திருடுகின்றன. உரிய மதிப்பளிப்பதில்லை. தமிழ் எழுத்தை செல்லாக்காசாகத்தான் வைத்திருக்கின்றன. எந்த ஒரு முயல்வையும் அதற்கேற்ற மதிப்பும் வெகுமதியும் நியாயப்படுத்த வேண்டும், ஒரு தரமான வீடு கட்ட இருபது லட்சம் செலவாகும் எனும்போது இரண்டே லட்சத்தில் அதே வீடு கட்ட முடியும் என்று ஒருவர் செய்தால், அந்தக் கட்டுமானத்தின் தரம் குறித்து நாம் சந்தேகப்படவேண்டும் என்ற அடிப்படையிலிருந்து வரும் எனக்கு, தமிழ் எழுத்துச்சூழல் ஏமாற்றத்தையும், குழப்பத்தையும், சந்தேகத்தையுமே தருகிறது.
இக்குழப்பத்திலிருந்து தெளிவு பெற எனக்கு ஆங்கில ஊடகங்களே உதவுகின்றன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது. இப்போது நான் ஒரு paid writer. நான் எழுதும் ஆங்கில ஆக்கங்களுக்கு டாலரில் ஊதியம் வழங்கப்படுகிறது.
வடிவேலு ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு அடியாள் வந்து ஓரிடத்துக்குக் கூப்பிடுவார். அதற்கு வடிவேலு,
'இவ்ளோ தூரம் வந்தது போதாதா? இனி அங்குட்டு வேற வரணுமா?' என்பார். அதையே தான் நானும் சொல்ல விழைகிறேன். தமிழ் எழுத்துலகில் இதுகாறும் எழுதிய எல்லோரது ஆக்கங்களையும் வாசித்துவிட்ட பிறகு தான் ஒருவர் எழுத வரவேண்டும் என்றால், அதற்கு ஆயுள் போதாது. அதே போல, இதுகாறுமுள்ள எழுத்துத் தளங்கள், சிறப்பிதழ்கள், சிறப்புரைகள் எல்லாவற்றிலும் பங்குபெற்றுவிட்ட பிறகு தான் நம் எழுத்தை எழுத வேண்டும் என்றால் அதற்கும் ஆயுள் போதாது.
ஏற்கனவே சொன்னது போல, எல்லா ஆரோக்கியமான தளங்களும் படி நிலைகள் இருக்கும்.
உள்ளூர் பதிப்பகங்கள் மற்றும் இதழ்கள்,
இவைகளை விட ஒரு படி மேலே வணிக இதழ்களில் இலக்கிய பக்கங்கள்,
அதனையும் விட ஒரு படி மேலே இலக்கிய இதழ்கள்,
அதனையும் விட ஒரு படி மேலே சிற்றிதழ்கள்,
அதனையும் விட ஒரு படி மேலே முன்னணி இலக்கிய இதழ்கள் இப்படி.
நான் எழுதுவது அறிவியல் புனைவுகள். அதற்கு நாம் முன்னுதாரணங்களாக நிறுத்துவது Asimov,Analog,clarkesworld போன்ற ஆங்கில இதழ்களைத்தான். ஆக, மேற்சொன்ன வரிசையில் உச்சத்தில் ஆங்கில இதழ்களை வைக்க வேண்டி இருக்கிறது.
சீர்கெட்ட துறைகளில் காணப்படும் லாபிக்கள், அரசியல்கள், 'வேண்டியவனா-வேண்டாதவனா' என்று பார்த்து அதனடிப்படையில் திறமை இருப்பது தெரிந்தும் கண்டும் காணாமல் இருப்பது, உரிய வாய்ப்பை அளிக்காமல் மறுப்பது, கட்டம் கட்டுவது, ஒதுக்குவது ஆகியன தமிழ் எழுத்துலகுக்குள்ளும் இருப்பது மறுக்க முடியாத உண்மை.
சாதி மற்றும் அரசியல் நம்பிக்கைகள் வழி, திறமைசாலிகள் பின்னுக்கு தள்ளப்படுவது-திறமையற்றவர்கள் மேடையை அலங்கரிப்பதும் (நாங்களாக அழைக்க மாட்டோம். நீயாக மேடைக்குள் வம்படியாக நுழைந்து உனக்கான முக்கியத்துவத்தை நிலை நாட்டு என்பதும் ஒரு வகையில் இது தான்), திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர் போன்ற எழுத்துக்கடவுள்களை மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக்கொள்ளும் நம் தமிழ் சமூகத்திலும் நடந்துகொண்டு தானே இருக்கிறது.
IT வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம் என்று ஓன்று இருக்கிறது.
'சிறிய நிறுவனங்கள்',
அதற்கு மேல் 'பெரிய ஆனால், அறியப்படாத நிறுவனங்கள்',
அதற்கும் மேல் 'நன்கு அறியப்பட்ட நிறுவனங்கள்',
அதற்கும் மேல் 'FAANG நிறுவனங்கள்' என்கிற படி நிலைகளில்
இருக்கும் நிறுவனத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்க விடாமல், டீம் மேட்கள் சதி செய்தால், இதை விடப் பெரிய நிறுவனத்தில், தகுதியான ஊதிய மற்றும் பதவி உயர்வுடன் தாவி தன் திறமையை நிரூபித்தல் என்றொரு வழி இருக்கிறதே? அதைத்தான் இங்கேயும் கடைபிடிக்கிறேன்.
நான் மேற்சொன்ன படி நிலைகளில், நமக்கான மதிப்போ அங்கீகாரமோ கிடைக்காத பட்சத்தில் அதற்கடுத்த படிக்கு கடந்து போதல். அப்படி வந்து நின்ற இடமும் ஆங்கிலமாகத்தான் இருக்கிறது.
என்ன செய்ய?
தமிழில் தொடர்ந்து இயங்க, தமிழ்ச்சமூகம் உரியது செய்ய வேண்டும். இல்லையெனில், திறமை உள்ளவர்கள் 'கடந்து போய்க்கொண்டேதான்' இருக்க வேண்டி வரும். இதற்கு அர்த்தம், 'ஆங்கில முன்னுரிமை' இல்லை. சொந்த மொழியில், சொந்த இனத்தில், சொந்த இடத்தில், சொந்த மக்களால் நேரும் திட்டமிட்ட கள்ளமெளனம், புறக்கணிப்பு, அப்புறக்கணிப்புக்கு எதிரான அஹிம்சா வழிப் போராட்டம், அப்புறக்கணிப்பைக் கடந்து போதல்....
பாகம் - 3, 4 கிற்கு தேவை எழுந்தால், நீட்டித்து எழுதுகிறேன்.
Wednesday, 10 July 2024
L. Ron Hubbard Writers of the Future Contest - Honorable Mention
L. Ron Hubbard Writers of the Future Contest அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் அறிவியல் புனைவிலக்கிய சிறுகதைப் போட்டி ஆகும். 2024ம் ஆண்டுக்கான போட்டியில் 'Honorable Mention' ஆக எனது ஆக்கம் தேர்வாகியிருக்கிறது என்பதை இப்பதிவின் மூலம் இணைய நண்பர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். சான்றிதழ் இனி தான் கையில் கிடைக்கும். கிடைத்தவுடன் இணைய நண்பர்கள் பார்வைக்குப் பகிர்கிறேன்.
I am delighted to announce that I have been voted for 'Honorable Mention' in the L. Ron Hubbard Writers of the Future Award 41st Year. I thank the Judges of the L. Ron Hubbard Writers of the Future contest for choosing me for this prestigious recognition. I will share the certificate once I have it.
Tuesday, 9 July 2024
எழுத்தாள நண்பர்களின் கவனத்திற்கு: பாகம் 1
எழுத்தாள நண்பர்களின் கவனத்திற்கு: பாகம்1
****************************************
இக்குழுவில் உள்ள எழுத்தாள நண்பர்களுடன் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.சற்று நீளமான பதிவு தான்.
வாசித்துப் பார்க்கவும்.
இக்குழுவில் எழுத்தாள நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒற்றுமையாக ஒரே நோக்கில் இயங்குகிறோமா, மற்றவர் இயக்கங்கள் குறித்து நமக்குப் புரிதல் இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.
சில விளக்கங்களைக் காலத்தே தருவது பொதுவில் பயனளிக்கும் என்று கருதி இக்குழுவில் உள்ள நண்பர்களின் புரிதல்களுக்காய் இதனைப் பகிர்கிறேன்.
தமிழ் இலக்கியம் என்பது பரந்து பட்ட களத்தைக் கொண்டது. இங்கே ஒரு மூலையில் இயங்கும் ஒருவரை மற்றொரு மூலையில் இயங்கும் ஒருவருக்குத் தெரியாமல் தான் இருக்கும். 'இவரை எனக்குத் தெரியாது' என்று ஃபெட்னா அழைத்து வந்திருக்கும் ஒருவரைப் பற்றிச் சொன்னால், உடனே குழுவில் உள்ள எழுத்தாள நண்பர்கள் ஆவேசமாவது போல் தெரிகிறது. 'இவரை எனக்குத் தெரியாது' என்பது அவரை மலினப்படுத்தும் நோக்கில் சொல்லப்படும் சொற்றொடர் அல்ல என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.
(இந்த இடத்தில் இன்னுமொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். என்னையும் யாருக்குமே தெரியாது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இன்னும் சொல்லப்போனால், அதை ஒரு விதத்தில் விரும்பவும் செய்கிறேன். அந்த anonymityல் தான் என் எழுத்துக்கான கச்சாப்பொருள் கிடைப்பதாக நான் நம்புகிறேன். ஆதலால் யாருக்கும் தெரியாதவராக இருப்பது ஒருவகையில் எனக்கும் பிடித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பொதுக்கூட்டம், தலைமை ஏற்றுப் பேசுவது, எவனாது எதிர்கருத்து சொன்னால் அவன் எதில் எதிர்கருத்து சொன்னான் என்பதை நோண்டி, அதை எங்கே மொழிய வேண்டும் என்று கணக்கிட்டு, அதைத் தொடர்ந்து சென்று, நம் பக்கத்திற்கு பேச நாலு ஆட்களை கூடவே இருத்தி பதிலடி தருவதற்கெல்லாம் நான் பொறுத்தமான ஆள் கிடையாது. என் மனமும் மூளையும் அப்படி வேலை செய்யாது. அதனாலேயே, சில பேர் போல் எழுத்தாளர்களுள் 'முதல்வன்' என்ற பட்டத்தை எல்லாம் விரும்பியவரை வெறுக்கிறேன். இந்தத் தமிழில் எழுதும் எழுத்தாளர்களை வரிசைப்படுத்தினால் யார் முதலாவதாக வருவார்கள் என்பதை யாரேனும் முடிவு செய்து கொள்ளட்டும். கடைசியாக நான் இருந்துகொள்ள விழைகிறேன். ஏனெனில் அந்த இடத்தில் தான் total anonymity கிடைக்கும். குழுத்தலைமை, பொதுக்கூட்டப்பேச்சுகள் போன்றவற்றில் என் வேகம் குறையும் என்ற எண்ணமும் ஒரு காரணம்.)
நாம் எல்லோரும் எழுத்தாளர்கள். 'எழுத்தே' நம் பேச்சு மொழியாக, குறிப்புணர்த்தும் மொழியாக, திசைகாட்டியாக இருக்க வேண்டும் என் வாதம். எப்படி? ஒரு சிறுகதை என்றால் சிறுகதைக்கான கட்டுமானம், மையக்கரு,துவக்கம், ப்ளாட், முடிவு போன்றவற்றை சரியாகக் கட்டமைக்கப் பயன்படுத்த நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்பதை அடிப்படை. ஆகையால் அதில் கேள்வியே இல்லை. (சிறுகதை என்பது உதாரணம் தான்) அந்த ஆற்றலே நம்மை எழுத்தாளராக்குகிறது. குடும்பக் கதைகள், சமூகக் கதைகள், அறிபுனைகள் என்று நாம் எத்தளத்தில் வேண்டுமானாலும் இயங்கலாம். ஆனால் இந்த அடிப்படை நம் எல்லோர் எழுத்துக்களிலும் பொதுவாக இருக்க வேண்டும். நாம் இயங்கும் தளத்திற்கு ஏற்றவாறு நாம் அதிகம் பேரைச் சென்றடைய வேண்டும் என்பதே நமது எழுத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.
அமெரிக்காவில் உள்ள இதழ்களில் ஏன் எழுதுவதில்லை என்கிற கேள்வியை அவ்வப்போது எதிர்கொள்வதுண்டு. 'தென்றல்' இதழில் சில கதைகள் எழுதியிருக்கிறேன். அவற்றுக்கு பெரிதாக வரவேற்போ வாசிப்போ இருந்ததாக நினைவில்லை. தொடர்ந்து எழுதாததற்குக் காரணங்கள் இருக்கின்றன.
1. அமெரிக்காவில் கலை இலக்கிய இதழ்கள் இல்லை. இதனைப் பலரிடம் நேர்பேச்சில் பகிர்ந்தும் இருக்கிறேன்.
2. நமக்கெல்லாம் எழுத்து முழு நேரமல்ல, பகுதி நேரமாகத்தான் எழுதுகிறோம். இக்காரணத்தால், மாதம் ஒன்றுக்கு இரண்டு சிறுகதைகள், இரண்டு மொழிபெயர்ப்புகளுக்கு மேல் சாத்தியமில்லை.
3. நம் ஆக்கங்கள் யாரையாவது சென்றடைந்தால் போதும் என்பதை விட, யாரைச் சென்றடைந்தால் நம் எதிர்காலத்திற்கு நல்லது என்று ஒரு கணக்கு இருக்கிறது. அதன் படி, தமிழகத்திலிருந்து செயல்படும் சொல்வனம், வாசகசாலை, போன்ற இதழ்கள் பிரதானப்பட்டுவிடுகின்றன. (இதன் பொருள், மற்ற இதழ்கள் வெட்டி என்பதல்ல. ஏற்கனவே சொன்னது போல், நம் எழுத்து யாரை, எந்தக் கூட்டத்தைச் சென்றடைவது நமக்கு அதிகபட்ச நன்மைகளைத் தரும் என்ற என் கணக்கில் இந்த இதழ்களே தேர்ந்திருக்கின்றன என்பதுதான். இது தனிப்பட்ட தேர்வு தான். அவரவர்க்கு ஒரு தேர்வு இருக்கலாம் தான்.
4. ஏற்கனவே சொன்னது போல், 'தென்றல்' இதழில் எழுதியதில் என் வளர்ச்சி என்று நான் நினைக்கும் இடத்தை அடையப் போதுமான வாசகர் பரப்பை எட்டியதாக நான் அவதானிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், தென்றலில் வெளியான அச்சிறுகதை யார் கவனத்திலும் பதியாத ஒன்றாக வீணாகிப்போனது. ஒரு மாதத்திற்கு இரண்டே ஆக்கங்கள் தான் என்னும் போது, 'அடுத்த அறிபுனைச் சிறுகதை எப்போது?' என்று கேட்கும் வாசகர்கள் இருக்கையில் ஒரு ஆக்கத்தை மிக மிகக் குறைந்த வாசகர் பரப்பிற்கென நேர்ந்துவிடுவது உள்ள செலாவணி அயர்ச்சி கொள்ள வைக்கிறது.
என்னுடைய 14 வருட இலக்கிய முன்னெடுப்புகளில் நான் சில படி நிலைகளை அவதானித்திருக்கிறேன். எப்படி கல்லூரிகளில், ஊர் பெயர் தெரியாத கல்லூரி, ஓரளவிற்கு கல்வித்தரம் வாய்ந்த கல்லூரி, முன்னணிக் கல்லூரி, தலைசிறந்த கல்லூரி என்று இருக்கிறதோ, அப்படி இலக்கிய இதழ்களிலும் படி நிலைகள் இருப்பதாக நான் நம்புகிறேன். (இது எனது நம்பிக்கையாக மட்டுமே கூட இருக்கலாம். என் வளர்ச்சி என் நான் கருதுபவைகளை அடைய இந்த 'படிநிலை புரிதல்' உதவுகிறது என்றால், அதை பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை என்றே எண்ணுகிறேன்).
நான் கருதும் படிநிலை பின்வரும் காரணிகள் சார்ந்தவை.
1. இலக்கியம் அறிந்த வாசகர்கள்.
2. சிறுகதைகளின் நுட்பம் அறிந்த வாசகர்கள்
3. சிறுகதைகளில் புதிய பார்வை, நுட்பங்களை கண்டறியக்கூடிய வாசகர்கள்.
இப்படியான வாசகர்களைத் தான் நான் இலக்காக நிர்ணயிக்கிறேன். அதன் வழி, குறிப்பிடத்தகுந்த இதழ்கள் இருக்கின்றன. உதாரணமாக, உயிர்மை, கணையாழி, காலச்சுவடு முதலாவன. (இந்தப் பட்டியல் சற்று நீளம். அவரவர் நீட்டிக்கொள்ளலாம். அதன் உண்மைத்தன்மையையும் அவரவர் அவதானத்திற்கே விடுகிறேன்).
உயிர்மை சிற்றிதழுக்கு பத்தாயிரம் சந்தாதாரர்கள் இருப்பதாக ஒரு முறை மனுஷ்யப்புத்திரன் சொன்னார். (அது இப்போது கூடியிருக்கலாம், குறைந்துமிருக்கலாம்) கணையாழி, காலச்சுவடு போன்றவற்றுக்கும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கை சாத்தியப்படலாம். இத்தனை பேரும் நம் எழுத்தின் இலக்கிய மதியை கவனிப்பார்கள். விமர்சனங்கள் செய்வார்கள். இந்த 'கவனிப்பு' தான் நம் வளர்ச்சிக்கு அச்சாணி என்று எண்ணுகிறேன். இவையெல்லாம் அச்சிதழ்கள். இவைகளுக்கு இணைய பக்கங்கள் உள்ளன. அவற்றில் உலகெங்கிலுமிருந்தும் இலக்கியம் தெரிந்த வாசகர்கள், வாசிக்கிறார்கள். 'சொல்வனம்' நல்ல எழுத்தை அடையாளம் காண குறிப்பிடத்தகுந்த முன்னெடுப்புகளைச் செய்கிறார்கள். போலவே வாசகசாலை, பதாகை, கனலி போன்ற இதழ்களும். (மற்ற இதழ்களும் இதனைச் செய்யலாம். நானறிந்த பழகும் இதழ்களை மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன். அதுபோக, மாதத்திற்கு இரண்டே சிறுகதைகள் எழுத வாய்க்கும் எனக்கு இவைகளே 'மிக மிக அதிகமாக' இருக்கிறது).
இது எனக்கு மட்டுமல்ல, இலக்கிய உலகில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியைப் பெற நினைக்கும் எல்லோருக்குமே நான் மேற்சொன்ன காரணிகள் பொருந்தும் என்றே நினைக்கிறேன்.
நான் ஏற்கனவே சொன்னது போல எழுத்து தான் நம் ஆயுதம், களன், உபகரணம் எல்லாம். (எழுத்து மட்டும் தான் இவைகளாக இருக்க வேண்டும் என்பதுவும் என் பார்வை) நாம் செய்ய வேண்டியது, வாசகர்களை நம் திறமையைக் கொண்டு, நம் எழுத்தைக் கொண்டு நம் பக்கம் ஈர்ப்பது மட்டுமே.
இந்தப் பின்னணியில், இந்த வட்டத்தை விட்டு வெளியில் இயங்கும் இதழ்களில் எழுதும் எழுத்தாள நண்பர்கள், தங்கள் எழுத்தை மற்றவர்கள் வாசிப்பதில்லை என்று எண்ணலாம். தவறில்லை. பிரச்சனை என்னவென்றால், நம் பணிச்சுமை, எழுத்துச்சுமை போன்றவைகளே. எனக்கிருக்கும் மிக மிக சொற்பமான நேரத்தில் என் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் இதழ்களே வாசிக்காமல் நீண்டக் காத்திருப்பில் கிடக்கின்றன. இதில், இந்த வட்டத்தை விட்டு வெளி இதழ்களில் வாசிக்க எனக்கு நேரமில்லை என்பது பிரதான காரணம்.
இதில் எனக்குத் தோன்றும் கேள்வி என்னவென்றால், எழுத்து நம் திறனாக இருக்கையில், நம்மால் எழுத்தின் கட்டுமானம் அறிந்து எந்த இதழிலும் எழுத முடியும் எனும்போது, என் கணக்கில் தேரும் இதழ்களில் எழுத மற்றவர்களும் முயன்றால் அவ்வாக்கங்களை வாசிப்பதில் என் வேலை சற்று சுலபமாவது மட்டுமல்லாமல், எனக்கு 'வேலை செய்யும் கணக்கு' உங்களுக்கும் வேலை செய்ய வாய்ப்பாகும் என்பதை எழுத்தாள நண்பர்களுக்கு பரிந்துரையாக முன்வைக்க விரும்புகிறேன். (இது வெறும் பரிந்துரை தான்).
மற்றபடி எழுத்தாள நண்பர்கள் எழுதும் இதழ்களை வாசிக்கக்கூடாது என்று எதுவும் இல்லை. அந்த இதழ்கள் என் வட்டத்தில் இல்லை என்பது மட்டும் தான் ஒரே குறை.
மற்றபடி இங்கே எழுத்தாளர்கள் புகழ்ச்சிக்கு ஏங்குவதாக நான் நினைக்கவில்லை. உதாரணமாக, நான் எழுதுவது அறிவியல் புனைவுகள். அதைப் பெரும்பாலும் யாரும் வாசிப்பதில்லை. (ஃபெட்னா போன்ற தமிழ்க் கூட்டங்களுக்கு வராமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். என்னைத் தெரிந்தவர்கள் யாரும் இருக்கப் போவதில்லை என்பதுதான் காரணம்). மிக மிகக் குறைவான எண்ணிக்கையிலானவர்களே வாசிக்கிறார்கள். அறிபுனைகள் எழுதுவதில் உள்ள சவால்கள் எனக்கு ஏற்கப்பிடிக்கும் என்பதால் அந்த முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்கிறேன். யாருமே வாசிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து அச்சிறுகதைகளை எழுதுவதாக சித்தம்.
இப்போதைக்கு இவ்வளவே எழுத்தாள நண்பர்களுடம் பகிர விரும்புகிறேன். இங்கே சொன்னவற்றில் பலவற்றை உங்களில் சிலருடன் நான் பேசியும் இருக்கிறேன் என்றாலும் எல்லோருக்கும் தெரியப்படுத்தவே இந்தக் குறிப்பு. தன்னிலை விளக்கமாகவும் பாவிக்கலாம்.