என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday 11 September 2023

ஏ.ஆர்.ரகுமான் கன்சர்ட் விவகாரம்.

ஏ.ஆர்.ரகுமான் கன்சர்ட் விவகாரம்.


ஏ.ஆர்.ரகுமான் பிடிக்கும் என்பதற்காக இந்தப் பதிவை எழுதவில்லை.


ஏ.ஆர்.ரகுமான் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும்  உள்நோக்கத்துடனே இந்த கன்சர்ட் நிகழ்த்தப்பட்டிருப்பதாகத்தான் தெரிகிறது. 


சின்ன வயதில் ஒருவர் குறித்துத் தவறாகப் பேசப்படுகையில், அவர் தவறான ஆளாக இருப்பாரோ என்று எண்னியிருக்கிறேன். வளர வளரத்தான், அது ஒரு survival tactic என்பது புரிந்தது. உளப்பூர்வமான புரிதல் இல்லாத இடத்தில் எல்லோரையுமே 'வேண்டியவன் - வேண்டாதவன்' என்கிற இரண்டு சட்டகத்திற்குள் மட்டும் அடைத்துப் பார்க்க முயல்கையில் வேண்டாதவன் என்று கருதப்படுபவனை வடிகட்டி வெளியேற்றும் செயல்பாடே தான் அது.


வளர்ந்த பிறகு, இன்னும் இன்னும் உண்ணிப்பாக கவனிக்கையில் மேலும் நுணுக்கமாகப் பார்த்தபோது புரிந்தது இதுதான்: நீங்கள் ஒரு காரியத்தை சிறப்பாகச் செய்து பாருங்கள்; உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் கூடும். அந்தக் கூட்டம் நல்ல கூட்டமாக இருந்தால் அது அதிர்ஷ்டம். பெரும்பாலும் அது நடக்காது. முதலில் கூடுகிற கூட்டம் டாக்ஸிக்  நோக்கங்களுக்காக இருக்கத்தான் இக்காலத்தில் அதிக வாய்ப்பிருக்கிறது. 


அவர்களின் டாக்ஸிக் நோக்கங்களுக்கு தோதான ஆளாக நீங்கள் இருந்துவிட வேண்டும். இல்லையென்றால், உடனே உள் நோக்கத்துடன் பெயருக்கு கலங்கம் விளைவிக்கத்துவங்கி விடுகிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எந்த பேதமும் இல்லை. 


'அந்த ஆளு சரியான சிடுசிடு'

'ரொம்ப கறார் பேர்வழி'

'தலைக்கனம் புடிச்ச ஆளு'

'திறமை இருக்குங்கற திமிரு'

'எப்போமே நெகட்டிவ்வாத்தான் பேசுவாரு'

'ரொம்ப முசுடு..'

'மின்னுவதெல்லாம் பொன்னல்ல'

காரியத்துல கண்ணா இருப்பாரு...செல்ஃபிஷ்'


இப்படியெல்லாம் கிளம்பும் பேச்சுக்களில் பல சமயங்களில் எவ்வித உண்மையும் இருப்பதில்லை..  இப்படியெல்லாம் யார் குறித்தாவது பேச்சு கிளம்பினால், அவர் பிறர் பொறாமைப்படும் அளவிற்கோ, அச்சுறுத்தும் வகைக்கோ செயல்படுகிறார் என்றும், சுற்றி இருப்பவர்களின் மறைமுக நிர்பந்தங்களுக்குப் பணிய மறுக்கிறார் என்றும் புரிந்துகொள்ளப் பழகிவிட்டேன்.


'இளையராஜா தலைக்கனம் பிடித்தவர்' என்று பேசப்பட்டபோதும், அவர் குறித்து பரிதாபமே எஞ்சியது -இத்தனை திறமைகளுடன் தவறான மனிதர்கள் சூழ இருக்கிறாரே என்று. இப்போது ஏ.ஆர்.ரகுமானைக் குறிவைத்திருக்கிறார்கள். 


இப்படியெல்லாம் களங்கம் கற்பித்துவிட்டால், அவரை வீழ்த்திவிடலாம் என்று எண்ணுகிறார்கள் போல; ஆம். ஏ.ஆர்.ரகுமானுக்கு வரக்கூடிய வாய்ப்புக்களை தடுத்துவிடலாம் தான். ஆனால், அப்படித் தடுக்கப்பட்ட எல்லா வாய்ப்புக்களும் அவர்  ஏற்கவேண்டிய வாய்ப்புகள் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அவருக்கு பயன்படக்கூடிய, அவருக்கு அர்த்தப்படக்கூடிய அந்த ஒரு வாய்ப்பு எதுவென்று அவர் மட்டுமே அறிவார்; அந்த வாய்ப்பின் வாசம் கூட இவர்களின் சிறுமூளைக்கு எட்டாது என்பதே உண்மை.


சற்று உற்று நோக்கினால், சில விடயங்களை நீங்கள் கவனிக்கலாம்.


வெறும் களங்கம் கற்பிப்பவர்களிடம் ஒரு ஒட்டுமொத்த மேடையையுமே தந்து பாருங்கள்? அதை வைத்து மகா கேவலமான ஒரு output ஐ தருவார்கள்; அவர்கள் அதில் செய்வதெல்லாம், தங்களுக்கு வேண்டியவர்கள் கூட்டத்தை வைத்து, அவர்களுக்கு அவர்களே பேச வைத்துக்கொள்வது மட்டும் தான்.  இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும்: கூட்டத்தை வைத்து, ஒரு திறமைசாலிக்கு என்னவெல்லாம் மரியாதைகள் கிடைக்குமோ அதையெல்லாம் அவர்கள் மீட்டுருவாக்கம் தான் செய்வார்கள். ஆனால், அந்தத் திறமைசாலி என்னவெல்லாம் செய்தாரோ அதையெல்லாம் அதே கூட்டத்தை வைத்து  செய்ய முடியாது. அதற்குத் திறமை வேண்டும். அதனால், தான் எப்போதும் 'கூட்டம்' விரும்பியாகவே இருக்கிறார்கள். கூட்டத்துடன் இயங்கி இயங்கியே தனித்தியங்கும் ஆற்றலை விட்டு வெகு தொலைவுக்கு சென்றுவிடுகிறார்கள். 

 

அதே நேரம், இதுபோன்ற பிறரது survival tacticகளால் திறமைசாலிகள் தனித்தே இருக்க வேண்டி  நேர்ந்து விடலாம். கூட்டத்தால் தனிமைப்படுத்தப்படுவது ஒரு பிரச்சனை தான்; ஆனால், அது முதல் முறை மட்டும் தான். அந்தத் தனிமையை எதிர்கொள்ளத் துவங்கித்தான் அவர்கள் மகோன்னதப் படைப்புகளை உருவாக்குகிறார்கள்.  The more they are isolated, the more they acquire skills. உண்மையில் தனிமைப்படுத்துதல் என்பது எத்தனைக்கெத்தனை சவாலோ அத்தனைக்கத்தனை அது பலனளிக்கக்கூடியதும் கூட. அசலான திறமைசாலிகள் இந்த வாய்ப்புக்களையெல்லாம் விடவே மாட்டார்கள்.


ஆக, இந்தக் களங்கம் கற்பிப்பவர்கள் தடுப்பது, திறமைசாலிகள் ஏற்க விரும்பாத வாய்ப்புகளைத்தான். அதைச் செய்துவிட்டு அவர்கள் அடையும் குதூகலமே அவர்களின் அறியாமைக்கு சாட்சி. 


நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விழைவதெல்லாம், யார் பெயருக்காவது களங்கம் ஏற்படும் விதத்தில் பேச்சு கிளம்பினால், அவர் பிறர் பொறாமைப்படும் அளவிற்கோ, அச்சுறுத்தும் வகைக்கோ செயல்படுகிறார் என்றும், சுற்றி இருப்பவர்களின் மறைமுக நிர்பந்தங்களுக்குப் பணிய மறுக்கிறார் என்றும் புரிந்துகொள்ளப் பழகிவிடுங்கள் என்பதைத்தான். 


இவ்வுலகில், திறமைகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதற்கு இறைவனின் அருள் வேண்டும்; இதன் பொருள் என்னவென்றால், பிரபஞ்ச இயக்கத்தில் திறமைகளுக்கு ஏதேனும் உயரிய நோக்கங்கள், காரணங்கள் இருக்கும் என்பதுதான். பல கோடி பேர்களின் நுகர்வுப் பலனுக்காய் ஒரு சிலருக்கு இறைவனின் தூதுவர்களாய்த் திறமைகள் அளிக்கப்படும்.   நுகர்வோரும், இறைவனின் தூதுவர்களும் அவரவர் பிரபஞ்ச இடங்களை உணர்ந்திருக்கும் பட்சத்தில், இது போன்ற இடை வீணர்களின் வார்த்தைகள் பொருட்படுத்தப்பட வேண்டியதில்லை  என்பதே நண்பர்களுக்கு என் பரிந்துரை.