என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday, 19 September 2023

2022ல் குவிகம் சிறுகதைப் போட்டியில் தேர்வான எனது சிறுகதை

2022ல் குவிகம் சிறுகதைப் போட்டியில் தேர்வான எனது சிறுகதை... அறிவியல் புனைவு வாசகர்களின் வாசிப்புக்கென இங்கே... 





கண்ணாடிச்சுவர் - சிறுகதை




க்ளாரா தன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை அவசர அவசரமாகப் புறங்கையால் துடைக்கும் முன்  நான்சி பார்த்துவிட்டிருந்தாள்.


"என்னாயிற்று?" என்றாள் புருவச்சுருக்கங்களுடன். 


தன் திசையில் ஜூலியுடன் தான் மாலையும் கழுத்துமாக நிற்கும் தன் திருமணப் புகைப்படம் இருப்பதை ஒரு முறை பார்த்துக்கொண்டாள்; மனதுக்கு இதமாய் இருந்தது. மேஜையின் இழுவறையிலிருந்து அந்தக் காகிதத்தை எடுத்து மேஜை மீது வைத்தாள்.  நான்சி எதனை எடுத்துப் பிரித்துப் படித்துவிட்டு, உதட்டைப் பிதுக்கினாள்.


" பணி உயர்வு மறுக்கப்பட்டுள்ளதா? ஆண்டின் துவக்கத்தில் ஜூலியுடனான உன் திருமணம் நடந்தபோதே நான் நினைத்தேன். இது நடக்குமென்று." என்றாள்.


"ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? பெண்ணும் பெண்ணும் மனமுவந்து மணம் செய்துகொள்ளக் கூடாதா? கணவன்-மனைவியாக வாழக்கூடாதா? மறைந்து மறைந்து வாழவில்லையே.  பன்னெடுங்காலமாக ஆணைச் சார்ந்து வாழ்ந்ததில் அடிமைப்பட்டதன்றி நாம் அடைந்த பலன் என்ன? எந்த ஆணையும் குறை சொல்லவில்லையே. ஆண்களால் நம் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்னும் போது, நேர்மையாக, எல்லோருக்கும் அறிவித்து, எனக்கு விருப்பமுள்ள பெண்ணை வாழ்க்கைத்துணையாய்க் கரம் பிடிப்பது எத்தகைய பொறுப்பு? அத்தகைய பொறுப்பின் மத்தியிலும் இந்த நிறுவனத்திற்காக நான் நாள் தவறாமல் வேலை பார்த்திருக்கிறேன். அப்படியும்...." என்ற க்ளாரா, அதற்கு மேல் தொடர இயலாமல், உடைந்தாள்.


“நிறுவனத்தில் சென்ற ஓராண்டில் நடந்த பதினைந்து திருமணங்களுமே ஆணும் பெண்ணும் இணையும் திருமணங்கள். இரு சம்பளக்காரர்களிடமுள்ள நிறுவனத்தின் பங்குகள் அவர்தம் பிள்ளைகளுக்கு உரிமையாகும். நிறுவனத்தின் அடுத்த தலைமுறைத் தொடர்ச்சிக்கு வேறென்ன வேண்டும்? உன் ஓரினச்சேர்க்கை திருமணத்தால், நிறுவனத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும், நிறுவனத்துக்கும் என்ன லாபம்?  நீயாக ராஜினாமா செய்ய நிறுவனம் எதிர்பார்க்கிறது போலும்?” என்றாள் நான்சி.


"விடு. இவ்வுலகம் ஆண்களால் கட்டமைக்கப்பட்டது. பெண்களின் பிரச்சனைகள், வாழ்க்கை முறை, பெண்ணுக்கும் பெண்ணுக்குமான காதல் அவர்களுக்குப் புரியாது. நாம் கேள்வி கேட்டெல்லாம் எதுவும் மாறிவிடாது. வா, நம் வேலையைப் பார்க்கலாம்." என்றவள், 


"இன்று தானே நாம் மேற்கொண்ட பரிசோதனையின் இரண்டாம் கட்டம்" என்றாள் நான்சி.


பூவுலகில் முதன் முதலில் தோன்றிய உயிரணு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். அதன் பிறகு, பரிணாமம் எவ்விதம் தொடர்ந்தது என்கிற பரிசோதனையின் முதல் கட்டத்தின் முடிவில் இருந்தார்கள் க்ளாராவும், நான்சியும்.  முதல் கட்டம் சற்று சிக்கலானது:  ஒரு கண்ணாடிக் கூண்டில் பூமியில் உயிரணுக்கள் முதன் முதலில் உருவான காலகட்டம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது. அப்போதிருந்த நிலப்பரப்பு, சுற்றுச்சூழல், தட்பவெட்பம், நீர், வெம்மை, வெளிச்சம் என்று எல்லாமும் பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்டது. கண்ணாடிக் கூண்டிற்குள் செயற்கையாகப் பருவ கால மாற்றங்களில் சுழற்சி உருவாக்கப்பட்டது.  


ஆழ்கடலில் நீர் வெப்ப வீழ்படிவுகள் (hydrothermal vent precipitates) சேகரிக்கப்பட்டு குளிர்சாதனப்பெட்டிகளில் பரிசோதனைகளுக்கான மூலப்பொருட்களாக ஆராய்ச்சி நிறுவனம் தந்திருந்தது.


"இந்திரிய.... ...... வாழை....... இரண்டையும் ஒன்றாக்கி........ வெளியில் இருப்பதை உள்....  உள்ளிருப்பது வெளி.... மேல் கீழ்ப்பகுதி, கீழ்ப்பகுதியை மேல்பகுதியை... கொஞ்சம் இந்திரியம்...   நிறை உப்பு உப்பு, சல்ஃபர்... கொஞ்சம் பாதரசம்.... நொச்சி, தழுதாழை, கழற்ச்சி ... கூட்டு கலவையை பெரும் நெருப்பு தீண்ட... தீண்டித் தீண்டி மெருகேற.... பிரவாகம்... பெருநாகம்...  அணுக்கள் பிரிந்து.... ஏந்தி... கருவுக்குள் பிரளயம்...  சர்ப்பமும், பிண்டமும் குமிழ்ந்து, குழைந்து...   ஆணையும் பெண்ணையும் ........  உயிர்.... உள் நுழைய...."


பிரிதேதோவோர் ஆராய்ச்சிக்கெனக் கிடைத்தக் குறிப்பில் இருந்ததை வைத்து கொழ கொழவென்ற கரிம (organic) திரவத்தில் வீழ்படிவுகளைக் கொஞ்சமென எடுத்துக் கவிழ்த்திருந்தாள் க்ளாரா.  கருமுட்டை அடங்கிய திரவம் நாலாபுரமும் வழிந்தோட சட்டென அருகே இருந்த கற்கள், பாறைகளை எடுத்து, சுற்றிலும் அடுக்கித் தடுத்திருந்தாள். ஒரு முனையில் சல்ஃபர். மற்றொரு முனையில் உப்பு. நடுவே, பாலம் அமைத்தது போல் பாதரசம். இந்த அமைப்பின் மீது மின்சாரம் பாய்ச்சி, அது சன்னமாக வெடித்தது. அதை அப்படியே தென்னங்கீற்றாலான குடுவை ஒன்றைக் கொண்டு மூடியிருந்தாள். 


இந்த முதல் கட்டத்தின் முடிவில், இம்முயற்சிகளின் கூட்டு பலனாக, கூண்டிற்குள் ஒரு வினோதமான உயிர் உருவாகியிருந்தது. துவக்கத்தில் கூண்டின் ஒரு மூலையில் வெள்ளையாக உருவெடுத்திருந்தது. க்ளாரா அதை அவதானித்துவிட்டு,


"பெண் இனம்" என்றாள்.


"எப்படிச் சொல்கிறாய்?" என்றாள் நான்சி.


"கூண்டுக்குள் நூறில் ஒரு பங்கு பகுதிக்கும் மேலாகப் பரவியிருப்பதைக் கவனிக்கிறாயா? பால் சாரா இனப்பெருக்கம் வாயிலாகப் பெறுகிக்கொண்டிருக்கிறது. தன்னைத்தானே பிரசவிக்கிறது. அப்படியானால் பெண் தானே" 


"மிகவும் சீராக வளர்கிறதல்லவா?" என்றாள் நான்சி. 


க்ளாரா ஆமோதிப்பாய்த் தலையசைக்க, 


"பரிணாமத்தின் வழி, இனி பிறழ்வுகளைச் சோதிக்கவேண்டும். ஆனால், பிறழ்வுகள் தாமாக நேரும் வரை பொறுக்க வேண்டும் போலிருக்கிறதே?" என்றாள் நான்சி.


"தேவையில்லை. சின்னதாக கதிர்வீச்சு தந்தால், பிறழ்வுகள் உருவாக சாத்தியம் உருவாகும்." என்ற க்ளாரா, கதிர்வீச்சுக் கருவியைக் கையிலேந்தி ஒரு பொத்தானை அழுத்த, கருவியிலிருந்து வெளிப்பட்ட கன நேரக் கதிர்வீச்சு நுண்ணியிரிகள் மீது விழுந்து படர்ந்தது. 


"இனி நாம் கண்டுபிடிக்க வேண்டியது பிறழ்வுகள் பாதித்த உயிர்களை. நான் இடமிருந்து வலமாக சோதிக்கிறேன். நீ வலமிருந்து இடமாக நுண்ணியிரிகளைச் சோதனைக்கு உள்ளாக்கி சோதி." என்று கட்டளையிட்டபடி, க்ளாரா கூண்டின் இடது பக்கமிருந்து சில உயிர்களை எடுத்து, நுண்ணோக்கியில் வைத்து சோதிக்கலானாள்.


நான்சி தானும் சிறிய அளவில் உயிர்கள் எடுத்து சோதிக்க, இருவரும் தாங்கள் கண்டுகொண்டவைகளைக் குறிப்பெடுத்துக்கொண்டார்கள். 


பல முறைகளாக நடந்த சோதனைகளில் குறிப்பிடத்தகுந்த பிறழ்வுகள் ஏதும் சிக்காமல் இருவருமே சோர்ந்துவிட்டிருந்தனர். அந்த நாளின் இறுதி முயற்சியாக, கண்ணாடிக்கூண்டின் மத்தியிலிருந்து சிறிதளவு எடுத்துச் சோதித்தபோது அவர்களின் புருவங்கள் சுருங்கின.


"இதோ, இங்கே பிறழ்வு நேர்ந்திருக்கிறது.  இந்த உயிர்கள் ஏனையவைகளை விட சற்று வித்தியாசமாக இருக்கின்றன." என்றாள் க்ளாரா.


"ஆனால், நிறமாக இல்லையே" 


"அதன் பொருள் அவைகள் பெறுகவில்லை என்பது" 


"அப்படியானால், இவைகள் ஆண்களா?" 


"உருவாகும் வேகத்திலேயே மடிகின்றன. தம்மைத்தாமே தொடர்ந்து உருவாக்குவதில்லை. அப்படியானால், ஆணாகத்தானே  இருக்க வேண்டும். " என்ற க்ளாரா மீண்டும் கதிர்வீச்சுக் கருவியை இயக்கினாள்.


உயிர்களின் வளர்ச்சி வேகத்தில், அன்றிரவே பிறழ்வுகளின் பக்கவிளைவுகளைக் காண முடியும் என்ற ஸ்திதி எழுந்தது. ஆதலால், அன்றிரவு, தொடர்ந்து வேலை செய்வதாய் அவர்களுக்குள் ஒப்பந்தமாயிற்று. நான்சி, தனக்கும், க்ளாராவுக்குமாக நூடுல்ஸ் தயார் செய்து எடுத்து வந்தாள். இருவருமாக சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் கூண்டினருகில் வர, இப்போது வண்ண வண்ண  நிறத்தில் உயிர்கள் வளர்ந்திருக்கக் கண்டார்கள்.


"வாவ்.. எத்தனை அழகழகான நிறங்கள் பார்த்தாயா? பார்க்கவே அழகாக இருக்கிறது" என்று குதூகளித்தாள் நான்சி.


"ம்ம்ம்ம்" 


க்ளாரா சிந்தனை வயப்பட்டிருப்பதை கவனித்தவளாய்,


"என்னாயிற்று? என்ன யோசிக்கிறாய்?" என்றாள் நான்சி.


"பிறழ்வுகள் முதலில் ஆண் இனத்தை உருவாக்கின. ஆனால், பிறழ்வுகளின் பக்க விளைவால், அவைகளால் பால்சாரா இனப்பெருக்கம் செய்ய முடியவில்லை.  அதன் பிறகான கதிர்வீச்சு தந்த பிறழ்வுகள் எப்படியோ இந்த ஆண் உயிர்களை பெண் உயிர்களுடன் கூடிப் பெறுகும் இயல்பினதாகவும், அதே நேரம் சில பெண் உயிர்களை பால் சாரா இனப்பெருக்கம் தவிர்ந்து, ஆண் உயிர்களுடன் கூடிப் பெறுகும் இயல்பினதாகவும் மாற்றியிருக்கின்றன. அதன் பக்க விளைவாக வந்த உயிர்கள் பற்பல  நிறங்களில் தங்களை வெளிப்படுத்துகின்றன. ஏனெனில்,  உயிர் தழைப்பின் மூலக்கூறுகள் இரு உயிர்களிலிருந்தும் பெறப்படுவதால், வரிசை மாற்ற சேர்க்கை சாத்தியங்கள் உருவாகியிருக்கின்றன.  இந்த சாத்தியங்களின் வழி உயிர்களின் அகத்தோற்றத்தின் சாத்தியங்களும் அதிகரித்திருக்கின்றன. இதனால், கூண்டிற்கு என்னானது என்பதை கவனிக்கிறாயா?"


நான்சி கண்ணாடிக் கூண்டை ஒரு முறை முழுமையாகப் பார்த்துவிட்டு அதிர்ந்தாள். 


"இதென்ன வினோதம்? அதற்குள் கூண்டு முழுவதும் இந்த புதிய பல் நிற உயிர்கள் வியாபித்துவிட்டனவே?" என்றாள் நான்சி அதிர்ச்சி விலகாமல்.


"இதற்கு ஒரு விளக்கம் தான் இருக்க முடியும். துவக்கத்தில், பெண் உயிர்கள் பெறுகினதாம். ஆனால், அதன் வேகம் கட்டுக்குள் இருந்திருக்கிறது. ஆனால், ஆணும் பெண்ணுமாக இந்தப் புத்துயிர்கள் பெறுகும் வேகம் கட்டுக்கடங்காமல் அதிகரித்திருக்கிறது" 


"அதனால்?" 


"பெண் உயிர்கள் தனித்து இருந்தவரை அவைகளின் பெறுகும் வேகம் மிதமாகத்தான் இருந்திருக்கிறது. தவிரவும் அதிக நிறங்கள் இல்லாது இருந்திருக்கின்றது. ஒரு வேளை அதுதான் சரியோ என்று தோன்றச்செய்கிறது?" 


"பிறழ்வுகளால் உருவான ஆண் உயிர்கள் தங்களைத் தக்க வைக்க பெண்ணுயிர்களுடன் கூடிய பிறகு பெறுகும் வேகம் அதிகரித்திருக்கிறது என்கிறாயா?" 


"இல்லை. இப்படி யோசித்துப் பார். பெண் உயிர்கள் தனித்து, தமக்குள்ளாகவே பெறுகும் வல்லமை பெற்றவை. ஆனால், முதல் பிறழ்வின் பிறகு தோன்றிய ஆண் உயிர்கள் தனித்து பெறுக இயலாமல் தோற்றவை. 'தோற்றவை' என்ற வார்த்தைப் பிரயோகத்தை கவனி. அவைகள் பெண் உயிர்களின் துணை இன்றிப் பெறுக வாய்ப்பின்றி, உருவாக உருவாக, உருவாகும் வேகத்திலேயே அழிந்தன. இரண்டாம் கட்ட பிறழ்வு ஆண்-பெண் கூடிப் பெறுகும் வல்லமையைத் தந்திருக்கிறது. அதாவது, ஆண் உயிர்கள் உயிர்த்திருக்க, தழைக்க, அந்தக் கூடல் உதவியிருக்கிறது. அவ்வாறு பெறுகிய உயிர்கள் பல நிறங்களில் காட்சிக்கு இதமாக அழகாக ரம்மியமாகத் தோன்றுகின்றன" 


"ஆண் உயிர்கள் இல்லையென்றால், பெண் உயிர்களிடம் லட்சணம், அழகு , ரம்மியம், இதம் இல்லாமல் போயிருக்கும் என்கிறாயா க்ளாரா?".


"இல்லை. நீ தவறாகப் புரிந்துகொள்கிறாய். பெண் உயிர்கள் மிதமான வேகத்தில் பெறுகின. அதே வேகத்தில் ஆண்-பெண் கூடிப் பெறுகும் வேகம் அமைந்திருந்தால், இத்தனை நிறங்களில் ஆண்-பெண் கூடிப்பெறுகும் இயல்பின உயிர்கள் தோன்றியிருக்காது. ஆண்-பெண் கூடிப்பெறுகும் வேகம் அதிகரித்ததினாலேயே, தன்னிச்சையாகப் பெறுகும் இயல்பு கொண்ட பெண் உயிர்கள் வழக்கொழிந்து போய் விடலாம். அவ்விதம் ஒருக்கால் நடப்பின் அது பிற்பாடு ஆண் உயிர்கள் ஆதிக்கம் செலுத்தும் சிற்றுலகாகவே இந்தக் கூண்டை உருமாற்றிவிடக்கூடும். அல்லவா?" 


நான்சி தீவிரமாக யோசித்துவிட்டு ஆமோதிப்பாய்த் தலையசைத்தாள்.


"தன்னிச்சையாக இயங்கும் பெண் உயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டால், அதன் பிறகு, இந்தச் சிற்றுலகே ஆண்-பெண் கூடிப்பெறுகும் உலகாகிவிடும். இதன் பொருள் என்ன? பெண் உயிர்களால் ஆண் உயிர்களின் துணை இன்றிப் பெருகவே முடியாமல் போய்விடும். அது நடக்கக்கூடாது. ஏனெனில், பெண் உயிர்கள் தனிச்சிறப்பானவை, நான்சி; தன்னிச்சையாக இயங்கக் கூடியவை; அந்த இயங்கு இயல்பு பாதுகாக்கப்பட வேண்டும். அதுவே இனி வரும் காலங்களில் பெண் உயிர்களை அவைகளின் தன் மானத்துடனும், சுய கெளரவத்துடனுடன் பாதுகாக்கும் என்று கருதுகிறேன்" என்ற க்ளாரா கையில் ஒரு கோடாரியுடன்  கண்ணாடிக் கூண்டைத் திறந்தாள். 


வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் ஆண்-பெண் உயிர்களைத் தன்னிச்சையாக இயங்கும் இயல்புடைய பெண் உயிர்களிடமிருந்து பிரித்து, இரண்டுக்கும் இடையே கண்ணாடிச் சுவர் எழுப்பினாள். பின் கண்ணாடிக் கூண்டை மூடிவிட்டு வெளியே வந்தாள். கூண்டுக்குள் இப்போது ஒரு பகுதியில் ஆண்-பெண் கூடிப்பெறுகும் இயல்புடைய உயிர்கள் அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் மிக மிதமான வேகத்தில் வெள்ளை நிறத்தில் தன்னிச்சையாகப் பெறுகும் பெண் உயிர்கள் பால் சாரா இனப்பெறுக்கம் வாயிலாகப் பெறுகிக் கொண்டிருந்தன. இரண்டும் அதனதன் இயல்பில் இயங்கிக்கொண்டிருந்தன.


"இந்தக் கண்ணாடி கூண்டுச் சிற்றுலகில், இந்த ஆண்-பெண் கூடிப்பெறுகும் இனத்தில் ஆண் உயிர்கள் பெண் உயிர்கள் மீது ஆதிக்கம் செலுத்தத்துவங்குமேயானால் அது இயற்கைக்கு முரணானதாகிவிடும். அத்தருணத்தில், அவ்வினத்தையே முழுவதுமாக அழித்துவிட்டு மீண்டும் முதலிலிருந்து துவங்க, தன்னிச்சையாக இயங்கும் இந்தப் பெண் உயிர்கள் தேவைப்படும்" என்றறிவித்தாள் க்ளாரா.


"கிட்டத்தட்ட ஆன்ட்ராயிடு (android) அலைபேசிகளில் தொழிற்சாலை மீட்டமைப்பு (factory reset) வசதியைப் போலத்தான் என்கிறாய். சரிதானே?" என்றாள் நான்சி.


"மனித உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் பல்வேறு மைல்கற்களில் கூட, இப்படி எங்கோ கண்ணாடிச் சுவர் எழுப்பப்பட்டிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். இல்லையா க்ளாரா?" என்றாள் தொடர்ந்து.


"பெண் ஏன் அடிமையானாள் என்று  நினைக்கிறாய், நான்சி? இந்த இயற்கை இவ்விதம் கண்ணாடிச் சுவர் எழுப்பாததினால் தான்" என்றாள் க்ளாரா.


நான்சி ஆமோதிப்பாய்த் தலையசைத்தாள். 


“எப்படியோ.. இந்த பரிசோதனையின் வெற்றி உனக்கான பதவி உயர்வைப் பெற்றுத்தருமென்று நம்புகிறேன்” என்றாள் தொடர்ந்து. தீவிரமான சிந்தையில் ஆழ்ந்த நான்சி, ஒரு முடிவுக்கு வந்தவளாய்,


“இந்தப் பரிசோதனையைத் தோல்வி என்று அறிவிக்கப்போகிறேன்,  நான்சி” என்றாள். க்ளாராவின் வார்த்தைகள் நான்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கின. 


“ஏன்?” 


“இப்பூமியில் பெண்கள் தங்களுக்குள் கூடும் ஓரினச்சேர்க்கைத் திருமணங்களில் ஏதேனும் ஒன்றாவது இயற்கை எழுப்பாமல் விட்ட கண்ணாடிச் சுவற்றை எழுப்பினால் அதுதான் பெண் இனத்தின் அறுதி விடியலாக இருக்க முடியும், நான்சி. இப்பரிசோதனை குறித்த அறிக்கையை நிறுவனத்திடம் சமர்ப்பித்தல் அம்முயற்சிக்கு இடையூறாக அமையலாம்“ என்ற க்ளாரா, தொடர்ந்து ‘அழி’ என்ற பொத்தானை அழுத்த கண்ணாடிக் கூண்டு நெருப்பில் எரியத்துவங்கியது.


 - முற்றும்.


Monday, 11 September 2023

ஏ.ஆர்.ரகுமான் கன்சர்ட் விவகாரம்.

ஏ.ஆர்.ரகுமான் கன்சர்ட் விவகாரம்.


ஏ.ஆர்.ரகுமான் பிடிக்கும் என்பதற்காக இந்தப் பதிவை எழுதவில்லை.


ஏ.ஆர்.ரகுமான் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும்  உள்நோக்கத்துடனே இந்த கன்சர்ட் நிகழ்த்தப்பட்டிருப்பதாகத்தான் தெரிகிறது. 


சின்ன வயதில் ஒருவர் குறித்துத் தவறாகப் பேசப்படுகையில், அவர் தவறான ஆளாக இருப்பாரோ என்று எண்னியிருக்கிறேன். வளர வளரத்தான், அது ஒரு survival tactic என்பது புரிந்தது. உளப்பூர்வமான புரிதல் இல்லாத இடத்தில் எல்லோரையுமே 'வேண்டியவன் - வேண்டாதவன்' என்கிற இரண்டு சட்டகத்திற்குள் மட்டும் அடைத்துப் பார்க்க முயல்கையில் வேண்டாதவன் என்று கருதப்படுபவனை வடிகட்டி வெளியேற்றும் செயல்பாடே தான் அது.


வளர்ந்த பிறகு, இன்னும் இன்னும் உண்ணிப்பாக கவனிக்கையில் மேலும் நுணுக்கமாகப் பார்த்தபோது புரிந்தது இதுதான்: நீங்கள் ஒரு காரியத்தை சிறப்பாகச் செய்து பாருங்கள்; உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் கூடும். அந்தக் கூட்டம் நல்ல கூட்டமாக இருந்தால் அது அதிர்ஷ்டம். பெரும்பாலும் அது நடக்காது. முதலில் கூடுகிற கூட்டம் டாக்ஸிக்  நோக்கங்களுக்காக இருக்கத்தான் இக்காலத்தில் அதிக வாய்ப்பிருக்கிறது. 


அவர்களின் டாக்ஸிக் நோக்கங்களுக்கு தோதான ஆளாக நீங்கள் இருந்துவிட வேண்டும். இல்லையென்றால், உடனே உள் நோக்கத்துடன் பெயருக்கு கலங்கம் விளைவிக்கத்துவங்கி விடுகிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எந்த பேதமும் இல்லை. 


'அந்த ஆளு சரியான சிடுசிடு'

'ரொம்ப கறார் பேர்வழி'

'தலைக்கனம் புடிச்ச ஆளு'

'திறமை இருக்குங்கற திமிரு'

'எப்போமே நெகட்டிவ்வாத்தான் பேசுவாரு'

'ரொம்ப முசுடு..'

'மின்னுவதெல்லாம் பொன்னல்ல'

காரியத்துல கண்ணா இருப்பாரு...செல்ஃபிஷ்'


இப்படியெல்லாம் கிளம்பும் பேச்சுக்களில் பல சமயங்களில் எவ்வித உண்மையும் இருப்பதில்லை..  இப்படியெல்லாம் யார் குறித்தாவது பேச்சு கிளம்பினால், அவர் பிறர் பொறாமைப்படும் அளவிற்கோ, அச்சுறுத்தும் வகைக்கோ செயல்படுகிறார் என்றும், சுற்றி இருப்பவர்களின் மறைமுக நிர்பந்தங்களுக்குப் பணிய மறுக்கிறார் என்றும் புரிந்துகொள்ளப் பழகிவிட்டேன்.


'இளையராஜா தலைக்கனம் பிடித்தவர்' என்று பேசப்பட்டபோதும், அவர் குறித்து பரிதாபமே எஞ்சியது -இத்தனை திறமைகளுடன் தவறான மனிதர்கள் சூழ இருக்கிறாரே என்று. இப்போது ஏ.ஆர்.ரகுமானைக் குறிவைத்திருக்கிறார்கள். 


இப்படியெல்லாம் களங்கம் கற்பித்துவிட்டால், அவரை வீழ்த்திவிடலாம் என்று எண்ணுகிறார்கள் போல; ஆம். ஏ.ஆர்.ரகுமானுக்கு வரக்கூடிய வாய்ப்புக்களை தடுத்துவிடலாம் தான். ஆனால், அப்படித் தடுக்கப்பட்ட எல்லா வாய்ப்புக்களும் அவர்  ஏற்கவேண்டிய வாய்ப்புகள் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அவருக்கு பயன்படக்கூடிய, அவருக்கு அர்த்தப்படக்கூடிய அந்த ஒரு வாய்ப்பு எதுவென்று அவர் மட்டுமே அறிவார்; அந்த வாய்ப்பின் வாசம் கூட இவர்களின் சிறுமூளைக்கு எட்டாது என்பதே உண்மை.


சற்று உற்று நோக்கினால், சில விடயங்களை நீங்கள் கவனிக்கலாம்.


வெறும் களங்கம் கற்பிப்பவர்களிடம் ஒரு ஒட்டுமொத்த மேடையையுமே தந்து பாருங்கள்? அதை வைத்து மகா கேவலமான ஒரு output ஐ தருவார்கள்; அவர்கள் அதில் செய்வதெல்லாம், தங்களுக்கு வேண்டியவர்கள் கூட்டத்தை வைத்து, அவர்களுக்கு அவர்களே பேச வைத்துக்கொள்வது மட்டும் தான்.  இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும்: கூட்டத்தை வைத்து, ஒரு திறமைசாலிக்கு என்னவெல்லாம் மரியாதைகள் கிடைக்குமோ அதையெல்லாம் அவர்கள் மீட்டுருவாக்கம் தான் செய்வார்கள். ஆனால், அந்தத் திறமைசாலி என்னவெல்லாம் செய்தாரோ அதையெல்லாம் அதே கூட்டத்தை வைத்து  செய்ய முடியாது. அதற்குத் திறமை வேண்டும். அதனால், தான் எப்போதும் 'கூட்டம்' விரும்பியாகவே இருக்கிறார்கள். கூட்டத்துடன் இயங்கி இயங்கியே தனித்தியங்கும் ஆற்றலை விட்டு வெகு தொலைவுக்கு சென்றுவிடுகிறார்கள். 

 

அதே நேரம், இதுபோன்ற பிறரது survival tacticகளால் திறமைசாலிகள் தனித்தே இருக்க வேண்டி  நேர்ந்து விடலாம். கூட்டத்தால் தனிமைப்படுத்தப்படுவது ஒரு பிரச்சனை தான்; ஆனால், அது முதல் முறை மட்டும் தான். அந்தத் தனிமையை எதிர்கொள்ளத் துவங்கித்தான் அவர்கள் மகோன்னதப் படைப்புகளை உருவாக்குகிறார்கள்.  The more they are isolated, the more they acquire skills. உண்மையில் தனிமைப்படுத்துதல் என்பது எத்தனைக்கெத்தனை சவாலோ அத்தனைக்கத்தனை அது பலனளிக்கக்கூடியதும் கூட. அசலான திறமைசாலிகள் இந்த வாய்ப்புக்களையெல்லாம் விடவே மாட்டார்கள்.


ஆக, இந்தக் களங்கம் கற்பிப்பவர்கள் தடுப்பது, திறமைசாலிகள் ஏற்க விரும்பாத வாய்ப்புகளைத்தான். அதைச் செய்துவிட்டு அவர்கள் அடையும் குதூகலமே அவர்களின் அறியாமைக்கு சாட்சி. 


நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விழைவதெல்லாம், யார் பெயருக்காவது களங்கம் ஏற்படும் விதத்தில் பேச்சு கிளம்பினால், அவர் பிறர் பொறாமைப்படும் அளவிற்கோ, அச்சுறுத்தும் வகைக்கோ செயல்படுகிறார் என்றும், சுற்றி இருப்பவர்களின் மறைமுக நிர்பந்தங்களுக்குப் பணிய மறுக்கிறார் என்றும் புரிந்துகொள்ளப் பழகிவிடுங்கள் என்பதைத்தான். 


இவ்வுலகில், திறமைகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதற்கு இறைவனின் அருள் வேண்டும்; இதன் பொருள் என்னவென்றால், பிரபஞ்ச இயக்கத்தில் திறமைகளுக்கு ஏதேனும் உயரிய நோக்கங்கள், காரணங்கள் இருக்கும் என்பதுதான். பல கோடி பேர்களின் நுகர்வுப் பலனுக்காய் ஒரு சிலருக்கு இறைவனின் தூதுவர்களாய்த் திறமைகள் அளிக்கப்படும்.   நுகர்வோரும், இறைவனின் தூதுவர்களும் அவரவர் பிரபஞ்ச இடங்களை உணர்ந்திருக்கும் பட்சத்தில், இது போன்ற இடை வீணர்களின் வார்த்தைகள் பொருட்படுத்தப்பட வேண்டியதில்லை  என்பதே நண்பர்களுக்கு என் பரிந்துரை.