என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday, 15 May 2023

யாத்திசை - திரைப்படம்

 பணிச்சூழலுக்கு மத்தியில் 'யாத்திசை' பார்க்க நேற்று தான் நேரம் கிட்டியது. 


யாத்திசையில் சப்டைட்டில் இல்லாமல் படம் பார்க்க முடியவில்லை என்ற விமர்சனமெல்லாம் இருக்கிறதுதான்.  நாங்கைந்துமுறை திரும்பத்திரும்பப் பார்க்க வேண்டியிருந்தது.


Apocalypto மெல் கிப்சன் இயக்கிய படம்; மாயன் இனத்தவரின் மொழி, கலாச்சாரம் குறித்து பிற்காலத்தில் யாரேனும்  தெரிந்துகொள்ள விரும்பினால் Apocalyptoவை ஒரு reference ஆகப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். பார்க்கப்போனால், இயக்குனராக ஒரு படத்தை இயக்குகையில் கிடைத்த தகவல்களை எல்லோருக்கும் பயன்படும் விதமாக ஆவணப்படுத்த திரைப்படத்தையே ஒரு களஞ்சியமாகப் பாவித்திருப்பார் மெல் கிப்சன். யாத்திசையையும் அதில் தாராளமாகச் சேர்க்கலாம். 


சம காலத்தில் வெளியான சரித்திரப்படங்கள் சமகால ரசிகர்களை மகிழ்வித்துவிடலாம். எதிர்கால தகவல் தேடர்களுக்கு அவைகள் பயனளிக்கப்போவதில்லை. Apocalypto, யாத்திசை போன்ற படங்கள் மட்டுமே ஒரு தகவல் களஞ்சியமாக எதிர்கால பார்வையாளர்களுக்கு எஞ்சி நிற்கும் என்று நினைக்கிறேன். திரைப்படத்தின் எத்தனை சதவிகிதத் தகவல்கள் அவர்களுக்குப் பயன்படும் என்று வேண்டுமானால் நாம் விவாதிக்க முடியும். எப்படியாகினும் களஞ்சியம் களஞ்சியம் தானே.


Apocalypto வை ஒரு தகவல் களஞ்சியமாக நான் வைத்திருக்கிறேன். எண்ணற்ற முறை பார்த்திருக்கிறேன். repeat audience எனபார்கள். யாத்திசையில் வரும் மொழி, repeat audience, மற்றும் reference நோக்கங்களுக்காக வைக்கப்பட்டதென்று எடுத்துக்கொள்வதில் பயன் அதிகம் என்பதே என் வாதம்.. 


தமிழ்த்திரை உலகில் பரீட்சார்த்த முயற்சிகள் அவ்வப்போது நிகழும். 'ழகரம்' என்றொரு படம் எடுத்திருந்தார்கள். 10 லட்சம் தான் மொத்த பட்ஜெட். எனக்குப் பிடித்திருந்தது. அதுபோல யாத்திசையையும் ஒரு பரீட்சார்த்த முயல்வாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.  என்னளவில் அது என் தகவல் களஞ்சியத்தில் இடம்பெற எல்லா தகுதியும் கொண்ட ஒன்று; Apocalypto போலவே.