என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday 21 February 2023

Voice of men 360 - 143rd session


 

இன்றைய தேதியில், சமூகப் பிரச்சனைகளில் கருத்திட்டு பெண்கள் ஆதரவைப் பெற்றுவிடுவது சுலபம்: கண்ணை மூடிக்கொண்டு பெண்கள் என்ன சொன்னாலும் 'சரி' என்று சொல்லிவிட்டால் போதும். அது மிக எளிது. இதைப் பல பேர் செய்கிறார்கள். பல திரைப்படங்கள், குறும்படங்கள் கூச்சமின்றி, எவ்வித சமூகப் பொறுப்புமின்றி, கொஞ்சமும் குற்ற உணர்வின்றிச் செய்கின்றன. அதே போல் கண்ணை மூடிக்கொண்டு ஆணாதிக்கமாகப் பேசி வன்மத்தைக் கக்குவதும் சுலபம். இதையும் முக நூலில் பல இடங்களில் பார்க்கலாம்.
இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலை இருக்கிறது. அது மகா கடினம். அது தான் இருபாலரின் தேவைகள், அவர்தம் இயல்புகளின் அடி வேர் காரணிகள், அதனால் சமூகம் அடையும் சாதக பாதகங்கள், ஆரோக்கியமான எதிர்கால உலகிற்கு என்ன தேவை, அதில் இரு பாலரின் பங்கு என்ன என்பது குறித்து நடுவு நிலையுடன் புரிந்து பேசுவது மிக மிகக் கடினம். சராசரியைக் காட்டிலும் அதிகமான புரிதல் கோரும் தலைப்பு இது. இந்த நடுவு நிலைப் புரிதலில் ஒரு பாலருக்கும் தனித்தனியே சொல்ல விடயங்கள் இருக்கின்றன. ஆண்களின் தரப்பைச் சொல்ல என்னை அழைத்திருக்கிறார் கனடாவைச் சேர்ந்த சிவம் வேலாயுதம் அவர்கள். மிகவும் சிக்கலான, அதே நேரம் இக்காலத்திற்கு மிகவும் தேவையான, நடுவு நிலையை அதீதமாகக் கோரும் , மிகவும் சென்ஸிடிவ்வான இத்தலைப்பில் பேச தகுதி வாய்ந்த நபராக நான் கருதப்படுவதில் மகிழ்ச்சி. அமெரிக்காவில் Women's health பத்திரிக்கை பிரபலம். அழகு குறிப்புகள் மட்டுமன்றி, பெண்களின் உடல் நலம், மன நலம் சார்ந்த அனைத்தும் விவாதிக்கப்படும், விழுப்புணர்வு தேவைப்படும் இடங்களில் வெளிச்சம் பாய்ச்சும் ஒரு பத்திரிக்கையாக செயல்படுகிறது. அப்படியானால், ஆண்களுக்காகவும் ஒன்று இருக்க வேண்டுமல்லவா? Men's Health அப்படியான பத்திரிக்கை தான். ஆண்களின் உடல் மற்றும் மன நலன் சார்ந்த கருத்துக்கள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் இவ்விதழில் வெளியாகும். ஆனால், இவ்விரண்டும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சமூகத்தை மையப்படுத்தியது. தமிழ்ச் சமூகத்தில், பெண்களின் உடல் நலம் மன நலம் குறித்து பொதுத்தளத்தில் மிகப்பல விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டதின் பலனை இப்போதைய பெண்கள் அனுபவிக்கிறார்கள். பெண் ஏன் அடிமையானாள், நம் தந்தையரைக் கொல்வது எப்படி போன்ற நூல்களை எல்லாம் படித்து பிரித்து மேய்ந்தாகிவிட்டது. நீதிமன்றங்கள், சட்ட நடைமுறைகலெல்லாம் பெண்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றன. போலவே தமிழ்ச் சமூகத்தில் ஆண்களின் உடல் மற்றும் மன நலம் சார்ந்த கருத்துக்களுக்கான வெளிப்பாடு தளங்கள் என்று நம்மிடம் ஏதேனும் இருக்கிறதா? அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. Voice of men 360 அமைப்பு இந்த வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் செயல்படும் ஒன்று. கனடாவைச் சேர்ந்த ஷிவம் வேலாயுதம் பொறுப்பேற்று நடத்துகிறார். இதைச் சொல்லும் போது இன்னுமொன்றையும் சொல்லவேண்டும். ஆண்களின் உடல் மற்றும் மன நலம் சார்ந்த கருத்துக்கள் பேசப்படுவதால் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை முன்மொழியும் செயல்பாடு அல்ல இது. இந்த நுண்ணிய பார்வையை முன்வைக்கத்தான் இதன் நிறுவனரான ஷிவம் வேலாயுதம் என்னை அழைத்திருக்கிறார். அதன் பேரில் கலந்து கொள்ள இருக்கிறேன். இந்நிகழ்வுக்கு என்னைப் பரிந்துரைத்த திரு Ravi Chokkalingam அவர்களுக்கு இத்தருணத்தில் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். என்னைப் பொறுத்தமட்டில், பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் போன்ற கருத்துக்களுடன் உருவாகும் நாளைய சமூகத்தில் பெண்களுக்கு இணையாக ஆண்களும், ஆரோக்கியமான இருபாலருக்கும் நன்மை பயக்கும் வகையில் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் விதமாக ஆண் உலகின் செயல்பாடுகள், இயக்கங்கள் எவ்விதம் அமைய வேண்டும் என்பதான நோக்கில் இந்த அமைப்பில் செயல் திசை அமைய வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பேச இருக்கிறேன். வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்து கொள்ளலாம்.