என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday, 26 February 2023

Voice of men 360 - காணொளி

 நிகழ்வு இனிதே நடந்தது... காணொளி இங்கே:


Voice of men 360




Tuesday, 21 February 2023

Voice of men 360 - 143rd session


 

இன்றைய தேதியில், சமூகப் பிரச்சனைகளில் கருத்திட்டு பெண்கள் ஆதரவைப் பெற்றுவிடுவது சுலபம்: கண்ணை மூடிக்கொண்டு பெண்கள் என்ன சொன்னாலும் 'சரி' என்று சொல்லிவிட்டால் போதும். அது மிக எளிது. இதைப் பல பேர் செய்கிறார்கள். பல திரைப்படங்கள், குறும்படங்கள் கூச்சமின்றி, எவ்வித சமூகப் பொறுப்புமின்றி, கொஞ்சமும் குற்ற உணர்வின்றிச் செய்கின்றன. அதே போல் கண்ணை மூடிக்கொண்டு ஆணாதிக்கமாகப் பேசி வன்மத்தைக் கக்குவதும் சுலபம். இதையும் முக நூலில் பல இடங்களில் பார்க்கலாம்.
இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலை இருக்கிறது. அது மகா கடினம். அது தான் இருபாலரின் தேவைகள், அவர்தம் இயல்புகளின் அடி வேர் காரணிகள், அதனால் சமூகம் அடையும் சாதக பாதகங்கள், ஆரோக்கியமான எதிர்கால உலகிற்கு என்ன தேவை, அதில் இரு பாலரின் பங்கு என்ன என்பது குறித்து நடுவு நிலையுடன் புரிந்து பேசுவது மிக மிகக் கடினம். சராசரியைக் காட்டிலும் அதிகமான புரிதல் கோரும் தலைப்பு இது. இந்த நடுவு நிலைப் புரிதலில் ஒரு பாலருக்கும் தனித்தனியே சொல்ல விடயங்கள் இருக்கின்றன. ஆண்களின் தரப்பைச் சொல்ல என்னை அழைத்திருக்கிறார் கனடாவைச் சேர்ந்த சிவம் வேலாயுதம் அவர்கள். மிகவும் சிக்கலான, அதே நேரம் இக்காலத்திற்கு மிகவும் தேவையான, நடுவு நிலையை அதீதமாகக் கோரும் , மிகவும் சென்ஸிடிவ்வான இத்தலைப்பில் பேச தகுதி வாய்ந்த நபராக நான் கருதப்படுவதில் மகிழ்ச்சி. அமெரிக்காவில் Women's health பத்திரிக்கை பிரபலம். அழகு குறிப்புகள் மட்டுமன்றி, பெண்களின் உடல் நலம், மன நலம் சார்ந்த அனைத்தும் விவாதிக்கப்படும், விழுப்புணர்வு தேவைப்படும் இடங்களில் வெளிச்சம் பாய்ச்சும் ஒரு பத்திரிக்கையாக செயல்படுகிறது. அப்படியானால், ஆண்களுக்காகவும் ஒன்று இருக்க வேண்டுமல்லவா? Men's Health அப்படியான பத்திரிக்கை தான். ஆண்களின் உடல் மற்றும் மன நலன் சார்ந்த கருத்துக்கள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் இவ்விதழில் வெளியாகும். ஆனால், இவ்விரண்டும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சமூகத்தை மையப்படுத்தியது. தமிழ்ச் சமூகத்தில், பெண்களின் உடல் நலம் மன நலம் குறித்து பொதுத்தளத்தில் மிகப்பல விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டதின் பலனை இப்போதைய பெண்கள் அனுபவிக்கிறார்கள். பெண் ஏன் அடிமையானாள், நம் தந்தையரைக் கொல்வது எப்படி போன்ற நூல்களை எல்லாம் படித்து பிரித்து மேய்ந்தாகிவிட்டது. நீதிமன்றங்கள், சட்ட நடைமுறைகலெல்லாம் பெண்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றன. போலவே தமிழ்ச் சமூகத்தில் ஆண்களின் உடல் மற்றும் மன நலம் சார்ந்த கருத்துக்களுக்கான வெளிப்பாடு தளங்கள் என்று நம்மிடம் ஏதேனும் இருக்கிறதா? அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. Voice of men 360 அமைப்பு இந்த வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் செயல்படும் ஒன்று. கனடாவைச் சேர்ந்த ஷிவம் வேலாயுதம் பொறுப்பேற்று நடத்துகிறார். இதைச் சொல்லும் போது இன்னுமொன்றையும் சொல்லவேண்டும். ஆண்களின் உடல் மற்றும் மன நலம் சார்ந்த கருத்துக்கள் பேசப்படுவதால் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை முன்மொழியும் செயல்பாடு அல்ல இது. இந்த நுண்ணிய பார்வையை முன்வைக்கத்தான் இதன் நிறுவனரான ஷிவம் வேலாயுதம் என்னை அழைத்திருக்கிறார். அதன் பேரில் கலந்து கொள்ள இருக்கிறேன். இந்நிகழ்வுக்கு என்னைப் பரிந்துரைத்த திரு Ravi Chokkalingam அவர்களுக்கு இத்தருணத்தில் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். என்னைப் பொறுத்தமட்டில், பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் போன்ற கருத்துக்களுடன் உருவாகும் நாளைய சமூகத்தில் பெண்களுக்கு இணையாக ஆண்களும், ஆரோக்கியமான இருபாலருக்கும் நன்மை பயக்கும் வகையில் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் விதமாக ஆண் உலகின் செயல்பாடுகள், இயக்கங்கள் எவ்விதம் அமைய வேண்டும் என்பதான நோக்கில் இந்த அமைப்பில் செயல் திசை அமைய வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பேச இருக்கிறேன். வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்து கொள்ளலாம்.

Saturday, 18 February 2023

இன்றைய உலகம்

 நீங்கள் பெண் பார்க்கப் போன வீட்டில் "உங்கள் பாங்க் பாலன்ஸ் எவ்வளவு?"  என்று கேட்கும் பெண்ணிடம் பதிலுக்கு அதே கேள்வியைக் கேட்க முடியவில்லையா? 

"என் கடந்த காலம் உனக்கு ஏன்?" என்று கேட்டு பெண் அதிர்ச்சியளிக்கிறாளா?

காதலியுடன் சென்ற டேட்டில் ஹோட்டல் பில் முழுவதையும் நீங்களே ஏற்க வேண்டி வருகிறதா? 

நீங்கள் ஒரு Toxic உறவில் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 

உங்களால் இது எதையும் எதிர்த்து ஒரு வார்த்தையும் பேச முடியவில்லையா?    நீங்கள் ஒரு பலவீனமான ஆணாக இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துக்கொள்ளுங்கள். 

"இப்போதைக்கு சமாளிக்கலாம். திருமணமாகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்" என்ற எண்ணம் தோன்றுகிறதா? 

அத்திருமணத்திற்குப் பின் Restraining order நீங்கள் பெற வாய்ப்பிருக்கிறது. 

இதையெல்லாம் கேட்க அதிர்ச்சியாக இருக்கிறதா? இதுதான் இன்றைய உலகம். அது உங்களிடம் கோருவது ஒன்றைத்தான். எதைச்செய்தாலும் எதிர்பாலினத்தை முழுக்கப் புரிந்து செய் என்பதைத்தான். இந்த விதியை மீறுபவர்களுக்கு இவ்வுலகில் எந்தச் சலுகையும் இல்லை. 


Thursday, 2 February 2023

Jerusalem College of Engineering - Distinguished Alumni Award - 2023

 Jerusalem College of Engineering - Distinguished Alumni Award - 2023

சென்ற வார இறுதியில் அவசர மூன்று நாள் விமான பயணமாக சென்னை வந்தது ஒரு விசேஷ அனுபவம். நான் பொறியியல் பயின்ற ஜெருசலேம் பொறியியல் கல்லூரி (Jerusalem Engineering College) 'Distinguished Alumni Award' விருதுக்கு என்னைத் தெரிவு செய்திருந்தார்கள். இத்தருணத்தில் இந்நிகழ்வு குறித்து எனக்குத் தெரியப்படுத்திய Anitha Gokulakrishnan அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.
எதிர்காலம் எப்படி இருக்கும், வேலை கிடைக்குமா, கிடைத்தால் அது நல்ல வேலையாக இருக்குமா, வளர்ச்சி இருக்குமா, பெற்றவர்களுக்கு உறுதுணையாக நிற்க வைக்குமா, போராட்டமாக இருந்துவிடுமோ, இந்தப் பேரலையில் கரை ஏறிவிடுவோமா என்கிற குழப்பங்களுடனும், கேள்விகளுடனும் அந்தக் கல்லூரியின் வளாகங்களில் பல நாட்கள் திரிந்தது இன்னமும் நினைவிலிருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி, இப்போது அதே கல்லூரி வளாகத்தில் 'Distinguished Alumni' விருதுடன் நின்றது மெய் சிலிர்க்க வைத்த தருணங்களில் ஒன்று.
அப்போது கற்றுத்தந்த ஆசிரியர்களை இப்போதும் சந்திக்கக் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. சுபாஷினி கலைக்கண்ணன், மாயா, பவானி சங்கரி போன்ற நெடுங்கால ஆசிரியர்களும், வனிதா ஷீபா, ஜமுனா போன்ற ஆசிரியர்களும் மாணவர்கள் மீது எடுத்துக்கொள்ளும் கவனமும், அக்கறையுமே இன்றளவும் எனக்கு நல்லாசிரியர்களுக்கான பெஞ்ச்மார்க்காக இருந்திருக்கிறது.
எதிர்காலம் எப்படி இருக்கும், வேலை கிடைக்குமா என்றெல்லாம் கேள்விகளுடன் மயங்கி நின்ற இடங்களையெல்லாம் சென்று பார்க்கலாம் என்றால், மாணவர்கள் வளர ஏது செய்த கல்லூரியே வளர்ந்திருந்ததில், அவ்விடங்கள் பல மறைந்து போயிருந்தன. பார்க்க ஆச்சரியமாக இருந்தது. நான் பொறியியல் பயின்ற போது கல்லூரியில் மொத்தமே மூன்று பிரிவுகள் தான்: ECE, EEE மற்றும் CSE.
இப்போதோ Mechanical, IT, MBA, Bio-medical, Cyber security, Artificial intelligence and data science இவற்றில் M.E. மற்றும் Ph.D படிப்புக்களுடன் மாணவர்கள் கல்லூரிக்குள்ளேயே தங்கும் விதமான ஹாஸ்டல்களுடன் கல்லூரி வளர்ந்திருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. இதில் Autonomous அந்தஸ்து வேறு.
கல்லூரி முழுக்க சுற்றித்திரிந்தேன். எதிர்காலம் எப்படி இருக்கும், வேலை கிடைக்குமா என்றெல்லாம் மயங்கி நின்ற இடங்களிலெல்லாம் நின்று விதம் விதமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். இன்றளவும் கைகொடுக்கும் Java இந்தக்கல்லூரியில் நான் பயின்றதுதான். உலகை, மனிதர்களை, அவர்களின் ஆதார இயங்கு இயல்பை, இக்கல்லூரியே எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது. பார்க்கப்போனால், இந்தக் பாடங்களின் அடித்தளத்தில் தான் நான் இப்போது இயங்கிக்கொண்டிருக்கிறேன் எனலாம்.
ஒரு உண்மையைப் பகிர வேண்டுமானால், கல்லூரி படித்த நான்கு வருடங்களில் கல்ச்சுரல்ஸ், தமிழ் மன்றங்களின் திசையைக் கூட எட்டிப்பார்த்ததில்லை. எனக்குள் ஒரு எழுத்தாளன் ஒளிந்திருப்பதே தெரியாமல், நான்கு ஆண்டுகள் தமிழ் மன்ற செயல்பாடுகளை, கல்லூரியின் பத்திரிக்கை சார்ந்த செயல்பாடுகளை எட்ட நின்று வேடிக்கை பார்த்திருக்கிறேன். இப்போது அதையெல்லாம் நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.
இந்த இயற்கை எத்தனை ஆச்சர்யம் வாய்ந்தது?!








All

2022 ன் ஜீரோ டிகிரி இலக்கிய விருது

 2022 ன் ஜீரோ டிகிரி இலக்கிய விருது வீடு வந்து சேர்ந்தது...




Wednesday, 1 February 2023

ஐன்ஸ்டனின் சிரிப்பு - கணையாழி (பிப்ருவரி 2023)

 ஐன்ஸ்டனின் சிரிப்பு - கணையாழி (பிப்ருவரி 2023)

கணையாழி (பிப்ருவரி 2023) இதழில் எனது கவிதை பக்கம் 67ல் வெளியாகியிருக்கிறது. கவிதையின் தலைப்பு 'ஐன்ஸ்டனின் சிரிப்பு'.
எனது கவிதையைத் தெரிவு செய்து வெளியிட்ட கணையாழி ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.






All reactions:
Ram Kumar, Mee Manikandan and 12 others