என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday, 16 December 2022

தமிழ் இலக்கியத்தைக் கொலை செய்யும் இயக்கங்கள்

தமிழ் இலக்கியத்தைக் கொலை செய்யும் இயக்கங்கள்


தமிழ் வளர்க்கிறேன், தமிழ் எழுத்துக்களை வளர்க்கிறேன் என்று கிளம்பும் ஒரு இயக்கம் எப்படிச் செயல்படவேண்டும் என்பது குறித்து எனக்கு நெருக்கமானவர்களிடம் தொடர்ந்து பேசி (வலியுறுத்தி) வந்திருக்கிறேன்.. நான் அங்கொன்றும் , இங்கொன்றுமாகச் சொன்னதை ஒட்டு மொத்தமாக சொன்னது போல் இருந்தது ஜீரோ டிகிரி பப்ளிஷிங் இலக்கிய விருது பரிசளிப்பு விழாவில் ராம்ஜீ  நரசிம்மன் அவர்களது பேச்சு...

இன்று தமிழ் வளர்க்கிறேன், தமிழ் எழுத்துக்களை வளர்க்கிறேன் என்று கிளம்பும் பல இயக்கங்களின் இயக்கம் உண்மையில் அந்த உன்னத நோக்கத்துக்கு நேர் எதிராகத்தான் செயல்படுகிறது.. அவைகளில் பலவற்றில் சில குறிப்பிட்ட பொதுவான தன்மைகளைப் பார்க்க இயலும். அவைகள் :


1. ஒரு நல்ல எழுத்து இவர்களின் இயக்கத்தில் உறுப்பினர் ஆகவில்லை எனில், அந்த எழுத்தைப் பற்றி எங்கும், எந்த இடத்திலும் பேசமாட்டார்கள்.

2. இயக்கத்திற்கு நெருக்கமானவர்களின் எழுத்துக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

3. இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களின் எழுத்துக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

4. எழுத்து, ஒரு வணிகப் பொருளாக மட்டுமே பார்க்கப்படும்; அதன் தரம் குறித்து எவ்வித கேள்வியும் எங்கும் எழாதது போல் இயக்கம் முழுமைக்கும் பார்த்துக்கொள்ளப்படும்.

5. இவர்களின் எழுத்து வேறு எந்தத் தரமான இலக்கிய இதழ்களிலும் வெளியாகாது.

5.அ. இதன் காரணத்தினாலேயே இவர்கள் தங்களுக்கென ஒரு இதழ் துவங்கி, அதிலேயே வெளியிட்டுக்கொள்வார்கள்.

5.ஆ. இவர்களின் வசதிக்கெனவே ஒரு பதிப்பகமும் உள்ளூரில் செயல்படும்.

6. எத்தனை வருடங்கள் ஆனாலும், இது போன்ற அமைப்புகளில் இருப்பவர்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரவே மாட்டார்கள்.

7. தரமான எழுத்து குறித்து எதுவும் தெரியாத வெகு ஜனமே இவர்களின் இலக்கு; ஏனெனில், இவர்களைத்தான் எளிதில் ஏமாற்றி விட முடியும்.

8. இந்த அமைப்புகள் நடத்தும் இலக்கியப் போட்டிகளில் அமைப்பை நடத்துபவர்களும் சிறுகதைகள் சமர்ப்பிப்பவர்களுமே தேர்வுக்குழுவில் இருப்பார்கள்.

9. அமைப்பின் செயல்பாடுகளில் அதிகம் பங்கெடுப்பவர்களுக்கே போட்டிகளில் முன்னுரிமை அளிக்கப்படும்.

10. அமைப்பின் வாட்ஸாப் குழுக்களில், அமைப்பின் உறுப்பினர் அல்லாதவர், தமிழுக்கு ஆற்றும் பங்களிப்புகள் எந்த அளவினதாக இருப்பினும் அவை உடனுக்குடன் பார்வையாளர்கள் பார்வையில் விழாதவாறு சாதுர்யமாக மறைக்கப்படும்; தழிழுக்கு உண்மையிலேயே தொண்டாற்றும் ஒருவர் இப்படியாக அமைப்பில் உறுப்பினர் ஆகும்படி மறைமுகமாக நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவார்.  

எழுத்தில் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்தப் பண்புகள் எல்லாம் ஒரு அமைப்பில் தென்பட்டால், அந்த அமைப்பை விட்டு தொலை தூரம் சென்று விடவும்; அதுதான் உங்கள் எழுத்துத் திறனை தக்கவைத்துக்கொள்ளவும், கூர் தீட்டிக்கொள்ளவும் உதவும்.


Wednesday, 14 December 2022

21-12-2022 ஆனந்த விகடனில் எனது கவிதை

 21-12-2022 தேதியிட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழில் சொல்வனம் பகுதியில் எனது கவிதை வெளியாகியிருக்கிறது. கவிதையின் தலைப்பு 'காற்றின் விளையாட்டு'.

எனது கவிதையைத் தெரிவு செய்து வெளியிட்ட ஆனந்த விகடன் சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.






ஜீரோ டிகிரி இலக்கிய விருது 2022 - தேர்ந்தெடுக்கட்ட சிறுகதைகள்

ஜீரோ டிகிரி இலக்கிய விருது பெற்ற சிறுகதைகளில் தொகுப்பு நூல் விற்பனைக்கான தளம் தயாராகிவிட்டது. என்னுடைய சிறுகதையான 'சோஃபியா'வும் இடம்பெற்றிருக்கிறது.

நூலை வாங்க பின் வரும் சுட்டியைச் சொடுக்கவும்:

http://tinyurl.com/shortstories2022zdp

நூலை அமேசான் மூலமாகவும் பெறலாம். அதற்கான சுட்டி இங்கே:

https://www.amazon.in/dp/9395511249/

Monday, 12 December 2022

விவாகரத்து குறித்து

விவாகரத்து குறித்து விவாகரத்தை மேற்கொள்ளும் எழுத்தாளரது பத்தி கண்ணில் பட்டது.  நிறைய சொல்லியிருக்கிறார். பலவற்றில் உடன் படுகிறேன். சிலவற்றில் இல்லை. 

எப்போதும் நான் வலியுறுத்துவது தான். விவாகரத்துக்கு இத்தனை அழுத்தமான பத்தி கூடத் தேவையா என்று கூடத் தோன்றுகிறது. இக்காலகட்டத்தில் திருமணம் என்பது, ஒரு ஆடை அங்காடிக்குள் நுழைந்து ஒரு ஆடையை கழற்றி மாட்டுவதாக மறுவிவிட்டது. ஏன்? அந்த ஒன்றை வைத்து எத்தனை எத்தனை பாலிடிக்ஸ்?

அவன் போக்கில் விட்டால் 'கெட்டு'விடுவான் என்று தெரிந்த அம்மாக்கள்  'கைக்கு அடக்கமான', 'குடும்பப் பாங்கான' பெண்ணாகத் தேடி தன் மகனுக்கு திருமணம் செய்துவைப்பார். மேலோட்டமாகப் பார்த்தால் இது 'தெரிந்தது தானே? இதிலென்ன?' என்பதாகத்தான் தோன்றும். ஆனால் இந்த ப்ராசஸை நீங்கள் கவனிக்கவேண்டும். நீங்கள் ஒழுக்கமாக, பொறுப்புள்ள பிள்ளையாக வளர்ந்திருக்கிறீர்கள் என்று கொள்வோம். உங்களுக்கு பெண் பார்க்க, ஒரு பெண் வீட்டை அணுகுகிறீர்கள். நீங்கள் ஒரு முறை அழைத்துப் பேசும் இடத்தில். 'கெட்டுப் போய்விடக்கூடிய'ப் பிள்ளையை பெற்றவர்கள் பத்து முறை அழைப்பார்கள். நீங்கள் பத்து முறை அழைத்தால், அவர்கள் நூறு முறை.

இந்த நூறு அழைப்பை வெகு ஜன சமூகம் எப்படியோ, 'முயற்சி' என்று புரிந்து அங்கீகரித்துவிட்டது. அது அவ்விதம் அங்கீகரிக்கப்பட்டதன் காரணத்தினால், பத்து முறை மட்டுமே அழைத்த நீங்கள் 'எல்லாவற்றிலும்' சரியாக இருந்தும் 'கோட்டை விட்டவர்' என்றாகிவிடுகிறீர்கள்.

பெண் வீட்டுக்காரர்களின் பக்கமிருந்து யோசித்தால் என்ன தோன்றும்? அவர்களின் தேர்வு எந்தப்பக்கம் சாயும்? பத்து முறை அழைக்கும் பலர் இருக்கையில் ஒரே ஒரு முறை அழைக்கும் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அவர்கள் அதிகம் யோசிக்கவில்லை என்றால், நிச்சயம் அவர்களின் முடிவு இந்த இடத்தில் உங்களுக்குப் பாதகமாகவே சாயும். இப்படி நடக்கக் காரணம்: 'குடும்பப்பாங்கான பெண் விவாகரத்துக்கெல்லாம் போக மாட்டாள்' என்கிற எண்ணம் தான்.  இந்தச் சிந்தனையைத் தகர்ப்பதிலிருந்து துவங்குகிறது விவாகரத்துகளை நியூ நார்மலாக்கும் இன்றைய சமூக இயக்கம். 'கெட்டுப் போக இருப்பவனைக் காப்பாற்றுவதற்கா நாங்கள் பிறந்தோம்?' என்பது அவர்களின் வாதம்.

ஆனால், இதில் இன்னுமொரு கோணமும் இருக்கிறது. சில பெண்கள் பொருளாதாரத்திலும், சமூக அந்தஸ்திலும் தன்னிறைவு பெற்றிருக்கிறார்கள். வீடு, கார் என்று வசதிவாய்ப்புக்களை தன் சுயத்திலேயே அடைந்துவிடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் கணவர்கள் இவர்களின் விருப்பத்திற்கும் எதிர்பார்ப்புக்கும் அமையாதபோது, இவர்களுக்கு திருமண பந்தம் என்பது, இவர்களை எவ்வித சமரசத்திற்குள்ளும் தள்ளாத வரையில் தான் நீடிக்கிறது அல்லது நீட்டிக்க விரும்புகிறார்கள். எப்போது அந்த கணவருக்கெனத் தன்னுடையதில் எதையேனும் சமரசம் செய்துகொள்ள வேண்டிய சூழல் வருகிறதோ, அப்போது அப்படி ஒரு உறவே தேவையில்லை என்ற ரீதியில் விவாகரத்துக்குச் சென்றுவிடுகிறார்கள். 

நாம் வெளிப்படையாகக் காணும் 'குடும்பம், கதம்பம்' என்பதெல்லாம் பெரும்பான்மை, ஊர் வாய்க்கு அஞ்சி நடத்தும் நாடகமே. இவர்களில் பலருக்கு திருமண உறவைக் கடந்து போக, தன் சொந்த விருப்பத்திற்கென ஒரு ரகசிய உறவு (அ) கள்ள உறவு தேவைப்படுகிறது; மிகப்பல சமயங்களில் அது அவர்களுக்குக் கிடைத்தும் விடுகிறது; அவர்களின் வேலை, அதனால் கிடைக்கும் பொருளாதாரம் இரண்டுமே இதற்கு அவர்களுக்குப் பயன்படுகிறது. (இப்படித்தான் எல்லா திருமண உறவுகளும் என்று நான் சொல்லவில்லை என்பதை இந்த இடத்தில் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல விழைகிறேன். இப்படிச் சில உறவுகள் என்று தான் சொல்கிறேன் என்பதைக் குறித்துக்கொள்ளவும்). 'லவ் டுடே' போன்ற படங்கள் இப்படியாக மாட்டிக்கொள்ளும் கணவர்கள், எவ்விதம் தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொள்ளலாம் என்கிற ரீதியில் தான் பார்வையாளர்கள் ஆதரவைப் பெற்றுவிடுகின்றன; அந்தப்படி இருபாலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முடிவைத் தந்து அது தப்பித்தும் விடுகிறது. இந்த ஆதரவை வைத்து, சமூகத்தில் எத்தனைப் பெண்கள் வெளியே சொல்ல முடியாமல் புழுங்குகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒருவகையில், இந்தச் சில பெண்களின் இந்த நடத்தையைக் குறை சொல்வதற்கில்லை என்பது என் வாதம். ஏனெனில், இவர்களை ஆதிக்கம் செய்யும் அளவிற்கு இவர்களுக்குக் கணவர்கள் வாய்க்கவில்லை என்பதே  நிதர்சனமான உண்மை. இது நிகழ்வதற்கான சாத்தியங்களில் ஒன்று தான், மேலே நான் சொன்ன 'கெட்டுப் போய்விடக்கூடிய மகனைப் பார்த்துக்கொள்ளப் பெண்  தேடும் அம்மாக்களின் முயல்வு'. ஒரு காலத்தில் இந்த லாஜிக் அருமையாக வேலை செய்திருக்க வேண்டும். அந்த மாமியார் என்ற பெண் மருமகள் என்ற இன்னொரு பெண்ணை ஏமாற்றியதன் பலனை, அவள் தன் மகனை மிக்ஸர் தின்பவனாக நடத்துவதை வேடிக்கை பார்த்து அனுபவித்துக் கொள்ளவேண்டியதுதான் இன்றைய நிலை. 

இந்தச் சில பெண்களின் இந்த நடத்தையைக் குறை சொல்வதற்கில்லை என்று சொல்வதற்கு இன்னுமொரு காரணம் : அந்த இளம் வயதில் (முப்பதுகளுக்குள்) இது போன்ற விஷயங்களில் ஆழ்ந்த புரிதலை எதிர்பார்க்க இயலாது.  'Opposite poles attracts', 'மனம் ஒரு குரங்கு', 'தப்பு யார் தான் பண்ணலை' என்று சிறு வயதிலிருந்து சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டதன் அர்த்தம் விளங்காது. ஆனால் திருமணமாகி ஒன்றிரண்டு ஆண்டுகளில் எல்லாமும் தாமதமாகப் புரிந்துகொள்ள நேர்கையில், நடந்த எல்லா தவறுகளுக்குமான ஒற்றைத் தீர்வாக அந்த ரகசிய (அ) கள்ள உறவு அமைந்துவிடுகிறது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய அம்சம். Pornography இலக்கியமாவது இந்த இடத்தில் தான்.  இங்கே நேர்மையாக, ஊர் கூடி வாழ்த்தி அமைந்த பெற்றோர் நிச்சயித்த திருமணங்கள் தான் toxic ஆகிவிடுகிறது.  பெற்றவர்கள், தங்கள் இயலாமைகளுக்கு இளம் கன்றுகளை எந்த நேரமும் பலிகடாவாக்கிக்கொண்டிருக்க முடியாது.

இதை இருபாலருக்குமே பொருத்தலாம் என்பது என் வாதம். இந்தப் பிரச்சனைக்கெல்லாம் நியாயமான தீர்வு: தாமதமாகக் கிடைக்கும் புரிதலை, துரிதப்படுத்துவதுதான். மேலோட்டமாக இது எதையும் பார்க்காமல் செய்யும் திருமணங்கள் இறுதியில் தோல்வி அடைவதென்னவோ இந்த அடிப்படைகளை வைத்துத்தான் என்பது என் வாதம். 

 இந்தப் பின்னணியில் இன்னுமொன்றையும் சொல்லலாம். இன்றைக்கு, விவாகரத்து என்பது துணை தேர்வின் இன்னுமொரு பகுதி. பல இடங்களில் வரதட்சணைக்காக, பொருளாதார லாபங்களுக்காக, அயல் நாட்டு விசாக்களுக்காக பெண்ணையோ பையனையோ ஏமாற்றித்தான் திருமணங்கள் செய்கிறார்கள். திருமணம் வரை இவர்கள் வெளிப்படுத்துவது ஒரு குள்ள நரியின் தேர்ந்த தந்திர முகமே. திருமணம் முடிந்த பிறகே உண்மை சூழல் வெளிப்படும். ஆகையால், திருமணத்தில் தான் ஒருவர் எத்தனை தவறானவர் என்பதையே நாம் கண்டுகொள்ள முடியும். ஆக, விவாகரத்தையே 'துணை தேர்வின் இன்னுமொரு பகுதி'யாகப் பார்ப்பது தான் இக்காலத்திற்குப் பொறுத்தமாக இருக்கும் என்பது என் வாதம். 


ngl.link/ramscifiwriter

 நாம் வாழும் சமூகத்திற்குத் திருப்பித் தருதல் என்பார்கள். அந்த வகையில் எழுத்தாளராக இருப்பதில் ஒரு விதமான திருப்தி என்றால், கணிணிக்களுக்கு அறிவளிப்பது வேறொரு வகையான திருப்தி என்று தோன்றுகிறது. ஐ.பி.எஸ் ஆக முயற்சிக்கும் படி நண்பர்கள் அறிவுருத்தியிருக்கிறார்கள். மாடலிங் செய்ய வேண்டும் என விரும்பியிருக்கிறேன். ஆனால், அவ்வழியே செல்ல அயல் நாட்டுப் பணி வாய்ப்புகள் அனுமதிக்கவில்லை. இப்போது யோசித்தால் அது மற்றுமொரு கோணத்தில் திருப்தியாக இருந்திருக்குமோ என்று அவ்வப்போது தோன்றும். 

கூட்டிக்கழித்துக் கணக்குப் போட்டுப் பார்த்தால், எதில் மேலதிக திருப்தி இருந்திருக்குமென்பதை கணிக்க முடியவில்லை. எதிலும் 'காலம் கடந்துவிட்டது' என்று சொல்வதற்கில்லாமல், மூன்றையும் ஒருங்கே செய்து பார்க்க முடிவதில் இப்போதைக்கான 'திருப்தி' இருக்கிறதென்று சொல்லலாம்.


ngl.link/ramscifiwriter




Wednesday, 7 December 2022

ஜீரோ டிகிரி இலக்கிய விருது - 2022 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்

 ரோ டிகிரி பதிப்பகம் 2022ல் நடத்திய சிறுகதைகளுக்கான இலக்கியப் போட்டியில் என் 'சோஃபியா' உள்பட பத்து சிறுகதைகள், சிறுகதைகளுக்கான இலக்கிய விருதை வென்றிருந்தன. 


பரிசுவென்ற சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'ஜீரோ டிகிரி இலக்கிய விருது - 2022 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்' என்ற தலைப்பில் வரும் டிசம்பர் 10ம் திகதி வெளியாக இருக்கிறது. சிறுகதைத் தொகுப்பு நூலின் முகப்பு அட்டை இங்கே. இந்த நூல் ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் இணைய தளத்தில் விற்பனைக்கு இருக்கும். ஜனவரி 2023ல் நடக்க இருக்கும் புத்தகக் கண்காட்சியிலும் இடம் பெறும்.

எழுத்தாளர் இரா.முருகன் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்,
"குளத்தங்கரை அரச மரத்தைக் கடந்து வெகுதூரம் வந்துவிட்ட" தமிழ்ச் சிறுகதைகளை வாசிக்க, இதோ இந்த நூல்....




Friday, 2 December 2022

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் இலக்கிய விருது - 2022 பரிசளிப்பு விழா

 2022ல் ஸீரோ டிகிரி பதிப்பகம் நடத்திய சிறுகதை/குறு நாவல்/நாவல் போட்டிகளில் எனது சிறுகதை 'சோஃபியா' சிறுகதைகளுக்காக இலக்கிய விருதை வென்றது இணைய நண்பர்கள் அறிந்ததே. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவை ஸீரோ டிகிரி பதிப்பகம் டிசம்பர் திங்கள் பத்தாம் திகதி விமரிசையாகக் கொண்டாடுகிறது. வென்ற பத்து சிறுகதைகளும் தொகுப்பாக வெளியாக உள்ளன. நிகழ்வில் எழுத்தாளர் கலாப்ரியாவுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' அளிக்கப்பட இருக்கிறது.  ஆக, எழுத்தாளர் கலாப்ரியா அவர்களையும், மற்ற சக படைப்பாளிகளையும் ஒரே நேரத்தில் சந்திக்கக்கூடிய  வாய்ப்பு இது. எனக்கு எப்போதும் போல், இப்போதும் அதிர்ஷ்டம் இல்லை. இயல்பிலேயே அதிர்ஷ்டம் கெட்ட கட்டை நான்.

இந்தியாவுக்கு வரும் வருடாந்திர வருகை கடந்த ஏப்ரலிலேயே வந்துவிட்டதால், இதற்கு செல்ல முடியாத சூழல். முன்னரே தெரிந்திருந்தால், இந்தியா வருகையை டிசம்பரில் திட்டமிட்டிருக்கலாம். 

போட்டிகள் நிறைந்த உலகில், எல்லோரும் ஓடுகிறார்கள் என்று ஓடி மனதுக்கு நெருக்கமாக அமைந்துவிடக்கூடியவைகளை இழக்க நேர்ந்துவிடுகிறது. அது போலத்தான் இதுவும் என்று நிச்சயமாகச் சொல்லலாம். 

நிகழ்வுக்கான அழைப்பிதழ் இங்கே. விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொள்ளவும். கலாப்ரியா அவர்களுக்கும், விருது வென்ற அனைத்து சக படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.