என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Thursday 24 September 2020

ஜாதகங்களை நம்பலாமா கூடாதா?

ஜாதகங்களை நம்பலாமா கூடாதா?.


பலருடனான சமீபத்திய உரையாடல்களில் '... அவரு பெரியாளு, இவரு அவ்ளோ பெரியாளு இல்லை ...' என்று சிலர் அடிக்கடி ஒரு சிலரை ரெஃபர் செய்வதைக் கேட்க நேர்கிறது. 

"ஏன் அவரைப் பெரியாளு என்கிறீர்கள்?" என்று கேட்டால் பதில்கள் பின்வருவனவற்றில் ஒன்றாகத்தான் எப்போதும் இருக்கிறது.

1. விருது வாங்கியிருக்கிறார்.

2. பெரியாளாக அடையாளப்பட்டுவிட்ட இன்னாரால் அவர் 'பெரியாள்' என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். 

3. ஒரு தொலைக்காட்சியில் இவர் அடிக்கடித் தோன்றுகிறார்.

4. சக்தி வாய்ந்த மனிதர்களால் இவர் அடிக்கடி ரெஃபர் செய்யப்படுகிறார்.

அதாவது, ஏன் ஒருவர் 'பெரியாள்' ஆக பார்க்கப்படுகிறார் என்பதற்கு சம்பந்தப்பட்டவரின் அனுபவ மற்றும் சிந்தனா அறிவில் எந்த விதமான பிரத்தியேகக் காரணங்களும் இல்லை. இழுத்ததையே இழுக்கும் செக்கு மாட்டைப்போல எல்லோரும் சொல்வதை இவரும் வழிமொழிகிறார். ஆங்கிலத்தில் mob attitude என்பார்கள். 

'இன்றைய trendல் பலரால் 'அறியப்பட்டவர்' தான் பெரியாளு என்று விளிக்கப்படுபவர்" என்ற எளிமையான விளக்கமே 'பெரியாள்' என்று ரெஃபர் செய்யப்படும் எல்லோரிடமும் இருக்கும் ஒரு பொதுவான benchmark என்று வழிமொழிபவர்கள் தங்கள் தரப்பை நியாயப்படுத்தக்கூடும்.  

ஆனால், ஊடகங்களில் ஒரு குறிப்பிட்ட 'விலைக்கு', அரசியல் ஆதாயத்தின் அடிப்படையில் முன்னிருத்தப்படும் ஒருவரை 'பெரியாளு' என்று ஏற்றுக்கொள்ள நாம் 'அறிவார்ந்த' சமூகமாக இருக்க வேண்டியதில்லை என்பது என் வாதம். 

அறிவார்ந்த சமூகம் 'பெரியாளு' என்பதற்கான மதிப்பீடுகளில் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரக்கூடிய அளவீடுகளை தனக்கெனக் கொண்டிருக்கும் இயல்பினை உடையது. இந்த மதிப்பீடுகள் பிரபஞ்ச ரீதியிலானவையாகவும், மிக மிக முக்கியமாக மானுட மேன்மைக்கு வழிகோளுவதாகவும் அமையும் இயல்பினதாக இருக்கும். இந்த மதிப்பீடுகள், ஒரு முறையான வளர்ச்சிக்கான ஏணிப்படியை வெளிப்படுத்துவனவாக இருக்கும்.


சரி. இதற்கும் தலைப்புக்கும் என்னய்யா தொடர்பு?

விருதையோ, தொலைக்காட்சியில் தோன்றுவதையோ, இன்ன பிறவையோ வைத்து ஒருவரை 'பெரியாள்' என்று குறிக்கும் இயங்கு இயல்பு, ஜோதிடத்தின் இயங்கு இயல்பை ஒத்திருக்கிறது என்பது என் பார்வை.

ஜோதிடமே பிறந்த நேரத்தை வைத்து யார் பெரியாள், யார் சின்னாள் என்று சொல்லிவிடும். அது ஒரு பெரியாளையோ, சின்னாளையோ வேறுபடுத்திப் பார்க்க எவ்வித பிரத்தியேகக் காரணிகளையும் சொல்வதில்லை. குருட்டாம்போக்கில் 'இவர் பெரியாள், இவர் சின்ன ஆள்' என்று வகைப்படுத்திச் சென்றுவிடும். 

நீங்கள் தீர்மானமான காரணங்கள் ஏதுமின்றி ஒருவரை பெரியாள் என்றும், தீர்மானமான காரணங்கள் எல்லாமும் இருந்தும் அவைகள் பற்றிய எவ்வித புரிதலோ, ஆழ்ந்த அவதானிப்போ இல்லாமல், ஒருவரை 'சின்ன ஆள்' என்றும் விளிப்பது , உங்களுக்கு இருக்கும் அறியாமையையே காட்டுகிறது. மேலும் இந்த இயல்பே ஜாதக பலன்களை ஒத்திருக்கிறது. 

ஆகையால், எப்போது நீங்கள் இவ்விதமான பண்புகளை வெளிப்படுத்துகிறீர்களோ, வாய் வார்த்தையாக 'எனக்கு ஜோதிடங்களில் நம்பிக்கை இல்லை' என்று நீங்கள் சொன்னாலும், ஜோதிடத்தைத் தான் நாம் நம்புகிறோம் என்பதை உணராமலேயே அவ்விதம் சொல்வதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.

ஒருவர் அறிவு சார் சமூகத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாலேயே அறிவாளி ஆகி விடமாட்டார் என்பதை நம்மில் யாரும் மறந்துவிடக்கூடாது. ஒருவரை எந்தப் பண்புகள் 'பெரிய ஆள்' ஆக்குகின்றன, எந்தப் பண்புகள் 'சின்ன ஆள்' ஆக ஆக்குகின்றன என்பது குறித்த ஆழ்ந்த புரிதல் உங்களுக்கு இல்லை என்பதை, அறிவு சார் சமூகத்துடனான தொடர்புகள், உங்களுக்கு உணர்த்தாமல் போவது ஒரு விதமான காட்சிப்பிழை என்பதை நீங்களாகப் புரிந்துகொண்டாலொழிய இந்தப் பிரச்சனைகளுக்கு வேறு மார்க்கமில்லை.

ஆனால், ஒரு சின்ன hack சொல்ல முடியும். தர்க்க ரீதியாக, ஞானம் பெற்றுவிட்டவரால் உங்களைப் புரிந்துகொள்ள முடியும். அதுவே அவர் உங்களை எளிதாகக் கடந்து செல்லவும் வைத்துவிடும். உங்களால் தான் அவரைப் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் அவரை வலிந்து புறக்கணித்தால் மட்டுமே கடந்து போக இயலும். நீங்கள் பலராக இருப்பதால் இந்த polarity மாறிவிடப்போவதில்லை.  

பல நூறு  நூல்களை தினம் தினம் வாசிப்பதாலேயே ஒருவர் அறிவில் சிறந்தவராகிவிட மாட்டார்.  ஞானம் என்பது வாசிப்பிற்கும் அப்பாற்பட்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஞானத்திற்கு தேவையான கச்சாப்பொருளான சிந்தனைக்கு தர்க்கமும் தத்துவமும் போதும் என்கிற போது தகவல்கள் கூட இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன.  தகவல்களே இன்றியும் கூட ஒருவர் ஞானத்தைப் பெற்றுவிடமுடியும். இந்த சூட்சுமம் ஏதும் உங்களுக்கு புரியவில்லை என்பதையே உங்கள் செயல்பாடுகள் காட்டுகின்றன என்று எடுத்துக்கொள்கிறேன்.

தனிப்பட்ட முறையில் நான் முன்பு சொன்னதையே மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

"அறிவார்ந்த சமூகம் 'பெரியாளு' என்பதற்கான மதிப்பீடுகளில் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரக்கூடிய அளவீடுகளை தனக்கெனக் கொண்டிருக்கும் இயல்பினை உடையது. இந்த மதிப்பீடுகள் பிரபஞ்ச ரீதியிலானவையாகவும், மிக மிக முக்கியமாக மானுட மேன்மைக்கு வழிகோளுவதாகவும் அமையும் இயல்பினதாக இருக்கும். இந்த மதிப்பீடுகள், ஒரு முறையான வளர்ச்சிக்கான ஏணிப்படியை வெளிப்படுத்துவனவாக இருக்கும்."

நாம் யாரை அங்கீகரிக்கிறோம் என்பது, நாம் யார் என்பதை வெளிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு தான் என்று சொல்லி இந்தப் பத்தியை முடிப்பது பொருத்தமாக இருக்குமென்று எண்ணுகிறேன்..