என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday, 27 September 2020

கடவுளைத் தேடி - அறிபுனை- சொல்வனம்

 சொல்வனம் இதழில் எனது சிறுகதை ஒன்று வெளியாகியிருக்கிறது.

எனது சிறுகதையைத் தேர்வு செய்த சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதையின் சுட்டி இங்கே.

Thursday, 24 September 2020

ஜாதகங்களை நம்பலாமா கூடாதா?

ஜாதகங்களை நம்பலாமா கூடாதா?.


பலருடனான சமீபத்திய உரையாடல்களில் '... அவரு பெரியாளு, இவரு அவ்ளோ பெரியாளு இல்லை ...' என்று சிலர் அடிக்கடி ஒரு சிலரை ரெஃபர் செய்வதைக் கேட்க நேர்கிறது. 

"ஏன் அவரைப் பெரியாளு என்கிறீர்கள்?" என்று கேட்டால் பதில்கள் பின்வருவனவற்றில் ஒன்றாகத்தான் எப்போதும் இருக்கிறது.

1. விருது வாங்கியிருக்கிறார்.

2. பெரியாளாக அடையாளப்பட்டுவிட்ட இன்னாரால் அவர் 'பெரியாள்' என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். 

3. ஒரு தொலைக்காட்சியில் இவர் அடிக்கடித் தோன்றுகிறார்.

4. சக்தி வாய்ந்த மனிதர்களால் இவர் அடிக்கடி ரெஃபர் செய்யப்படுகிறார்.

அதாவது, ஏன் ஒருவர் 'பெரியாள்' ஆக பார்க்கப்படுகிறார் என்பதற்கு சம்பந்தப்பட்டவரின் அனுபவ மற்றும் சிந்தனா அறிவில் எந்த விதமான பிரத்தியேகக் காரணங்களும் இல்லை. இழுத்ததையே இழுக்கும் செக்கு மாட்டைப்போல எல்லோரும் சொல்வதை இவரும் வழிமொழிகிறார். ஆங்கிலத்தில் mob attitude என்பார்கள். 

'இன்றைய trendல் பலரால் 'அறியப்பட்டவர்' தான் பெரியாளு என்று விளிக்கப்படுபவர்" என்ற எளிமையான விளக்கமே 'பெரியாள்' என்று ரெஃபர் செய்யப்படும் எல்லோரிடமும் இருக்கும் ஒரு பொதுவான benchmark என்று வழிமொழிபவர்கள் தங்கள் தரப்பை நியாயப்படுத்தக்கூடும்.  

ஆனால், ஊடகங்களில் ஒரு குறிப்பிட்ட 'விலைக்கு', அரசியல் ஆதாயத்தின் அடிப்படையில் முன்னிருத்தப்படும் ஒருவரை 'பெரியாளு' என்று ஏற்றுக்கொள்ள நாம் 'அறிவார்ந்த' சமூகமாக இருக்க வேண்டியதில்லை என்பது என் வாதம். 

அறிவார்ந்த சமூகம் 'பெரியாளு' என்பதற்கான மதிப்பீடுகளில் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரக்கூடிய அளவீடுகளை தனக்கெனக் கொண்டிருக்கும் இயல்பினை உடையது. இந்த மதிப்பீடுகள் பிரபஞ்ச ரீதியிலானவையாகவும், மிக மிக முக்கியமாக மானுட மேன்மைக்கு வழிகோளுவதாகவும் அமையும் இயல்பினதாக இருக்கும். இந்த மதிப்பீடுகள், ஒரு முறையான வளர்ச்சிக்கான ஏணிப்படியை வெளிப்படுத்துவனவாக இருக்கும்.


சரி. இதற்கும் தலைப்புக்கும் என்னய்யா தொடர்பு?

விருதையோ, தொலைக்காட்சியில் தோன்றுவதையோ, இன்ன பிறவையோ வைத்து ஒருவரை 'பெரியாள்' என்று குறிக்கும் இயங்கு இயல்பு, ஜோதிடத்தின் இயங்கு இயல்பை ஒத்திருக்கிறது என்பது என் பார்வை.

ஜோதிடமே பிறந்த நேரத்தை வைத்து யார் பெரியாள், யார் சின்னாள் என்று சொல்லிவிடும். அது ஒரு பெரியாளையோ, சின்னாளையோ வேறுபடுத்திப் பார்க்க எவ்வித பிரத்தியேகக் காரணிகளையும் சொல்வதில்லை. குருட்டாம்போக்கில் 'இவர் பெரியாள், இவர் சின்ன ஆள்' என்று வகைப்படுத்திச் சென்றுவிடும். 

நீங்கள் தீர்மானமான காரணங்கள் ஏதுமின்றி ஒருவரை பெரியாள் என்றும், தீர்மானமான காரணங்கள் எல்லாமும் இருந்தும் அவைகள் பற்றிய எவ்வித புரிதலோ, ஆழ்ந்த அவதானிப்போ இல்லாமல், ஒருவரை 'சின்ன ஆள்' என்றும் விளிப்பது , உங்களுக்கு இருக்கும் அறியாமையையே காட்டுகிறது. மேலும் இந்த இயல்பே ஜாதக பலன்களை ஒத்திருக்கிறது. 

ஆகையால், எப்போது நீங்கள் இவ்விதமான பண்புகளை வெளிப்படுத்துகிறீர்களோ, வாய் வார்த்தையாக 'எனக்கு ஜோதிடங்களில் நம்பிக்கை இல்லை' என்று நீங்கள் சொன்னாலும், ஜோதிடத்தைத் தான் நாம் நம்புகிறோம் என்பதை உணராமலேயே அவ்விதம் சொல்வதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.

ஒருவர் அறிவு சார் சமூகத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாலேயே அறிவாளி ஆகி விடமாட்டார் என்பதை நம்மில் யாரும் மறந்துவிடக்கூடாது. ஒருவரை எந்தப் பண்புகள் 'பெரிய ஆள்' ஆக்குகின்றன, எந்தப் பண்புகள் 'சின்ன ஆள்' ஆக ஆக்குகின்றன என்பது குறித்த ஆழ்ந்த புரிதல் உங்களுக்கு இல்லை என்பதை, அறிவு சார் சமூகத்துடனான தொடர்புகள், உங்களுக்கு உணர்த்தாமல் போவது ஒரு விதமான காட்சிப்பிழை என்பதை நீங்களாகப் புரிந்துகொண்டாலொழிய இந்தப் பிரச்சனைகளுக்கு வேறு மார்க்கமில்லை.

ஆனால், ஒரு சின்ன hack சொல்ல முடியும். தர்க்க ரீதியாக, ஞானம் பெற்றுவிட்டவரால் உங்களைப் புரிந்துகொள்ள முடியும். அதுவே அவர் உங்களை எளிதாகக் கடந்து செல்லவும் வைத்துவிடும். உங்களால் தான் அவரைப் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் அவரை வலிந்து புறக்கணித்தால் மட்டுமே கடந்து போக இயலும். நீங்கள் பலராக இருப்பதால் இந்த polarity மாறிவிடப்போவதில்லை.  

பல நூறு  நூல்களை தினம் தினம் வாசிப்பதாலேயே ஒருவர் அறிவில் சிறந்தவராகிவிட மாட்டார்.  ஞானம் என்பது வாசிப்பிற்கும் அப்பாற்பட்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஞானத்திற்கு தேவையான கச்சாப்பொருளான சிந்தனைக்கு தர்க்கமும் தத்துவமும் போதும் என்கிற போது தகவல்கள் கூட இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன.  தகவல்களே இன்றியும் கூட ஒருவர் ஞானத்தைப் பெற்றுவிடமுடியும். இந்த சூட்சுமம் ஏதும் உங்களுக்கு புரியவில்லை என்பதையே உங்கள் செயல்பாடுகள் காட்டுகின்றன என்று எடுத்துக்கொள்கிறேன்.

தனிப்பட்ட முறையில் நான் முன்பு சொன்னதையே மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

"அறிவார்ந்த சமூகம் 'பெரியாளு' என்பதற்கான மதிப்பீடுகளில் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரக்கூடிய அளவீடுகளை தனக்கெனக் கொண்டிருக்கும் இயல்பினை உடையது. இந்த மதிப்பீடுகள் பிரபஞ்ச ரீதியிலானவையாகவும், மிக மிக முக்கியமாக மானுட மேன்மைக்கு வழிகோளுவதாகவும் அமையும் இயல்பினதாக இருக்கும். இந்த மதிப்பீடுகள், ஒரு முறையான வளர்ச்சிக்கான ஏணிப்படியை வெளிப்படுத்துவனவாக இருக்கும்."

நாம் யாரை அங்கீகரிக்கிறோம் என்பது, நாம் யார் என்பதை வெளிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு தான் என்று சொல்லி இந்தப் பத்தியை முடிப்பது பொருத்தமாக இருக்குமென்று எண்ணுகிறேன்..


Tuesday, 22 September 2020

பூமி - அற்புனை சிறுகதை - வாசகசாலை

 வாசகசாலையில் எனது அறிபுனை சிறுகதை ஒன்று வெளியாகியிருக்கிறது. 

தலைப்பு 'பூமி'.

எனது சிறுகதையை தேர்வு செய்து வெளியிட்ட வாசகசாலை இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

வாசகசாலை இதழில் எனது சிறுகதையை வாசிக்கப் பின் வரும் சுட்டியை சொடுக்கவும்:

http://www.vasagasalai.com/boomi-short-story-ramprasath/

சிறுகதையை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

Monday, 21 September 2020

ஆதாம் - ஏவாள் - அறிபுனை - கனலி செப்டம்பர் 2020

 கனலி செப்டம்பர் இதழில் எனது அறிபுனை சிறுகதை ஒன்று வெளியாகியிருக்கிறது. சிறுகதையின் தலைப்பு "ஆதாம்-ஏவாள்".


எனது சிறுகதையைத் தேர்வு செய்து வெளியிட்ட கனலி ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

சிறுகதையைக் கனலி தளத்தில் வாசிக்க பின் வரும் சுட்டியை சொடுக்கவும்:

Thursday, 17 September 2020

23.09.2020 ஆனந்த விகடனில் என் கவிதை

23.09.2020 ஆனந்த விகடனில் என் கவிதை


 23.09.2020 தேதியிட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழில் சொல்வனம் பகுதியில் எனது 'டார்வினும் முட்டுச்சந்தும்' என்ற தலைப்பிலான கவிதை வெளியாகியிருப்பதாக அறிகிறேன்.

எனது கவிதையை தேர்வு செய்து வெளியிட்ட ஆனந்த விகடன் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

ஆனந்த விகடன் சொல்வனம் பகுதியின் பிரதியும், அட்டைப்படமும் இங்கே...

பிரதிகளை தந்து உதவிய நண்பர்கள் Kubendran PeriasamyThameem ஆகியோர்க்கு எனது நன்றிகள்.





Tuesday, 15 September 2020

நீட் தேர்வுகள்

நீட் தேர்வுகள்


அமெரிக்கா ஒசாமாவை வளர்த்துவிட்டது நிஜம். காரணங்கள் அமெரிக்காவின் உளவுப்பிரிவுக்கே வெளிச்சம். பின் விளைவாக, 2001ல் world trace center அழிந்ததும் நிஜம். அதன் பின் விளைவாக, 2011ல் ஓசாமா பாகிஸ்தானில் வைத்துக் கொல்லப்பட்டதும் நிஜம்.

இடைப்பட்ட காலத்தில், யார் யாரோ சில நிறுவனங்களை வாங்கினார்கள். விற்றார்கள். யாரோ கொழுத்தார்கள். யாரோ நஷ்டமடைந்தார்கள். சரி. இதையெல்லாம் செய்தாவது அமெரிக்கா தன்னை உலகின் பெரியண்ணனாக நிலை நாட்டிக்கொண்டதா என்றால் 2020 ல் அதுவும் இல்லை என்றாகிவிட்டது. அமெரிக்காவின் மகிழ்ச்சி முழுதாக பத்து வருடங்கள் கூட நீடிக்கவில்லை.

2020ல் அமெரிக்கா தள்ளாடிக்கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு சீனாவைக் கைகாட்டிக்கொண்டிருக்கிறது. ஹைட்ராக்சி க்ளோரோகுயின் கைகொடுக்கவில்லை. உலகின் பெரியண்ணன் என்று பறைசாற்றிக்கொண்டிருந்த அமெரிக்காவால் இத்தனை மாதங்களில் கொரோனாவுக்கு எதிராக ஒரு உருப்படியான எதிர்ப்பு மருந்தையும் உருவாக்க முடியவில்லை. இப்போது உலகின் அண்ணன், நிச்சயமாக கொரோனா தான். நாளை வேறொரு உயிரியல் ஆயுதம். அல்லது ஏதோவோர் இயற்கைப் பேரழிவு.

இப்போது அமெரிக்காவிற்கு யாரும் அச்சப்படவில்லை. ஆனால், கோரோனாவுக்கு உலகமே அஞ்சுகிறது.

உலக மயமாக்களின் பக்க விளைவாக, முன்னேறிய நாடுகளின் அலோபதி மருந்துகளுக்கு இந்தியாவில் ஒரு சந்தையை உருவாக்கும் பொருட்டு, மருத்துவத்துறையையே தலை கீழாக நீட் என்கிற பெயரில் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படியாக அமெரிக்காவில் வழக்கில் இருக்கும் மருத்துவத்துறைக்கு, இன்றளவில் கோரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து என்பதாயிரத்தைத் தாண்டி போய்க்கொண்டிருக்கிறது.

இப்படி ஒரு 'ஃபெயிலியர் மாடலுக்கு' இந்திய மருத்துவத்துறையை மாற்றி என்ன சாதிக்க முயல்கிறார்கள் என்பது எதுவாக இருந்தாலும், பக்க விளைவுகள், எய்தவன் மேலேயே ஒரு நாள் திரும்பத்தான் போகின்றன. அமெரிக்காவிற்கு 2020ல் கொரோனாவின் ரூபத்தில் திரும்பியதைப்போல.  இடையில் யாரோ தோற்பதாகவும், வேறு யாரோ ஜெயிப்பதாகவும் நினைத்துக் கொள்ளப்போகிறார்கள். ஊடகங்களில் அங்கலாய்ப்பார்கள். எதுவும் நிரந்தரமாய் இருக்கப்போவதில்லை.

இயற்கையை, பிரபஞ்ச ஒழுங்கை மீறி இங்கே எதுவும் ஜெயிக்கப்போவதில்லை. நடக்கவும் போவதில்லை.

விந்தை என்னவென்றால், கல்வி கற்ற சமூகங்கள் என்று அடையாளப்படும் சமூகங்கள் தான் நீட்டை உயர்த்திப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியானால், கல்வி இவர்களின் மூளைகளுக்குள் என்ன இழவைப் புகுத்திக்கொண்டிருக்கிறதென்று தெரியவில்லை.  'நீட் தேவை' என்ற எண்ணத்தை, 'மானுட மேன்மைக்கு நீட்டே வழி' என்று சொல்ல வைக்கும் இந்த கல்வியை நான் அடைவதில் காலத்தை வீணடிக்கவில்லை என்பதே இப்போதைக்கு எனக்கு நிம்மதி அளிப்பதாக இருக்கிறது. இப்படி மடத்தனமாக சிந்திக்கவைக்கும் கல்வி எனக்கு வேண்டாம் என்பதே என் தனிப்பட்ட நிலைப்பாடு.

எப்போது இவர்கள் ''நீட் தேவை' என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டார்களோ, அப்போதே அவர்கள் தங்களின் 'அறியாமையை' வெளிப்படுத்திவிட்டார்கள் என்று நான் எடுத்துக்கொள்கிறேன். எப்போது அவர்கள் அறியாமையை வெளிப்படுத்திவிட்டார்களோ அவர்களை என்னால் குழந்தைகளாகவே பாவிக்க முடிகிறது.

சில குழந்தைகள் சுய புத்தியாயிருக்கும். பல குழந்தைகள் சொல் புத்தி தான். சற்றே மலட்டு புத்தி. இந்த விதமான குழந்தைகளுக்கு அறிவுரைகள் தேவைப்படாது. கையைச் சுட்டுத்தான் தெரிந்துகொள்ளும். 2020ல் அமெரிக்கா தெரிந்துகொண்டிருப்பது போல.   இவர்களின் பொருட்டும், இவர்களை ஈன்றெடுத்த குடும்பங்கள் சற்றே நெகிழ்வுத்தன்மையுடன் தான் இயங்கும். அதனால், குடும்பம் அழிந்துவிடும் என்று அர்த்தமல்ல. குடும்பம் நீடிக்கவே செய்யும். ஆனால், பிரபஞ்சத்தின் பார்வையில் எது அந்தக் குடும்பத்துக்கு தேவையற்றதோ அது தானாகவே அழிந்துவிடும். இது சட்டென நிகழாது. காலப்போக்கில் மெதுவாக நிகழும்.

சரி. அப்படியானால், நீட் தேர்வு மரணங்களை எப்படித்தான் அணுகுவது? ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களிலிருந்து இனிமேல் யாரும் மருத்துவர்களாகக்கூடாதா என்றால் அப்படி இல்லை.

எளிமையாக இப்படி சொல்லலாம் என்று தோன்றுகிறது.

எங்கள் கிராமங்களில்  நான் சின்னப்பையனாய் இருந்தபோதிருந்தே தலைவலி, சுளுக்கு, வயிற்று வலி, பிரசவம் போன்ற எல்லாவற்றுக்கும் பாட்டி வைத்தியம்தான். பாட்டிக்கள் எந்த மருத்துவமும் படித்ததில்லை. அதாவது, ' மானுட மேன்மைக்கு நீட் தேவை' என்று சொல்ல வைக்கும் 'கல்வி' எதையும் கற்றதில்லை. அவர் தன் அனுபவ அறிவை எந்தப் புத்தகத்திலும் எழுதவில்லை தான். ஆனால், இந்த பாட்டிகள் மரணத்தை வென்றவர்களோ என்று அவ்வப்போது யோசிக்க வைத்துவிடும் அளவிற்கு இயங்கி நான் பார்த்திருக்கிறேன்.

மருத்துவம் படிக்க விரும்பாதே என்கிறாயா என்காதீர்கள். அலோபதி நம் மருத்துவமே இல்லை என்கிறேன். இதைப்படிக்க ஏன் இத்தனை பிரயத்தனம், உயிர்பலி என்பது என் கேள்வி. பிரிட்டீஷ் அரசின் புண்ணியத்தாலும், வெள்ளை சருமத்தின் மீதான நம் கிரக்கத்தாலும், நாம் மறந்துவிட்ட , தொடர்பருந்துவிட்ட சித்தா மருத்துவத்தையும், நம்மூர் பாட்டி வைத்திய முறைகளையும் மீட்டெடுக்க இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டால் என்ன? நீட் மத்திய அரசின் திணிப்பாக இருக்கலாம். அதை நம்மால் புறக்கணிக்க முடியாமல் போகலாம். இருந்துவிட்டுப் போகட்டும். மாநிலத்தின் தேவைக்கேற்ப  புதிய படிப்புகளை உருவாக்கிக்கொள்வதில் மாநில அரசுக்கு போதுமான அதிகாரம் இருக்கிறதே.

நம்மூர் மருத்துவ முறைகளை நாம் இன்றிருக்கும் அலோபதியில் பயன்படுத்தும் கருவிகளை வைத்து மேம்படுத்தினால் என்ன என்பது என் கேள்வி? என் கேள்வி மடத்தனமாக இருக்கிறது என்றால் விவரம் தெரிந்த நண்பர்கள் எனக்கு விளக்கலாம். நான் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு மார்க் போதாமல் பொறியியல் படித்து இஞ்சினியர் ஆனவன். ஆகையால் இப்படி மடத்தனமான கேள்விகள் கேட்க எனக்கு உரிமை இருக்கிறது என்றே நம்புகிறேன்.

சித்தா மருத்துவத்தில் உள்ள பிரச்சனைகள் என்னென்ன? ஓலைச்சுவடிகளின் உள்ள மருத்துவ முறைகள், வாய்வழியாக வழக்கிலிருக்கும் பாட்டி வைத்தியங்கள், இவற்றை செயல்படுத்துகையில், உடல் இந்த மருந்துகளுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதை கணகாணிக்க மருத்துவ இயந்திரங்கள் இல்லை என்பதுதானே. அலோபதி முறைகளில் உள்ள இயந்திரங்களை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் தானே.

'இதெல்லாம் பேச நன்றாக இருக்கும். இதையெல்லாம் எப்போது துவக்கி, எப்போது அமல்படுத்தி....." என்று சிலர் முனுமுனுக்கலாம். இப்படித்தானே சாட்டிலைட் ஆராய்ச்சியில் இறங்கினோம். உதிரி பாகங்களை சைக்கிள் கேரியரில் வைத்து எடுத்து வந்ததை ஒரு காலத்தில் கிண்டலடித்த அமெரிக்க இன்று நம்மிடமே தன் செயற்கைக்கோள்களைத் தந்து விண்ணில் செலுத்த கேட்கவில்லையா? அது சாத்தியமென்றால் இதுவும் சாத்தியம் தானே? கொஞ்சம் காலம் எடுக்கும் ஆனால் இறுதியில், நமக்கே நமக்கென ஒரு மூன்றாவது மருத்துவ முறை கிடைத்துவிடும் அல்லவா? அதற்கு நாம் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை. அல்லவா? தமிழர் மெய்யியல் கோட்பாடுகள் உலகிற்கே முன்னுதாரணமாக இருக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது. பலவற்றை நானே  செயல்படுத்திப் பார்த்துவிட்டு, சரியாகத்தான் வேலை செய்கிறது என்று நானே ஊர்ஜிதமும் செய்திருக்கிறேன் என்பதால் எனக்குள் இந்த எண்ணம் வலுப்பெறுகிறது என்றே கருதுகிறேன்.

என் சிற்றறிவுக்கு எட்டியதை, நான் எப்படி இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வேன் என்பதை பத்தியாக எழுதிவிட்டேன். மாற்றுக்கருத்துக்களை நண்பர்கள் பதியலாம். தவறிருந்தால் கற்றுக்கொள்கிறேன்.

Saturday, 5 September 2020

Summary of Translated Science Fiction works



Here is a summary of all my translated Science Fiction works published in various online journals (for those who are not used to read scrips in Tamil)

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

ஆசிரியர் தினம் இன்று.

சின்ன வயதில் கிடைக்காமல் ஏங்கிய ஒரு விஷயம் இருக்கிறதென்றால் அதில் 'ஸ்பெஷல் கிளாஸ்' ம் ஒன்று.

அவ்வளவுக்கு பாடம் பிடிக்குமா என்றெல்லாம் கேட்கக்கூடாது. நான் படித்தது அரசு உதவி பெறும் பள்ளிக்கூடம். அங்கே வகுப்புகள் நடப்பதே அரிதினும் அரிது. ஆசிரியர் பீரியட் துவக்கத்தில் வகுப்புக்குள் நுழைந்தால் எண்ணி பத்து பாராக்களை  சிலை போல் நின்றபடி படிப்பார். அவ்வளவு தான். க்ளாஸ் முடிந்தது. விசாரித்தபோது அது ஒரு தந்திரம் என்றார்கள். வகுப்பிலேயே தெளிவாக விளக்கமாக எடுத்துவிட்டால், பிறகு எவன் ட்யூஷன் வருவான்? ட்யூஷன் வரவைக்கத்தான் இந்த ட்ரிக்.

அக்கப்பக்கத்து வீடுகளில் வசிக்கும் என் வயதுப்பையன்கள் மெட்ரிகுலேஷன், மற்றும் சி.பி.எஸ்.ஸி பள்ளிகளில் படித்தார்கள். எப்போதும் ஏதேனும் ஸ்பெஷல் கிளாஸ் போய்விட்டு வருவார்கள். கிரிக்கெட் விளையாடுகையிலும், ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையிலும் பாடங்கள் பற்றி பேச்சு வரும்போது ஸ்பெஷல் கிளாஸில் படித்ததையெல்லாம் பகிர்வார்கள். அவர்கள் வாயையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டி இருக்கும் போதெல்லாம் எனக்கு அடிவயிற்றில் பக்கென்று இருக்கும்.

அவன்கள் ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் போகிறார்கள்.  நாம் அப்படி ஏதும் போவதில்லை. அப்படியானால், நம்மை விட அவர்கள் எதையோ மேலதிகமாக கற்கிறார்களோ? 'நாம் எதையோ இழக்கிறோமோ' என்று எப்போதும் தோன்றும். அவர்கள் படிக்கும் பாடப்புத்தகங்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எடுத்துப் பார்த்துக்கொள்வேன். கால் மணி நேரத்தில் பார்க்க மட்டும் தானே முடியும்? புத்தகக்கடையில் விசாரித்தால் அதிக விலை சொல்வான். அவ்வளவு கொடுத்த வாங்கிப்படிக்க ஏது பணம்?

எப்படியோ தத்தித்தத்தி பொறியியல் வந்தால், கோ-எஜுகேஷனில் படித்து உடன் படிக்கும் பெண்களுடன் ஆளுமையாக இருப்பார்கள் அவர்கள்.  எனக்கெல்லாம் பெண்களிடம் பேசவே கூச்சமாக இருக்கும்.  என் வகுப்பு பெண் மாணவிகள் பலருடன் பொறியியல் முடிக்கும் வரை கூட நான் பேசியதே இல்லை. கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளில் ஒரு குரூப் வெளுத்துக் கட்டும். நாங்கள் எல்லாம் எட்ட நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம். 'வாழ்க்கை இப்படியே போயிடுமா சார்' என்று தோன்றிய காலகட்டங்கள் அவைகள்.

நிறைய கேலிக்கும், நகைப்புக்கும் உள்ளாகியிருக்கிறேன். அந்த நாட்களேல்லாம் இப்போதும் துரதிருஷ்டவசமாக நினைவிருக்கிறது. +1,, +2 விற்கு ட்யூஷன் போனால், அங்கே கதையே வேறு. மெட்ரிகுலேஷன் பள்ளியிலிருந்து சுமார் அறுபது பேர் படித்த அந்த ட்யூஷனில் நான் மட்டும் அரசுப்பள்ளி. ட்யூஷன் பையன்கள் யாரும் என்னிடம் பேசவே மாட்டார்கள். ஏதோ அவர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் உயர்ந்தவர்கள் போலவும் நான் ஏதோ தென்னாப்பிரிக்காவிலிருந்து ஓடி வந்தவன் போலவும் இருக்கும்.

அதில் ஒருவன் வீடு சைதாப்பேட்டையில் தான் இருந்தது. அவன் வீட்டுக்குப் போனால், வீட்டுக்குள்ளேயே கூட விட மாட்டான். வாசலிலேயே நிற்க வைத்து பேசி அனுப்பிவிடுவான்.  அப்போதெல்லாம் அவர்கள் என்னை மட்டும் வித்தியாசமாக நடத்துவதைக் கூட புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு innocence வேறு. இப்போது யோசித்துப் பார்த்தால், எந்த அளவுக்குக் கீழ்த்தரமாக நடத்தியிருக்கிறார்கள், அதையும் கூட புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறோம் என்று தோன்றும். 16 வயதுதான். இது அவமானத்தில் சேருமா, அசிங்கத்தில் சேருமா என்று கூட தெரியாத வயது.

ஒரு கட்டத்தில் அதீத innocence நமக்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டபோது பொறியியல் டிகிரி வாங்கிவிட்டு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருந்தேன்.

இந்த அசிங்கங்கள் அவமானங்கள் எல்லாவற்றையும் மறக்க, எதையேனும் வாசிக்க ஆரம்பித்தேன். அப்படி முதலில் கையிலெடுத்தது Java Complete Reference. சொல்லித்தர ஆளில்லை என்பது பற்றி கவலை இல்லை. ஆறு மாதங்கள் அதில் கழித்து, எண்ணற்ற ப்ரோக்ராம்கள் எழுதிப்பார்த்ததில் ஜாவா கை வந்தது. வேலை வாங்க அதுதான் உதவியது.

வேலைக்கு சேர்ந்து முதல் மூன்று ஆண்டுகளில் தொழில் நுணுக்கங்கள் தெரிந்துவிட்ட பிறகு, மீண்டும் அதே பழைய பயம் தலைதூக்க, மீண்டும் வாசிக்கத்துவங்கினேன். இந்த முறை சிக்கியது இலக்கியம்.

இன்னும் அதீத innocence முழுவதுமாகப் போகவில்லை தான். சில விஷயங்கள் மரபணுவிலேயே இருந்தால் , என்ன செய்தாலும் மாற்ற முடியாது போல. இந்த ஏமாற்றங்கள், அசிங்கங்கள் மனிதர்களை நம்புவதை விட, புத்தகங்களை நம்பிவிடலாம் என்று தான் யோசிக்க வைக்கின்றன. அதிகம் எழுதுவதற்கும், வாசிப்பதற்கும் பின்னால், அச்சாணியாய் இருப்பது இந்த பாதுகாப்பின்மையே..

வாழ்க்கையும், இயற்கையுமே ஆகச்சிறந்த ஆசிரியர்கள் என்று தீவிரமாக நம்புகிறேன். ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துக்கள்.


பி.கு:
இந்தப் பத்தி  நல்ல ஆசிரியர்கள் யாருமே இல்லை என்று அர்த்தப்படுத்த அல்ல. என் போன்று மனிதர்களால் கைவிடப்பட்டவர்களுக்கு, இயற்கையே ஆகச்சிறந்த ஆசானாக இருந்திருக்கிறது என்பதைச் சொல்லத்தான்.