நாவல் எனப்படுவது ஒரு கதையை பக்கம் பக்கமாக நீட்டி, பக்கத்துக்கு பக்கம் எதிர்பாராத நிகழ்வுகள் தந்து எழுதுவது அல்ல. அது வாரா வாரம் தொடரும் தொடர்கதையும் அல்ல. வேறெங்கோ வாசித்த வாக்கியத்தை குறியீடுகள், உவமானங்கள், உவமேயங்கள் என இஷ்டம் போல் மாற்றி எழுதுவதுமல்ல. 6 பக்கங்கள் வரை சிறுகதை எனவும், 50 பக்கங்கள் வரை குறுநாவல் எனவும் 90 அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்கள் கொண்டது நாவல் என்கிற ஆகிருதியும் அல்ல.
நாவல் எனப்படுவது யாதெனில், இதற்கு முன் முன்மொழிந்திரப்படாத அல்லது ஓர் மாற்றுக்கருத்தை முன்வைப்பதான ஒரு கருத்தாக்கத்தை விளக்க, அதன் சூழலுக்கு பொருந்துவதான கதை மாந்தர்களை உருவாக்கி, பொருத்தமான கதைக் களம் ஒன்றில் சாதகமான வாதங்களை முன்வைத்து எழுதுவதே நாவல் எனப்படுவது.
அதிலும் சமூக நாவல் எனப்படுவது, சமூக அடையாளங்களை, மதிப்பீடுகளை, வழமைகளை கேள்விக்கு உட்படுத்துவது. அதன் சாதக பாதகங்களை அலசி ஆராய்வது. காலாவதியாகிவிட்ட அடையாளங்களை, மதிப்பீடுகளை, வழமைகளை கண்டுகொண்டு மாற்று சிந்தனைகளை முன்மொழிவது.
சமூக நாவல்கள் எழுதுவதில் உள்ள சிக்கல், இந்திய சமூக அமைப்பு என்பது புரிந்துகொள்ள மிக மிக சிக்கலானது. தமிழ்ச்சமூகம் அதைவிட சிக்கலானது. இதில் சமூக அடையாளங்களை, மதிப்பீடுகளை, வழமைகளை இனம் காண்பதே முதல் சவால். சமூக நாவல் எழுத முதலில் சமூகத்தின் இயங்குமுறை துல்லியமாக புரிந்திருக்க வேண்டும். ஒரு சிக்கலான சமூக அமைப்பை புரிந்துகொள்வது அத்தனை சுலபமல்ல.
அந்த வகையில் எனது நாவல்களான 'ஒப்பனைகள் கலைவதற்கே' மற்றும் 'முடிச்சு' இரண்டுமே இதுவரையில் முன்மொழிந்திரப்படாத கருத்தாக்கங்களை முன்வைக்கும், ஒரு நாவலாசிரியனாக எனக்கு திருப்தியளித்த நாவல்கள்.