என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday, 7 August 2013

கணையாழி ஆகஸ்ட் 2013 இதழில் என் சிறுகதை


கணையாழி ஆகஸ்ட் 2013 இதழில் என் சிறுகதை

கணையாழி கலை இலக்கிய திங்களிதழின் இந்த மாத (ஆகஸ்ட் 2013) இதழில் நான் எழுதிய 'முடிச்சு' என்ற தலைப்பிலான சிறுகதை பக்கம் 18ல் துவங்கி 23ல் முடிய வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். சிறுகதை வெளியான கணையாழி கலை இலக்கிய இதழின் பக்கங்களின் பிரதிகள் இங்கே.


இனி அந்தக் கதை:

முடிச்சு - சிறுகதை

மது, கண்ணாடி முன் நின்று தன்னையே ஒரு முறை பார்த்துக்கொண்டாள். எலுமிச்சை நிறத்தவளுக்கு சிவப்பில் சுடிதார், இழைத்தது போலிருந்தது. துப்பட்டா எடுப்பான மார்புகளை மறைக்கும் வகைக்கு இருப்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டாள். தோள்களை விட்டகலாமல் இருக்க பின் செய்து கொண்டாள். மெல்லிய பிங்க் நிற உதட்டுச் சாயம் பாந்தமாய் கண்ணை அடிக்காமல் இருந்தது. இரண்டு நிமிட பார்வையின் முடிவில் அலட்சியமாய் காற்றை மேல் நோக்கி ஊதியதில் முன் நெற்றில் துவண்டிருந்த கற்றை முடி காற்றில் எம்பி அழகாய் சரிவதை ரசித்துவிட்டு கண்ணாடியை விட்டகன்றாள் மது.

தன்னைத் தானே ரசிக்கும் மனிதன், நிச்சயம் கண்ணாடியை விரும்புவான். அம்மனிதன் வீட்டில் கண்ணாடி கூட ரசனையோடிருக்கும். குறைந்தபட்சம், திருத்தமாகவாவது இருக்கும். பெண்மை, பிரிதெதையும் விட முதலில் தன்னையே ரசிக்கும். எந்தப் பெண்ணுக்கும் தன்னம்பிக்கையின் முதல் வித்து, அவள் அறைக் கண்ணாடிதான். ஒரு பெண்ணின் அறைக் கண்ணாடி பல விஷயங்கள் சொல்லும். முகம் பார்க்கும் கண்ணாடி, இந்தப் பெண் மேலுக்கு மட்டும் அழகி எனச் சொல்லும். ஆளுயரக் கண்ணாடி, இந்தப் பெண், முகம் மட்டுமல்ல, முழுமையிலும் அழகு வேண்டும் என்று நினைப்பவளெனச் சொல்லும். சுத்தமான கண்ணாடி, அவள் தெளிவென்று சொல்லும். அழுக்கேறிய கண்ணாடி, அவள் அவ்வளவுதானென்று சொல்லும்.

செருப்பை அணிந்து வாசலைக் கடக்கையில் தொற்றிக்கொண்ட அவசரம், கல்லூரியை அடையும் வரை உடனிருந்தது. கல்லூரி வளாகத்தினுள் 9 மணிக்குள் நுழைந்த பின்னர்தான் மூச்சே வந்தது. வகுப்பறை நோக்கி நடந்துசெல்கையில், இருபுறமிருந்தும், வாலிபர்களின் 'அட!' பார்வைகளை, கவனியாதது போல் மேலுக்கு அவள் அலட்சியம் செய்தாலும் உள்ளுக்குள் அது பிடித்திருந்தது. பெருமிதமாய் உணர வைத்தது. உண‌ர்ந்த‌தைத் த‌க்க‌வைத்துக்கொள்ள‌ தோன்றிய‌து. உடுத்தியிருந்த‌ உடை எந்த‌க் க‌டையில் வாங்கிய‌து என்று நினைத்துப்பார்க்க‌ வைத்த‌து. ஓரமாய் நின்றிருந்த இரண்டு பையன்கள் குசுகுசுவென தங்களுக்கு ஏதோ பேசிக்கொண்டார்கள். சட்டென ஒருத்தன் இன்னொருத்தனை அவளை நோக்கி தள்ளிவிட்டான். அவன் ஏதோ சொல்லும் நோக்கில் அவளருகில் வந்து ஏதும் சொல்லாமல் கடந்து போனான். முதுகிற்கு பின்னால் சிரிப்பு சத்தம் கேட்டது. மது இது எல்லாவற்றையும் மெளனமாய் ரசித்தபடி தன் போக்கில் வகுப்பறை வந்து தன்னிருக்கையில் தோழி இளவஞ்சி அருகில் அமர்ந்துகொண்டாள்.

மதுவின் வகுப்பில் பயிலும் ஏனைய மாணவர்களும் இதை ஓரக்கண்ணால் கவனித்தார்கள். கவனியாதது போல் பாசாங்கு செய்தார்கள். தங்களுக்குள் உதட்டை இறுக்கி, புருவங்களை உயர்த்தினார்கள். அவர்களுள் ரகு சலனமின்றி இருந்தான். வகுப்பினுள் நுழைந்த மது இளவஞ்சியிடம் பேசத்துவங்கியிருந்ததை மெளனமாய் எவரும் அறியாமல் கவனித்துக் கொண்டிருந்தான்.

"இளா"

"என்ன‌டி?"

"அந்த‌ சிவா இன்னிக்கு என்னை ரொம்ப‌ ப‌ய‌முறுத்திட்டாண்டி"

"என்ன‌டி ஆச்சு"

"நான் இப்ப‌ க்ளாஸ்க்கு வ‌ந்துக்கிட்டு இருக்கும்போது என்கிட்ட‌ வ‌ந்துட்டாண்டி".

"ஓ.. எதாச்சும் சொன்னானா?"

"இல்லைடீ.. கிட்ட‌ வ‌ந்து அப்ப‌டியே போயிட்டாண்டீ"

"க‌லாய்க்கிறானாமா... அவ‌னுக்கு இதே வேலைடீ.. பாலிம‌ர் மாலினி இருக்கால‌?"

"ஆமா"

"அவ‌கிட்ட‌யும் இதே மாதிரி தான் ப‌ண்ணியிருக்கான்... பொறுக்கி"

இளா வேண்டுமென்றே குட்டையை குழப்பினாள். சிவா அப்படியில்லை என்பது அவளுக்கு தெரியும். ஆனாலும் அவள் அப்படிச் சொன்னாள்.

சில பெண்கள் விசித்திரமானவர்கள். அவர்களின் பெண்மை விசித்திரமானது. அந்த‌ பெண்மை தான் விரும்பிய அனைத்தும் தனக்கு கிடைக்கவேண்டும் என்றெண்ணும். தான் மதிக்கும் அத்தனையும் தன்னையும் மதிக்கவேண்டும் என்றெண்ணும். நட‌க்கவில்லையெனில் இருமாப்பு கொள்ளும். குறுக்கு வழியிலாவது நடத்த‌ முயற்சிக்கும். அப்படியும் நட‌க்கவில்லையெனில் அதனை விட்டு தொலைதூரம் விலகி இருக்கும். அல்லது அதனை கண் காணாது போக வைக்கும். தன் நெருங்கிய நட்பு வட்டத்திற்குள் அனுமதிக்காது. தன் நெருங்கிய நட்புகளுக்கும் கூட நட்பாக விடாமல் தடுக்கும். சேற்றை வாரி இரைக்கும். அதற்கு எப்பேற்பட்ட காரியத்தையும் நிகழ்த்தும். இங்கே இளவஞ்சிக்கு சிவா அப்படித்தான். உன்னுடன் நட்பு கொள்ள விழைகிறேன் என்பதான இளவஞ்சியின் உள்ளர்த்த பார்வைகளை மதுவின் மீதான கவனத்தில் சிவா துரதிருஷ்டவசமாக கவனியாது போனதில் வந்த கோபம் அவளுக்கு.

சில பெண்கள், நட்பு நாடும் உள்ளர்த்த பார்வைகளை தூண்டிலிடுகிறார்கள். பல பெண்கள், அவ்வாறு தூண்டிலை வீசி, வெறுமனே விளையாடுகிறார்கள். மீண்டும் மீண்டும் பார்த்துவிட்டு, நெருங்கினால் ' உன்னை யார் பார்த்தார்கள்?' என்று கேலி செய்வார்கள். இவ்வாறான விளையாட்டுப் பார்வைகளால், சிவா, இளவஞ்சியின் பார்வையை தவறவிட்டது குழப்பத்தை விளைவித்தது. அதற்குப் பின் அவன் நட்பு நாடி வந்தபோது, பதிலுக்கு செய்வதாய் எண்ணி, பொது இடத்தில் பேச வந்தவனை , வெடுக்கென்று முகம் திருப்பி அவமானப்படுத்தினாள். நட்பு துளிர் விட ஓர் நல்லபிப்ராயம் தேவை. அதை முதலிலேயே பாழாக்கிவிட்டால் நட்பு துளிர்க்காது. முதலிலேயே நம்பகத்தன்மையை உடைத்துவிட்டால் நட்பு சாத்தியப்படாது. அதைத்தான் தந்திரமாய் காய் நகர்த்தி சாதித்தாள் இளவஞ்சி.

தகுதியான ஓர் ஆண், இவ்விதம் நடத்தப்படக் கூடாது. அது பெண்மையின் மீதான் நம்பிக்கையை தகர்த்துவிடும். பெண்மை நியாயமானதாக இருக்க வேண்டியதில்லை என்கிற எண்ணம் கொள்ள வைக்கும். தேவியென போற்றப்படும் பெண்மையிலும் குதர்க்கங்கள் உண்டு என்று எண்ண வைக்கும். உண்மை கண்டறிந்திருக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் புறக்கணிக்கப்படக்கூடாது. அதில் நிதானம் காட்டியிருக்கவேண்டும். முதற்கண் பரிச்சயத்தில் ஆயிரம் குளறுபடிகள் இருக்கலாம் என்பதாக இன்னொரு வாய்ப்பளிக்கப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. அதற்கு பதிலாக வேறொன்று நடந்தது.

இப்படித்தான் சில பொருத்தமான மனிதர்களுக்கிடையேயான நட்பு துளிர்க்காமலேயே போய்விடுகிறது. உண்மையில், சிவா உறுப்பினராக இருக்கும் நுங்கம்பாக்கம் அமேரிக்கன் நூலகத்தில் மதுவும் உறுப்பினர். ஆனால் இருவருக்கும் அது தெரியாது. சிவாவுக்கு பிடித்தமான எழுத்தாளர்கள் மதுவுக்கும் பிடித்தம். தனிமையில் மது கேட்கும் இளையராஜாவின் இசை, சிவாவிற்கு மனப்பாடம். சிவாவுக்கு பிடித்தமான திரைப்படங்களின் இசைத்தட்டு மதுவின் சேகரிப்புகளில். ஆனால், இந்த அத்தனை ஒற்றுமைகளும், பரிச்சயம் என்ற ஒன்று இருந்தால்தானே ஆணும் பெண்ணும் தெரிந்துகொள்ள முடியும். அது முளையிலேயே கிள்ளப்பட்டுவிட்டால்? அதைத்தான் நடத்தினாள் இளவஞ்சி.

"அப்படியா, ச்சே அவனை நல்லவன்னு நம்பினேன்டீ"

"எல்லா பசங்களும் பார்க்க அப்படித்தான்டீ இருப்பானுங்க.. விடு.. கண்டவனைப் பத்தி நமக்கென்ன பேச்சு"

அடுத்தமுறை, மது எதிரில் வருகையில் ஸ்னேகமாய் புன்னகைத்தான் சிவா. மது கவனியாதவளாய் முகத்தை எதிர் திசையில் செலுத்தி தன் வழியே நடந்தாள்.சிவா குழம்பினான். இரண்டு மூன்று முறை கடந்து செல்கையில் கவனித்து, மது வேண்டுமென்றே விலகிச் செல்வதை கவனித்துக் கொண்டான். அவனுள் ஏதோ உடைந்தது. மதுவின் மேல் கோபம் வந்தது. பெண்மை மேல் கோபம் வந்தது. இயலாமையை உணர வைத்தது.

தன் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தான். யாருக்கு என்ன செய்தோம், ஏன் இந்த தண்டனை என்று உள்ளுக்குள் புழுங்கினான். மது போன்றொரு பெண்ணுடன் பேசக்கூட தகுதியில்லையா தனக்கு என்றெண்ணி வருந்தினான். 12ம் வகுப்பு வரை, வகுப்பில் முதல்வனாக வந்து, உயர் கல்வித் தகுதியில் பொறியியல் கல்லூரியில் ஃப்ரீ சீட் பெற்று, குடி சிகரெட் ஒதுக்கி கலை இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு இத்தனையும் மது போன்றொரு பெண்ணுடன் பேசக்கூட தகுதியில்லையா என்ற எண்ணம் மேலோங்கியது. இத்தனையையும் கவனியாத பெண்மை என்ன பெண்மை? என்று பெண்மை மேல் நம்பிக்கை இழக்க வைத்தது. பெண்மையின் அவதானிப்புகள் தவறாகவும் இருக்கலாம் என்று எண்ணச் செய்தது.

தகுதியான ஆண், ஓரளவிற்கு மேல் இறங்கி வரமாட்டான். அதலபாதாளத்திற்கும் இறங்கி வருபவனிடம் திறமை தங்காது. தகுதி, மான ரோஷம் பார்க்கும். அதைப் பார்க்காவிடில், தகுதி என்ற ஒன்றே வந்திருக்காது. மோசம் போயிருப்பான் அல்லது திசை மாறிப் போயிருப்பான். தகுதியான ஆணுக்கு திமிர் அழகு கூட்டும். திறமை குடியிருக்கும். திறமை குடியிருப்பதாலேயே தகுதி வந்துவிடும். திறமையான ஆண், தலைசிறந்த வித்து. திமிர், ஓர் அணிகலன். திறமை இருக்கிறதா? இல்லையா? என்று பார்க்கக்கூட அடிப்படையில் ஒரு பரிச்சயமோ சினேகமோ தேவைப்படும். அது தகுதியானவனுக்கு வழங்கப்பட வேண்டும். தகுதியானவன் இரைஞ்ச விசனப்படுவான். இரைஞ்சுதல் பிடிக்காது அவனுக்கு. அதுவும் அணிகலன். மரியாதை.

தன்னை விட தகுதியில் குறைந்தவர்களுடன் பெண் நட்பு பாராட்டுகையில், பெண்மை தவறாகவும் சிந்திக்கலாமென்ற‌ தோற்றம் தருகிறது. பெண்மை மீதான அவ நம்பிக்கை இங்கே ஆழமாய் வேர் விடுகிறது. தங்கையோ, அக்காவோ, மனைவியோ 'இவன் என் நண்பன்' என்று ஒரு ஆண்மகனை அறிமுகப்படுத்துகையில், அந்த நட்பின் மீது அவநம்பிக்கை கொள்ள வைக்கிறது. அது பொய்யோ என்று நினைக்க வைக்கிறது. எங்கோ நிச்சயம் பிசகியிருக்கலாமென்று நினைக்க வைக்கிறது. அது அந்த நட்பை பிரிப்பதிலோ, அல்லது அதற்கு ஒத்துழைக்காமல் விடுவதிலோ போய் முடிகிறது.

"ஹாய் இளவஞ்சி"

"ஹாய் ரகு"

"ரொம்ப நாளா உங்க கிட்ட கேக்கணும்னு நினைச்சேன். உங்களுக்கு யாரு இளவஞ்சின்னு பேர் வச்சது?"

"ஆங்..எங்கம்மா"

"ஓ.. நல்ல தமிழ் பெயர்.. எனக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்"

"ஓ.. உங்களுக்கு தமிழ்ன்னா பிடிக்குமா?"

"ஆமா, ரொம்ப.. சுஜாதாவோட எப்போதும் பெண் நாவல் படிச்சிருக்கீங்களா?"

"ஆங்..படிச்சிருக்கேன்.. ரத்தம் ஒரே நிறம் கூட படிக்கணும்.. ஃப்ரண்ட்ஸ் யார்கிட்டயும் அந்த புக் இல்லை"

"அட.. கவலையை விடுங்க.. என்கிட்ட இருக்கு.. நாளைக்கு தரேன்"

"ஓ.. தாங்க்ஸ்"

ரகு தந்திரமாய் காய் நகர்த்தினான். அவனுக்கு தெரியும். இளவஞ்சி மட்டுமே தான் போகும் வழிக்கு திசைகாட்டி என்று. பள்ளிப்பருவத்திலேயே இரண்டு பெண்களை காதலித்த அனுபவம் தந்த அறிவு. மரியாதையை வார்த்தையில் காண்பித்தான். சாதுர்யத்தை அணுகுமுறையில் காண்பித்தான். உண்மையில் இலக்கியம் அவனுக்கு வெகு தூரம். இளவஞ்சிபற்றி கொஞ்சம் தகவல் சேகரித்தான். தமிழ் பிடிக்குமென்று தெரிந்ததும், சிவாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். பிரபலமான எழுத்தாளர்கள் யாரென்று தெரிந்துகொண்டான். அவர்களின் ஆக்கங்கள் தெரிந்துகொண்டான். ஆக்கங்களின் வகைகள் தெரிந்துகொண்டான். இளவஞ்சியை அணுகினான்.

"மது.. இன்னைக்கு ரகு வந்து என்கிட்ட பேசினான்டீ"

"எந்த ரகு?"

"அதாண்டீ.. கொஞ்சம் கருப்பா உயரமா இருப்பானே"

"ஓ..அவனா"

"நல்லா பேசுறாண்டீ.. எனக்கு நாவல் தரேன்னு சொல்லியிருக்கான்... தமிழ்லாம் படிப்பான் போல...இந்த காலத்துல இப்படி பையனை பாக்குறது கஷ்டம் தெரியுமா? நல்ல பையன்"

தன்னையும் ஒருவன் மதித்துப் பேசிவிட்டானென்பதில், இளவஞ்சி சற்று அதிகமாகவே பேசினாள். தன்னிடம் வந்து பேசியவனின் மதிப்பை இயன்றவரை உயர்த்திப் பிடித்தாள்.

"ம்.. என்ன நாவல்டீ?"

"ரத்தம் ஒரே நிறம்"

"ஏய்..அதுவா?!.. படிச்சிட்டு குடுடீ.. நானும் படிக்கணும்"

"என்னோடதில்லை..ரகுவோடது.. எதுக்கும் நீயும் ஒரு வார்த்தை கேட்டுடேன்?"

"அப்படியா..சரி முதல்ல நீ முடி..அப்புறம் பாக்கலாம்.."

முதலில் மறுதலித்துவிட்டாலும், மதுவின் மன‌த்திற்குள் ரகுவைக் குறித்தான ஒர் நல்லெண்ணம் வேர் விட்டது. ஓர் எதிர்பார்ப்பு கூடியது. மது, தமிழ் விரும்பி. தன்னையொத்த தமிழ் விரும்பி மட்டுமே தனக்கு இணையாக முடியும் என்று நம்புகிறவள். ரகுவின் அறிமுகம் இளவஞ்சியின் மூலமாக மதுவிற்கு கிடைத்த‌தில், இள‌வ‌ஞ்சியின் ந‌ட்பை ப‌ற்றி மதுவுக்கு உய‌ர் எண்ண‌ம் கொள்ள‌ வைத்த‌து. அது ஒரு ந‌ம்பிக்கைக்கு வித்திட்ட‌து. தகுதியான‌ சிவா காணாம‌லே போனான்.

மனிதனுக்கு மனசாட்சியே ஒப்பற்ற நீதிமன்றம். பெண்மையை ஏமாற்றி அணுகுபவனின் மனம், ஏமாறும் பெண்மையை முன்னுதாரணமாக்கிப் பார்க்கும். எல்லா பெண்களையும் ஏமாற்ற முடியும் என்பதாக கணக்கு போட வைக்கும். ஏமாற்றினால் பெண்மையை நெருங்கிவிடலாம் என்கிற எண்ணம் கொள்ள வைக்கும். பெண்மையை இளப்பமாக நினைக்க வைக்கும். பெண்மையை நெருங்க திறமை தேவையில்லை, பொய்களே போதும் என்று எண்ண வைக்கும். சகோதரியோ, மனைவியோ, சித்தியோ, அத்தையோ இன்னுமொரு ஆண்மகனை 'இவன் என் தோழன்' என்று அறிமுகம் செய்கையில், அது கூட ஏமாற்றுதலோ என்கிற எண்ணம் கொள்ள வைக்கும். அதில் எங்கோ பிசகியிருக்கிறது என்கிற எண்ணம் கொள்ள வைக்கும். இந்த எண்ணம் இருக்கும் வரை, அந்த நட்பு, உளமார ஒப்புக்கொள்ளப்பட்டிருக்காது. கண்காணிக்கப்படும். முதுகில் குறை கூறப்படும். பெண்மையை நெருங்க திறமை தேவையில்லை, பொய்களே போதுமென்கிற எண்ணம் ஆண்மைக்கு தோன்றுவது பெண்மைக்கு இழுக்கு. அவமானம். தன் சவக்குழியை தானே வெட்டிக்கொள்வது போல. இங்கே தவறிவிட்டால், பிறகெங்கும் பெண்மை சுதாரிக்க இயலாது. கூட்டம் கூடி, கோஷமிட்டு பலனில்லை.

தகுதியான ஆண்மகன் புறக்கணிக்கப்படக் கூடாது. அப்படிப் புறக்கணிக்கப்பட்டால், அது பெண்மைக்கு நஷ்டம். நம்பிக்கை நஷ்டம். தவறான ஆண்மகனை பெண்மை இனம் காண முடியாமல் ஏமாறக் கூடாது. அதுவும் பெண்மைக்கு நஷ்டம். நம்பிக்கை நஷ்டம். உறவுமுறைகளின் மூலம், நம்பிக்கை. அன்பின் உட்கரு நம்பிக்கை. அது நஷ்டமானால் பிறகெல்லாம் சூன்யமே.

இய‌க்க‌ங்க‌ளால் ஆன‌ முடிச்சுக்க‌ள் குழ‌ப்ப‌மான‌வை. ம‌னித‌ன் காணும் எதுவும், ஏதோ ஓர் இய‌க்க‌த்தின், ஏதோவொரு மூலை ம‌ட்டுமே. இப்படியான பார்வை ம‌னித‌ன் விரும்பி ஏற்பதல்ல. இவ்வகையான பார்வைதான் பெற‌ப்ப‌டுகிற‌து. அளிக்கப்படுகிறது. பெருவாரியான இயக்கங்களுக்கு பெண்மை இலக்காகிறாள். பலவகையான நாடகங்கள் பெண்மையை மைய‌ப்ப‌டுத்தி நடத்தப்படுகின்றன. பல சமயங்களில் அவளையும் அறியாமல், அவள் வழி நடத்தப்படுகிறாள். இவ்வகையான வழி நடத்துதலும் அவள் விரும்பி ஏற்பதல்ல. ஆனால், இந்தச் சமூகம் அவ்வகையான வழி நடத்துதலுக்குத்தான் பழக்கப்பட்டிருக்கிறது. யாரோ, எதன் பொருட்டோ, எதையோ இயக்கி, ஒரு மூலையில் தள்ளிவிட, அங்குதான் அதன் மீதான பரிச்சயம் அவளுக்கு துவங்குகிறது.

இந்த ஒட்டுமொத்த நாடகத்தையும், அதன் கட்டமைப்பையும், அது எப்படி அரங்கேறுகிறது என்பது பற்றியும் தெளிவாகத் தெரியாமல்தான், பெண்மை குழம்புகிறது. அரைகுறைப் புரிதலுடன், தான் நினைத்ததை சரியெனக் கொள்கிறது. இது, முக்காலே மூணு வீசம் ஒரு தவற்றுக்கு இட்டுச் சென்றுவிடுகிற‌து. த‌வ‌றிழைக்க‌ப்ப‌ட்ட‌தும், தான் இய‌க்க‌ப்ப‌ட்டிருப்ப‌து புரிகிற‌து.

இது த‌விர்க்க‌ப்ப‌ட‌ வேண்டுமானால், இது அனைத்தும் புரிய‌ வேண்டும். இய‌க்க‌ங்க‌ள் புரிய‌வேண்டும். அதற்கு முதலில் எதிர்பாலின‌ம் புரிய‌ வேண்டும். ஈத‌னைத்திற்கும் முதிர்ச்சி வேண்டும். கால‌ம் க‌னிய‌ வேண்டும். அதுவ‌ரை காத்திருக்க‌ வேண்டும். வெறும‌னே ந‌ட்பு தொட‌ர‌ வேண்டும். ஆரோக்கிய‌மான‌, அறிவு சார் ந‌ட்பு தொட‌ர‌ வேண்டும். அவ‌ச‌ர‌ப்ப‌ட்டால், கேடு விளையும். ச்சீ என்றாகும். பாராமுக‌ம் கொள்ள‌ வேண்டியிருக்கும். ஒதுங்கிப் போக‌ வேண்டியிருக்கும். நம்பிக்கை இழக்க வேண்டியிருக்கும்.

"உங்க ரெண்டுபேருக்கும் என்ன வேணும்?"

"ரகு, எனக்கு ஒரு ஆப்பிள் ஜூஸ்" என்றாள் இளவஞ்சி.

"ரகு, எனக்கு பஃப்" என்றாள் மது.

"ஓகே..கொஞ்சம் இருங்க..வாங்கிட்டு வந்திடறேன்" என்றுவிட்டு எழுந்து கவுண்டர் நோக்கி ரகு நகர்ந்த போது, எதிர்பட்ட சிவா, ரகுவைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, சலனமின்றி கேன்டீனை விட்டகன்றான்.

"ரகு, இனிமே எங்களைத் தனியா விட்டுட்டு போகாதப்பா.. கண்டவனும் எங்களை மொறைச்சிட்டு போறான்" என்றாள் இளவஞ்சி, அப்பிள் ஜூஸ், பஃப்ஃபுடன் வந்த ரகுவிடம்.

"மொறைச்சிட்டா? யாரு... யாரது" இரைஞ்சினான் ரகு.

"அவன் பேரு சிவா. எனக்கு தெரியும். சரியான பொறுக்கி அவன்" என்றாள் இளவஞ்சி.

ரகு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.

முற்றும்.

- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

@நன்றி
கணையாழி கலை இலக்கிய திங்களிதழ்(ஆகஸ்ட் 2013)