2.12.2012 தேதியிட்ட ராணி குடும்ப வாரந்திரியில் நான் எழுதிய 'எவ்வகை ரோஜா' என்ற கவிதை பக்கம் 18 ல் வெளியாகியிருக்கிறது. கவிதை வெளியான ராணி வார இதழின் 18 வது பக்கத்தின் பிரதி இங்கே.
அந்தக் கவிதை இதோ:
அதிகாலை வேளையில்,
சோம்பலைப் போர்வைக்குள்
போர்வையாய்ப் போர்த்தி
மெல்லுறக்கந்தனை இன்னமும்
மிச்சம் வைத்திருக்கும்
ஊராருக்கிடையில்,
குளிர்பனியில் நனைந்தே
மிதந்துவரும் பூவையவள்
தரிசனம் வேண்டி நிற்கிறேன்...
புற்களுக்கு மத்தியில்
பூத்திருக்கும் பட்டு ரோஜா
அவளைப்பார்த்து வியப்புற்றது
உலகிலுள்ள ஈராயிரம் வகை
ரோஜாக்களில் இவள்
எந்த ரகம் என்றே...
Tuesday, 27 November 2012
Tuesday, 30 October 2012
பூக்களற்ற பூமாலை - சிறுகதை
ஹால் மேஜையில் சிதறிக் கிடந்த ஆஸ்பிரின் வில்லைகளைப் பொறுக்கியெடுத்து டிராயரில் திணித்தேன். வாசலில் கார் இருக்கவில்லை. கிருத்திகா அலுவலகம் சென்றிருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன். எப்போதிலிருந்து இந்தப் பழக்கம் கிருத்திகாவிற்கு என்பதைச் சரியாக அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. பெற்று வளர்த்த தாய் நான். என்னிடம் சொல்லாமலே எங்கும் கிளம்பிச் சென்றுவிடுகிறாள். அவள் அப்படிச் செல்கையில் என்னாலும் அனேகம் தரம் கேட்க முடிந்ததில்லை.
காரணம், அவளின் தலைவலி.
ஆஸ்பிரின் மாத்திரையைத் தொடர்ந்து நாடும் அளவிற்கு அவள் வந்து இரண்டு வருடங்கள் இருக்கலாம். அதற்கு முன்பெல்லாம் அப்படி இல்லை.
அவள் வயிற்றில் இருக்கையில் நான் பெண்மையின் உச்சத்தில் பூத்திருந்தது உண்மை. அவள் அத்தனைக்கு அழகு. பிறக்கையில் வெளிர் ரோஜா நிறத்தில் இருந்தாள். ஊரே கண் வைத்தது. தினம் தினம் அவளுக்கும் எனக்குமாய் சுற்றிப் போட்டு மாளவில்லை. அப்போதெல்லாம் எனக்குள்ளான பெருமித உணர்வுகளுக்கு அளவே இல்லை. அவள் மெல்ல வளர்ந்தாள். பெரும்பாலும் என் சாயலில். அவள் ருதுவாகும் வயதுவரை எனக்கு அவள் என்னைப் போலவே இருந்ததாகத்தான் பட்டது. என் இளமைக் காலங்களை அவள் மீண்டும் என் கண் முன்னே வாழ்ந்து காட்டினாள். காலை எழுந்ததும் சுப்ரபாதம், துளசி மாடம், பிறகு பாட்டு க்ளாஸ், பின் பள்ளிக்கூடம், மாலை பரதம், பல்லாங்குழி, சமயங்களில் என்னுடன் வரலட்சுமி நோன்பு, விரதம், கோயில்களில் கதாகாலட்சேபம், திருக்கல்யாணம் என நானே அவளாய்.
பல்லாங்குழி விளையாடுகையில் நீட்டிக்கொள்ளும் ஆள் காட்டி விரலாகட்டும், பரமபதப் பாம்பெனில் முகத்தை மூடிக்கொண்டே சொல்லும் ஒரு அய்யோவாகட்டும், பூஜைக்கு வெற்றிலை வைக்கையில் நனைந்த வெற்றிலை இலைகளைப் புறங்கையில் தடவித் துடைப்பதாகட்டும், புதிதாய் உடைகள் வாங்கினால் அணிந்து கொண்டு கண்ணாடி முன்நின்று வலது காலை முன்னிழுத்து அரை வட்டம் அடிப்பதாகட்டும், சமையலின்போது வலது சுண்டுவிரலால் சாம்பாரைத் தொட்டு ருசி பார்ப்பதாகட்டும்...இப்படி சின்னச் சின்னதான எல்லாவற்றிலும் அவள் என்னை நினைவூட்டினாள்.
அந்தக் காலகட்டங்களில் அவளைக் குறித்து எனக்குள் அதீத தன்னம்பிக்கை கொண்டதாகவே உணர்ந்தேன். பின்னாளில் என்னைப் போலவே வந்துவிடுவாள் என்பதில் எனக்கு எந்தவிதமான எதிர்பாராத தன்மையும் இருக்கவில்லை. எல்லாமே அறுதியிட்டு இருந்தது போல இருந்தது. என் வாழ்க்கைப் பாதையை நானே திரும்பிப் பார்க்கப் போகிறேன் என்பதில் எனக்கு ஒரு விவரிக்க முடியாத சாஸ்வதம் கிட்டியது.
அவள் தன் பதினைந்தாவது வயதில் ருதுவானாள். கிட்டத்தட்ட அப்போதுதான் அவள் என் வழித்தடங்களை விட்டு விலகியிருக்க வேண்டும். அதுவரை இல்லாத புதிதாய், தோழிகள் வீட்டில் இரவுகள் கழிக்கத் துவங்கினாள். கேட்டதற்கு தேர்வுகளைக் காரணம் காட்டினாள். என்னால் மறுக்க முடியவில்லை. சராசரியாக 80 விழுக்காடு தொடர்ந்து வாங்கினதால் நானும் விட்டுவிட்டேன். 80 விழுக்காடு என்பது ஒரு மனிதனின் அறிவை, அவன் சரியான கோணத்தில்தான் வளர்கிறான் என்பதை, அவன் நல்லவன்தான் என்பதை எவ்வாறு அறுதியிடுகிறது? நான் ஏன் அப்படி நினைத்தேன்? ஒரு கோணத்தில், 80 விழுக்காடு என்பதை ஞாபகசக்தியின் அளவுகோலாகத்தான் பார்க்கமுடிகிறது. நாள் தவறாமல் பள்ளிக்குச் சென்றிருக்கிறாள் என்று வேண்டுமானால் சொல்லலாம். கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறாள் என்றும் கூட சொல்லலாம். ஆனால், பொது வாழ்க்கையின் அசெளகர்யங்களை, நடைமுறைகளை, அதன் சிக்கலான பாதைகளை, சூழல்களை, எதிர்வினைகளை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறாளென்று எப்படி சொல்ல முடியும்? உண்மையில், அப்போது நான் இப்படியெல்லாம் யோசித்திருக்கவில்லை. 80 விழுக்காடு என்பது என் வாயை எப்படியோ அடைத்துவிட்டது. அல்லது அதோடு நான் என் வாயை மூடிக்கொண்டுவிட்டேன் என்று சொல்லலாம்.
பின்னிரவுகளில் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கத் துவங்கினாள். இப்படி நான் என் சிறுவயதில் பேசியிருக்கவில்லை. அந்தக் காலத்தில் ஏது இம்மாதிரியான செளகர்யங்கள்? ஒரு வேளை இம்மாதியான செளகர்யங்கள் இருப்பின் நானும் என் காலத்திலேயே இப்படித்தான் இருந்திருப்பேனோ என்பதான எண்ணங்கள் தோன்றி என்னையே குழப்பியது. யாருடன் பேசுகிறாள், என்ன பேசுகிறாள் என்கிற குழப்பங்கள் தொடக்கத்தில் எனக்கு இருந்தனதான். ஆனால், எனக்கான அவளை விடவும், அவளுக்கான என்னைத்தான் அவள் எதிர்பார்க்கிறாள் என்பது புரிந்து அதையே கொடுத்தேன்.
இக்கால இளைய தலைமுறைக்கு நம்பிக்கை என்பது காற்றினாலான வார்த்தையாகப் படுகிறது. இதற்கு வேர் இல்லை, விழுது இல்லை. என் இளமைக்காலத்தில், யாரையேனும் நல்லவர் என்றோ தீயவர் என்றோ நான் வாழ்ந்த ஊர்தான் சொல்லும். அதில் அங்கீகாரம் இருந்தது. அது சொல்ல வேண்டுமே என்பதுதான் எங்கள் கவலையாக இருந்தது. என் ஒவ்வொன்றையும், அதன் எதிர்பார்ப்புகளுக்குள் திணிக்க முற்படுவது ஒரு அணுகுமுறையாக இருந்தது. அந்த அணுகுமுறையை எளிதாக்க, அதே அணுகுமுறையில் முன்னரே பழக்கப்பட்ட அம்மா இருந்தாள், பாட்டி இருந்தாள். அது ஒரு வழிகாட்டியாக இருந்தது. செல்வந்தன், குடியோன், சாதாரணன், வண்ணான், ஆசான், மருத்துவன் என எத்தரப்பினரைக் கேட்குங்காலும் ஒரே விதமாய் அறியப்படும் வகைக்கு அங்கீகாரம் கிடைத்தது. ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு விதமாய் வாழ்க்கையை அணுகுபவர்கள். இவர்கள் அனைவருக்கும் ஒரே கருத்து தோன்றும் வகைக்கு இருப்பது அசாதாரணம். இவ்வாறாக அறியப்படுதல் ஒரு பலம், தன்னம்பிக்கை. அதை முழுமையாகத் துய்த்தவள் நான். ஆனால், இக்காலத்தில் இளந்தலைமுறை தங்களைத் தாங்களே அங்கீகரித்துக் கொள்கிறார்கள். புறத்தோற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள். அகம் வலுவற்று துவள்கிறது. தொடர் இயக்கங்கள் நின்று நிதானிக்க கால அவகாசம் தருவதில்லை. நிதானமிழக்கச் செய்கின்றன. நிதானமிழந்த இயக்கங்களின் விளைவுகளையும், அதன் பாதிப்புகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள் அல்லது ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கிறார்கள். ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கிறார்கள். அவ்வாறு ஏற்றுக்கொள்வதையே அணுகுமுறையாக்கி விடுகிறார்கள். அதையே வழிகாட்டுதலாக்கி விடுகிறார்கள். இது எளிதாக இருக்கிறது. ஆனால், பக்க விளைவுகள் அதிகமாக இருக்கிறது. இடைவெளியற்று கோர்க்கப்பட்ட பூக்களை பூமாலை நழுவவிட்டு விடுதல் போல.
சில சமயங்களில் அவள் கல்லூரிக்குச் செல்ல அவளின் நண்பன் கார்த்திக்கின் பைக்கில் சென்றாள். பக்கத்துவீட்டு ஓட்டைவாய் பரிமளா கண்களில் பட்டுவிடக்கூடாதே என்று என் மனம் பதைத்த பதைப்பு எனக்குத்தான் தெரியும். அவளானால், அது பற்றிய அக்கறை துளியுமின்றி பயணிக்கிறாள். லேசாக அது பற்றி ஒரு நாள் நான் வாய் திறந்ததற்கு அவளும் , அவளின் அப்பாவுமாகச் சேர்ந்து கொண்டு ஊருக்காக அல்ல வாழ்க்கை, நமக்காக என்றார்கள். ஆனால், அவளேதான் தன் பெரியம்மா மகனுக்குப் பார்த்த பெண்ணை நிராகரித்தாள். காரணம் கேட்டதற்கு, அந்தப் பெண்ணை யாரோ ஒரு பையனுடன் பைக்கில் பார்த்தாளாம்.
என் சிறுவயதில் நான் படித்திருந்த பாடங்கள் அவள் படிக்கையில் எனக்கு நினைவிருக்கவில்லை. அதனால் அவளை ஓரளவுக்கு மேல் தொடர்ந்து செல்ல முடிவதில்லை. என்னைப் போல் பல அன்னையர்களுக்கு நினைவிருக்கவில்லை என்பது என்னையே சமாதானப்படுத்திக்கொள்ள மட்டும்தான் உதவுகிறது. நித்தமும் வெளிவரும் புதுப்புது அலைபேசிகளின் ஜாதிகள் புரிவதில்லை. கணிப்பொறிகளில் குறுக்கும் நெடுக்குமாய், முளைப்பதும் மடிவதுமான சங்கேத சித்திரங்கள் புரிவதில்லை. தொலைதூரப் பயணங்களில் சாலையோரம் பூத்திருக்கும் மைல்கற்களைப்போல , மதிப்பெண் பட்டியல்களும், பொறியியல் பட்டப்படிப்பிற்கான சான்றிதழ்களும் அவள் வளர்ச்சியைக் கொஞ்சமே கொஞ்சம்தான் உணர்த்தின.
சில நேரங்களில் அதீத மகிழ்ச்சி அல்லது அதீத வெறுப்பு, நாளும் கிழமையுமாய் முகத்தை தூக்கி வைத்துக்கொள்வது, அமைதியான இயல்பான பகல்களின் சந்தோஷ கணங்களில் கூட எதையோ இழந்தது போல் இருப்பது, இரவெல்லாம் மறைத்து மறைத்து அலைபேசியில் கொஞ்சலும் கத்தலும், காலையில் நேரங்கழித்து சிவந்த கண்களுடன் எழுவது, உடல்வாகிற்குத் தொடர்பில்லாத உடைகள், உணவுகள் போன்றவைகளே அவள் யாரையோ காதலிக்கிறாள் என்று என்னிடம் சொல்லாமல் சொல்லின மறைமுகமென. தாய் என்பவள் அரை மகள். மகள் என்பவள் அரை தாய். என்னிடம் ஏன் மறைக்கவேண்டும்? ஆனால் மறைக்கிறாள். நான் கேட்டதற்கு தோழன் என்றாள். அப்படியானால் அது காதல் இல்லையா? நானாகத்தான் காதல் என்று உருவகப்படுத்திக்கொண்டேனா? அது வெறும் தோழமைதானா? தோழமைக்கு ஏன் காதலுக்குண்டான உணர்வுகள் அத்தனையும்? அவளே சொல்லாதபோது வலிய கேட்க தாய் - மகள் உறவு தடுத்தது. என் சுயமரியாதை தடுத்தது. நான் மீண்டும் கேட்கவில்லை. காரணம், சுயமரியாதை இல்லை. நான் கேட்பதை அவள் விரும்பவில்லை. இங்கும் அவளுக்கான நான்தான். எனக்கான அவள் இல்லை.
ஆண்பிள்ளைகள் அணிவது போல நீள பாண்டும், முழுக்கையை மடித்து பெல்ட்டால் இறுக்கிய வெள்ளை சட்டையும், ஷூவுமென அவள் முதல் நாள் வேலைக்குச் சென்ற போது எனக்கு ஆண்பிள்ளை இல்லாத குறை தீர்ந்தது போலிருந்தது. ஏதோ கம்ப்யூட்டர் கம்பெனியாம். மூளைக்கு வேலையாம். அவளின் சம்பளத்தைக் கேட்டபோது எனக்கு மனநோய் பீடிக்கத் துவங்கியது. என் கணவர் வேலையை விட்டு ஓய்வு பெற்றபோது வாங்கிய சம்பளத்தைவிடவும் ஐந்து நூறு அதிகம்.
ஆனால், எனக்குத்தான் அது நாள்வரை கணவர் மேல் இருந்த ஏதோ ஒன்று சட்டென விட்டுப்போனதாகத் தோன்றியது. ஏன் அவ்வாறு உணர்ந்தேன் என்று புரியவில்லை. ஆனால் அன்று உணர்ந்ததை இன்றுவரை திரும்பப் பெற முடியவில்லை. என் கணவர் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. பார்க்கும் எல்லோருடனும் மகள் புராணம்தான். வீடு பெருமைப்பட்டது. தெரிந்தவர், தெரியாதவர் என எல்லோரும் வந்து பெண் கேட்டனர். சுற்றம் பொறாமைப்பட்டது.
அவளின் அப்பா காலை 7 மணிக்கெல்லாம் எழுந்து அருகிலிருந்த பூங்காவில் நடை பழகினார். அவரையொத்த அக்கம்பக்கத்து மனிதர்களுடன் மகளைப் பற்றிய பேச்சுக்கள் அவருக்குக் திகட்டவே இல்லை. அவள் பணிக்குச் சென்றுவிட்ட பகல்களில் எங்களுக்கிடையில் அவளின் பால்யம் தொடர்பான இனிமையான நினைவுகளில் நாங்கள் விரும்பி நனைந்தோம். அவள் சிறுவயதில் விளையாடி உடைத்த விளையாட்டு பொம்மைகள்,வெள்ளி பால் கிண்ணம், பல்லாங்குழி முதலானவை அவளைப் பற்றிய எங்கள் நினைவுகளை எங்களுக்குள் மீண்டும் மீண்டும் அசை போட்டன. பழைய ஆல்பங்கள் புரட்டுகையில் சலிக்கவே இல்லை. அவளுக்கென நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் நகரத்தின் அத்தனை கோயில்களுக்கும் படையெடுத்தோம். அதில் ஆத்ம திருப்தியும், சந்தோஷமும் கொண்டோம். அவளின் ஜாதகத்தையும் பெயரையும் எடுத்துக்கொண்டு நாங்கள் செல்லாத ஜோதிட நிலையங்கள் நகரத்திலேயே இல்லை. லக்கினத்தில் புதன், அவள் எதையும் தானே புரிவாள் என்றும், மிருகசிரீஷம் தேவகணம் பொருந்திய நட்சத்திரம் என்றும் சந்திரனிலிருந்து குரு நான்காம் இடத்து கஜகேசரி யோகம் என்றும் ஒவ்வொருவரும் அவளின் ஜாதகத்தைக் கையில் கொண்டு, சொல்லும் அத்தனை வார்த்தைகளையும் மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ்ந்தோம். எங்களுக்கு அவற்றைத் திரும்பத் திரும்பக் கேட்பது பிடித்தமாக இருந்தது. ஒவ்வொரு முறை கேட்கையிலும் அவள் எங்களுக்கிடையில் மீண்டும் புதிதாய்ப் பிறந்தாள், மீண்டும் வளர்ந்தாள், மீண்டும் மீண்டும் எங்களைப் பெருமைப்படுத்தினாள். இது மாதக்கணக்கெனவும், அவள் வேலை விஷயமாக வெளிநாடுகளுக்குப் பயணித்துவிட்டுத் திரும்பிய மூன்று வருடங்களில் வருடக்கணக்கெனவும் தொடர்ந்தது.
அதன்பின், நிறைய மாறுதல்கள். தினமும் என்னுடன் காயத்ரி மந்திரம் உச்சரிக்கையில் பிழைகள் செய்தாள். முதலில் மூன்று வருடங்கள் பிரிந்ததால் இருக்கலாம் என்று நினைத்தோம். சமைத்தால் உப்பையோ, காரத்தையோ நழுவ விட்டாள். சர்க்கரை குறைபாடு உள்ள அவளின் அப்பாவுக்கு தேநீர் தயாரிக்கையில் சர்க்கரையிட்டே தந்தாள். திடீர் திடீரென்று காரணமே இன்றி கோபம் கொண்டாள். அவசர தருணங்களில் மந்தமாய் இருந்தாள். குளியல் அறையில் வைத்த அலைபேசியை வீடு முழுதும் தேடினாள். மோட்டார் போட்டுவிட்டு தண்ணீர் டாங்க்கில் தண்ணீர் நிரம்பி தளும்பி வழிவது கூடத்தெரியாமல், எதையோ யோசித்தபடியே படுக்கையில் கிடந்தாள். அலுவலகத்திற்கு காரில் சென்றுவிட்டு அந்த நினைவே இன்றி அலுவலக காரில் வீடு திரும்பினாள். இப்படி எத்தனையோ.
திருமணம் பற்றிப் பேச்செடுத்தால் முகம் சுளித்தாள். தொடர்ந்து பேசுகையில் எரிச்சலுறுவதும், கோபமாய்க் கையில் கிடைத்ததை விட்டெறிவதும் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமயத்தில் ஆண்கள் பற்றிப் பேசுகையில் நம்பிக்கையற்றுப் பேசினாள். வார இறுதிகளில் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்தாள். என்றுமில்லாத புதிதாய் மேரி மாதாவின் உருவச்சிலைகளை பூஜை அறையில் வைத்தாள். காயத்ரி மந்திரம், ஸ்தோத்திரம் ஆனது. அவளது கைப்பையில் புதிதாய் ஒரு குட்டி பைபிள் வந்து ஒட்டிக் கொண்டது. வீட்டிலிருக்கும் நேரங்களில் ஆஸ்பிரின் உட்கொண்டு, கதவு சாத்தி தூங்கத்துவங்கினாள். அளவில்லாமல் கண்ட நேரத்திலும் உணவு உட்கொண்டு உடல் பருத்தது. சதைகள், அவளைப் பிள்ளை பெற்றவள் போல் காட்ட, பெருவாரியான அவளின் கண்கவர் ஆடைகள் எவர்சில்வர் பாத்திரங்களுக்கு மாற்றாகிப்போயின. பரதம், பாட்டு முற்றிலுமாக நின்றுபோனது. புத்தகங்கள் பழைய புத்தகக் கடைகளில் அடைக்கலம் புகுந்தன. வீடு முழுமைக்கும் ஒற்றை பைபிள் இரைந்து கிடந்தது. எங்களின் வாக்குவாதங்கள் தேய்ந்து மன்றாடல்கள் ஆயின. பின்னர் அவைகளும் தேய்ந்து அழுகுரல்கள் ஆயின. பின்னர் அவைகளும், ஆயுள் குறைந்து வெறும் மெளனங்கள் ஆயின.
அவள் அப்பா, வெளியே செல்வதைத் தவிர்த்தார். வீட்டிலேயே முடங்கினார். அவளின் பால்ய கால விளையாட்டு சாமான்கள் மொட்டை மாடியில் இருட்டு அறைக்குள் முடங்கின. சில நேரங்களில், என் முகம் பார்ப்பதைத் தவிர்த்தார். அக்கம் பக்கத்தார், சுற்றம், உறவுகள் என எல்லோரும் அவளின் 28 வயதையே நினைவூட்டினர். அதில் ஒளிந்திருந்த ஏளனத்தைக் கண்டும் காணாதது போல நடிக்கத்துவங்கினோம் நாங்கள்.
திடீரென்று ஒரு நாள் ஒரு பையனுடன் வந்தாள். பெயர் ஆல்பர்ட் என்றாள். கிருஸ்துவனாம். கூட வேலை பார்ப்பவராம். நடுத்தரக் குடும்பமாம். ஊர் வேளாங்கண்ணியாம். கல்யாணம் பண்ணி வையுங்கள் என்றாள். மறுபேச்சு பேசாமல் திருமணம் முடித்து வைத்தோம். எங்களுக்கு அப்போதிருந்த ஒரே கவலை, அவளின் 28 வயது, 30 ஆகிவிடக்கூடாது என்பதுதான். அவளுக்காக நாங்கள் பார்த்த ஓராயிரம் ஜாதகங்கள் அடுத்து வந்த போகிக்குத் தீக்கிரையாகின. மாப்பிள்ளை அலுவலக வேலையாக அமெரிக்கா போவதாய்ச் சொன்னபோது எங்களுடனே இருப்பதாய் கிருத்திகா பின் தங்கினாள். எங்கள் கூடவே இருக்க பிரியப்பட்டாள். எங்கள் மீதான அவளின் பாசம் எங்களைப் பரவசப்படுத்தியது. மாப்பிள்ளை என்ன சொல்வாரோ என்றிருக்கையில் மாப்பிள்ளை இன்முகத்துடன் தனியே அமெரிக்கா கிளம்பினார். இப்போதும் வாரம் தவறாமல் தொலைபேசியில் பேசுகிறார். புகைப்படங்கள் அனுப்புகிறார். வெப்காமில் கிருத்திகாவுடன் பேசுகிறார். சென்னையில் எங்கெங்கு நிலம் வாங்கலாம் என்று அபிப்பிராயம் கேட்கிறார்.
அவ்வப்போது இவளும் ஓரிரு மாதங்கள் அமெரிக்கா சென்று அவருடன் இருந்துவிட்டு வருகிறாள். வந்து அமெரிக்க வாழ்வைப்பற்றி கதைகதையாகப் பேசுகிறாள். எங்களையும் அவளுடனே அமெரிக்கா அழைத்துச் செல்ல, விசாவிற்கு விண்ணப்பித்திருக்கிறாள்.
இப்போதெல்லாம் சுற்றத்தார் பேச்சில் ஏளனம் இல்லை. எல்லோரிடமும் பெருமைப்பட்டுக்கொள்ள எங்களுக்கும் தோன்றுவதில்லை. எங்களிடமும் யாரும் பெருமைப்பட்டுக்கொள்வது இல்லை. எங்கும் இதுவேதான் நிகழ்வதாகத் தோன்றுகிறது. என் வாழ்க்கை போல அவளுடையது சர்வ நிச்சயம் இல்லை. ஆனால், அவள் வகையான வாழ்க்கையிலும் குறையென்று எதுவும் இருப்பதாகத் தோன்றியிருக்கவில்லை. இப்படித்தான் நடக்கிறது சுற்றிலும் பல திருமணங்கள் என்பதாய் நாங்களும், சுற்றமும் சகஜமாகிவிட்டோம்.
ஆனால் எனக்குத்தான் இன்னமும் சில கேள்விகளுக்குப் பதில் கிடைக்காதது போல் இருக்கிறது. அவள் கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்கிறாள். அவளுக்குத் திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. திருமணத்துடன் அமெரிக்கா சென்றவர் அங்கேயேதான் இருக்கிறார். ஆண்களைப் பற்றிய அவநம்பிக்கை பேச்சுக்களின் வாடை இன்னமும் அவள் பேச்சில் தெரிகிறது. மாப்பிள்ளையுடன் இருப்பது பற்றி அவள் அவ்வப்போது இனிப்பாய்ப் பேசினாலும் அதில் ஏதோ ஒரு போலித்தனம் தெரிகிறது எனக்கு மட்டும். ஒரு வேளை நான் தான் எதையோ எதிர்பார்த்து மனதைக் குழப்பிக்கொள்கிறேனா அல்லது உண்மையிலேயே ஒன்றும் இல்லையா? எதையும் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. ஏதோ ஒரு நிச்சயமில்லாத குழப்பம் எல்லோரையும், எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது.
#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6044)
Monday, 27 August 2012
குங்குமம் (3.9.2012) வார இதழில் என் சிறுகதை
3.9.2012 தேதியிட்ட இந்த வார குங்குமம் இதழில் நான் எழுதிய 'வாங்க காதலிக்கலாம்' என்ற தலைப்பிலான சிறுகதை பக்கம் 70ல் துவங்கி - 75 ம் பக்கம் முடிய வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பிரசுரமான சிறுகதையின் பிரதி இங்கே. படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை எனக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
பிரபல ஓவியர் மாருதி, மிக அழகாக, சிறப்பாக ஓவியம் வரைந்திருக்கிறார். கதையை எழுதுகையில் நான் கற்பனை செய்திருந்த காட்சிகளை தத்ரூபமான ஒவியமாக வரைந்திருக்கும் அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
பி.கு: எனது இச்சிறுகதையை வெளியிட்ட குங்குமம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Monday, 13 August 2012
இரைஞ்சுதல்
நம் செய்கைகள்
அனைத்திற்கும்
இதுதான் அர்த்தமென
நாம் எல்லோரும்
எதை எதையோ
குறிப்பிடுகிறோம்...
அவ்வர்த்தங்கள் பொருத்தமில்லை
எனும்போது
தன்னிலை விளக்கமொன்றிற்கான
வாய்ப்பை இரைஞ்சுகிறோம்...
அவ்வாறானவாய்ப்பொன்றிற்கு
இரைஞ்சாதவர்கள்
நம்மிடையே
எவரும் இல்லை...
#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5875)
Monday, 30 July 2012
தெளிவற்ற நாடகங்கள்
நாடகங்கள்
எங்கு,
எவ்விதம்
துவங்குகிறதென
நம்மிடம்
தெளிவான குறிப்புகள்
இல்லை...
பிற நாடகங்களின்
பக்க விளைவுகளெனவும் கூட
புதியதாய்
ஓர் நாடகம்
உயிர்த்தெழக் கூடும்...
நாம்
நடித்துக்கொண்டிருக்கும்
நாடகம் கூட
அப்படி ஒன்றாக
இருக்கக் கூடும்...
இப்படித்
தெளிவானகுறிப்புகள்
இல்லாதநாடகங்களைத்தான்
நாம்
தினம் தினம்
விரும்பி நடத்துகிறோம்...
#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5802)
Monday, 23 July 2012
பயணத்தின் சாரம்
ஓர் நாழிகை கூட
வீணாகிவிடாமல்
சீராக
பாதையினூடே
பயணித்தல்
இலக்கை எட்டுதலைத்
துரிதமாக்குகிறது தான்...
ஆனால்,
மைல்கற்கள் தோறும்
பயணத்தை நிறுத்தி
திரும்பிப் பார்த்தலே
பயணத்தின் சாரமாகிறது...
- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5788)
தனியாத வேட்கை
எந்த ஒரு நாடகத்தையும்
நம் விருப்பப்படிதான்
நடத்துகிறோமென
நாம் எல்லோரும்
நினைத்துக்கொள்கிறோம்...
நாடகங்கள் அனைத்தும்
தங்கள் விருப்பப்படிதான்
நம்மை இயக்குகின்றன
என்பதை
நாடகம் முடியும் தறுவாயிலோ,
முடிந்த பின்னரோ தான்
உணர்ந்து கொள்கிறோம்...
ஆயினும்,
ஓர் நாடகத்தை
நம் விருப்பப்படியே
நடத்திட வேண்டுமென்கிற
தனியாத வேட்கை
நம் அனைவருள்ளும்
பெருந்தீயென எரிந்துகொண்டேதான்
இருக்கிறது...
- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5788)
Monday, 9 July 2012
வேண்டாதவைகளும் வேண்டியவைகளும்
நமக்கு
என்ன வேண்டுமென்பதில்
எப்போதுமே
நமக்கு
குழப்பங்கள் இருக்கிறது...
நமக்கு
வேண்டாதவைகளிலிருந்து
வேண்டியவைகளை
துல்லியமாக இனம் காண
நம்மால்
எப்போதுமே முடிவதில்லை...
ஆனாலும்,
நாம் எல்லோரும்
எப்போதும்
எதையேனும்
வேண்டியபடியேதான் இருக்கிறோம்...
#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5762)
ஓர் மெல்லிய இடைவெளி
கைக்கெட்டும் தொலைவிலேயே
இருந்தாலும்
நம்மில் பலர்
வெகு தொலைவில்
நின்று கொள்கிறார்கள்...
நம் பாதைகளுக்கு
அவர்கள் எட்டாது
நிற்கிறார்கள்...
அவர்களை அண்டுவதான முயற்சிகள்
நமது பயணங்களைத்
தாமதமாக்க கூடுவதாக,
ரத்து செய்யவும் கூடுவதாக
இருக்கிறது...
இங்கு வலுக்கிறது
தவிர்க்க இயலாமல்
ஓர் மெல்லிய இடைவெளி...
#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5762)
Monday, 2 July 2012
அதுவாகவே ஆகி விடுதல்
நாம்
அடைய விரும்பும் எல்லையின்
வெவ்வேறு பரிமாணங்களை
அவதானித்துக் கொண்டே
இருக்கிறோம்...
அப்பரிமாணங்களுக்கு
நம்மை நாமே
தொடர்ந்து
பழக்கப்படுத்திக் கொள்கிறோம்...
நாம்
எதைத் தொடர்ந்து
பழக்கப்படுத்துகிறோமோ
பிற்பாடு
அதுவாகவே ஆகி விடுகிறோம்...
#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5725)
Monday, 25 June 2012
அந்த ஓர் பயணம்
நாம் பாதைகளில்
எட்டி நடந்து,
எம்பிக் குதித்து,
இடறிவிட்டதாய் நடித்து,
தாவிக் குதித்து,
நெளிந்து,
வளைந்து,
எப்படி பயணித்தாலும்
இறுதியில்
யாரையேனும்
முந்திச் செல்லவே
விரும்புகிறோம்...
முந்திச் செல்வதன்
சாத்தியங்களையும்,
வாய்ப்புக்களையும்
தொடர்ந்து விஸ்தரிக்கிறோம்...
நாம்
அடைய விரும்பும்
எல்லைவரை விரிந்துகிடக்கும்
பாதைகள்
தன்னை அடைவதான
யாரோ ஒருவனின்
பயணத்தை எதிர்நோக்கி
சலிக்காமல்
காத்திருப்பைத் தொடர்கின்றன...
அந்த ஓர் பயணத்தை தான்
நாம் பயணிக்கிறோமென
நம்பியபடியே தான்
நாம்
நம் பயணங்களை
எப்போதும் மேற்கொள்கிறோம்...
#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5718)
Monday, 18 June 2012
பிரதானப்படுத்துதல்
நாம் எல்லோரும்
நமது செய்கைகள்
அனைத்திற்கும்
ஏதேனும் ஓர் அர்த்தத்தைக்
கற்பித்துக் கொள்கிறோம்...
அந்த அர்த்தங்கள் அனைத்தும்
மகத்துவம் வாய்ந்தவை என்றும்,
முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும்,
நமக்கு இன்றியமையாதவை என்றும்,
நாம் தொடர்ந்து
வலியுறுத்துகிறோம்...
சமயம் கிடைக்கும்போதெல்லாம்
அதை
நிரூபிக்கவும் முயல்கிறோம்...
இப்படித்தான்
நாம் எல்லோரும்
இயக்கங்களையும்,
அதன் ஆதார உண்மைகளையும்
புறந்தள்ளிவிட்டு
நம்மையே
பிரதானப்படுத்திக் கொள்கிறோம்...
#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5696)
Monday, 11 June 2012
பொருந்துதல், பொறுத்துதல்
நாம் எல்லோரும்
நமக்கு விருப்பமான
ஒன்றுடன்
பொறுத்திக்கொள்ள
தொடர்ந்து முயற்சிக்கையில்,
நம் எல்லோரையும்
ஏதாவதொன்று
தனக்குப் பொறுத்தமாக்கிக்
கொள்கிறது...
அதை நாம்
விரும்பினாலும்,
விரும்பாவிட்டாலும்...
நம்மை,
எதனோடோ
பொருந்திக் கொள்வதற்கும்,
எதுவோ
பொறுத்திக் கொள்வதற்கும்,
இடையேயான
மெல்லியஇடைவெளியில்
நாம் எல்லோரும் , எப்போதும்
உழல்கிறோம்...
#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5681)
Monday, 4 June 2012
உயிர் பிழைத்தலின் நியதிகள்
தானே துளிர்த்து,
தானே வேர் விட்டு,
தானே நீர் உறிஞ்சி,
தானே மண் இறுக்கி,
தானே கிளை பரப்பி
தானே மொக்கு விட்டு,
தானே நிறமூட்டி,
தானே பூ மலர்ந்து,
தானே கனி விட்டு,
இப்படி
எல்லாவற்றிற்கும் தானே
பொறுப்பேற்கிறது சுயம்பு...
இருந்தும்
உயிர் பிழைத்தலின் நியதிகள்
ஏனையதாவரங்களைப் போலத்தான்
சுயம்புகளுக்கும்...
#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5664)
Tuesday, 29 May 2012
பழக்கப்படாத பாதைகளின் சாத்தியங்கள்
நாம்
எல்லோரும்,
எப்போதும்,
எதையேனும்
நோக்கிப் போய்க்கொண்டே
இருக்கிறோம்...
நம் பாதைகள்
நம் புலன்களுக்கு
ஏதோ ஓர் வகையில்
பழக்கப்பட்டவைகளாகவே
இருக்கின்றன...
பழக்கப்படாதபாதைகளில்
செல்லநேர்வது குறித்து
பெரும்பாலும்
நாம்
எண்ணிப்பார்ப்பதே இல்லை...
ஆயினும்
பழக்கப்படாதபாதைகளில்
பயணிப்பதன் சாத்தியங்கள்
நம் பாதைகள் எங்கும்
விரவிக்கிடக்கின்றன...
நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5650)
Monday, 7 May 2012
ஓர் உருவம்
முப்பரிமான உருவங்கள்
கொண்டிருக்கின்றன...
எங்கிருந்து அவற்றை
பார்க்கவேண்டும்
என்கிற இலக்கணம்
தெரிந்திருக்க அவைகள்
நம்மை நிர்பந்திப்பதில்லை...
எங்கிருந்து நோக்கினும்
ஓர் உருவம்
நிச்சயம் தெரிகிறது...
எந்த இடம்
செளகர்யப்படுகிறதோ
அதற்கென ஓர் உருவம்
கொள்கிறது...
- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
நன்றி உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5571)
Monday, 30 April 2012
பூட்டுகளைத் திறக்கும் சாவிகள்
பூட்டுகளை உடைத்தெறியும்
சாவிகளை
எவரும் தேடுவது போல்
தோன்றவில்லை...
பூட்டுகள்
செருகியிருக்கும் சுவர்களைப்
மூர்க்கமாக உடைத்துத்
திறக்கிறார்கள்...
உடைத்த சுவர்களை
பட்டுத் துணி கொண்டு
மறைக்கிறார்கள்...
பூட்டுகளைத் திறக்கும்
சாவிகளைச் செய்யும்
கொல்லனை எவரும்
கண்டுகொள்ளவில்லை...
நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5552)
மிஞ்சும் மெளனம்
புறமுதுகில் பேசுகையிலும்,
வார்த்தைகளைத் தப்பர்த்தம்
கொண்டவன் விலகி நடக்கையிலும்,
நுனிக் கிளையில் அமர்ந்தவன்
அடிக்கிளையை வெட்டுகையிலும்,
வார்த்தைகளை நம்பாதவனின்
விஷமச் சிரிப்புகளிலும்,
இனி விளக்கி
பயனில்லையெனும் போதும்,
எந்த விளக்கமும்
பயனளிக்காதெனும் போதும்
மெளனமே மிஞ்சுகிறது...
நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5552)
Monday, 23 April 2012
தொலையும் வாழ்க்கை
எப்போதும்,
எதை நோக்கியேனும்,
தொடர்ந்தபடியே இருக்கிறோம்...
கடக்க நேரும் எல்லாவற்றிலும்
எங்கேனும் இடையில் நுழைந்து,
எங்காவது இடையில் வெளியேறிவிடுகிறோம்...
இடைப்பட்ட பாதைகளில்
பரிதாபமாய் தொலைகிறது
வாழ்க்கை...
நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5523)
Tuesday, 10 April 2012
ராணி (15.4.2012) வார இதழில் என் கவிதைகள்
15.4.2012 தேதியிட்ட ராணி குடும்ப வாரந்திரியில் நான் எழுதிய 'இனிக்கும் இறப்புகள்' என்ற கவிதையும், 'தாக நிலா' என்ற கவிதையும் பக்கம் 42 ல் வெளியாகியிருக்கிறது. கவிதைகள் வெளியான ராணி வார இதழின் 42 வது பக்கத்தின் பிரதி இங்கே.
இனிக்கும் இறப்புகள்
இந்தத் தேயிலை
என்றோ இறந்திருக்கவேண்டும்...
பசுவின் உதிரத்தில்
கடைசி உயிர்
பாலாகிவிட்டிருக்கவேண்டும்...
கரும்பு தன்னைப்பிழிந்து
சர்க்கரைக்கு தன்
உயிரை அளித்திருக்கவேண்டும்...
உயிரற்ற தேனீர்
எத்தனை இனிக்கிறது?...
தாகம்
அகண்ட மதிலின் மடியில்
சிறு குட்டையென
தேங்கிக்கிடந்த நீரில்
தாகம் தணித்துக்கொண்டிருந்தது
உச்சி வெய்யில்...
ஒரு சிட்டுக்குருவி,
ஒரு துறுதுறு அணில்,
ஒரு சிறிய மியாவ்
என பகிர்ந்துகொண்ட நீரை
பொழுது சாய்ந்தும் வெய்யில்
விடுவதாயில்லை...
நடுநிசியில்
ஒர் இனம்புரியா கண்விழிப்பில்
வெய்யிலை விரட்டிவிட்டு
தாகம் தணித்துக்கொண்டிருந்தது
பால் நிலா ...
- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
நன்றி
ராணி (15.4.2012) குடும்ப வார இதழ்.
என் கவிதைகளை வெளியிட்ட ராணி வார இதழ் ஆசிரியர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Monday, 26 March 2012
மெல்லிய தீப்பொறி
மெல்லிய தீப்பொறி
எனக்குள் ஒரு அக்கினிப்பொறி
மெல்லக் கனன்று கொண்டிருக்கிறது...
மிகக்கவனமாய் அந்தப் பொறியை
பெருந்தீயென பெருக்க
தொடர்ந்து முயற்சிக்கிறேன்...
அது
சிணுங்குகிறது...
சாய்கிறது...
நீள்கிறது...
குறுகுகிறது...
கண் சிமிட்டுகிறது...
ஆனால் அணையவில்லை...
என்றாவது ஒரு நாள்
அது அணைந்துவிடும் என்றும்
தோன்றவில்லை...
அணைதல் இல்லாத அந்தப் பொறி,
சாகாவரம் பெற்ற அந்தப் பொறி
விசித்திரம் எனப் படுகிறது எனக்கு...
கொஞ்சமென அதன் முனை கிள்ளி
வழியெங்கும் தூவிச் செல்கிறேன்...
இதோ, இப்போது கூட
இந்தக் கவிதையென...
- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5419)

Monday, 19 March 2012
மிகமெல்லிய நூல்
மிகமெல்லிய நூல்
மிக மெல்லிய நூலொன்று
என்னை எனக்கான திசையில்
கவனமாய்ச் செலுத்திக்கொண்டிருக்கிறது...
அதன் நீள அகலங்களை
நான் அறுதியிட்டுக்கொண்டே
இருக்கிறேன்...
அந்த நூலை எப்படியேனும்
அறுத்துவிட எப்போதும் யாரேனும்
முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள்....
அந்த நூல் அறுபடுவது
என்னை நானே கொல்வதுபோல...
அதில் எனக்கு ஒப்புமையில்லை....
மிகவும்
பொறுமையுடனும்,
சகிப்புத்தன்மையுடனும்,
நிதானத்துடனும்,
உறுதியுடனும்,
திடத்துடனும்
அந்த நூலைப் பாதுகாக்கிறேன்....
- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
# நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5402)

Tuesday, 6 March 2012
ராணி (4.3.2012) வார இதழில் என் சிறுகதை
ராணி (4.3.2012) வார இதழில் என் சிறுகதை
4.3.2012 தேதியிட்ட ராணி குடும்ப (வெகுஜன) வாரந்திரியில் நான் எழுதிய சிறுகதை 'அம்மி அம்மா' என்ற தலைப்பில் பக்கம் 40 - 41 ல் வெளியாகியிருக்கிறது. சிறுகதை வெளியான ராணி வார இதழின் 40 - 41 பக்கங்களின் பிரதிகள் இங்கே.
அம்மி அம்மா - சிறுகதை
'என்ன காரணம்னாச்சும் சொல்லுங்கப்பா?' அழுகையும், ஆத்திரமும் உள்ளுக்குள் மண்டிக்கிடக்க வெடித்தாள் ராகினி.
'காரணம்லாம் சொல்லிகிட்ருக்க முடியாது ராகினி. படிச்சிட்டோம்னு கொழுப்பா உனக்கு? இல்ல நாலு காசு சம்பாதிக்கிறோம்னு திமிரா? உன்ன வேலைபாக்க விட்டது தப்பாபோச்சி. படிச்சகையோட எவன்கிட்டயாச்சும் புடிச்சு குடுத்திருக்கனும்' கோபத்தில் பதிலுக்கு உருமினார் மனோகரன்.
'அப்பா, இப்ப என்னப்பா நான் தப்பா கேட்டுட்டேன். ஒருத்தர லவ்பண்றேன்னு சொன்னேன். கட்டிவையுங்கன்னு கேக்குறேன். அதுக்கு ஏன்பா திமிரு, அது இதுன்னு பேசறீங்க?' உடைந்து போயிருந்த அவளின் குரல் இயலாமையின் விரக்தி சூழ மேலும் தழுதழுத்தது.
'ஆமா, இது திமிரு இல்லாம என்னவாம்? நம்ம சாதிப் பையனா இருந்தாலும் பரவால்ல. எவனோ புள்ளைமாராம். காதலிக்கிறேன்னு நீ சொன்னா உடனே நான் கட்டிவைக்கணுமா? காதல் பண்ணத்தான் உன்ன வேலைக்கு அனுப்பினேனா? அம்மா இல்லாத பொண்ணாச்சேன்னு செல்லம் குடுத்தா தலைக்குமேல போறியே நீ. இன்னும் ஒரு வார்த்தை பேசாத ராகினி. வயசானவன் நான். அம்மா மட்டும்தான் உனக்கு இப்ப இல்ல. அப்பாவும் இல்லாம அனாதையாயிடாத, போ உள்ள'. கோபத்தின் உச்சத்தில் எழுந்து நின்று கத்தினார் மனோகரன். அவரின் குரல் அந்த வீட்டின் நாற்புறமும் எதிரொலித்தது. அவர் முகம் உஷ்ணம் கூட்டி வியர்த்திருந்தது. அறுபது வருடங்கள் அவருடனே பயணித்த விரல்கள் அவரையும் மீறி நடுங்கின.
அவர் இத்தனை ஆத்திரமாய் அவளிடம் குரல் உயர்த்தி அதுவரை கத்தியிருக்கவில்லை. அவரின் அத்தனை பெரிய கோபத்தின் முதல் ஸ்பரிசம் அவளுக்கு அதிர்ச்சியளித்திருக்கவேண்டும். அதற்கு மேல் ஏதும் பேச இயலாதவளாய், பொங்கி வந்த அழுகையை அடக்க முயன்றவளாய் உள்ளங்கையில் அழுத்திய துப்பட்டாவினால் வாயை மூடியபடி உள்ளே பக்கவாட்டிலிருந்த தன் அறைக்குள் அடைந்தாள் ராகினி. அவளின் விசும்பல் சப்தங்கள் வெகு நேரம் அவரின் காதுகளில் கேட்டுக்கொண்டிருந்தது.
மனோகரன், மணி பார்த்தார், மணி இரவு 12 தாண்டியிருந்தது. எப்போது இத்தனை நேரங்கடந்தது என்பதாய்த் தோன்றியது அவருக்கு. ராகினியுடனான 25 வருட அப்பா மகள் உறவில் இத்தனை கடுமையாய், ஆக்ரோஷமாய், துவேஷமாய் நடந்துகொண்டதில்லை. முதல்தடவை அப்படி நடந்திருப்பதுதான் தன்னையுமறியாமல் நேரங்கடந்துபோகக் காரணமென்று நினைத்துக்கொண்டார். இரண்டடி எட்டிவைத்து சோர்வாய் விளக்கை அணைத்துவிட்டு தளர்வாய் அந்த சோபாவில் விழுந்தார் மனோகரன்.அந்த அடர்ந்த இரவில் தூரத்தில் எங்கோ குலைக்கும் நாயின் கதரலோடு, கரக் கரகென்று எதனோடோ ஏதோ உரசும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது.
மனோகரன் இடது மணிக்கட்டை, ஜன்னலோர நிலாவொளி நோக்கித் திருப்பி மணி பார்த்தார். மணி நடுநிசி ஒன்று காட்டியது. ராகினி விசும்பும் சத்தம் இப்போது கேட்கவில்லை என்பது சற்று நிம்மதியளித்தது. அழுது அழுது தூங்கியிருக்கலாமென்று நினைத்துக்கொண்டார். இப்போது அந்த கரக் கரக் சப்தம் முன்னைவிடவும் அதிகம் கேட்பது போலிருந்தது.அதே கரக் கரகென்று எதனோடோ ஏதோ உரசும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தார் மனோகரன். இருள் கிடைத்தவற்றையெல்லாம் கவ்விக்கொண்டிருந்தது. மனோகரன் மெல்ல எழுந்து பக்கவாட்டிலிருந்த ஜன்னலருகே சென்று பார்த்தார். அந்த சப்தம் இன்னும் தெளிவாய்க் கேட்டது. சுற்றிலும் எந்த வீட்டிலும் விளக்கெரியவில்லை. நிசப்தம் எங்கும் சூழ்ந்திருக்க அந்த சப்தம் அவர் வீட்டின் கொள்ளைப்புரத்திலிருந்து வருவது போலிருந்தது.
மனோகரனின் வீடு அவரின் தந்தை கட்டியது. தனி வீடு. தரைதளம் மட்டுமே. இரண்டு படுக்கையறை கொண்ட வீடு. பின்னால் கொல்லை. முதலில் வரும் ஹாலைத்தொடர்ந்து, பக்கவாட்டில் இரண்டு அறைகள், ஹாலை அடுத்து சமையலறை. ஹால், அறைகள், சமையற்கட்டு, கொல்லை என எல்லாமும் மரக்கதவால் தடுக்கப்பட்டு, திரைச்சீலையிட்டு கதவுகள் மறைக்கப்பட்டிருக்கும். வீட்டில் ஹாலில் இருந்ததெல்லாம் மரத்தாலான மேஜை, டிவி ஸ்டாண்டு, குஷன் சோபா, பவர் ஹவுஸ் என எதுவுமே இரும்பால் ஆனது அல்ல. உள்ளறையில் பீரோ, கட்டில், டிரஸ்ஸிங் டேபிள், கம்ப்யூட்டர் டேபிள் என எல்லாமும் மரத்தாலானதுதான். கொல்லை பெரிதென்று கிடையாது. நான்கைந்து பூச்செடிகளும், ஒரேயொரு கொய்யா மரமும், ஒரு துளசி மாடமும் இருக்கும். கொல்லையை ஒட்டி சமையல் அறை. மனோகரனின் மனைவி வள்ளி உயிருடன் இருந்த காலம் வரை முழுப்பராமரிப்பும் அவளுடையது. பண்பானவள். அதிகாலை ஐந்து மணிக்கே குளித்துவிடுவாள். புடவை சுற்றி முந்தினம் தோட்டத்தில் பூத்த பூக்களைச் சேகரித்துக் கட்டிய பூச்சரத்தை கூந்தலிலிட்டு பயபக்தியுடன் துளசி மாடம் சுற்றி, சுலோகம் சொல்லி, அப்பபா ஒரு பண்பான குடும்பத்துப் பெண்ணாக அந்தக் கொல்லை அவளின் இறைத்தழுவலில் திளைத்துக்கிடக்கும். அவள் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டிருந்தது. சமையற்கட்டின் கொல்லைப்புற ஓரத்தில் உட்கார்ந்தவாக்கில் அப்படியே இறந்திருந்தாள். அதிகாலை ஆறு மணிக்கு மனோகரன் விழித்தெழுந்தபோது அவள் அப்படித்தான் கிடந்தாள்.என்ன காரணமென்று தெரியவில்லை. உடல் சில்லிட்டிருந்தது.அவள் இறந்துவிட்டிருந்தாள். 25 வருட தாம்பத்திய வாழ்க்கையில் அவள் எந்த ஒரு சமயத்திலும் அதண்டு இருந்ததேயில்லை. எதையும் ஆசைப்பட்டுக் கேட்டதில்லை. சண்டைபோட்டுக் கோபித்துக்கொண்டதில்லை. பொய்க்கோபங்கள் இல்லை. மனோகரன் அலுவலகம் விட்டு வீடு வர மாலை நேரக்காத்திருப்புக்கள் கூட இருந்ததில்லை. எப்போதும் கோயில், பூஜை, புனஸ்காரம், விரதம், நெய் விளக்கேற்றுதல், கோயில் திருக்கல்யாணம், பிரதோஷம் என ஏதாவது ஒன்றில் ஈடுபட்டிருப்பாள். தானுண்டு தன் வேலையுண்டு என் இருப்பாள். தன் வழியில் செல்லும் நத்தை போல அவள். எதற்கும் ஒரு புன்னகை மட்டுமே. அதிகம் போனால் அதுவே சிரிப்பாக மலரும். அவ்வளவே. ஆனால், திருமண வாழ்வின் முக்காலே மூணுவீச காலம் அடுப்பங்கறையிலேயே கழித்தவள். மீதம் பூஜையறையில்.
மனோகரன் சற்று சுதாரிப்பானார். திருட்டு மிகுத்த சென்னைப் பட்டினம் அவரை எச்சரிக்கையுணர்வு கொள்ள வைத்தது. சப்தம் கொல்லையிலிருந்து தான் வந்தது. ஒருவேளை ஏதேனும் திருட்டாக இருக்குமோ. ராகினியின் நகைகளாக ஒரு ஐம்பது சவரம் வீட்டில் இருந்தது வயிற்றைப் பிசைந்தது. மெல்ல நகர்ந்து அவர் சமையலறை திரைச்சீலையை விலக்கி பார்க்கக் கதவு திறந்திருந்தது. அவர் மேலும் எட்டிப் பார்க்க அங்கே நிழலாடுவது தெரிந்தது. மனோகரன் கண்களைச் சுருக்கிப் பார்க்க, கால்களை மடித்து பக்கவாட்டில் சாய்த்தவாறே அடுப்பங்கறை சுவற்றில் சாய்ந்தபடி ராகினி கொல்லைப்புறத்தை வெறித்துக்கொண்டிருந்தாள். கொல்லைக் கதவு லேசாக திறந்திருக்க, வெளியே மங்கிய நிலவொளியில் அம்மிக்கல் காய்ந்துகிடந்தது. அந்த கரக் கரக் சப்தம் மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.
மெல்ல மனோகரன் சமையற்கட்டினுள் நுழைந்து ராகினியின் அருகில் சென்றார். அத்தனை பக்கத்தில் நின்றும் மனோகரனில் இருப்பை உணராதவளாய் ராகினி கொல்லையையே வெறித்துக்கொண்டிருந்தது மனோகரனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.
'ம்மா!'.
'......'.
'ம்மா!'.
'ம்ம்.. என்னப்பா?'.
'என்னடா பண்ற இங்க?'.
'ஆங்.. ப்பா.. அந்த சத்தம்!..அது..'.
'ம்ம்.. தெரியலமா.. அக்கம்பக்கத்து வீடுங்களா இருக்கும்மா.. நீ போயி படுத்துக்கோம்மா'.
'உங்களுக்கு அது கேக்குதாப்பா?'
'கேக்குதும்மா... யாராவது தூக்கம் வராம மராமத்துவேலை பண்றாங்களா இருக்கும்மா.. காலைல பாத்துக்கலாம் யாருன்னு. நீ போயி படும்மா'.
'இல்லப்பா... அம்மா!'.
'என்னம்மா?'
'அம்மா பா.. அம்மா.. உங்ககிட்ட ஏதோ சொல்ல வராங்கபா' என்றபடி ராகினி கொல்லையை ஒட்டி இருந்த அந்த அம்மிக்கல்லையே வெறித்துக்கொண்டிருந்தது மனோகரனுக்கு தூக்கிவாறிப்போட்டது போலிருந்தது.
மனோகரன் அப்போதுதான் கவனித்தார். அந்த சப்தம், அம்மியை கல்லில் எதையோ இட்டு அரைப்பதான ஒலியை ஒத்து இருந்தது. வள்ளி எப்போதும் இங்குதானிருப்பாள். வீட்டில் மிக்ஸி இருந்தாலும் அவள் இங்குதான் தேங்காய் சட்னி, கார சட்னியெல்லாம் அரைப்பாள். சில நேரங்களில் அரைக்க ஏதுமில்லையென்றாலும் எதையாவது வைத்து அரைத்துக்கொண்டிருப்பாள். கேட்டால் ரெஸிப்பி அது இது என்பாள். அவருக்கு சட்டென ஏதோ அமானுஷ்யமாய் இருப்பது போலப்பட்டது. அவருக்கு நினைவு தெரிந்து, ஒரு வாரம் முன்பு கூட அப்படி அவர் அங்கே அந்த அர்த்த ராத்திரியில் தண்ணீர் குடிக்க வந்தார். ஆனால் அப்போது அப்படி ஏதும் கேட்கவில்லை. இப்போது கொல்லைக் கதவு திறந்திருக்கிறது. அம்மிக்கல் அப்படியே இருக்கிறது. ஆனால், அதில் எதையோ அரைப்பதான ஒலி மட்டும் நிற்கவேயில்லை. அது எப்படி.
கிட்ட நெருங்கி எட்டி கொல்லையில் சுற்றுமுற்றும் பார்த்தார். சத்தியமாக யாருமில்லை. அரவமுமில்லை. ஆனால் சப்தம் மட்டும் நிற்கவில்லை.
'அம்மாவா?' மனோகரன் தன்னிச்சையாய் குழப்பத்துடன் இழுக்க,
'ஆமாப்பா, அம்மாதான்பா அது. பாவம்பா அம்மா.'
'என்னடா சொல்ற? எப்படிடா?'.
'நீங்கதான்பா, நீங்களும்தான்பா'.
'நானா? நான் என்னடா செஞ்சேன்?'
'அம்மா காதலிச்சாங்களே பா. உங்க கல்யாணத்துக்கு முன்னால. அவரு நாயக்கருன்னு அம்மாவோட அப்பா அவருக்குக் கட்டிக்குடுக்காம உங்களுக்கு குடுத்தாரு. கல்யாணத்துக்கு முன்னாடியே உங்ககிட்ட அவரபத்தி அம்மா சொன்னாங்களாமேபா. நீங்களும் நம்ம ஜாதிப்பொண்ணு இன்னொரு ஜாதிக்குப் போய்டக்கூடாதுன்னு அம்மாவ வலுக்கட்டாயமா கட்டிக்கிட்டீங்களாமேபா. அம்மா அப்போவே மனசளவுல செத்துட்டாங்கப்பா. எனக்கு மஞ்சள் நீராட்டுவிழா அன்னிக்கு யாரோ திருட்டுத்தனமா பந்திக்கு வந்துட்டதா சொல்லி ஒருத்தர அடிச்சீங்களேபா. அவருதான்ப்பா அம்மாவ காதலிச்சவர். அம்மா கிடைக்காததுனால, யாரையுமே அவரு கல்யாணம் முடிக்கலபா. அவர் வீடு இந்தக் கொல்லைலேர்ந்து பாத்தா தெரியும்பா. அம்மாவ மறக்க முடியாம, அம்மாவொட நினைவுலயே இருந்தாராம்பா. உடம்பாலயும், மனசாலயும் அம்மா உங்களோட வாழ்ந்தாலும், தன்னால அவரோட வாழ்க்கை நாசமாயிட்டதா அம்மா அவர் மேல ரொம்ப பரிதாபப்பட்டாப்பா. அந்த பரிதாபத்துக்கு வடிகால் கிடைக்கவேயில்ல அவங்களுக்கு. பாத்துக்க சொந்தங்கள் ஏதும் இல்லாம, அம்மாவ மறக்க குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி போன வருஷந்தான்ப்பா அவரு செத்தாரு. அந்த துக்கமோ என்னமோ அம்மாவும் செத்துட்டாங்கபா'. சொல்லிவிட்டு நிறுத்தினாள் ராகினி. அவள் இப்போதும் அந்த அம்மியையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த சப்தம் இப்போதும் தெளிவாகக் கேட்டுக்கொண்டே இருந்தது.
'இதெல்லாம் உனக்கெப்படிம்மா தெரியும்?'.
'அம்மாதான்ப்பா. தோளுக்கு மேல வளந்துட்டா தோழன்னு சொல்வாங்க. ஆனா, அம்மாவுக்கு பொண்ணு தோளுக்கு மேல வளரணும்னு கூட இல்லப்பா. அம்மா ஒரு தோழியா என்கிட்ட எல்லாமே சொல்லியிருக்காங்க. அம்மா செத்துப்போனதுக்கப்புறம் கூட இந்த ஒரு வருஷமா அவுங்ககிட்ட என் காதலைப் பத்தி பேசிட்டுதான்ப்பா இருக்கேன். இப்படித்தான் அவுங்க கேட்டுக்கிட்டிருக்காங்க'.
மனோகரன் காதுக்கு அந்த சப்தம் இன்னும் துல்லியமாகக் கேட்டுக்கொண்டே இருந்தது.
ராகினி சொன்ன ஒவ்வொரு விஷயமும் மனோகரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. திருமணத்துக்குமுன் வள்ளி தன் காதலைப் பற்றி சொன்னாள்தான். ஆனால், அப்போதிருந்த ஜாதிபுத்தி அவள் சொன்னதை உதாசீனப்படுத்தமட்டுமே தூண்டியது. அவள் காதலித்தவன் யாரென்று கூடப் பார்க்காமல் வள்ளியின் அப்பா கேட்டுக்கொண்டதன் பேரில் வள்ளியை உடனடியாகத் திருமணம் செய்துகொண்டார் மனோகரன். அதன்பின் வந்த நாட்களில் வள்ளி ஒரு பெண் குழந்தைக்கு தாயானதும், சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டதாய்தான் தோன்றியது. வள்ளியிடம் ஏதொரு பெரிய மாற்றமும் இருக்கவில்லை. ஆதலால், அந்தப்பிரச்சனையை அதோடு முடிந்துவிட்டதென்று மறந்தும் போனார்.
ராகினியின் பூப்பு நீராட்டுவிழா இன்றும் நினைவிருக்கிறது. ஊரிலேயே பெரிய மஹால் புக் செய்து, ஐந்நூறு பேருக்கு சமைத்துபோட்டு, பந்தி பந்தியாய் இனிப்பு பரிமாறி, கட்டவுட் வைத்து, போஸ்டர் ஒட்டி கொண்டாடிய விழாவில், வண்ண ஓவியத்தில் ஒரு கரும்புள்ளியாய்த் தான் நினைத்திருந்தார் திருட்டுத்தனமாய் வேற்று ஜாதிப்பயல் பந்தி நடக்கும் இடத்தருகே பிடிபட்டதில். ஆனால், அவந்தான் வள்ளியின் முன்னால் காதலனென்று அப்போது அவருக்கு தெரியாது. இப்போது புரிகிறது. தான் தகப்பனாக இல்லாவிட்டாலும், தான் மனமார காதலித்தவளின் பெண்ணைத் தன் பெண்ணாய் பாவித்து வந்திருந்தவனை அடித்து விரட்டி அவமானப்படுத்தியபோது வள்ளியின் இதயம் எத்தனை வலித்திருக்கும். இப்போது புரிந்தது, ஏதேனும் ஒரு காரணம் சொல்லி வள்ளி ஏன் எப்போதும் இந்த அம்மிக்கல் கொல்லையிலேயே தவம் கிடந்தாளென்று.
மனோகரனுக்கு வெகு தாமதாய், வள்ளியின் பல செய்கைகளுக்கு இப்போதுதான் காரணம் புரிந்தது. திருமணத்தில் இன்னொரு பெண்ணை தன்னிடத்தில் நிறுத்த முடியாமல் தனக்காகவே மணமுடிக்காமல் திரிந்தவன் வாழ்க்கை வீணாய்போவதை எண்ணியெண்ணி அவள் மனம் வெதும்பித்தான் தன்னுடனான திருமண வாழ்வில் மனம் ஒன்ற முடியாமல் ஆர்வமில்லாமல் இருந்திருக்கிறாள். நாளோ, கிழமையோ எதுவானாலும் அவளுக்கு எல்லாமும் ஒன்றாய்த்தான் இருந்ததன் காரணம் பொய்யாகிப்போன அவளின் காதல். உள்ளத்தால் பிணமாகிவிட்டவளால் தான் அப்படி இருந்திருக்கமுடியும். அவள் இயல்பாய்த்தான் இருக்கிறாள் என்ற தன் அனுமானம்தான் தவறாகியிருக்கிறதென்று தோன்றியது அவருக்கு.
அவளுக்கு அவன் மேல் பரிதாபம் இருந்திருக்கிறது. தனக்குக் குடும்பம் அமைந்ததுபோல் அவனுக்கும் அமையாமல், தனிமரமாகிவிட்டானென்பதில் தோன்றியதில் பச்சாதாபம் இருந்திருக்கிறது. மனிதன் ஆறறிவு படைத்தவன். சிந்திக்கும் திறனுள்ளவன். பகுத்தறியமுடியும் அவனால். ஆனாலும், மனிதனை சமூகம் என்னும் கட்டுக்குள் கொண்டுவருவது மனிதனுக்கு மனிதன் உணர்ச்சிகளுக்குண்டான மதிப்பளிப்பதில்தான். அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அண்ணி, மாமன், மச்சான் என எல்லா உறவுகளும் உணர்ச்சிகளை முறையாக்குவதில்தான் தொடங்கியிருக்கிறது. அக்கா விரும்பியவனுக்கு கட்டிக்கொடுத்தால் அவன் மாமாவாகிறான். மாமனின் பெண் முறைப்பெண் ஆகிறாள். இப்படித்தான் உறவுகள் உருவாகின்றன. அதுதான் சமூகத்தை உருவாக்குகின்றன. அது இல்லையெனில் நாய்களைப் போல் என்றோ அடித்துக்கொண்டு அழிந்துபோயிருக்கும் மனித இனம். ஆனால், ஜாதி என்கிற பெயரில் மனிதனுக்கு மனிதன் தோள் கொடுத்துக்கொள்ளவேண்டிய உணர்ச்சிகளை காலில் போட்டு மிதித்திருக்கிறோமென்று புரிந்தது. முறைப்படுத்தப்பட வேண்டிய உணர்ச்சிகள் சாகடிக்கப்பட்டால் மனிதனே உயிருடன் இருந்தாலும் பிணமாகிவிடுகிறான். வாழ்க்கை அர்த்தப்படுவதில்லை. முடமாகிவிடுகிறது. அப்படிப்பார்த்தால் ஜாதி எதன் அடையாளம்? உணர்ச்சிக்கொலையின் அடையாளம். பிணமாக்குதலுக்கு மறுபெயர். பிணந்தின்னிகளின் பசி.
'நீ சொல்றதெல்லாம் உண்மையாம்மா?'.
'ஆமாப்பா'.
'உனக்கெப்படிம்மா தெரியும் இதெல்லாம்?'.
'அம்மா என்கிட்ட சொல்லியிருக்காப்பா. உண்மையான காதலுக்கு மட்டும்தான்ப்பா அந்த சக்தி இருக்கு. இல்லன்னா அம்மாவுக்கு சாகுற வயசாப்பா. அம்மாவோடது உண்மையான காதல்ப்பா. அவுங்க காதல் ஜெயிச்சிருக்குப்பா. அதனாலதான் அம்மாவும் காரணமேயில்லாம செத்திருக்கா. அந்தப் பரிதாபம், பரிவு இதெல்லாம் அந்த உண்மையான காதலோடதுப்பா. அதுக்காகத்தான் அம்மா உயிர் போயிருக்கு. என் காதலும் உண்மைதானப்பா. அதுவும் ஒரு நாள் இல்ல ஒரு நாள் கண்டிப்பா ஜெயிக்கும்ப்பா' சொல்லிவிட்டு நிறுத்தினாள் ராகினி. அவள் பார்வை இப்போதும் அந்த அம்மிக்கல்லின் மீதே நிலைகுத்தியிருந்தது.
'வேணாம்மா. இந்த முறை உங்க அம்மா ஜெயிக்கட்டும்மா' மனோகரன் மகளின் தலையை கோதிவிட்டவாறே, கொல்லையில் அதே அம்மிக்கல்லை பார்த்துக்கொண்டிருக்க, ராகினி சட்டென மனோகரன் பக்கம் திரும்பினாள்.
'என்னப்பா சொன்னீங்க?'.
'உங்க அம்மா ஜெயிக்கட்டும்மா. நீ காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிக்கோம்மா' என்ற மனோகரனின் கண்கள் கலங்கியிருந்தன. அதுவரை கேட்டுக்கொண்டிருந்த சப்தம் சட்டென நின்றுபோனது.
முற்றும்.
- ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)
நன்றி
ராணி (4.3.2012) குடும்ப வார இதழ்.
என் சிறுகதையை வெளியிட்ட ராணி வார இதழ் ஆசிரியர்களுக்கும், இதழுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Tuesday, 21 February 2012
எங்குமானவைகள்
எங்குமானவைகள்
மணிக்கணக்கில்
பேசிக்கொண்டிருந்த பொழுதெல்லாம்
எவரின் கருவிழிகளை அன்றியும்
வேறொன்றையும் கவனித்ததாக
நினைவில்லை...
இருந்தும்
எந்தக் கருவிழிகளும்
என் நினைவில் தங்க
மறுக்கின்றன...
-ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)
நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5301)

Monday, 6 February 2012
இறுகப்பற்றியிருக்கிறேன்
இறுகப்பற்றியிருக்கிறேன்
கட்டாயங்கள் என்று
ஏதுமில்லை...
நிர்பந்தங்கள் என்று
ஏதுமில்லை...
சூழ்நிலைகள் என்று கூட
இல்லை...
இருந்தும் இருகப்
பற்றியிருக்கிறேன்...
ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)
#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5261)

Saturday, 14 January 2012
பிழைச்சமூகம்
பிழைச்சமூகம்
மண்ணைப் பிழிந்து
நீரை உரிஞ்சுகின்றன
ஆலமரத்தின் வேர்கள்...
தனக்கான நீரின்றி
துவள்கிறது அருகிலேயே
செவ்வாழையொன்று...
குடியோன் பசிக்கு
நிழலை அள்ளியள்ளித்
தந்துவிட்டு கைபிசைந்து
நிற்கிறது ஆலமரம்...
- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
#நன்றி
வடக்குவாசல் கலை இலக்கிய இதழ் (டிசம்பர் 2011)

Subscribe to:
Posts (Atom)