15.4.2012 தேதியிட்ட ராணி குடும்ப வாரந்திரியில் நான் எழுதிய 'இனிக்கும் இறப்புகள்' என்ற கவிதையும், 'தாக நிலா' என்ற கவிதையும் பக்கம் 42 ல் வெளியாகியிருக்கிறது. கவிதைகள் வெளியான ராணி வார இதழின் 42 வது பக்கத்தின் பிரதி இங்கே.
இனிக்கும் இறப்புகள்
இந்தத் தேயிலை
என்றோ இறந்திருக்கவேண்டும்...
பசுவின் உதிரத்தில்
கடைசி உயிர்
பாலாகிவிட்டிருக்கவேண்டும்...
கரும்பு தன்னைப்பிழிந்து
சர்க்கரைக்கு தன்
உயிரை அளித்திருக்கவேண்டும்...
உயிரற்ற தேனீர்
எத்தனை இனிக்கிறது?...
தாகம்
அகண்ட மதிலின் மடியில்
சிறு குட்டையென
தேங்கிக்கிடந்த நீரில்
தாகம் தணித்துக்கொண்டிருந்தது
உச்சி வெய்யில்...
ஒரு சிட்டுக்குருவி,
ஒரு துறுதுறு அணில்,
ஒரு சிறிய மியாவ்
என பகிர்ந்துகொண்ட நீரை
பொழுது சாய்ந்தும் வெய்யில்
விடுவதாயில்லை...
நடுநிசியில்
ஒர் இனம்புரியா கண்விழிப்பில்
வெய்யிலை விரட்டிவிட்டு
தாகம் தணித்துக்கொண்டிருந்தது
பால் நிலா ...
- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
நன்றி
ராணி (15.4.2012) குடும்ப வார இதழ்.
என் கவிதைகளை வெளியிட்ட ராணி வார இதழ் ஆசிரியர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.