I am more likely to do a sequel of this one.
Monday, 24 June 2024
Tuesday, 18 June 2024
பூனையற்ற புன்னகை - சிறுகதை
வாசகசாலையின் 96வது இதழில் எனது அறிபுனைச் சிறுகதை 'பூனையற்ற புன்னகை' வெளியாகியிருக்கிறது.
வாசகசாலை இதழ் ஆசிரியர் குழுவுக்கு நன்றிகள். வாசக நண்பர்கள் சிறுகதையை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்..
சிறுகதையை வாசகசாலை இதழில் வாசிக்க, பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.
https://vasagasalai.com/poonaiyatra-punngai-sirukathai-ram-prasath-vasagasalai-96/
Sunday, 16 June 2024
அப்பா!!
சிறிய வயதில் பாடம் சொல்லிக்கொடுப்பதெல்லாம் அப்பா தான். நன்றாகப் படிப்பேன் என்பதால் வெகு சீக்கிரமே அப்பாவின் கண்டிப்புகளிலிருந்தெல்லாம் விடுபட்டிருந்தேன். ஒரு கட்டத்தில், நான் என்ன படிக்கிறேன், எப்படி படிக்கிறேன் என்பதையெல்லாம் கேட்பதைக் கூட விட்டுவிட்டார் அப்பா. முதல் மூன்று ராங்க்களில் வந்துவிடுவேன். எதற்குமே அவர் என் பள்ளிக்கு வந்ததே இல்லை. ஆதலால் என் அப்பாவின் கவனம் முழுவதும் என் அண்ணன், மற்றும் தங்கையிடம் திரும்பிவிட்டது.
நான் எல்லாம் பிறக்கும் முன் அப்பாவுக்குப் புகைக்கும் பழக்கம் இருந்ததாகவும் நாங்கள் பிறந்துவிட்டபிறகு பிள்ளைகள் தன்னைப் பார்த்துக் கற்றுக்கொள்ளக்கூடாது என்று எண்ணி, புகைப்பழக்கத்தைக் கைவிட்டதாகவும் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். மற்றபடி, அப்பா புகைத்து நான் பார்த்ததே இல்லை.
பத்தாவது படிக்கையிலேயே உடற்பயிற்சியை அறிமுகப்படுத்தியது அப்பா தான். தண்டால், பஸ்கி என்று அவர் கற்றுக்கொடுத்ததில் துவங்கியதை, லோக்கல் ஜிம், பிறகு வேலை பார்க்கும் நிறுவனங்களின் ஜிம் என்று நான் விவரித்துக்கொண்டேன். அது இப்போதும் தொடர்கிறது. யோசித்துப் பார்த்தால், அஸ்திவாரம் அப்பா தான்.
அப்பா, சிவில் எஞ்ஜினியர். தமிழக அரசின் பி.டபில்யூ.டீயில் தான் பணி ஓய்வு வரை உத்தியோகம். எம்.இ. அண்ணா பல்கலையில் படித்தவர். அதனால் பொறியியல் படிக்க அப்பா ஒரு இன்ஸ்பிரேஷன் எனலாம். மற்றபடி கம்ப்யூட்டர் சயின்ஸில் பொறியியல் சேர்ந்தபோதுதான் தன் பிடிமானம் என்று என்னிடம் எதுவும் இல்லை என்பதை அப்பா உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் எதுவும் சொல்லவில்லை. நானும் அவருக்குப் பெரிதாக வேலை வைக்கவில்லை. பொறியியல் முடிந்ததும் ஒரு ப்ராடக்ட் கம்பெனியில் ஜாவா ப்ரோக்ராமர் வேலை கிடைத்தது. அதுகாறும் கவர்மென்ட் குவார்டர்ஸில் குடியிருந்தோம். வேலை கிடைத்தவுடன் வீட்டுக்கடன் பெற்று வீடு கட்டிக் குடியேறினோம். ஐந்து வருடத்தில், வேலை விஷயமாக லண்டன் பயணப்பட்டேன். லண்டனில் இருந்தபோதுதான் அப்பா பணி ஓய்வு பெற்றார்.
அதன் பிறகு, நானும் TCS, CSC, WIPRO, Capgemini என்று பல நிறுவனங்கள் தாவி பிற்பாடு அமெரிக்கா வந்துவிட்டிருந்தேன். எல்லாவற்றிலுமே அவர் ஒரு பார்வையாளனாக மட்டுமே இருந்திருக்கிறார். என் முடிவுகள் எதிலும் அவர் தலையிட்டதே இல்லை. எதிலுமே பிரச்சனை எதுவும் இல்லாமல், அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.
பணிக்காலத்தில் அவர் என்னைத் தனது அலுவலகத்திற்கு பல முறை அழைத்துச் சென்றிருக்கிறார். தன் இருக்கையில் என்னை அமர வைத்து அழகு பார்த்திருக்கிறார். நினைவு வரும்போதெல்லாம் அதற்குச் சமமாக எதையேனும் செய்ய வேண்டும் என்ற பிரயாசை எப்பொதுமே இருக்கும். அந்த வகையில், எனது தமிழக அரசு விருதை என் அப்பா பெற்றுக்கொள்ள வைத்தது ஆண்டாண்டுகால காத்திருப்பு, மனதுக்கு நெருக்கமான, அர்த்தங்கள் பொதிந்த நிகழ்வு எனலாம்.
தந்தையர் தினத்தில் நினைவு கூற இது சொற்ப்பமே. அப்பா என்றைக்குமே அப்பா தான்.
Friday, 7 June 2024
Ramprasath - Author Bio
Monday, 3 June 2024
வலைதமிழ் அமெரிக்க தமிழ் எழுத்தாளர் - குறிப்பு
ஆசிரியர் குறிப்பு:
ராம்பிரசாத் , தமிழக அரசின் விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். கணிணியில் பொறியியல் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முது நிலைப் பட்டமும் பெற்றவர்.
மயிலாடுதுறையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் 2014லிருந்து கணிணி மென்பொருள் துறையில் அமெரிக்காவில் பணியில் இருக்கிறார். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் புனைவுகள் எழுதி வருகிறார். தமிழ் இலக்கிய உலகில் கணிதப்புனைவுகள், அறிவியல் புனைவுகளுக்காக அறியப்படுபவர். 2009லிருந்து தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கிறார்.
தமிழில் ஆனந்த விகடன், கணையாழி, குமுதம், குங்குமம், ராணி, ராணிமுத்து, பாக்யா, தேவியின் கண்மணி ஆகிய அச்சு இதழ்களில் இவரது கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஆங்கிலத்தில் L. Ron Hubbard Writer's of the Future Contest 2024, Aphelion SF&F, Metastellar, Alternate Reality, Allegory SF&F, Literary Yard, Readomania, Boston Literary Magazine, Madswirl, QuailBell Magazine, ஆகிய தளங்களில் இவரது சிறுகதைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
தமிழ்/இந்திய விருதுகள்/அங்கீகாரங்கள்:
1. 2020ல் வெளியான இவரது 'வாவ் சிக்னல்' விஞ்ஞானப் புனைவுச் சிறுகதைகள் தொகுதி நூலுக்கு தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த சிறுகதை நூல் விருது அளித்து கெளரவித்திருக்கிறது.
2. இவரது 'சோஃபியா' சிறுகதை 2022ம் ஆண்டுக்கான ஜீரோ டிகிரி இலக்கிய விருது பெற்றிருக்கிறது,
3. குவிகம் சிறுகதைப் போட்டியில் இவரது 'கண்ணாடிச்சுவர்' சிறுகதை தேர்வாகி தொகுப்பானது.
4. கதிர்ஸ் தமிழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது 'எப்போதும் பெண்' சிறுகதை தேர்வாகி தொகுப்பானது.
5. இவரது 'தழுவு கருவி' சிறுகதை அரூ அறிவியல் புனைவிலக்கிய சிறுகதைப் போட்டியில் தேர்வாகி தொகுப்பானது.
6. இவரது 'சோஃபி' சிறுகதை எஸ்.சங்கர நாராயணன் தொகுத்து வெளியிட்ட 'மாசறு பொன்' சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றது.
7. இவரது சிறுகதை விஸ்வசேது இலக்கிய பாலம் (2011) வெளியிட்ட உலகலாவிய சிறுகதைப் போட்டியில் தேர்வான சிறுகதைகளில் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
8. 2022ம் ஆண்டு இவர் பொறியியல் பயின்ற ஜெரூசலேம் பொறியியல் கல்லூரி இவரது இலக்கிய பணிகளை கருத்தில் கொண்டு 'Distinguished Alumni Award' விருது வழங்கி சிறப்பித்திருக்கிறது.
9. வ.ந.கிரிதரன் நடத்திய பதிவுகள் தளத்தில் வெளியான இவரது இரண்டு சிறுகதைகள், பதிவுகள் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
10. காலாக்ஸி பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது 'போர்' சிறுகதை தேர்வாகி தொகுப்பில் இடம்பெற்றது.
11. மதுரையைச் சேர்ந்த அதிதி தொண்டு நிறுவனம் 2011 குடியரசு தினத்தையொட்டி நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை தேர்வாகியிருக்கிறது.
ஆங்கில/அமெரிக்க விருதுகள்/அங்கீகாரங்கள்:
1. L. Ron Hubbard, Writers of the Future, has honored his work with an 'Honorable Mention.' in its 41st International Writers of the Future Contest 2024.
2. ALLEGORY SF&F magazine has honored his work with an 'Honorable Mention.' in Vol 46/73, 2024.
எழுதிய நூல்கள் (2023 வரை):
ஒப்பனைகள் கலைவதற்கே :-
இது எனது முதல் நூல். 2012ல் நான் எழுதிய நாவல் 'தேவியின் கண்மணி' இதழில் வெளியானது. அந்த நாவலுடன் இன்னுமொரு குறுநாவலையும் சேர்த்து நாவல் தொகுப்பாக வெளியானது தான் 'ஒப்பனைகள் கலைவதற்கே' நாவல் நூல்.
உங்கள் எண் என்ன :-
இது தமிழின் முதல் கணித நாவல் ஆகும். எண்களாலானது பிரபஞ்சம். காலம், பேரண்டம், பெருவெளி என எல்லாமே எண்களாலானது. மனித உறவுகளையும் கூட எண்களும், அவைகளுக்கிடையேயான சமன்பாடுகளும், அவற்றை உள்ளடக்கிய கோட்பாடுகளுமே நிர்ணயிக்கின்றன. பிரபஞ்சத்தையும், பேரண்டத்தையும், காலத்தையும் மானிட உறவுகளோடு இணைத்துப்பார்ப்பதே பேரறிவு என்பதை தீவிரமாக நம்புகிறேன் நான்.
குருட்டுத்தனமாக எதையும் சொல்லிவிட எண்களாலான உலகம் அனுமதிக்காது. சமன்பாடுகள் கேட்கும். காரணங்கள் கேட்கும். அது எப்படி எண்களுடன் பொருந்துகிறது என்று கேட்கும். அதை நிரூபிக்கச்சொல்லும். அதன் விளைவுகளைச் சரிபார்க்கும்.
இந்த நாவலில் மனித உறவுகளை இயக்கும் எண்கள் குறித்தும் அவற்றினிடையே உள்ள சமன்பாடுகள் குறித்தும் அவை உணர்த்தும் கோட்பாடுகள் குறித்தும் எண்கள் வழி பேசியிருக்கிறேன். இவ்வகையான நாவல் கட்டுமானம் மற்றும் எழுத்துமுறை என் சிந்தனை ஓட்டத்துக்கு முற்றிலும் அணுக்கமானது. நான் சிந்தித்ததை அப்படியே வரிமாறாமல் நாவலாக்கியிருக்கிறேன்.
வாவ் சிக்னல்:-
இது ஒரு விஞ்ஞானச் சிறுகதைகள் தொகுப்பு நூல். தமிழக அரசு, 2020ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த சிறுகதை நூலுக்கான விருது வழங்கி கெளரவித்திருக்கிறது.
இவைகளன்றியும் தமிழிலும், ஆங்கிலத்திலும் சுமார் 10 நாவல் நூல்கள் வெளியிட்டிருக்கிறார்.
சொல்வனம், பதாகை, கனலி, வாசகசாலை, உயிர்மை போன்ற இணைய தமிழ் இலக்கிய இதழ்களிலும், ஆனந்த விகடன், கணையாழி போன்ற அச்சு தமிழ் இலக்கிய இதழ்களிலும்
Metastellar, Allegory SF&F, Alternate Reality, L.Ron Hubbard Writer's of the Future 2024, Aphelion Science Fiction & Fantasy, Boston Literary Magazine, Madswirl, Quaillbell, Literary Yard, Readomania ஆகிய இதழ்களில் இவரது ஆங்கில ஆக்கங்களும் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
பங்குபெற்ற தொகுப்புகள் (2023 வரை) :-
1. முகங்கள் - சர்வதேச தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுதி (2011)
2. பதிவுகள் - சிறுகதைத் தொகுதி
3. மாசறு பொன் - சிறுகதைத் தொகுதி (2021)
4. ஜீரோ டிகிரி தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (2022)
5. சோளக்காட்டு பொம்மை - சிறுகதைத் தொகுதி (2023)
6. தோப்பு - சிறுகதைத் தொகுதி (2023)