என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday, 16 June 2024

அப்பா!!

 சிறிய வயதில் பாடம் சொல்லிக்கொடுப்பதெல்லாம் அப்பா தான். நன்றாகப் படிப்பேன் என்பதால் வெகு சீக்கிரமே அப்பாவின் கண்டிப்புகளிலிருந்தெல்லாம் விடுபட்டிருந்தேன். ஒரு கட்டத்தில்,  நான் என்ன படிக்கிறேன், எப்படி படிக்கிறேன் என்பதையெல்லாம் கேட்பதைக் கூட விட்டுவிட்டார் அப்பா. முதல் மூன்று ராங்க்களில் வந்துவிடுவேன். எதற்குமே அவர் என் பள்ளிக்கு வந்ததே இல்லை. ஆதலால் என் அப்பாவின் கவனம் முழுவதும் என் அண்ணன், மற்றும் தங்கையிடம் திரும்பிவிட்டது. 


நான் எல்லாம் பிறக்கும் முன் அப்பாவுக்குப் புகைக்கும் பழக்கம் இருந்ததாகவும் நாங்கள் பிறந்துவிட்டபிறகு பிள்ளைகள் தன்னைப் பார்த்துக் கற்றுக்கொள்ளக்கூடாது என்று எண்ணி, புகைப்பழக்கத்தைக் கைவிட்டதாகவும் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். மற்றபடி, அப்பா புகைத்து நான் பார்த்ததே இல்லை. 


பத்தாவது படிக்கையிலேயே உடற்பயிற்சியை அறிமுகப்படுத்தியது அப்பா தான். தண்டால், பஸ்கி என்று அவர் கற்றுக்கொடுத்ததில் துவங்கியதை, லோக்கல் ஜிம், பிறகு வேலை பார்க்கும் நிறுவனங்களின் ஜிம் என்று நான் விவரித்துக்கொண்டேன். அது இப்போதும் தொடர்கிறது. யோசித்துப் பார்த்தால், அஸ்திவாரம் அப்பா தான். 


அப்பா, சிவில் எஞ்ஜினியர். தமிழக அரசின் பி.டபில்யூ.டீயில் தான் பணி ஓய்வு வரை உத்தியோகம். எம்.இ. அண்ணா பல்கலையில் படித்தவர். அதனால் பொறியியல் படிக்க அப்பா ஒரு இன்ஸ்பிரேஷன் எனலாம். மற்றபடி கம்ப்யூட்டர் சயின்ஸில் பொறியியல் சேர்ந்தபோதுதான் தன் பிடிமானம் என்று என்னிடம் எதுவும் இல்லை என்பதை அப்பா உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் எதுவும் சொல்லவில்லை.  நானும் அவருக்குப் பெரிதாக வேலை வைக்கவில்லை. பொறியியல் முடிந்ததும் ஒரு ப்ராடக்ட் கம்பெனியில் ஜாவா ப்ரோக்ராமர் வேலை கிடைத்தது. அதுகாறும் கவர்மென்ட் குவார்டர்ஸில் குடியிருந்தோம். வேலை கிடைத்தவுடன் வீட்டுக்கடன் பெற்று வீடு கட்டிக் குடியேறினோம். ஐந்து வருடத்தில், வேலை விஷயமாக லண்டன் பயணப்பட்டேன். லண்டனில் இருந்தபோதுதான் அப்பா பணி ஓய்வு பெற்றார். 


அதன் பிறகு, நானும் TCS, CSC, WIPRO, Capgemini என்று பல நிறுவனங்கள் தாவி பிற்பாடு அமெரிக்கா வந்துவிட்டிருந்தேன். எல்லாவற்றிலுமே அவர் ஒரு பார்வையாளனாக மட்டுமே இருந்திருக்கிறார். என் முடிவுகள் எதிலும் அவர் தலையிட்டதே இல்லை. எதிலுமே பிரச்சனை எதுவும் இல்லாமல், அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்தது ஒரு காரணமாக இருக்கலாம். 


பணிக்காலத்தில் அவர் என்னைத் தனது அலுவலகத்திற்கு பல முறை அழைத்துச் சென்றிருக்கிறார். தன் இருக்கையில் என்னை அமர வைத்து அழகு பார்த்திருக்கிறார்.  நினைவு வரும்போதெல்லாம் அதற்குச் சமமாக எதையேனும் செய்ய வேண்டும் என்ற பிரயாசை எப்பொதுமே இருக்கும். அந்த வகையில், எனது தமிழக அரசு விருதை என் அப்பா பெற்றுக்கொள்ள வைத்தது  ஆண்டாண்டுகால காத்திருப்பு, மனதுக்கு நெருக்கமான, அர்த்தங்கள் பொதிந்த நிகழ்வு எனலாம்.  


தந்தையர் தினத்தில் நினைவு கூற இது சொற்ப்பமே. அப்பா என்றைக்குமே அப்பா தான்.