என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday, 16 August 2023

வாசகசாலையின் 78வது இதழில் எனது சில கவிதைகள்

வாசகசாலையின் 78வது இதழில் எனது சில கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. வாசித்துவிட்டுக் கருத்துக்கள் பகிருமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

எனது கவிதைகளைத் தேர்வு செய்த வாசகசாலை ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்.


http://www.vasagasalai.com/ram-prasath-kavithaigal-vasagasalai-78/


குற்ற உணர்வின் ஆலோசனை - கவிதை



மூன்று சென்ட் இடத்தில்

இரண்டு சென்டில் வீடு கட்டினேன்...

எஞ்சிய ஒரு சென்டில்

மரங்கள் நடுமாறு

ஆலோசனை தந்துவிட்டுப் போனது

தன் இரண்டு சென்ட் நிலத்தில்

இம்மியளவும் இடம் மிச்சமில்லாமல்

வீடு கட்டியிருக்கும்

பக்கத்து வீட்டுக் குற்ற உணர்வு..


 - ராம்பிரசாத்


**********************************


குளிர் விரட்டி - கவிதை


குளிர் விரட்டியபடி

தன் ஆயுளை

எண்ணிக்கொண்டிருக்கும்

விறகுக்கட்டை

இறுதித்தருணங்களில்

தனக்குப் பின்

குளிர் விரட்டுவது யாரென

அலைபாய்கிறது

ஒரு தீ கங்கென...


 - ராம்பிரசாத்


*****************************

முனைப்பின் தீவிரம் - கவிதை



இந்த உலகம் இப்படித்தானென

முன்பே தெரிந்திருப்பின்

இந்த உலகுக்கே வராமலொன்றும்

இருந்திருக்கப்போவதில்லை....


கொஞ்சம் தயாராக

வந்திருக்கலாம்..

அவ்வளவுதான்...


 - ராம்பிரசாத்


*****************************


ஹல்க்கின் சாபங்கள் - கவிதை


சூப்பர் மேன் என்றும்,

ஸ்பைடர் மேன் என்றும்,

தாங்கள் நினைத்தது

மலையைப் புரட்டும்,

கண்டங்கள் பாயும்,

ஹல்க்கைத்தான்

என்று தெரிந்துகொள்ள,

சூப்பர் மேன் என நினைத்தவர்களுக்கு

பத்து வருடங்களும்,

ஸ்பைடர் மேன் என நினைத்தவர்களுக்கு

இருபது வருடங்களும்

பிடிக்கலாம்...


இந்தப் பத்து இருபது வருடங்களுக்கு

ஹல்க் என்று கைகாட்டப்படும்

யார் யாரையோ

வறட்சி மிகுந்த புன்னகையுடன்

எட்ட நின்று

ஹல்க் வேடிக்கை பார்க்கையில்

வேறு யாருக்கும்

எவ்விதக் குற்ற உணர்வும் இருப்பதில்லை...


இன்னும் சொல்லப்போனால்,

'ஹல்க்கை இப்போதாவது

மேடையேற்றினோமே'

என்று ஹல்க்குடனே அமர்ந்து

உருகி மாய்கிறார்கள்....


 - ராம்பிரசாத்


Monday, 14 August 2023

சில கவிதைகள்

 மனைவியின் பாய் பெஸ்டி - கவிதை

தன் மனைவியின்
பாய் பெஸ்டியை
ஒரு கணவன்
தேடத்துவங்கினான்...
அவளின் வாட்ஸாப் ஹேக் ஆனது..
முகநூலில் இன்னுமொரு போலிக்கணக்கு
நட்பு வட்டத்தில் இணைந்தது...
நள்ளிரவில் குரட்டைச்சத்தங்கள் செயற்கையாயின...
மனைவியின் பள்ளிக்கால புகைப்படங்கள்
பரணிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டன....
மனைவியின் நெருங்கின தோழிகளின் புகைப்படங்களுக்கு
விருப்பங்கள் தெரிவித்தவர்கள் எண்ணப்பட்டார்கள்....
திடுமென முன்னறிவிப்பின்றி
வீட்டுக்குள் நுழைந்துவிட்டு
என்ன காரணம் சொல்வதென தடுமாறினான் அவன்...
பயன்படுத்திக்கொண்டிருந்த கணிணியின்
பிரௌசர் ஹிஸ்டரி பீராயப்பட்டது....
எங்கெங்கெல்லாமோ தேடியும்
இறுதியில்,
திருமண ஆல்பத்தில் தான் சிக்கினான்
அவன் மனைவியின் பாய் பெஸ்டி....
அதில்
பட்டு வேட்டி,
பட்டு சட்டையில்,
அவளருகே
அந்த பாய் பெஸ்டி அமர்ந்திருக்க,
அவனது சடலம்
வரதட்சணை சீர்வரிசைகளில்
கிடந்தது...
- ராம்பிரசாத்
*********************************
பழி பாவங்களின் நிழல் - கவிதை

'ஷாப்பிங்' முடித்தவர்களை
விழுங்கியபடி அந்த உயர் ரக கார்
சாலையில் நழுவ எத்தனிக்கையில்
கைக்குழந்தையுடன் ஓடிவந்து
ஜன்னலோரம் கையேந்துகிறாள் பெண்ணொருத்தி...
காசு தராமல் செல்பவர்களை
கடுஞ்சொற்களால் ஏசுகிறாள்...
காதலிப்பதாய் வாக்களித்து வயிற்றை நிரப்பிவிட்டு
நழுவிச்சென்றவனை ஏசியபோது கூட
அத்தனை மோசமாக வார்த்தைகளை
அவள் பயன்படுத்தியிருக்கவில்லை...
இப்படித்தான்,
அவளுக்குள்ளிருந்த காதலியை
அவளுக்கு அறிமுகம் செய்த
ஒற்றைக் காரணத்திற்காய்
பழி பாவங்களின் நிழல் கூட விழாமல்
தப்பித்துவிடுகிறார்கள்
அனேகம் கயவாளிக் காதலன்கள்...
- ராம்பிரசாத்
*********************************

முதல் முத்தம் - கவிதை
ஆயிரம் கவிதைகள் எழுதிவிட்ட பிறகு
முதல் கவிதை எதுவென்று கேட்டார் ஒருவர்.
தனக்கு வந்து முதல் முத்தத்தை
நினைவில் வைத்திருக்கும் குழந்தையும்
உண்டா என்ன?
- ராம்பிரசாத்
All reacti

Tuesday, 1 August 2023

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் பெண்கள்....

 சமீபத்திய நீயா நானாவில் 'திருமணம் வேண்டாம் என்று சொல்லும் பெண்கள்' நிகழ்ச்சி அருமையாக இருந்தது.. அது குறித்து அப்போதே எழுத நினைத்தேன்.. வாய்ப்பமையவில்லை..

Marriage is no longer worth trying என்ற இடத்திற்கு வந்துவிட்டோம். ஆண் - பெண் இருபாலரில் இது பெண்களுக்கு மிக நன்றாகவே புரிந்திருக்கிறது.. ஆண்களுக்கு இன்னும் புரியவில்லை.  பலர், ஆண் உலகம் பெண்களுக்கென உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்புகளுக்கு எவ்வித பிசகும் இல்லாமல் பெண்கள் இருக்கிறார்கள் என்று இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். 

இன்றைக்கு அங்குமிங்கும் நடக்கும் திருமணங்களும் பெரும்பாலும் பெண்களின் terms படி நடப்பவைகளே. அதில் மாற்றுக்கருத்தே இல்லை. அதுவும் கூட ஒரு வித அறியாமை அல்லது சமூக வழமையின் பிரகாரம் தன்னைத் தொடர்ந்து தகவமைத்துக்கொண்டதன் பக்கவிளைவு என்றே கொள்ள வேண்டி இருக்கிறது. அவர்களிடமே கூட நெருங்கி அமர்ந்து பேசினால், 'ஏதோ தெரியாம பண்ணிட்டேன்' என்கிற ரீதியில் தான் பதிலளிக்கிறார்கள்.

இது யாருடைய தவறும் அல்ல என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு சமூக இயக்கமாகவே திருமணங்கள் தேவையற்ற ஒரு இடத்திற்கு நாம் நகர்ந்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். There are other ways we could have handled it, ஆனால், அது நடக்கவில்லை  என்பதில் தான் ஒரு சமூகமாக நாம் தோல்வியடைந்திருக்கிறோம். என்பதை நாம் எல்லோருமே ஒரு மனதாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இப்போதிருக்கும் சூழளில் நமக்கெல்லாம் தேவை prenuptial agreements/ வாடகைத்தாய் முறைகளை சட்டப்பூர்வமாக்குவது/  திருமணம் செய்யாமலே குழந்தை பெற்றலை சட்டப்பூர்வமாக்குவது / விவாகரத்துக்களை normalise செய்வது  போன்றவைகளே.


நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் இதுதான்:


1. நன்றாக ஆரோக்கியமான உணவு உண்ணுங்கள்; அந்த உணவு உங்கள் சொந்த உழைப்பின் ஊதியத்தில் பெற்றதாய் இருக்க வேண்டும். 

2. Be fit. Fitness ல் ஆர்வம் செலுத்துங்கள். அதற்கென நேரம் செலவிடுங்கள்.

3. அறிவுசார் தளங்களில் இயங்கத்துவங்குங்கள்; மன ஆரோக்கியத்திற்கு இது அத்தியாவசியம்.

4. Earn the opportunity for sex; அதாவது, உடலுறவுக்கான வாய்ப்பை எதிர்பாலினம் உங்களுக்கு தர விரும்பும் இடத்தில் உங்களை வைத்துக்கொள்ளுங்கள்.


இவ்வளவு தான். திருமணங்கள் இனி அருகித்தான் போகும்; ஏனெனில், சமூக நலனுக்கு ஒவ்வாதவைகள் அழிவது தான் நியாயம்.