என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday, 13 November 2022

கேள்வி கேட்பதில் உள்ள மடத்தனம்

"வாழ்த்துக்கள் நண்பா... ஆனால், இதுவரை உங்கள் நூல்கள் ஒன்றைக்கூட நான் வாசித்ததில்லை"...

கிட்டத்தட்ட இதே (விஷமத்தனமான) அர்த்தத்தில் ஒன்றுக்கும் மேல் என்னிடம் கேட்கப்பட்டுவிட்டதால் இந்தப் பதிவு... (உண்மையில், இப்படிக் கேட்பவர்கள் ஏதோ விஷமத்தனமாகக் கேட்பதாக நினைத்துக்கொண்டிருப்பார்கள் போல.. இப்படி கேட்பதில் உள்ள மடத்தனம் புரியவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு)

எல்லோரும் எல்லா நூல்களையும் வாசித்துவிட முடியாது... அது சாத்தியமும் இல்லை.. நானும் பலரது நூல்களை வாசித்ததில்லை... எந்த நூலையும் வாசிக்காமலே தெளிவாக இருப்பவர்களை, வெற்றியாளர்களாக இருப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன்... இன்னாரது நூலை வாசிக்கிறேன் என்பதில் எந்தச் சிறுமையும் இல்லாதது போல் எந்தப் பெருமையும் இல்லை... அவரவரது தளம் அவரவர்க்கான நூல்களை வாசிக்க வைக்கிறது... அவ்வளவுதான்...

'என்ன வாசிக்கலாம்' என்று யாரிடமாவது நீங்கள் ஆலோசனை கேட்டால், அவர்கள் ஒரு பட்டியல் தருவார்கள்... நீங்கள் வாசித்து பண்படைய அல்ல? தங்களை உங்கள் முன் 'அறிவாளியாக, பண்பட்டவராக'க் காட்டிக்கொள்ளத்தான் அந்தப் பட்டியல்... உண்மையில் அந்த பட்டியலில் உள்ள நூல்கள் சொல்லும் கருத்தாக்கங்களை உள்வாங்கியவர்களாகக் கூட பட்டியலை நீட்டுபவர்கள் பெரும்பான்மைக்கு இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை... வி.சே சொன்னதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன் 'நான் புத்திசாலின்னு நினைச்ச நிறைய பேர் முட்டாளாத்தான் இருந்திருக்காங்க..' ... அவர்கள் போடும் சீன் அப்படி...

சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள்.. தங்களை, தாங்கள் விரும்பி அணிந்த முகமூடியை உங்களிடம் விற்க முனைகிறார்கள்... நீங்கள் அதை வாங்கினால், அவர்களும் நீங்களும் ஒரே தளத்தில் நிற்கிறீர்கள் என்று பொருள்... அவ்வளவு தான்...

நீங்கள் என்ன வாசிக்க வேண்டும் என்பது குறித்து என் எளிய பரிந்துரை இதுதான்...

உங்கள் இத்தனை ஆண்டுகால வாழ்வில் உங்களுக்கு ஒரு அனுபவம் கிட்டியிருக்கும்.. அந்த அனுபவத்தில் சில கேள்விகள், ஐயங்கள் இருக்கும்... அந்தக் கேள்விகளுக்கு பதில் தேடும் வகையில் உங்கள் வாசிப்பைத் தகவமைத்துக்கொள்ளுங்கள்... ஆக உங்கள் அனுபவமே உங்கள் வாசிப்புக்கான நூல்களை அடையாளம் காணும் லென்சாக இருத்தல் நலம்.. இப்படியாக நீங்கள் கண்டடையும் நூல்களின் பட்டியலில் என் நூல்கள் இடம் பெற வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை.. இன்னும் சொல்லப்போனால், எந்தக் குறிப்பிட்ட எழுத்தாளரின் எல்லா நூல்களும் இடம் பெற வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை...

அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று விட்டில் பூச்சிகள் போல் போய் விழாதீர்கள்.. கண்டதையும் பரிந்துரைப்பவர்கள் உண்மையில் குழம்பிய மன நிலையில் தான் இருப்பார்கள்... சுத்தமாகத் தெளிவே இல்லாத எழுத்தாளர்களைக் கூட நான் பார்த்திருக்கிறேன்... புரியாத வார்த்தைகளில் எதையாவது சொல்லி, தனக்குத்தானே 'அறிவார்ந்த' முத்திரையைத் தருபவர்களாகத்தான் பலரைக் கடந்திருக்கிறேன்.. வாங்கும் பத்தாயிரம் சம்பளத்தில் வீட்டு வாடகைக்கு மூன்றாயிரம் தந்துவிட்டு, வீட்டுக்காரியின் கையில் மூன்றாயிரத்தைத் திணித்துவிட்டு எஞ்சிய பணத்தில் தனக்குத் துளியும் சம்பந்தம் இல்லாத நூல்களை வாங்கி வாசித்து, முக நூலில் சிலாகிக்கும் பிரகஸ்பதிகளைத் தெரியும்.. பாவம் அந்தப் பெண்களும், அந்தக் குடும்பமும்... எந்த வாசிப்பால் குறைந்தபட்சம் உங்கள் குடும்பத்தைக் கூட உங்களால் நல்ல விதத்தில் வைத்துக்கொள்ள முடியவில்லையோ அந்த வாசிப்பே தவறான பாதை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்...

ஒரு நல்ல வாசிப்பு என்பது ஆரோக்கியமான நேர்மையான வழிகளில் உங்கள் பொருளாதார, மற்றும் சமூக மேன்மையை நோக்கி உங்களைச் செலுத்துவதாக அமைய வேண்டும்... உடனே, அலமாறி முழுவதும் self help, how to invest போன்ற நூல்களை அடுக்க வேண்டியதில்லை... உங்களிடம் கொஞ்சம் நேரம் இருந்து, கூடுதல் ஊதியத்திற்கென எதையேனும் கற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால், உங்கள் ஊரில் தைத்த உடைகளுக்கான டிமான்ட் என்ன என்பதைச் சொல்லும் ஒரு எளிய கட்டுரை கூட மிகவும் நல்ல வாசிப்பாகும்.. 3 மாதங்கள் செலவிட்டு முறையாகத் தையல் கற்றுக்கொண்டால் போதுமானது...

இதுவே நல்ல வாசிப்பு... If your reading doesn't help you better yourself in any way, then, you must give up that reading and must unlearn whatever you learnt irrelevant to you and your life through that.

பி.கு: அமெரிக்காவில் சென்ற ஆண்டு நடந்த புத்தகக் கண்காட்சியில் என் நூல்கள் சுமார் 50 பிரதிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில் 12 தவிர ஏனைய 38 பிரதிகளும் விற்றிருக்கின்றன. நியூ ஜெர்சியில் என் நூல் ஒன்றை வாங்கி வாசித்த யாரோ, நூல் பிறருக்கு பயன்படட்டும் என்கிற நோக்கில் Edison Public Libraryக்கு அளித்திருக்கிறார்கள் என்பதையும் இப்பதிவில் குறிப்பிட விரும்புகிறேன். ஆக சொல்ல வருவது என்னவென்றால், எந்த எழுத்தையும் வாசிக்க யாரோ நான்கு பேர் இருக்கத்தான் செய்வார்கள். அந்த எழுத்து எழுத்தாளனையும், வாசிப்பு வாசித்தவனையும் என்ன செய்தது? அதனால் சம்பந்தப்பட்டவர்கள் அடைந்த நன்மை/மேன்மை என்ன? என்பது தான் கேள்வி. இதுவெல்லாம் புரிந்தால், இந்தக் கேள்வியே எழாது..



Tuesday, 1 November 2022

குப்பை - அறிபுனைச் சிறுகதை - Youtubeல்

குப்பை - அறிபுனைச் சிறுகதை - Youtubeல்


சொல்வனம் தளத்தில் வெளியான எனது 'குப்பை' சிறுகதையை ஒலிவனத்துக்கு மாற்றியிருக்கிறார்கள் சொல்வனம் குழுவினர். தமிழ்ச் சிறுகதைகள் மக்களிடையே எளிதாகச் சென்றடைய சொல்வனம் குழுவினர் மேற்கொள்ளும் இந்த முயல்விற்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நன்றிகளும்.

youtube தளங்களில் இச்சிறுகதையின் ஒலிவடிவம் கேட்கக்கிடைக்கிறது. Youtube தளத்தில் இச்சிறுகதையைக் கேட்க பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.

குப்பை - அறிபுனைச் சிறுகதை

https://youtu.be/eKhQUAKetR0