என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday, 28 July 2021

சமீபமாக எழுதிய கவிதைகள்

குருவிக்கூடு - கவிதை


கூரையில் தொங்கும்
மின்விசிறியின் முதுகில்
கூடு கட்டி
முட்டையிட்டிருக்கிறது குருவியொன்று....

அதற்காக,
மின்விசிறியை அணைத்தே வைத்திருக்க
முடியுமா என்ன?

நாள்கணக்கில் மின்சாரம் தடைபடுகையில்
சற்று கவனமாக இருக்க வேண்டுமென
அவன் குறித்துக்கொண்டது
மனதில் தானே ஒழிய
ஃப்யூஸ் பாக்சில் அல்ல....

அவ்வளவுதான்
குருவிக்கும்,
அதன் கூட்டுக்கும்,
அதிலிருக்கும் முட்டைக்குமான
மதிப்பும் கூட...

 - ராம்பிரசாத்
*************************************

அயர்ன்மேன் - கவிதை



அயர்ன்மேன்
எதையும் தாங்கும்
இதயம் கொண்டவனெல்லாம் இல்லை....

இன்னும் சொல்லப்போனால்
அவன் இதயம்
ஒரு மெல்லிய மயிலிறகு போல்
மென்மையானதுதான்...

அந்த மயிலிறகு இதயத்தைப்
பாதுகாக்கவே
தன்னை ஒரு இரும்புக் கூண்டுக்குள்
புதைத்துக்கொள்ளத் துணிகிறான்
அயர்ன்மேன்...

அவன் போல் வேறு யாரும்
துணியாததுதான்
அயர்ன் மேனை
அயர்ன் மேன் ஆக்குகிறது
என்பதை
அவன் தவிர பிற யாரும்
கவனிப்பதே இல்லை....

 - ராம்பிரசாத்
*************************************

கோடுகள் - கவிதை




கோடுகள்
எல்லோருக்கும்
தேவைப்படுகின்றன....

ஒரு பெரிய கோட்டை
சிறியதாக்க,
ஒரு பெரிய கோட்டை
இன்னும் பெரியதாக்க,
ஒரு சிறிய கோட்டை
பெரியதாக்க,
ஒரு சிறிய கோட்டை
இன்னும் சிறியதாக்க....

இப்படி கோடுகளை
வாஞ்சையுடன்
ஏற்றுக்கொள்பவர்கள்
ஒரு வளைவை
முழுமையடையச் செய்வதும்
இப்படியான கோடொன்று தான்
என்று சொன்னால் மட்டும்
ஏன் ஏற்பதில்லை ?
 
- ராம்பிரசாத்

*************************************

லென்சுகள் - கவிதை


பார்வைக்கோளாறுக்கு
லென்சு அணிய
அறிவுருத்தப்பட்ட பிறகுதான்
கவனிக்க  நேர்ந்தது....

இங்கே
எல்லோரிடமும்
ஏதாவதொரு லென்சு
இருக்கிறது....

சிலருக்கு கிட்டப்பார்வை...
சிலருக்கோ எட்டப்பார்வை...

கிட்டப்பார்வைக்காரர்கள்
தடுக்கி விழுவதைப்பற்றி மட்டுமே
பெரிதும் அக்கறை கொள்கிறார்கள்...

எட்டப்பார்வைக்காரர்களோ
வெகு எட்டத்தில் ஓர் இலக்கை
நிர்ணயித்து
அதை நோக்கி விரட்டுகிறார்கள்...

பார்வையில்
கோளாறே அற்ற ஒரு சிலரால்
'ஒரு சிலராக'
இருப்பதை அன்றி
வேறு என்ன பெரிதாக
செய்துவிடமுடியும்?....

 - ராம்பிரசாத்

*************************************
நடிகர்களும் நாடகங்களும்


ஓரு நாடகத்தின்
கடைசி மைல்கல்லில்தான்
அந்த நாடகம்
பிறிதொரு  பூதாகார உருவம்
கொள்கிறது....

'நாம் நினைத்த நாடகம் இதுவல்ல'
என்று தெரிகையில்
நடிகன் அதிர்ச்சியடைகிறான்...
கொஞ்ச காலம்
பித்துப் பிடித்தவன் போலாகிறான்...
அந்தப்படியே,
பூதாகார நாடகத்தின் ஓர் அங்கமாகிவிடுகிறான்....

ஒத்திகைகளின் போது
அங்க அசைவுகளாலும்,
வசனங்களாலும்
நடிகர்கள் கடத்திடாதவைகளைக் கொண்டே
பூதாகார நாடகங்கள்
உருப்பெறுகின்றன என்றொரு கூற்றுமுண்டு....

அப்படி எதைத்தான்
கடத்தாமலேயே
கடத்திவிடுகிறோம் என்று
ஒவ்வொரு அரங்கேற்றத்தின் முடிவிலும்
விவாதித்து ஓய்கிறார்கள் நடிகர்கள்....

 - ராம்பிரசாத்

Thursday, 1 July 2021