என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday, 30 April 2021

இந்திரா கணேசன் கல்வியியல் கல்லூரி - பன்னாட்டு மெய் நிகர் சந்திப்பு

 திருச்சியைச் சேர்ந்த இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தில் பொறியியல் கல்லூரிகள், மருத்துவப் படிப்புகளில் பிஸியோதெரபி, நர்சிங், இயற்கை மருத்துவம் யோக அறிவியல், மற்றும் பி.எட், எம்.எட் படிப்புகள் உள்பட பலவற்றை பல துறைகளிலும் பயிற்றுவிக்கிறார்கள்.

'புழங்குதளத்தில் மொழித்திறன் பயன்பாடு' என்ற தலைப்பில் 05.05.2021 மாலை மூன்று மணிக்கு பன்னாட்டு மெய் நிகர் சந்திப்பில் உரையாற்ற இருக்கிறேன்.
இந்த வாய்ப்பை சாத்தியப்படுத்திய முனைவர், பதிவாளர் அனுசுயா அவர்களுக்கும், திரு.இரவி சொக்கலிங்கம் அவர்களுக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
ஆர்வமுள்ள நண்பர்கள் அழைப்பில் கலந்துகொள்ளலாம்.
May be a cartoon of எழுத்தாளர் ராம்பிரசாத் and text that says 'இந்திரா கணேசன் கல்வியியல் கல்லூரி மருந்தியல் கல்லூரி & இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் மதுரை ரோடு, மணிகண்ட திருச்சிராப்ள்ளி 620 012 வணக்கம் Ciao! Hallo! Hola! Hi! பன்னாட்டு மெய்நிகர் சந்திப்பு Virtual Meet 11 புழங்குதளத்தில் மொழித்திறன் பயன்பாடு Kalin 05.05.2021 3.00 p.m. திரு. R. இராம்பிரசாத் மென்பொருள் பொறியாளர் எழுத்தாளர், ஜோர்ஜியா அமெரிக்கா GoogleMoet முனைவர் S. பாஸ்கரன் முதல்வர், கல்வியியல் கல்லூரி முனைவர் D. சுதாகர் முதல்வர், மருந்தியல் கல்லூரி முனைவர் M. அனுசுயா பதிவாளர் முனைவர் சந்தியா BNYS முனைவர் G. பாலகிருஷ்ணன் இயக்குநர் பொறியாளர் G. இராஜசேகர் செயலாளர்'
Like
Comment
Share

Saturday, 24 April 2021

போட்டிகள் சொல்வது என்ன?

போட்டிகள் சொல்வது என்ன?


தமிழில் எழுத்துக்கென நிறைய போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போதும் நடத்தப்படுகின்றன. இது ஒரு பொதுவான செயல்பாடு தான். வெற்றி பெற்றவர்களுக்கென சான்றிதழ் வழங்கப்படுவதும், 'வெற்றி பெற்ற சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு' என்று விளம்பரம் செய்யப்படுவதும் எழுத்துத்துறையில் தான் என்றில்லை, கல்வித்துறையிலும் இன்னபிற திறன் வளர் துறைகளிலும் கலாச்சாரமே.

ஆனால், 2009-2010களில் நடந்த சிறுகதைப்போட்டிகளில் முதல் பரிசு பெற்றதாக அடையாளப்பட்ட பல பெயர்கள் இப்போது எங்குமே கண்ணில் படுவதில்லை. இதற்கு என்ன பொருள்? ஒவ்வொரு ஆண்டும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் யார் யாரோ புதிது புதிதாக எழுத வருகிறார்கள். முதல் பரிசுகளை வெல்கிறார்கள். அவர்களில் ஆண்டுகள் கடந்தாலும் தொடர்ந்து எழுத்தில் இயங்குபவர்கள் வெகு சிலரே. பெரும்பான்மை, போட்டிகளில் தேர்வாவதோடு சரி. ஒரு நூல் வெளியிடுவதோடு ஆர்வம் குன்றி எழுத்திலிருந்து விலகி துறையை விட்டே வெளியேறிவிடுபவர்கள் தான் அதிகம்.

இம்மாதிரியான போட்டிகளில் தேர்வாகாமல், தொடர்ந்து வருடக்கணக்கில் இயங்கி, வெற்றிகரமானவர்களாக உருவாகுபவர்களும் இருக்கிறார்கள். சுஜாதா எந்த விருதும் வாங்காதவர் தான். ஆனால் இன்றைக்கும் அவர்தான் பெஸ்ட் செல்லர்.

துவக்கத்திலிருந்து 90 விழுக்காடு மதிப்பெண்கள் வாங்கி மருத்துவர், பொறியாளர் ஆகிவிட்ட பலருக்கு, அந்த மருத்துவமும், பொறியியலும் தான் அவர்கள் வாழ்வில் அவர்கள் செய்த மாபெறும் சாதனையாக நின்றுவிடுகிறது.
"படிப்பாளியாக இருக்கிறான், நிச்சயம் இவனால் இந்த சமூகம் பயனுறும்" என்று நாம் எண்ணினால், அவன் தான், "நீட் வேண்டும், ரிசர்வேஷன் எதற்கு?, ஸ்டெர்லைட் வேலை வாய்ப்பைத் தந்தது, அவரவர் விருப்பத்திற்கேற்ப நிலத்தை பங்கிட்டுக் கொடுக்கலாம்" என்றெல்லாம் குரல் உயர்த்துபவனாக வருகிறான்.

தொடர் கல்வி, ஞானத்தை அல்லவா தரவேண்டும்? தேர்வுகளின் நோக்கம் ஞானம் அடைவதைச் சோதிப்பதாகத்தானே அமையவேண்டும்? நிஜத்தில் அப்படி எல்லாம் நடப்பதில்லை. அச்சிடப்பட்ட சான்றிதழ்களை உருவாக்க மட்டுமே இந்தத் தேர்வுகளும், போட்டிகளும் நடத்தப்படுவதாகத்தான் தோற்றம் தருகிறது. இந்த சான்றிதழ்களை வைத்து சம்பந்தப்பட்டவர்களை அணுகும் கூட்டத்தை வைத்து, இந்த சமூகமே அஞ்ஞானிகளால் உருவானதோ என்று யோசிக்க வைக்கிறது.

சரியான தளம், தவறானவர்களின் கைகளில் சிக்கி ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் போய் சீரழிந்து நான் அதிகம் கண்ணுற்றிருக்கிறேன்.

'இவர் எப்பேற்பட்ட ..................................... தெரியுமா? வேற லெவல்..." என்றெல்லாம் அடைமோழிகளுடன் பில்டப் தருவார்கள். கடைசியில் அவர் என்னடாவென்றால், எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு 'நான் அரசியலில் குதிக்கிறேன்' என்று போவார், தேர்வுகள் போட்டிகள் என்ற பெயரில் இங்கே எல்லோரையும் ஒரு மாபெறும் 'வழமை'க்குள் தள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. நான் அவதானித்தவரையில், பல அமைப்புகளில் ஒரு கட்டுதிட்டான, திறன் குறித்த தெளிவான, அசலுக்கு மிக நெருக்கமான ஒரு அளவுகோளே இல்லை எனலாம். அமைப்புகளின் இருப்புக்கு அதிகம் பங்காற்றியவர்களால் உருவாக்கப்படுவதே அளவுகோள்கள் என்கிற ரீதியில் செயல்படும் அமைப்புகளே அதிகம்.

என் வரையில் இப்போதெல்லாம் இந்த அடைமொழிகளைப் புறக்கணிக்கப் பழகிவிட்டேன்.

தேர்வு என்பது ஒரு responsibility. எதில் தேர்வாகிறீர்களோ அதில் நிபுணத்துவம் எதிர்பார்க்கப்படும். அதுகாறும் உருவாகிடாத ஓர் அர்த்தத்தை எட்டுவதற்கான பங்களிப்பை அது செய்ய வேண்டும்.

இப்படி யோசித்துப் பார்க்கலாம். போட்டிகள், தேர்வுகள் எப்படி இருக்கக்கூடாதென்றால், இன்று ஒரு போட்டி நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் A முதல் பரிசு வாங்குகிறார். D ஆறுதல் பரிசு கூட வாங்கவில்லை. ஆனால் ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் கழித்து D அந்த நிபுண்த்துவமும், அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்தலையும் செய்திருக்க, A FIELD OUT ஆகியிருந்தால், அந்தப் போட்டியோ, தேர்வோ அனர்த்தமாகிவிடுகிறது. பார்க்கப்போனால், இன்று இது போன்ற அனர்த்தங்க்ள் தான் அதிகம் நிகழ்கின்றன.

எழுத்துலகில் தான் என்றில்லை, எல்லா துறைகளிலும் இதை அவதானிக்கலாம். இந்த அணுகுமுறை சரியானது என்றே தோன்றுகிறது. தேர்வுகளையும், போட்டிகளையும் நான் இவ்விதமே அணுகுகிறேன்.

என் வரையில் பாம்பின் கால் பாம்பறியும் என்றே விலகிக்கொள்கிறேன். ஞானம் உள்ளவனுக்கு ஞானத்தைக் கண்டறியும் மார்க்கம் தெரியும். ஞானியை எளிதாகக் கண்டுகொண்டுவிடுவான். அஞ்ஞானியே ஞானம் உள்ளவனைக் கண்டும் அடையாளம் காண முடியாமல், குழப்பக் கடலில் தொலைந்து போய் குழம்பி நிற்பான். இந்த வித்தியாசம் புரிந்துவிட்டால் போதும்.

Thursday, 15 April 2021

Justice for Sandhya

😞 Justice for Sandhya 😞


அப்போது Jerusalem college of engineering ல் பொறியியல் படித்துக்கொண்டிருந்தேன். பிரிவு Computer Science and Engineering.

இரண்டாம் ஆண்டில், மூன்றாவது செமஸ்டர் வரும். அந்த செமஸ்டர் தேர்வு முடிவில் ஒரு பேப்பர் அரியர் விழுந்துவிட்டது. பாடம் Data Structures. எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால், Data Structuresம், Design and Analysis of algorithmsம் எனக்கு மிகவும் பிடித்தமான பாடங்கள். நன்றாகவும் எழுதியிருந்தேன். அந்த இரண்டு பாடங்களுக்கும் அப்போது என்னுடன் படித்தவர்கள் ட்யூஷன் எல்லாம் போய்க்கொண்டிருந்தார்கள். எனக்கு ட்யூஷன் தேவைப்படவில்லை. ஆயினும், முதல் முயல்விலேயே சென்டம் வாங்கும் அளவிற்கான பாடம் அது இல்லை என்பதுவும் தெரியும். குறைந்தபட்சம் 70 மதிப்பெண்களாவது வாங்கிவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்தத் தேர்வில் அரியர் விழுந்துவிட்டது. 36/100 மதிப்பெண்கள். அரியர் வாங்கிய மாணவர்களின் குழுவில் அப்போது இணைந்தேன். புதுமையாக இருந்தது. 

பணம் கட்டி, சரிபார்க்கலாம் என்றால் எனக்கு அதில் நம்பிக்கையே இல்லை.

காரணம், இதுபோல் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் Physicsல் துண்டு விழுந்துவிட்டது. 156/200க்கு. எனக்கு MPCB எனப்படும் Maths, Physics, Chemistry, Biology மிகவும் பிடித்த பாடங்கள். பிஸிக்ஸில் அரையாண்டுத் தேர்வில் 196/200 மதிப்பெண் வாங்கியிருந்ததால், முழு ஆண்டுத் தேர்வில் 156 ஐ மார்க் ஷீட்டில் பார்த்து அதிர்ச்சியோ அதிர்ச்சி. re-evaluationக்கு பணம் கட்டிப் பார்த்தால், எந்த பலனும் இல்லை.

அதே போல் இப்போதும் பணம் தான் வீணாகும், எதற்குப் பணத்தை வீணடிப்பானேன்,  பேசாமல் மறுபடி அந்த அரியரை எழுதி க்ளியர் செய்து விடலாம் என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன்.

ஆனால், விதி அதோடு விடவில்லை. எங்கள் வீட்டுக்கருகே exam centerல் வேலை பார்க்கும் ஒருவர் பழக்கமானார். அவர் விஷயத்தைக் கேள்விப்பட்டு என் தேர்வுப் பேப்பரை எடுத்துப் பார்த்ததில் 68 மதிப்பெண்கள் என்பதை, பேப்பர் திருத்தியவர் 36 என்று போட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. பிற்பாடு அந்த பேப்பர் க்ளியர் என்று அறிவிக்கப்பட்டு, திருத்திய மதிப்பெண் பட்டியல் கிடைத்ததும், வகுப்பில் எல்லோரும் என்னை வினோதமாகப் பார்த்ததும், ஒரு சிலர் என்னை அண்டி, யார் அந்த exam centerல் வேலை பார்த்தவர் என்று விசாரித்ததும் வேறு கதை.

Exam centerல் வேலை பார்த்த ஒருவரின் பரிச்சயம் இருந்ததினால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. இல்லையென்றால்? 

Justice for Sandhya ஹேஷ்டேக்கைப் பார்த்தால் பகீரென்று இருக்கிறது. 

அண்ணா பல்கலைக்கழகம் நாட்டிலேயே மிகவும் குறிப்பிடத்தகுந்த பல்கலைக்கழகமாக அறியப்பட்ட ஒன்று. அதிலேயே இப்படித்தானா என்பது சோர்வடையச்செய்வதாய் இருக்கிறது. ஐஐடியில் படித்ததாகச் சொல்லும் மங்குனிகளையெல்லாம் பார்த்துவிட்ட பிறகு எனக்கு 'நாட்டிலேயே குறிப்பிடத்தகுந்த.......' என்று துவங்கும் வாக்கியங்களிலெல்லாம் நம்பிக்கை போய் மிகப்பல வருடங்கள் ஆகின்றன என்பது  நான் பகிர விரும்பும் மிக முக்கியமான தகவல்.. 

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இருக்கும் பிரபல்யத்தில் (முன்பு எப்போதோ வழக்கில் இருந்த பிரபல்யம்) ஈர்க்கப்பட்டு விட்டில் பூச்சிகளாகப் போய் விழும் சந்தியா போன்ற மாணவர்களுக்கு, அவர்களின் அறியாமைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம்: திறமையை நிரூபிக்க, காலத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு தனி மனிதனின் தரத்தை ஒரு குறுகிய காலகட்டத்தை வைத்து தீர்மானிப்பது போல் ஒரு மடமை வேறு இல்லை. 

ஒரு பக்கம் ஐடி துறையில் லட்சக்கணக்கில் பணம் புழங்கிக்கொண்டிருக்க, மறுபக்கம் வேலையே கிடைக்காமல் பொறியியல் படித்தவர்கள் ஸ்விக்கி சோமேட்டோ என்று போய்க் கொண்டிருக்கும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில் , இந்த வேறுபாடு எங்கேனும் சமன்பட்டே ஆகவேண்டும் என்னும் போது, இது போன்ற அவலங்களை நாம் எதிர்பார்க்கக் கற்றுக்கொள்வது ஒரு நல்ல அணுகுமுறை என்றே சொல்லத்தோன்றுகிறது. இதுவெல்லாம் ஒரு சமூக இயக்கம் சமன்படும் இடங்கள். 

'மாப்ளை PWDல எஞ்சினியரா இருக்கார்... PWDல' என்று சொல்கையில் அந்த PWDந் மேல் ஒரு கூடுதல் அழுத்தம் வரும். அதுதான் சமன்படும் இடத்திற்கான அடையாளம். இப்படி Roadways, Electricity Board, examination centers, computer company, MNC என்று அடுக்கிக்கொண்டே போகலாம். ஒருபக்கம் இதையெல்லாம் இவ்விதம் ஆதரிக்கும் முகமாய் வளர்த்துவிட்டுக்கொண்டே தானே இருக்கிறோம். எனக்கெல்லாம் பாடம் நடத்திய ஆசிரியர்கள் வகுப்பில் பாடப்புத்தகத்தை திறந்து பாரா பாராவாக வெறுமனே உரத்து படிப்பார்கள். பீரியட் முடிய ஐந்து நிமிடங்கள் இருக்கையில், போய் விடுவார்கள். எதையும் விளக்க மாட்டார்கள். 

'விளக்கம் வேண்டுமானால் என்னிடம் டியூஷன் வா' என்பதுதான் மறைமுகமாகக் கடத்தப்படும் செய்தி. அப்படியானால் என் போன்ற ஏழை மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால், எந்த பதிலும் வராது. சவால் தான். 

தற்கொலை தீர்வாகாது. இதையெல்லாம் எப்படியேனும் தாண்டித்தான் ஆக வேண்டும். இதையெல்லாம் மீறி 100க்கு 60 மதிப்பெண் எடுப்பது சென்டம் எடுப்பதற்கு சமம் தான். 'நான் எனக்கிருந்த பின் புலத்தில் இதைச் செய்ததே பெரிய விஷயம்' என்று கூட சொல்லலாகாது. தற்பெருமை பேசுவதாகப் பார்க்கப்பட்டு புறக்கணிக்கப்படும். இதற்கு என்ன அர்த்தம்?

பணம் சேரும் இடத்தில் மரியாதை சேரும். பணம் சேராத இடத்தில், புரிதலே மரியாதை. அவ்வளவு தான். புரிந்தவர்கள் நண்பர்களாகிறார்கள். புரியாதது போல் கடந்து செல்பவர்கள் நண்பர்கள், நலன் விரும்பிகள் அல்லது உறவினர்கள் இல்லை என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் அணுகுமுறை. இந்த அடிப்படையில்,  ஜாதி ரீதியிலான ரிசர்வேஷனையும், பரியேறும் பெருமாள், கர்ணன், மண்டேலா போன்ற திரைப்படங்களையும் புரிந்துகொள்ளலாம் என்பது என் வாதம். 

இன்னொன்றையும் முக்கியமாகச் சொல்ல வேண்டும். 

ஞானம் என்பது அனுபவம் என்கிற முதலைக் கொண்டு, தீவிர ஆழமான சிந்தனையின் வாயிலாக, சரியான புள்ளிகளை மிக மிகச் சரியாக இணைப்பதன் மூலம் கண்டடைவது. 

மாணவர்களை, இந்தப் புரிதலை வளர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த அணுகுமுறையைக் கைகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.