என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday 13 December 2020

Parallel Thought

Parallel Thought


லிங்கா திரைப்படம் வெளியான நேரம் அது.

கதா நாயகன், நகைக்கடையில் சாவி இருக்கும் இடத்தை கை விரல்களால் அளந்து குறித்து கொள்ளும் காட்சி ஒரு ஹாலிவுட் திரைப்படத்திலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டிருந்தது.

அப்போது தயாரிப்புத் தரப்பில், அது, "Parallel Thought" என்று விளக்கம் தரப்பட்டது.

அதாவது, முன்னவரின் ஆக்கத்தை வாசிக்காமலேயே அல்லது காணாமலேயே பின்னவர் தானாகவே அக்கதைக்கான கருவையும், கதையின் பிற அம்சங்களையும் தனது சொந்த சிந்தனையில் அடைந்துவிட்டார் என்பது.

மேற்கத்திய திரை மரபில் 'Parallel Thought' வழக்கத்தில் இருக்கிறது. ஆனால், தமிழ் திரை உலகில் பயன்படுத்தப்படுவது போல் இல்லை. மேற்குலகில் யாரும் திரைக்கதை விவாதம் என்று ஆறு மாதங்கள் தொடர்ந்து ஆறேழு பேர் ஒரு கதையை, அதன் காட்சிகளை, அமைப்பை, கட்டுமானத்தைப் பேசிப் பேசி விவாதித்து உருவாக்குவதில்லை.

கதையை ஒருவர் எழுதுவார். அவர் தன் கதைக்கான அத்தனை அம்சங்களையும் தன் ஸ்கிரிப்டில் வைத்து எழுதித்தந்துவிடுவார். பின் அதை மறவாமல் காப்புரிமையும் பெற்றுவிடுவார். அதை வாசிக்கும் தயாரிப்புத் தரப்புக்கு அந்தக் கதை பிடித்திருந்தால், அதை நேர்மையுடன் அங்கீகரித்து அணுகி ஸ்க்ரிப்டை முதலில் வாங்குவார்கள். ஸ்கிரிப்டைத் தர எழுத்தாளர் முன்வரவில்லை என்றால் தயாரிப்புத் தரப்பால் ஒன்றும் செய்ய இயலாது. அவன் முன்வருகிறார் என்றால், அவரைக் கொண்டே கதையில் தேவையான அம்சங்களை எழுதி வாங்கிப் படமாக்கிவிடுவார்கள்.

இந்த நிலையில் 'Parallel thought' என்று வருபவரும் முன்னவரின் கதையைப் படிக்காமலேயே, வேறு யாருடனும் விவாதிக்காமலேயே, தானாக ஒரு கதையை எழுதுகிறார். பின் அதைத் தன் பெயரில் பதிவு செய்கிறார். இப்போது ஒரே கதை, இரண்டு பெயர்களில் இரண்டு காலகட்டத்தில் பதிவாகியிருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் பின்னவருக்கே திரை வாய்ப்பு வருகிறது. அதைத் தொடர்ந்து, முன்னவரின் படைப்பை அறியாமலேயே பின்னவரின் கதை படமாக்கப்படுகிறது. ஆனால், திரைக்கு வருகையில் முன்னவரின் உழைப்பு கவனத்துக்கு வருகிறது. Parallel Thought!

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால்,
1. முன்னவரும் சரி, பின்னவரும் சரி... ஒற்றை ஆள் தான். ஒற்றை மனிதனின் படைப்பாக்கம் தான்.

ஆனால் தமிழ் திரையுலகில் இது வேறு. இங்கே ஸ்க்ரிப்டை ஒருவர் முழுவதுமாக எழுதுவதில்லை. ஆறேழு பேர் சேர்ந்து விவாதிக்கிறார்கள். இந்த விவாதத்தில் ஐடியாக்கள் சகட்டுமேனிக்கு பகிரப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஐடியாவைப் பற்றி அதற்கு முன் கேள்வியே பட்டிராத ஒருவர் அந்த ஐடியாவைக் கேட்டுவிட்டு, அதன் அடுத்தகட்டத்தை தன் கற்பனையால் வளர்க்க முனைவார். இப்படிக் கூட்டாஞ்சோறாகக் கிடைக்கும் பற்பல ஐடியாக்களில் சிலவற்றைக் கொண்டு ஒரு துவக்கம், ஒரு முடிவு, இடைப்பட்டு சில சீன்கள் என்று கதை உருவாகிறது. இந்தக் கதையை ஒருவர் தன் பெயரில் பதிந்துவிடுவார்.

இதில் திருட்டு நடக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், இந்த கதை விவாதத்தில் பங்கேற்ற ஆறேழு பேர் வேறு கதை விவாதங்களிலும் பங்கேற்பார்கள். அங்கும் இதே ஐடியாக்களைப் பகிர்வார்கள். இந்த ஐடியாக்களும் இணையத்தில் வாசிக்க இலவசமாகக் கிடைக்கும் சிறுகதைகள், நாவல்களிலிருந்தே அந்தந்த ஆசிரியருக்குத் தெரியாமலேயே உருவப்படும் ஐடியாக்கள் தான். ஒரே ஐடியாக்கள் பற்பல கதைகளில் பயணப்பட்டுக்கொண்டே இருக்கும். ஒவ்வொன்றும் வெவ்வேறாக மாறுபாடாடையும். ஒன்றில் சாவி இருக்கும் இடத்தை விரல்களால் அளப்பது ரஜினி என்றால், இன்னொன்றில், ஒரு பெண் அதைச் செய்வார். இரண்டுமே ஒன்று தான்.

ஆக, கதையை ஒரே ஒருவர் சுயமாக எழுதி, காப்புரிமை வாங்கியிருந்தால் ஒழிய அதைக் 'Parallel Thought' என்று சொல்வதற்கில்லை. கதைத்திருட்டு என்றே கொள்ள வேண்டி இருக்கிறது.

லிங்கா ஒரு தனி நபர் கதை அல்ல. தனி நபர்க் கதையல்லாத எல்லாக் கதைகளும் திருட்டுக் கதைகளே என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஏனென்றால், எதுவுமே எவரின் உள்ளீடுமற்ற ஒரே ஒருவரின் சொந்தக் கற்பனை அல்ல.

plagarism என்பது ஒரு நோய். அறிவுச்சொத்தை மலினமாக்குவது, திருட்டுக்கு வேறு அடையாளம் தருவது என்று எல்லாமுமே மனிதத்தை, மானுடத்தை நாங்கைந்து படிகள் கீழே தள்ளிவிடக்கூடியவைகளே.

ஒரு கதாசிரியனுக்கு இந்த கடமையும், பொறுப்புணர்வும் இருக்க வேண்டும். அதே நேரம், அடுத்தவர் ஐடியாவைத் திருடித்தான் ஒரு கதை செய்ய முடியும் என்பதே அந்தக் கதாசிரியனின் படைப்பூக்கத்தை கேள்விக்கு உட்படுத்துவது போலத்தான். ஒரு கதாசிரியன், தனக்கு தேவைப்படுவதான ஒரு கதையைத் தானாகவே எவருடைய உள்ளீடும் இல்லாமல் உருவாக்கிவிட முடியவேண்டும். அப்படியே, அகஸ்மாத்தாக, அவன் எழுதிய கதை வேறொருவருடைய கதையை ஒத்து அமைந்துவிடினும் (தற்செயலாக), அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தன் அடுத்த படைப்பிலேயே அப்படி ஒரு பிரச்சனை எழாத ஒரு கதையைத் தரக்கூடிய வல்லமையை நிரூபிக்க வேண்டும். இது முடியக்கூடியவர்கள் தங்களை கதாசிரியர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்வது பொறுத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இது முடியாதவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம்: lets face it. வராத ஒரு திறனை, வலிந்து தனக்கு இருப்பதாகச் சொல்லிக்கொள்ள வேண்டிய தேவைகள் என்ன?

நிறைய பேர் நிறைய எழுதுகிறார்கள். பத்திரிக்கைகளை அண்டுகிறார்கள். எந்தப் பத்திரிக்கையும் அந்த ஆக்கத்தைத் தேர்வு செய்யாத பட்சத்தில் உடனே கிண்டிலில் வெளியிட்டுவிட்டு, அவர்களுக்கு அவர்களே கதாசிரிய பட்டம் கொடுத்துக்கொள்கிறார்கள். இன்னும் சில இடங்களில், தங்கள் எழுத்தை வெளியிட்டுக்கொள்ள பத்திரிக்கைகளைத் தாங்களே உருவாக்குவதும் நடக்கிறது. ஏன்? எதற்கு என்பது கேள்வி.

ஒரு கதாசிரியன் எப்படிக் கேட்டாலும் கதை எழுத வேண்டும். அவன் கையாலும் உத்திகளிலும், தேர்வு செய்யும் தலைப்புகளிலும் அவனுக்கான ஸ்டைல் இருக்கலாம். இசைக்கு இளையராஜா, ARR என்று துருவங்கள் இருப்பது போல. அவ்விதம் எழுதத்தெரியாதவர்கள் ஒரு வருடம் முயன்று பார்க்கலாம். அப்படியும் வரவில்லை என்றால் விட்டுவிடலாம். எதற்காக வலிந்து எதையாவது எழுதி கிண்டிலில் வெளியிட்டு, வலிந்து தன்னை ஒரு கதாசிரிய பிம்பத்துக்குள் திணித்துக்கொள்ள வேண்டும், தனக்கு ஆமாம் சாமி போடக்கூடிய ஒரு கூட்டத்தை தன்னைச்சுற்றி எப்போதும் இருத்திக்கொண்டே வளைய வர வேண்டும், என்பதே கேள்வி.

கதாசிரிய இடம் என்பது அப்படி ஒன்றும் 'கதி மோட்சம்' அடையே வேண்டிய இலக்கு இல்லை. இந்த உலகில் எத்தனையோ திறமைகள். அதில் அதுவும் ஒன்று. அது ஒருவருக்கு நிச்சயமாக இருக்க வேண்டுமென்பதுமில்லை. இல்லாவிட்டால் அதில் எந்தக் கீழ்மையும் இல்லை.

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்" என்கிறார் திருவள்ளுவர்.

இந்த உலகில் உள்ள எல்லா கீழ்மைகளுக்கும் அடித்தளம், தவறானவர்கள், சரியான இடத்திற்கு சென்று சேர்ந்துவிடுவதே. சமூகத்துக்கு அறிவு சொல்லும் இடத்திலிருப்பவர்களே, இதைச்செய்வது ................................................................

வேறொன்றும் சொல்வதற்கில்லை.