என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday 11 October 2020

உ.பி. விவகாரத்தில் ஆண்களுக்கு...

 

உ.பி. விவகாரத்தில் ஆண்களுக்கு ஏதும் ஆலோசனைகள் இல்லையா என்ற கேள்விகள் எழுந்தன. அதுவும் நியாயம் தானே. எழுதக்கூடாது என்றெல்லாம் இல்லை. 


ஆதலால் இந்தப் பத்தி ஆண்களுக்கு. எந்த ஆண்களுக்கு? பொறுப்பற்ற, அறவுணர்வற்ற, சமூகக் கடமைகள் என்ற ஒன்று இருப்பதையே உணர்ந்திருக்காத, அதீத self-centric ஆக இயங்கும் விதி விலக்கான ஆண்களுக்கு.. 


Ok Guys. உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?   நீங்கள் ஒரு பெண்ணை அண்டியும், அவள் உங்களை சீந்தாமல் போனால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? "குறைந்தபட்சம்" அதை அவர்களின் அறியாமை என்று கருதி நீங்கள் கடந்து போகலாமே? ஏன் நீங்கள் கடந்து போவதில்லை? அதற்கு உங்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டும். அது உங்களுக்கு இல்லை என்பதாலா? ஆனால், அது உங்கள் பிரச்சனை அல்லவா? அதை நீங்கள் தானே சரி செய்து கொள்ள வேண்டும்? 


1. ஒரு பெண்ணின் நிராகரிப்பை, கோபத்தால் எதிர்கொள்ளாதீர்கள். அதற்கு, வேறு மார்க்கங்கள் இருக்கின்றன. அதே பெண்ணை 'இவனை என்னன்னே தெரியாம மிஸ் பண்ணிட்டோம்' என்று தங்கள் செயலுக்கு வருந்த வைப்பதும் பிரச்சனையை எதிர்கொள்ளும் ஒரு மார்க்கம் தான். அதில் தான் உங்கள் அசலான 'ஆண்மை'யும் இருக்கிறது என்பது என் வாதம்.  ஆண்மை என்றால் 'ஆணாக பிறந்திருப்பது' என்பது உங்கள் புரிதல் எனில், I am sorry. You need to be educated. ஆண் எப்படி பிறப்பாலேயே ஆணாகிவிடுவதில்லையோ, அதே போல, பெண் பிறப்பாலேயே அழகாகிவிடுவதில்லை. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


2. பெண்களுக்கு, அவர்களின் புற அழகின் காரணமாய் எழும் பாதுகாப்பின்மைக்கு - தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், தான் அடைய வேண்டிய இலக்கை நோக்கிச் செல்லவும் அவர்கள் புறக்கணிக்கப் பழகியிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் judgement எல்லா நேரங்களிலும் சரியாக இருப்பதில்லை.( நம்மில் யாருக்குத்தான் நம் judgements எல்லா நேரமும் சரியாக அமைந்திருக்கிறது?) புறக்கணிக்க வேண்டியவர்களுடன் நட்பு பாராட்டுவதும், நட்பு பாராட்டவேண்டியவர்களை புறக்கணிப்பதும் பெண்களால் சில  நேரங்களில் தவறுதலாய் நடந்துவிடுவதுமுண்டு. அவர்கள் ஒன்றும் கடவுள்கள் இல்லையே? தவறே செய்யாமல் இருக்க? ஆகையால் அவர்களின் புறக்கணிப்பை 'அந்த நேர நிலைப்பாட்டாய்' எடுத்துக்கொண்டு கடந்து போவதில் தான் நீங்கள் உண்மையிலேயே 'ஆண்களாவீர்கள்' என்பது என் வாதம். 


3. பெண்கள் எல்லோரும் கடைந்தெடுத்த நல்லவர்கள் என்று நான் சொல்லவில்லை. விதிவிலக்குகள் இருபாலரிலும் இருக்கிறார்கள். ஆனால், நல்ல விதமாய் வளர்க்கப்பட்ட பெண்களுள் சிலர் ஒரு ஆண் தன்னை வந்து அண்டுகையில், அவளது அந்த நேர சூழலைப் பொறுத்து 'இவனுக்கு நான் பொறுத்தமா? இல்லையா?" என்கிற குறைந்தபட்ச கேள்வியையாவது தனக்குள்ளே எழுப்புகிறாள். அதன் பதில், பாதகமாக அமைவதற்கு உண்மையிலேயே நீங்கள் எவ்விதத்திலும் காரணமில்லாமலும் இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உதாரணமாக, உடல் அளவில் மண வாழ்வுக்கு தகுதி யில்லாத பெண், ஒரு ஆண் தன்னை அண்டி வருகையில், புறக்கணிப்பாள். எல்லோரிடமும் தன் உடல் தகுதி குறித்து ஒருவர் விளக்கமளித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை அல்லவா? அதில் அவரது பொதுவாழ்வும் இருக்கிறது. ஆனால் உங்கள் பார்வைக்கு அவள் உங்களை நிராகரிப்பதாய்த் தெரியலாம். அது காட்சிப்பிழை தான். ஒரு பெண் உங்களை நிராகரிக்கிறாள் எனில், அதில் உங்கள் நல்வாழ்வும் இருக்கலாம் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். அவளின் நிராகரிப்பு உங்களுக்குள் கோபத்தை விதைக்காது. மாறாக அன்பையே விதைக்கும். ஏனெனில், ஒரு ஆண் இப்படியாக தன்னை நாடி வரும் பெண்ணுக்கு, இத்தனை நேர்மையாக பதிலளிப்பான் என்று தோன்றவில்லை. நிஜத்தில் நடப்பதுமில்லை என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும்.


4.பெண்ணின் வனப்பு உங்களை ஈர்க்கலாம். அழகு யாரைத்தான் ஈர்ப்பதில்லை? பெண்களின் புற உடற்கூட்டின் டிசைன் அப்படி. இந்த நிதர்சனங்களைச் சிலர் புரிந்திருக்கிறார்கள். அதற்கேற்ப தங்களின் இயக்கங்களைத் தகவமைத்துக்கொள்கிறார்கள். இவ்விதமானவர்கள் வாழ்வனுபவங்கள், வாழ்வின் வளமான சாத்தியங்கள், மானுட வாழ்வியல் பரிமாணங்களில் அடுத்தடுத்த கட்டங்கள் குறித்தெல்லாம் நல்ல புரிதலைக் கொண்டிருக்கிறார்கள்.


அந்தப் புரிதல் அற்றவர்களால் தான், எவ்வித தயாரிப்புமில்லாமல், பெண் உடலை ஆதிக்கம் செலுத்தக் கிடைத்த வஸ்துவாகப் பார்க்க இயலும். எல்லா பெண்களும் வாழ்வில் உயர்ந்த நோக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம், நல்ல வாழ்வனுபவமாவது இருக்க வேண்டுமென்று எண்ணுபவர்களாக இருக்கிறார்கள். அதற்குத் தேவைப்படும் ஒத்தாசைகளை ஒருவருக்கொருவர் செய்துகொள்ள பெரு விருப்பமும் கொண்டிருக்கிறார்கள். அவர்களை போகப்பொருளாகப் பார்ப்பது 'பெண் என்றால் என்ன?' என்பது உங்களுக்கு சுத்தமாகப் புரியவில்லை என்பதையே காட்டுவதாக அமையும். உங்களைப் போன்றவர்களுக்கு தாயாக, மகளாக, சித்தியாக, அத்தையாக அமையப்பெறும் அத்தனைப் பெண்களுமே துரதிருஷ்டசாலிகள் தான். உங்களுடன் வாழ்கையில், அதையும் அவர்கள் உணர்ந்தே தான் இருப்பார்கள். அதையும் தாண்டி அவர்கள் உங்களைப் புழங்க அனுமதிப்பது, என்றாவது நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று தான். 


5. மரபணுவிலேயே ஆணின் மீது 'தேர்வை' நிகழ்த்தும் பண்பு பெண்களுக்கு இருக்கிறது. (பெண் இனம் தான் உலகில் முதலில் தோன்றியது என்பதையும், ஆண் இனம் என்பது ஒரு பிறழ்வாக பிற்பாடு உதித்த ஒன்று என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.) ஆகையால் ஒரு பெண்ணைக் கவர உங்களுக்கு இருக்கும் ஒரே மார்க்கம், அவளின் பார்வையில் தேர்வாவது தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இங்கே இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இந்தத் தேர்வில் பெண்களின் judgements எல்லா நேரமும் சரியாக இருக்க வேண்டியதில்லை. (ஏனெனில் அவர்கள் கடவுள்கள் இல்லை. தவறு செய்யக்கூடிய மனிதர்கள் தான்) அவள் தவறு செய்கையில், புன்னகையுடன் கடந்து போய்விடுவது தான் உங்கள் 'ஆண்மைக்கு' அழகு சேர்க்கும். வம்பு செய்வதல்ல. அப்படி இங்கே நம்மைச் சுற்றி தினம் தினம் நடந்து கொண்டு தானே இருக்கிறது. There are women who have lost finest men. வெளிப்பார்வைக்கு தெரியாமல் போனாலும் இதுதான் உண்மை.


6. There is something called 'Dignity'. சுயமரியாதை, மதிப்பு போன்றவைகள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களை நீங்கள் விரும்புங்கள். மதியுங்கள். உங்களை உங்களாலேயே விரும்ப முடியாவிட்டால், ஒரு பெண்ணால் எப்படி முடியும்? 

6.1. உங்களை உங்களால் விரும்ப முடியும் போது தான் ஒரு பெண் உங்களைப் புறக்கணிக்கையில் 'அவளுக்கு புரியவில்லை' என்று கடந்து போக முடியும். 

6.2. உங்களில் எத்தனை பேர் ' I deserve more' என்கிற மூன்று வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறீர்கள்?

6.3. உங்களில் எத்தனை பேர்,  ஆண்களைப் பற்றி ஒரு பெண் இளப்பமாகப் பேசும்போது மட்டுறுத்தியிருக்கிறீர்கள்?

6.4. உங்களில் எத்தனை பேர், பொதுத்தளத்தில் ஆண்கள் குறித்து மட்டமாகப் பேச்சு எழும்போது, 'எல்லோரும் அப்படி அல்ல' என்று கோபப்பட்டிருக்கிறீர்கள்?


7. பிறப்பாலேயே ஒரு ஆண் உயர்ந்தவராகிவிடமாட்டார். வெறும் புற அழகாலேயே ஒரு பெண் அழகாகிவிடவும்மாட்டார். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். யாரையும் தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள். பெண்களை அவர்களின் வாழ்வியல் நோக்கங்களுடன் அணுகுங்கள். எல்லா பெண்களிடம் dignity இருக்கிறது.  அதீதமான நேர்மையுணர்வும், அறவுணர்வும் இருக்கிறது. அவர்களாக யாரையும் எதற்காகவும் மனசாட்சிக்கு விரோதமாக ஏமாற்ற மாட்டார்கள். அதற்கு மதிப்பளியுங்கள். 


உதாரணமாக, 

நீங்கள் ஒரு பெண்ணை அணுகி அதற்கு அவர் எறிந்து விழுகிறார் என்றால் அதற்கு சில காரணங்கள் இருக்கலாம்.

அ. அவரை அதற்கு முன் சிலர், அவரின் புற அழகுக்காய் மட்டுமே அணுகியிருக்கலாம். அதனால் வெறுப்புற்றவர் உங்களையும் அவ்விதமே பார்க்க வாய்ப்பிருக்கிறது. 

ஆ. அவருக்கு மண வாழ்வே பிடிக்கவில்லை என்றும் இருக்கலாம். 

இ. உங்கள் அணுகுமுறை அவரை cheap ஆக்குவதாக இருக்கலாம். அது எப்படி cheap என்பது அவர் பார்வையில் தான் விளங்கும். உங்கள் பார்வையில் அல்ல. ஏனெனில், நீங்கள் அவரை அணுகும் பலரில் ஒரே ஒருவர்.

ஆக, எறிந்து விழுவதற்கெல்லாம் கோபப்பட வேண்டியதில்லை. எல்லா பெண்களிடமும் ஒரு நியாய உணர்வு இருக்கிறது. தான் செய்தது தவறென்று தெரிந்தால் அவரே வந்து மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவருடைய விருப்பத்திற்கு மதிப்பளித்து ஒதுங்கி நிற்பது மட்டும் தான். 


8. இறுதியாக, விதிவிலக்குகள் தவிர்த்து பெரும்பான்மை பெண்களுக்கு செக்ஸை விட, ரொமான்ஸில் தான் ஆர்வம் அதிகம். கைபிடித்து நடப்பதும், ஒன்றாகக் கோயிலுக்கோ அல்லது சினிமாவுக்கோ செல்வதும், பிடித்த டாபிக் குறித்து அளவளாவுவதும், நண்பர்கள் வீட்டு விருந்துக்கு சென்று அரட்டை அடிப்பதும் மிகப்பிடித்தமான விஷயங்களாக எப்போதும் இருந்திருக்கின்றன. செக்ஸ் இவர்களுக்கு இரண்டாம், அல்லது மூன்றாம் பட்சமாகத்தான் இருந்திருக்கிறது. இது அவர்களின் வெளிப்புற அழகிற்கு முற்றிலும் முரணானது தான். ஆனால், அதுதான் அவர்களது டிசைனும் கூட. 

இங்கே அவர்களது அறவுணர்வைப் பற்றி மேலும் பகிர்வது பொருத்தமாக இருக்கும். எந்த உறவிலும் உண்மையாக இருக்க முயல்வார்கள். உண்மையையே பேசுவார்கள். அறவுணர்வை தொடர்ந்து மேற்கொள்ளும் பொருட்டு, எந்த ஒரு உண்மையையும் எதிர்கொள்ளும் மன நிலையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இதையெல்லாம் ஆண்களிடம் எதிர்பார்க்கவே இயலாது. ஆணுலகம் இதற்கு முற்றிலும் எதிரானது. 

ஆண்களிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் இதைத்தான். பெண்களை புரிந்துகொள்ள முயலுங்கள். அதுதான் எல்லா பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக இருக்குமென்பது என் தாழ்மையான கருத்து.