Monday, 4 July 2011
ஒரே ஒரு துளி - துப்பறியும் சிறுகதை
ஒரே ஒரு துளி - துப்பறியும் சிறுகதை
'சார், வேதம் பேசறேன் சார். ஆமா சார். ஸ்பாட்க்கு இப்பதான் சார் வந்தேன். அந்த லேடியோட
ஹஸ்பெண்ட் தான் கால் பண்ணினாரு. அவர்ட்ட நான் இன்னும் நேர்ல பேசல சார். அவரு ரொம்ப நேரமா கால் பண்ணினாராம். அந்தம்மா எடுக்கலன்னு வந்திருக்காரு. ஒரு மூணு மணி நேரமா வீடு உள்பக்கமா பூட்டியே இருக்காம் சார். நான் ஃபர்ஸ்ட் அவர்கிட்ட டீடெய்ல்ட் ஃபர்ஸ்ட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட் வாங்கிடறேன் சார். ஐ வில் அப்டேட் யூ சார். ஓகே சார்'
காதிலிருந்து ஃபோனை எடுத்து பாண்ட் பாக்கேட்டில் நுழைத்தார் இன்ஸ்பெக்டர் வேதம். இடது கை மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்துக்கொண்டார். இரவு பத்து மணி. நேரமாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை வேறு. அடாப்ஸிக்கு விடிந்ததும் தான் தகவல் சொல்ல முடியுமென்று தோன்றியது.
வேதம் ஆறடி உயரம். வயது நாற்பது இருக்கும். நல்ல கருப்பு நிறம். ஆனாலும் உடல் முழுவதும் பரவிய சீரான கறுப்பு. ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நிறம். அவருக்கு எந்த கேஸையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பார்க்க வராது. சரியான கோணத்தை முதலில் அடையாளம் கண்டுவிடுவார். நூல் பிடித்தார்ப் போல் விசாரணை செய்வார். சில கேஸ்கள் உடனடியாக முடிந்துவிடும். சில கேஸ்கள் இழுத்தடிக்கும். ஆனால், வேதம் கைவைத்தால் நிச்சயம் முடிந்துவிடும். முடித்துவிடுவார். அதுவும் கனகச்சிதமாக. அந்த இரவிலும் காக்கிச்சட்டையில் விரைப்பாகத்தான் இருந்தார். அவரின் இடுப்பில் ஒரு லட்டி தடிமனான கயிற்றால் கட்டப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது.
'பாரு, எப்போ போனான்டி அவன்? இல்ல இல்ல. நான் இங்க ஒரு கேஸ்க்கு வந்திருக்கேன். சரி சரி. நான் பிஸியா இருக்கேன். அப்புறம் கால் பண்றேன். ஓ அதுவா.... ' சப்இன்ஸ்பெக்டர் கந்தசாமி அவர் மனைவி பார்வதியுடன் பேசிக்கொண்டிருந்தது வேதத்தின் காதில் விழுந்தது. அதைக் கவனிக்க தன் ஆர்வத்தை செலவிட விரும்பாதவராய் வேதம் திரும்பி அந்த ஏரியாவை கவனமாக அவதானிக்கத்துவங்கினார்.
நுங்கம்பாக்கத்தில் எப்போதும் அமைதியாக இருக்கும் அந்தத் தெரு அன்று, அந்த இரவில் தன் அமைதியை தொலைத்துவிட்டு அழுதுகொண்டிருந்தது. தெரு முழுவதும் ஆடம்பரமாய் வீடுகள். ஒன்று அபார்ட்மென்டுகளாக இருந்தன அல்லது ஆடம்பர வீடுகளாக இருந்தன. பல வீடுகளில் ஒன்றிரண்டு பேர்தான் இருப்பார்கள் போலத் தோன்றியது. ஆங்காங்கே மாடிகளிலும், பால்கனிகளிலும் யாரெனும் நின்று எட்டியெட்டிப் பார்த்தபடி நின்றிருந்தனர். விஷயம் தெரிந்துவிட்டது போலும் என்று நினைத்துக்கொண்டார். வேடிக்கை பார்ப்பதில் தான் எத்தனை ஆர்வம். கிட்டே போய், சாட்சி சொல்லக்கூப்பிட்டால் வீட்டுக்குள் அடைந்து கதவு சாத்திக்கொள்ளும் சாமான்யத்தனம் தெரிந்தது.
வேதம் வந்த ஜீப் சற்றுத் தள்ளி நிறுத்தியிருக்க, வேதத்தின் அஸிஸ்டென்ட் கந்தசாமி தன்னை நோக்கி வருவதை கவனித்துவிட்டு அபார்ட்மென்ட் வாசலை நெருங்க, வேதத்தை வாசலில் பார்த்துவிட்டு ஒருவர் நடையில் வேகங்கூட்டியவராய் நெருங்கினார். அவருக்கு வயது அறுபதைக் கடந்திருக்கலாமென்று தோன்றியது. அந்த இரவு நேரத்திலும் அவர் பாண்டும், சட்டையும் அணிந்திருந்தது அவர் தன்னை எதிர்பார்த்திருப்பாரோ என்று நினைக்கத்தோன்றியது.
'சார், நான் சம்பந்தம் சார். சம்பந்தமூர்த்தி. அபார்ட்மென்ட் செக்ரட்டெரி சார்' அவர் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டதை அவதானித்துக்கொண்டிருந்தார் வேதம். அவர் அறிமுகப்படுத்திக்கொண்ட தோரணையை பார்த்தபோது, "இந்த அபார்ட்மென்ட் பற்றி எதுவானாலும் நாந்தான்" என்று அவர் தன் அதிகாரத்தை நிலைநாட்ட வந்தது போலவே இருந்தது.
'ஹ்ம் ஐ ஆம் இன்சார்ஜ் ஆஃப் திஸ் கேஸ். ஸ்பாட் எங்க? மேல தானே' என்று கேட்டுக்கொண்டே அபார்ட்மென்டுக்கு மத்தியில் அமைந்த மாடிப்படியில் ஏற, 'ஆமா சார், ஃபர்ஸ்ட் ஃப்லோர்' என்றபடியே பின் தொடர்ந்தார் சம்பந்தம்.
முதல் தளம் சற்று குறுகலாகவே இருந்தது. இடது மற்றும் வலது புறத்தில் என இரண்டே இரண்டு ஃப்ளாட்கள். இரண்டும் எதிரெதிரே. இடது பக்க ஃப்ளாட் கதவு மூடியே இருக்க, வலது பக்க ஃப்ளாட் கதவு ஒருக்கலித்துத் திறந்திருந்தது. வேதம் அவதானித்துக்கொண்டிருக்கையிலேயே சம்பந்தம் வேதத்துக்கு வலது பக்கவாட்டில் வந்து நின்று கொண்டார்.
'இந்த ஃப்ளாட்தான் சார்' என்று இடதுபக்க ஃப்ளாட்டை கைகாட்டினார் சம்பந்தம். சந்தன மரத்தாலான கதவு என்பது பார்த்தவுடனேயே தெரிந்தது. மரச்சட்டத்தில் நேர்த்தியாக பொருந்தியிருந்தது. ஐந்தடி உயரத்தில் ஒரு ஃபிஷ் ஐ துவாரம் தெரிந்தது. வேதம் அந்தக் கதவுக்கறுகில் சென்று அந்தத் துவாரம் வழியே பார்த்தார். ஒரு பெண், கத்தியால் குத்தப்பட்டு மல்லாந்துகிடந்தாள். சரியாக கூர்ந்து கவனித்ததில் அவளின் இடது கை வயிற்றின்மேலும் வலது கை அந்தக் கத்தியின் கைப்பிடியின் மேலும் இருந்தது. அந்தக் கோணத்தில் பார்க்கையில் யாருக்கும் அவள் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு செத்துப்போயிருக்கிறாள் என்று தோன்றும் வகைக்கு தெளிவாகத் தெரிந்தது. வேதம் அந்தக் கதவின் கைப்பிடியில் கைவைத்துத் தள்ளிப்பார்த்தார். உள்பக்கம் தாளிடப்பட்டிருப்பதைத் தெளிவாக உணர முடிந்தது.
தனக்குப் பின்னால் யாரோ நகரும் அரவம் கேட்டு அவர் திரும்ப, எதிர்பட்டான் ஒருவன் ஜீன்ஸ் பாண்டும், டி சர்டும் அணிந்திருந்தான். வயது 33 இருக்கலாம். அவன் அருகே வந்து நின்ற தோரணையையும், உள்ளே மல்லாந்து கிடந்த அந்தப் பெண்ணின் வயதையும் அனுமானித்ததில் இவந்தான் அவளின் கணவனாக இருக்குமென்று தோன்றியது. அவனுக்குப் பின்னால் அரைவழுக்கையாய் அந்த வீட்டின் கதவருகே ஒருவர் லுங்கியும் சட்டையும் அணிந்து நின்றிருந்தார். அவர்தான் எதிர்வீட்டுக்காரராக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டார் வேதம்.
'நீங்க...'
'சார் நான் ராகவன். நாந்தான் உங்க கிட்ட ஃபோன்ல...'
'ஓ நீங்கதானா அது. சோ, அந்தப் பொண்ணொட ஹஸ்பென்ட் நீங்கதான் இல்லயா?.. ஓகே.. இப்படி வாங்க' என்றுவிட்டு மாடிப்படியை நோக்கி இரண்டடி முன்னேற பிந்தொடர்ந்தான் ராகவன். அந்த லுங்கிக்காரரும், சம்பந்தமும் இப்போது ஒன்றாய் நின்றுகொண்டே தங்களுக்குள் ஏதோ கிசுகிசுத்துக்கொண்டனர்.
'ம்ம்.. சொல்லுங்க ..என்னதான் நடந்தது?' வேதம் பணிக்க, கந்தசாமி கையிலிருந்த ஃபைலைத் திறந்து, பாக்கேட்டிலிருந்த பேனாவை உருவிக் குறிப்பெடுக்க ஆயத்தமானார்.
'சார், ஸ்வேதா என் வைஃப் சார். அரேன்ஜ்ட் மேரேஜ் சார். இந்த மாசத்தோட இரண்டு வருஷம் ஆகுது சார். நான் எப்பவுமே ஞாயித்துக்கிழமை 6 மணிக்கு பக்கத்துல இருக்குற மாலதி தியேட்டர்ல 7 மணி ஷோவுக்கு படம் பாக்க போவேன் சார். என் வைஃப் ஸ்வேதா சில நேரம் வருவா. சில நேரம் வரமாட்டா. இன்னிக்கு நான் போலாம்னு சொன்னப்போ, தூங்கறேன்னு சொன்னா. சரின்னு நானும் அவள வீட்டுலயே விட்டுட்டு போயிட்டேன் சார். இப்படி பண்ணிக்குவான்னு நினைக்கல சார்' என்றுவிட்டு குலுங்கிகுலுங்கி அழத்துவங்கினார் ராகவன்.
'ராகவன், ப்ளீஸ் கம்போஸ் யுவர்செல்ஃப்' ராகவனின் தோளில் கைவைத்து அழுத்தியபடி ஆற்றினார் வேதம். இதைப் போல் அனேகம் தரம் நடந்திருக்கிறது எத்தனையோ கேஸ்களில். ஆதலால் அவருக்கு இது அந்தத் தருணத்தில் சற்று நேரவிரயமாக ஆயாசமாகப் பட்டது. இன்னும் பாடியைப் பார்க்கவில்லை. அதற்கு நேரமாகும்போல் தோன்றியது. அதன் பிறகோ, அல்லது அதற்குள்ளோ விஷயம் தெரிந்து ராகவனின் உறவினர்களோ, நண்பர்களோ வந்துவிட்டால் ராகவனை அண்டி விசாரணைகள் மேற்கொள்வது கடினமென்று தோன்றியது. கேட்க வேண்டிய கேள்விகளை இப்போதே கேட்டுவிட்டால் உத்தமம் என்று தோன்றியது. ராகவன் தன் அழுகையை துடைத்துக்கொள்ள அவகாசம் தந்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.
'ராகவன், நீங்க தப்பா நினைக்கலன்னா உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?'.
'ம்ம்ம்ம்'.
'கல்யாணத்துக்கு முன்னாடி உங்க வைஃபுக்கு ஏதாவது காதல் கீதல்ன்னு...'
'இ..இல்ல சார். நான் கேட்டப்போ அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லன்னுதான் சார் சொல்லியிருக்கா'.
'ம்ம்... சினிமாவுக்கு போனேன்னு சொன்னீங்களே. டிக்கட் வச்சிருக்கீங்களா?'.
'இருக்கு சார், இதோ' என்றுவிட்டு பாண்டு பாக்கேட்டில் கைவிட்டு டிக்கேட்டை உருவி வேதத்திடம் தந்தார் ராகவன். வேதம் வாங்கிப் பார்த்துவிட்டு தன்னுடைய பாக்கேட்டில் வைத்துக்கொண்டார்.
'சரி ராகவன். நீங்க இங்கயே இருங்க' என்றுவிட்டுத் திரும்பி 'கந்தசாமி, சம்பந்தம் நீங்க ரெண்டு பேரும் என் கூட வாங்க' குறிப்பெடுத்துக்கொண்டிருந்த கந்தசாமியையும், லுங்கிக்காரருடன் கிசுகிசுத்துக்கொண்டிருந்த சம்பந்தத்தையும் பணித்துவிட்டு படியிறங்கி வேதம் நடக்க, கந்தசாமியும், சம்பந்தமும் வேதத்தை தொடர்ந்தனர்.
இறங்கி வருகையிலேயே, மீண்டும் கந்தசாமியின் செல்ஃபோன் சிணுங்க, உடனே எடுத்தார் கந்தசாமி.
'ஹலோ... ஆங் பாரு, வந்துட்டானா? இன்னிக்கே பாத்தாகனுமாமா? ஹ்ம்ம்.. நான் ஒண்ணும் சொல்றதுக்கில்ல. இதுல காமிக்கிற ஆர்வத்தை கொஞ்சம் படிப்பிலயும் காமிக்க சொல்லு. சரி சரி. நான் வேலையா இருக்கேன். அப்புறம் பேசுறேன். வை' என்றுவிட்டு ஃபோனை அணைத்தார். வழக்கமான குடும்ப சச்சரவுகள் இத்தியாதி என்று நினைத்துக்கொண்டார் வேதம். கந்தசாமிக்கு கல்லூரி செல்லும் வயதில் ஒரு பையன் இருப்பதாகத் தெரியும் அவருக்கு. வரட்டுப் பிடிவாதக்காரனாம். கந்தசாமி சொல்லக் கேட்டிருக்கிறார். இந்த காலத்துப் பையன்கள் யாரைத்தான் மதித்தார்கள் என்று தோன்றியது அவருக்கு.
வேதம் அபார்ட்மென்ட் வாசலை அடைந்து காம்பவுண்ட் சுவருக்குள்ளாக வலதுபக்கம் திரும்பி, ராகவனின் ஃபளாட்டை அண்ணாந்து பார்த்தபடியே நடக்க, கந்தசாமியும் பின்னாலேயே தொடர்ந்தார். பின்னாலேயே வால் போல சம்பந்தமும். ராகவன் வீட்டின் எல்லா ஜன்னல்களும் மூடியே இருந்தன. கண்ணாடி ஜன்னல்கள் மரச்சட்டத்தில் பொறுத்தப்பட்டதான கதவுகளைக் கொண்டிருந்தன. பின்பக்கமாய் இருந்த பால்கனிக் கதவும் அதை ஒட்டிய ஜன்னலும் கூட இறுக்கமாய் மூடப்பட்டிருந்தன.
'சம்பந்தம், உங்கள ஒண்ணு கேக்கலாமா?'
'கேளுங்க சார்'.
'ராகவனும் அவர் மனைவி ஸ்வேதாவும் இங்க எத்தனை வருஷமா இருக்காங்க?'.
'சார் கல்யாணமான புதுசுலேர்ந்தே இங்கதான் சார் இருக்காங்க'.
'ம்ம்.. அவுங்களுக்குள்ள உறவு எப்படி? அடிக்கடி சண்ட போட்டுப்பாங்களா?'.
'சண்டை... , அது யார் வீட்ல தான் சார் இல்ல? அவுங்களுக்குள்ள அப்பப்ப வாக்குவாதம் வரும் சார். அப்புறம் சேர்ந்துக்குவாங்க சார். பெரிசா வேற எந்த பிரச்சனையும் வந்ததில்லை சார்'.
'ராகவன் வீட்டுக்கு வேற யாராவது வந்துட்டு போவாங்களா?'.
'அதிகமா யாரும் வரமாட்டாங்க சார். வந்தா, அவுங்கள பெத்தவங்க, தம்பி, தங்கச்சி இப்படித்தான் சார் வருவாங்க'.
'ஹ்ம்ம் சரி ..சம்பந்தம், மேல இருக்குற ராகவன் வீடும் உங்களுடைய வீடும் ஓரே மாதிரி தானே?'.
'ஆமா, சார்'.
'சரி, ராகவன் வீட்ல அவர் வைஃபோட பாடி கிடந்தத பாத்தீங்கல. சொல்லுங்க. இந்த பால்கனி ஜன்னல் எந்தப் பக்கம் வரும்?'.
'சார், இந்த பால்கனி, வீட்டுக்கு பின்னால சார். முதல்ல ஹால், பக்கவாட்டுல ஒரு ரூம், ஹால் கதவுக்கு நேரெதிரே பால்கனியும், பால்கனி ஜன்னலும் சார்'.
'ஓ.. சரி ஒரு ஏணியும், கண்ணாடியும் கொண்டுவாங்க. அப்படியே அந்த ஃபோட்டோக்ராஃபரையும் வரச்சொல்லுங்க' என்றுவிட்டு வேதம் அந்த பால்கனி ஜன்னலையே பார்த்துக்கொண்டிருந்தார். சம்பந்தம் ஏணி எடுக்க விரைய, கந்தசாமி வேதத்தை நெருங்கினார்.
'சார், இது கொலையா இருக்குமா சார்?'.
'ஹ்ம்ம்.. உங்களுக்கு என்ன தோணுது?'.
'வீடு உள்பக்கமா பூட்டியிருக்கு. கொலையா இருந்திருந்தா கொலைகாரன், கொலை பண்ணதுக்கப்புறம் வீட்டை விட்டு வெளியே போயிருக்கணுமே சார். எல்லா கதவையும் உள்பக்கமா பூட்டிட்டு ஒருத்தன் எப்படி சார் வெளில போயிருக்கமுடியும். சூசைடா இருக்கும்னு தோணுது சார்'.
வேதம் 'ஹ்ம்ம்ம்... ' எனவும், சம்பந்தமும் ஒரு டீனேஜ் பையனுமாக ஒரு ஏணியைக் கொண்டுவரவும் சரியாக இருந்தது. பின்னாடியே அந்த ஃபோட்டோக்ராஃபர் முத்து, தன் கையிலிருந்த காமிராவை நோண்டியபடியே வந்தார்.
'தம்பி யாரு?'.
'சார் என் பையன் தான் சார். ரஞ்சித். என்ஜினியரிங் படிக்கிறான் சார்' என்று சம்பந்தம் சொல்ல, பயமா அல்லது ஆச்சர்யமா என்று குழப்பும் வகைக்கு ஒரு முகபாவனையுடன் அந்தப்பையன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் ஸ்னேகமாய்ச் சிரிக்காதது அவருக்கு வித்தியாசமாகப் பட்டது.
'கந்தசாமி, ஏணிய அந்த பால்கனிக்கு புடிங்க. நான் முதல்ல ஏறிபோய் அந்த கண்ணாடிய உடைச்சி உள்ள போயிட்டு ஹால் கதவ திறக்கறேன். நீங்கள்லாம் முன்வாசல் வழியா வாங்க. முத்து, நீங்க மட்டும் என்ன ஃபாலோ பண்ணிக்கிட்டே கூட வாங்க ' என்றுவிட்டு கந்தசாமியும் அந்தப் பையனும் அந்த ஏணியை ராகவனின் வீட்டு பால்கனிக்கு சாய்த்துவிட்டு நிற்க வேதம் சம்பந்ததிடம் கண்ணாடியை வாங்கிக்கொண்டு ஏணியின் மீது ஏறத்துவங்கினார். பால்கனியை அடைந்து இடுப்பில் இணைந்திருந்த துப்பாக்கியை உருவி ஓங்கி அந்த ஜன்னலில் அடிக்க தெரிந்து உடைந்து நொருங்கி விழுந்து சிதறியது அந்தக் கண்ணாடி. உருவிய துப்பாக்கியை மீண்டும் உரையில் போட்டு மூடிவிட்டு இடதுகையில் சம்பந்தத்திடம் வாங்கிய கண்ணாடியை பிடித்தபடி அதில் தெரிந்த பால்கனிக் கதவின் உள்பக்கத்தை பார்த்தபடி இடுப்பிலிருந்த லட்டியால் பால்கனிக்கதவின் தாழ்ப்பாளை நெம்ப கதவு திறந்துகொண்டது. அவரைத் தொடர்ந்து முத்துவும் அதே பாணியில் மேலே ஏறினார்.
வேதம் பால்கனிக்கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார். அந்தப் பெண் ஸ்வேதா, ஹாலில் குறுக்காக வயிற்றில் கத்தி பாய்ந்தவாக்கில் மல்லாந்து கிடந்திருந்தாள். அந்த உடலை நெருங்க நெருங்க லேசாக ரத்த வாடை அடிப்பதை அவரால் உணர முடிந்தது. ஹாலில் இருந்த அத்தனை ஜன்னல்களும் நிதானமாய் ஆர அமர உள்பக்கமாய் மூடப்பட்டதாகத் தோற்றமளித்தது. ஒரு மனிதன் தற்கொலை செய்யும் நோக்கத்துடன், மிக மிக நிதானமாக ஒரு வீட்டை தயார் செய்தால் இப்படித்தான் இருக்குமென்று தெளிவாகத் தெரியும்படி இருந்தது. ஃபோடோக்ராஃபர் முத்து வீட்டின் ஒவ்வொரு இன்ச்சையும் புகைப்படமெடுத்தார்.
வேதம் வாசற்கதவை நெருங்கினார். கதவு தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. சாதாரணமான தாழ்ப்பாள். குறுகலான இரும்பு உருளையில் இரும்பாலான முனையில் வளைந்த தாழ்ப்பாள். பக்கத்திலேயே இக்காலக்கதவுகளில் போடப்படும் நவீன ஈரோப்பா வகை லாக். ஆனால், அது பயன்படுத்தப்படவில்லை. அந்த ஃபோட்டோக்ராஃபர் அந்தக் கதவையும், அதனை ஒட்டிய சுவர், டிவி, சோபா, டீபாய் முதலானவற்றை ஃபோட்டோ எடுத்துக்கொள்ளும்வரை நிதானித்துவிட்டு வேதம் அந்தத் தாழ்பாளை இடது புறம் இழுத்து, கைப்பிடியைப் பற்றி இழுத்தார். திறந்துகொண்டது.
கந்தசாமி, சம்பந்தம் மற்றும் ராகவன் கதவருகே நின்று எட்டிப்பார்க்க, ராகவன் இப்போது ஸ்வேதாவின் உடலைப் பார்த்துவிட்டு மீண்டும் அழத்துவங்க, சம்பந்தம் ஆறுதலாய் ராகவனை அணைத்துக்கொண்டு தள்ளிப்போனார்.அவ்வப்போது சில பேர் வந்து எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார்கள். கந்தசாமி இப்போது ஹாலிற்குள் சில கைரேகை நிபுணர்களுடன் நுழைந்தார். ஃபோடோக்ராபரை அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையையும் படம் பிடிக்க பணித்துக்கொண்டிருந்தார். கைரேகை நிபுணர்கள் ஹாலின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் கைரேகைகளை பதிவு செய்துகொண்டிருந்தார்கள்.
எல்லாமே தெளிவாகவே இருந்தது. ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. அந்தப் பெண்ணுக்கு முன் வாழ்க்கையில் காதல்கள் இல்லையென ராகவன் சொல்கிறான். கல்யாணத்திற்குப் பிறகு இவர்களுக்குள் வாக்குவாதங்களோ, மனஸ்தாபங்களோ பெரிய அளவில் இருக்கவில்லை. ஆனால் அவள் இறந்திருக்கிறாள். அதுவும் கத்தியால் குத்தப்பட்டு. அவளே குத்திக்கொண்டாளா? அனைத்துக் கதவுகளும், ஜன்னல்களும் உட்புறமாக தாழிடப்பட்டிருக்கிறது. நிச்சயமாக வேறொருவன் உள்ளே வந்து கொலை செய்திருக்க முடியாது. செய்திருந்தால் உட்புறமாக எப்படி தாழிட்டிருக்கமுடியும்? அப்படியானால், ஒரு திருமணமான இளம்பெண் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன? உயிரிழப்புக்கான மோட்டிவ் என்னாவாக இருக்கும்? இந்தக் கேஸை எப்படி முடிப்பது அல்லது முடிந்திருக்கும்? வேதத்துக்கு யோஜனையாகவே இருந்தது.
கைரேகை நிபுணர்கள் ஹாலில் ஒரு இன்ச் விடாமல் எல்லா இடங்களிலிருந்து கைரேகைகளை சேகரித்துவிட்டு உள் ரூம்களுக்குள் நுழைய, வேதம் தன் கைகளில் க்ளவுஸ் மாட்டிக்கொண்டார். சோபாவில் தொடங்கி, அலமாறி, சோபாவுக்குக் கீழே, டீபாய், டெலிஃபோன், புத்தக அலமாறி, டிவி, பவர் ஹவுஸ் என ஒன்றுவிடாமல் அவரின் கவனத்தில் பதிந்துகொண்டிருந்தன. டீவியின் மேல் சில ஃபாஷன் புத்தகங்கள் இருந்தது வித்தியாசமாக இருந்தது. முகப்பு அட்டைக்கு அடுத்த அட்டையில் ரஞ்சித் என்று எழுதியிருந்தது. ரஞ்சித், இது அந்த சம்பத்தின் மகன் பெயர் என்பது நினைவுக்கு வந்தது. அந்தப் புத்தகத்தை எடுத்து மடித்து கையில் வைத்துக்கொண்டு தொடர்ந்தார்.
கதவு சீராக இருந்தது. அழகாகவும் கூட. எந்தவிதக் கீரலும் எங்கும் இல்லை. வேதம் அங்குளம் அங்குளமாக கீழிறுந்து மேலாக பார்த்துக்கொண்டே வந்தார். தேக்கு மரத்தினாலான கதவு. கதவின் சட்டத்தை தொட்டபடியான மேலிருந்து கீழாக நடுப்பகுதியில் ஈரோப்பா லாக்கர் போட்டிருந்தது. ஆனால் அது பயன்படுத்தப்படவில்லை என்பதை முதலிலேயே கவனித்தாகிவிட்டது. அதற்கு மேல் ஒரு சிறிய தாழ்ப்பாள் இருந்தது. அது அவரது கவனத்தை ஈர்த்தது. சாதாரண நடுத்தர வர்க்கத்து வீடுகளில் இந்தத் தாழ்ப்பாள் அனேகம். சட்டத்திலும், கதவிலுமாக உருளை வடிவிலான இரும்பாலான தாழ்ப்பாள். அதனுள் இரும்பாலான முனையில் வளைந்த உருண்ட ராட் ஒன்றைச் செருகினால் அந்த பக்கமிருந்து தள்ளித் திறக்க முடியாது. கதவை திறந்தமேனிக்கு வைத்துவிட்டு அந்தத் தாழ்ப்பாளைக் கூர்ந்து கவனித்ததில் அந்த இரும்பாலான ராடில் சட்டத்தை நோக்கிய முனையில் குறுக்கால் கோடு கிழித்தது போலிருந்தது அவருக்கு வித்தியாசமாய் இருந்தது.
ஒரு கணம் அவர் சிந்தனையில் ஆழ்ந்தார். கதவு உள்பக்கமாய்ப் பூட்டியிருந்ததே அது தற்கொலை என்ற யூகத்துக்கு காரணமாகியிருக்கிறது. இந்தத் தாழ்ப்பாளில் ஒரு தவறான கணிப்பு இருந்திருந்தால், அது கொலையாகவும் இருக்கலாம். வேதம் உடனடியாக கந்தசாமியை பணித்து ஒரு கார்ப்பென்டரை வரவழைக்கச் சொல்ல, கந்தசாமி சம்பந்தத்தைப் பணிக்க, இருபது நிமிட காத்திருப்பிற்கு பிறகு ஒரு கார்பென்டரை அழைத்து வந்தார் சம்பந்தம்.
'சார், இவன் கதிரு சார். இந்த ஏரியால எல்லா கார்பென்டிங் வேலையும் இவந்தான் சார் பண்றான்' என்றுவிட்டு சம்பந்தம் பின்னால் நின்று கொண்டார். கதிர், இளந்தாரியாக இருந்தான். கருப்பான, ஒல்லியான தேகம். உயரம் ஐந்தடிதான். வெடவெடவென இருந்தான்.அவன் போட்டிருந்த பாண்டும் சட்டையும் ஒரே அளவில் கசங்கியிருந்தது. கையில் ஒரு ப்ளாஸ்டிக் கூடை வைத்திருந்தான். அதில் ஸ்க்ரூ டிரைவர், ஆணிகள், ஸ்பானர்கள் இன்னும் என்னென்னவெல்லாமோ இருந்தன.
'தம்பி, இங்க வாப்பா, இந்த தாப்பாளை கழட்டி எடு. கவனமா எடு. ஸ்க்ரூ தவிர வேற எங்கயும் ஒரு கீரல் கூட இருக்கக்கூடாது' வார்த்தைகளில் சற்று கடினம் கூட்டிச் சொன்னார் வேதம். கதிர் பயபக்தியாய் தலையசைத்துவிட்டு பையிலிருந்து லாவகமாக ஒரு ஸ்க்ரூ டிரைவரை உருவி, பையை காலடியில் வைத்துவிட்டு, அந்தத் தாழ்ப்பாளை கழட்டலானான். கைதேர்ந்தவன் போல. பத்தே நொடிகளில் கழட்டிக் கையில் கொடுத்துவிட்டான்.
வேதம், கையில் வாங்கிக் கூர்ந்து பார்த்தார். அந்த உருளைவடிவ தடிமனான முனையில் வளைந்த கம்பியின் இன்னொரு முனையில் அரை அங்குளம் முன்பாக அது குறுக்காக வெட்டப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. வெட்டியபிறகு ஆனாபாண்ட் எனப்படும் இரும்புகளை ஒட்டும் கோந்து போட்டு ஒட்டியது போலிருந்தது. கோந்து சிந்தவுமில்லை. பிதுங்கியும் இருக்கவில்லை. ஒரே ஒரு துளி கோந்து, அளவாக, ஆனால் மிகமிகக் கவனமாக தடவப்பட்டது போலிருந்தது. சுவற்றின் மீது வைத்து இடதுகையால் இறுக்கமாய்ப் பற்றிக்கொண்டு, முத்துவிடம் ஸ்க்ரூ டிரைவர் வாங்கி, அதை அந்த அரை அங்குளப்பகுதியின் மேல் பலமாய்த் தட்ட, தெரித்துக் கீழே விழுந்தது.
வேதம் அவதானித்துக்கொண்டிருக்கையிலேயே செல்ஃபோன் சிணுங்கும் ஒலி கேட்டது. அந்த சப்தம் அவரின் சிந்தையைக் கலைத்தது. இந்தமுறையும் அதே கந்தசாமியினுடையதே தான்.
'ஹலோ... ஆங்.. ம்ம்.. நல்ல வேணும். அவன யாரு அங்கெல்லாம் போகச் சொன்னா?.. ரூம்ல மேல் ஷெல்ஃப்ல வச்சிறுக்கேன் பாரு. ம்ம். தொந்தரவு பண்ணாதம்மா. வேலையா இருக்கேன்.ம்ம். வை' என்றுவிட்டு அனைக்கவும், தொடர்ச்சியாக கந்தசாமிக்கு ஃபோன் வருவதும், அவர் எரிச்சலாகி பதிலளிப்பதும், தன் விசாரணையை தொந்தரவு செய்வதும் வேதத்திற்கு எரிச்சலைத் தந்திருக்கவேண்டும்.
'என்ன கந்தசாமி, என்ன ப்ராப்ளம்'.
'ஒண்ணுமில்ல சார். என் பையன் தான். பக்கத்துல இருக்குற தியேட்டர்ல படம் பாத்திருக்கான். அவன் உக்காந்திருந்த சீட்ல மூட்டைப்பூச்சி கடிச்சிடிச்சாம். ஆயின்மென்ட் எங்க இருக்குன்னு கேக்குறா என் வைஃப்'.
'எங்க? காசி தியேட்டர்லயா? அங்க என் ஃபேமிலிக்கு கூட ட்ரை பண்ணினேனே. டிக்கட் கிடைக்கலயே. உங்க பையனுக்கு எப்படி கிடைச்சிதாம்?'.
'சார், அந்த தியேட்டர் மானேஜர் என் பையனுக்கு தெரிஞ்சவர் சார். அதனால, இவன் டிக்கட்டே இல்லாம பாத்திருக்கான். யாரோ படம் பாக்க வேண்டியவர் வரல போல. அந்த சீட்ல உக்காந்து பாத்திருக்கான் சார்'.
வேதத்துக்கு சட்டென பொறி தட்டியது.
'அப்படியா? ஹ்ம்ம்.. உங்க பையன் எந்த சீட்ல உக்காந்து பாத்தாராம்?'.
'இ14 சார்'.
'கந்தசாமி, கொஞ்சம் என் கூட வாங்க' என்றுவிட்டு வேதம் கந்தசாமியின் தோள்மீது கைப்போட்டவாறே ராகவனின் ஃப்ளாட்டை விட்டு வெளியேறி எதிர் ஃப்ளாட்டில் நுழைந்தனர். அங்கே ஒரு சோபாவில் அருகருகே அமர்ந்திருந்த ராகவனும், அவனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த அந்த எதிர்வீட்டுக்காரரும் வேதத்தையும் கந்தசாமியையும் பார்த்துவிட்டு எழுந்துகொண்டனர். வேதம் நேராக ராகவனின் முன் சென்று நின்றுகொண்டார்.
'ராகவன், நீங்க ஏன் உங்க மனைவியை கொன்னீங்கன்னு கொஞ்சம் சொல்லமுடியுமா?'.
'என்ன!! நான் கொன்னேனா? என்ன சார் உளருறீங்க. நான் ஏன் என் அன்பு மனைவியக் கொல்லனும். கதவு உள்பக்கமா தாழ்ப்பாள் போட்டிருக்கு. நான் எப்படி கொன்னிருக்க முடியும்? அவ தற்கொலை பண்ணிக்கிட்டா சார்'.
'கரெக்ட். அவ தற்கொலை பண்ணிக்கிட்டதா தான் நீங்க சீன் க்ரியேட் பண்ணியிருக்கீங்க. ஆனா, ஏன் அவுங்கள கொன்னீங்க?'.
'சார், திரும்ப திரும்ப ஆதாரம் இல்லாம அதையே சொல்லாதீங்க சார். எப்படி சார்? எப்படி நான் தான் கொன்னேன்னு அவ்ளோ ஆணித்தரமா சொல்றீங்க?'.
'எப்படியா? சொல்றேன் கேளுங்க. ஆறு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பியிருக்கீங்க. காசி தியேட்டர். உங்க சீட் இ14. 7 மணிக்கு ஷோ ஓட ஆரம்பிச்சதும் வீட்டுக்கு வந்திருக்கீங்க. சத்தமில்லாம உங்க ஃப்ளாட்டுக்கு போயிருக்கீங்க. அங்க உங்க மனைவிய கத்தியால குத்தி கொன்னிருக்கீங்க. தாழ்ப்பாள அரை அங்குளம் அறுத்து, அந்த அரை அங்குளத்துல ஆனாபாண்ட் ஒரு துளி, ஒரே ஒரு துளி போட்டு வச்சிட்டு, வெளிய வந்து திரும்ப கதவ சாத்தியிருக்கீங்க. ஆனாபாண்ட் போட்டிருந்ததுனால அது திடமா ஒட்டியிருக்கு. இது எல்லாத்துக்கும் இரண்டு மணி நேரம் ஆயிருக்கு. உங்க அதிர்ஷ்டம் அன்னிக்கு யாரும் உங்கள பாக்கல. திரும்பி தியேட்டருக்கு போயிருக்கீங்க. அங்க படம் ஏற்கனவே முடிஞ்சிறுக்கு. படம் முடிஞ்சி திரும்ப வராமாதிரி வீட்டுக்கு வந்துட்டு எனக்கு ஃபோன் பண்ணியிருக்கீங்க. இதான் நடந்தது. இப்போ சொல்லுங்க. ஏன் உங்க மனைவிய கொலை பண்ணினீங்க?'.
கேட்டுக்கொண்டிருந்த ராகவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத்துவங்கியிருந்தது. எதிர்வீட்டுக்காரர் அதிர்ச்சியாய் ராகவனையும் வேதத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார். இந்நேரத்திற்கு வேதத்துக்கு பின்பக்கமாய் வந்து ஒண்டிவிட்டிருந்த சம்பந்தம் நடந்ததையெல்லாம் பார்த்துவிட்டு வெலவெலத்துப் போய்விட்டிருந்தார். ஆனால் ராகவன் முகத்தில் ஆட்டைத் திருட வந்து அகப்பட்டுக்கொண்ட நரியின் முகபாவனை. கரிசனமும், அனுதாபத்தையும் எதிர்னோக்கும் முகத்தை எதிர்பார்த்தவர்களுக்கு அவன் முகம் அகோரமாயிருந்தது. வேதத்தின் முகத்தில் தெளிவு பிரகாசமாயிருந்தது. அவரின் அனுபவம் தந்த அறிவு அவரை நிதானத்தில் ஆழ்த்தியிருந்தது. அவருக்குத் தெரியும். இன்னும் சற்று நேரத்தில் ராகவன் வெடித்தழுவான் அல்லது குமுறித்தீர்ப்பான், இரண்டில் ஏதோ ஒன்று நிச்சயம் நடக்குமென்று.
வேதம் ராகவனை நெருங்கினார். அவனின் கைபிடித்து ஒரு தகப்பனைப் போல் பரிவு காட்டி அவனை அங்கிருந்த சோபாவில் அமர் வைத்தார். எதிர்வீட்டுக்காரன் வழிவிட்டு இரண்டடி தள்ளிப்போனார். நிதானம் மிக்க தாய் அடிபட்டுக்கொண்ட குட்டியை தடவித்தருவது போல் வேதம் ராகவனை வருடித்தர, நெடு நேர அமைதிக்குப்பின் மெல்ல வாய்திறந்தான் ராகவன்.
'ஆமா சார். நாந்தான் கொன்னேன் அவள. பாதகத்தி சார் அவ. பசப்பி. என் வாழ்க்கையை, எதிர்பார்ப்ப, ஆசையை எல்லாத்தையும் குழி தோண்டிப் பொதைச்சிட்டா சார் அவ. இருபத்தையஞ்சு வயசு வரைக்கும் ஆம்பளைக்கு சொந்தக் கால்ல நிக்கறதுதான் சார் குறிக்கோள். மத்தவனுக்கு எப்படியோ சார். ஆனா நான் அப்படிதான் இருந்தேன் சார். விடிகாலைல எழுந்து படிப்பு, டேர்ம் எக்ஸாம், மாத்ஸ், கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், பயாலஜி, ட்யூஷன் க்ளாஸ், ஒரு வாரத்துல ஒரு நாளைக்கு 4 பேப்பர்னு 28 எக்ஸாம், எல்லாத்துக்கும் ப்ரிபாரேஷன், மார்க்ஸ், 10த் 12த், மெரிட் ஸ்காலர்ஷிப், அப்புறம் காலேஜ், செமஸ்டர் எக்ஸாம், லேப், பர்சென்டேஜ், காம்பஸ், வேலை அது இதுன்னு திரும்பிக்கூட பாக்கமுடியாம ஒரு வாழ்க்கை. எல்லாம் எதுக்கு சார். எனக்குன்னு ஒரு நல்ல எதிர்காலம், குடும்பம், மனைவி, குழந்தைங்கன்னு சந்தோஷமான வாழ்க்கைக்குதானே சார். ஆம்பளைக்கு நூறு பொண்ணுகிட்ட பேசினாலும் எவளும் கிடைக்காம போகலாம். பொட்டச்சி லேசா கண்ணசைச்சா போதும் சார். நூறு பேர் வருவாங்க சார். அழக ஆண்டவன் பொம்பளைக்கு தான் வச்சிருக்கான். உத்தியோகம் புருஷலட்சனம். அவ அழகு சார். அழகான பொண்ண எல்லாரும் விரும்புவாங்கதான் சார். அவளையும் ஒருத்தன் விரும்பியிருக்கலாம். விரும்பியிருக்கான் சார். இது நடக்கறது தானே. என்கிட்ட சொல்லியிருக்கலாம் சார். என்கிட்ட முன்னமே சொல்லியிருந்தா, மன்னிப்போம் மறப்போம்ன்னு விட்டிருப்பேன் சார். அவளே திகட்ட திகட்ட அவளை லவ் பண்ணியிருப்பேன் சார். ஃபர்ஸ்ட் நைட்லயே கேட்டேன் சார். இல்லன்னு சொன்னா சார். பொய் சார். பசப்பி. பொய் சொல்லிருக்கா சார். அவனோட ஊர சுத்தியிருக்கா. தியேட்டர்ல..... சொல்ல வாய் கூசுது சார். எல்லாத்தையும் பண்ணிட்டு நானா அவளோட பழைய வாழ்க்கைய அந்தப் பையன் மூலமா தெரிஞ்சதுக்கப்புறம், அவன் வேற ஜாதி அதனால் கல்யாணம் பண்ணிக்க முடியலன்னு சொல்றா சார். சேர்ந்து சுத்தும்போது தெரியாதா சார் வேற ஜாதின்னு. அதெல்லாம் இல்ல சார். கொழுப்பெடுத்த கழுத. என்ன ஏமாத்த நினைச்சால்ல.அதான் சார் கொன்னேன். ஆத்திரம் தீருர வரை கொன்னேன் சார். திருப்தியா இருக்கு சார். நல்லவேளை எனக்கு குழந்தைன்னு ஒண்ணும் இல்ல. எப்படியெப்படியோ இருக்கணும்னு நினைச்சேன் சார்.....
தரையையே வெறித்துப்பார்த்துக்கொண்டே உறுமியபடி அமர்ந்திருந்தான் ராகவன். அங்கு மயான அமைதி நிலவியது. வேதம் நீண்டதொரு பெருமூச்சி விட்டார். எதிர்வீட்டுக்காரர் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தார். வாசலில் நின்றிருந்த சம்பந்தம் கண்களில் பரிதாபம் தெரிந்தது. வேதம் கந்தசாமியிடம் திரும்பி, கண்ணசைக்க, கந்தசாமி பாண்ட் பாக்கேட்டில் கைவிட்டு கைவிலங்கை எடுத்துக்கொண்டு, முன்னே நடந்து லேசாக குனிந்துவிட்டு ராகவனைப் பார்க்க, ராகவன் கந்தசாமியை பார்த்துவிட்டு கைகளை முன்னே நீட்டினான். அவன் கண்கள் பனித்திருந்ததை பார்க்க இயலாமல் குனிந்துகொண்டார் கந்தசாமி.
முற்றும்.
- ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)
#நன்றி
உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4542)
Subscribe to:
Posts (Atom)