Monday, 2 August 2010
பி.எம்.டபிள்யு என்ஜின் - சிறுகதை
பி.எம்.டபிள்யு என்ஜின் - சிறுகதை
'சரக்கு வந்தாச்சு. இந்த தடவ பி.எம்.டபிள்யு என்ஜின். பங்களூரின் ஹொசூர் வழியாக சென்னைக்கு போகனும். ரொம்ப கெடுபுடி இருக்கும். ஆனா போயே ஆகணும். கை நீட்டி காசு வாங்கி குடி, குட்டின்னு ஏப்பம் விட்டாச்சு. இத பண்ணலனா நாளைக்குத் தொழில் பண்ணமுடியாது. அதனால இத பண்ணியே ஆகனும் பழனி'.
பெரியவர் சொல்லிவிட்டு பேச்சை நிறுத்தினார். அவர் பார்வை தரையை வெறித்திருந்தது. எதிரில் உட்கார்ந்திருந்த பாஸ்கர், பழனி இருவரையும் அவர் பார்க்கவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் வெறித்தபடி அமர்ந்திருந்தனர். பெரியவரை அன்றி மற்ற இருவர் கையிலும் எரிந்துகொண்டிருந்தன சிகரெட் துண்டுகள்.
வெகு நேர மெளனத்தை சட்டென கலைத்தான் பழனி.
'இந்த தடவ சரக்க நான் கைமாத்துரேன்'.
வெறித்துக்கொண்டிருந்த இடத்தையே பார்த்தபடியிருந்த அவன் முகத்தில் இப்போது லேசான புன்னகை இருந்தது.
பெரியவரும், பாஸ்கரும் ஒரே நேரத்தில் பழனியை திரும்பிப் பார்த்தனர். பெரியவர் தொடர்ந்தார்.
'எப்டி? ரொம்ப ரிஸ்கான வேலை. போலீஸ்க்கு நியூஸ் போயாச்சு. சல்லடை போட்டு தேடுவானுங்க. மாட்னோம் சங்குதான்'.
'மாட்ட மாட்டோம்னா. நான் பண்றேன்' திடமாய் பதிலளித்தான் பழனி.
'பண்றேன் பண்றேன்ங்கிறியே எப்டி பண்வ. உன்னால முடியுமா?'.
'முடியும்னா. ஆனா தனியா பண்ணமுடியாதுனா. ரெண்டு ஆளுங்க வேணும்'. மீண்டும் சொல்லிவிட்டு நிறுத்தினான் பழனி.
'சரி. ப்ளான் என்ன?'.
'ப்ளான் இருக்கட்டும்னா. யாரு அந்த ரெண்டு ஆளுங்க?' பழனி கொக்கிபோட்டான்.
'வேற யாரு, நானும், பாஸ்கரும்தான். இதுக்காக இன்னொருத்தனையா பங்குக்கு கூப்ட முடியும். ஏற்கனவே துட்டு சாப்ட்டாச்சு. நாங்க பாத்துக்குறோம். மேல சொல்லு. அப்பால?'.
'உன் இன்டிகா கார் சாவி குடுனா. அப்டியே அந்த பி.எம்னு ஏதோ சொன்னியே அந்த என்ஜினையும் எடுத்தா. ரெண்டுத்தையும் நான் இப்போ கெளப்பிக்கினு போறேன். நீ நாளைக்கு வாணியம்பாடி போலீஸ் ஸ்டேஷன்ல வண்டியக் காணோம்னு ஒரு கம்ப்ளைண்ட் குடுத்துடுனா. மத்தத நான் பாத்துக்குறேன். நாளைக்கு ஒரு நாளைக்கு நீ எங்களுக்கு மாமா மாதிரி நடிச்சா போதும்.' பழனி ஒரே மூச்சில் சொல்லிவிட்டு எழுந்தான்.
'என்ன!! கம்ப்ளைன்ட் குடுக்குறதா!!. போலீஸ்கிட்டயா!! நாளைக்கா!!.. நாளைக்குதான் செக்கிங் பீக்ல இருக்கும். ஒனக்கு கிறுக்கு புடிச்...' பெரியவர் கார் சாவியை எடுத்து நீட்டியபடியே இழுக்க, அவசரமாய் இடைமறித்தான் பழனி.'
'என்ஜினை சென்னைக்கு கொண்டுவரது என் மேட்டருனா. நா மட்டுந்தான் வேலை பண்றேன்னு சொல்லிடுனா. எதனா ஆச்சுனா என் பொறுப்புனா. என்ஜின் எடுத்தானா'.
'ஹ்ம்ம்ச்ச்' ஒரு சலித்த உதட்டுச் சுளிப்புடன் ஒரு நொடி யோசித்த பெரியவர் தொடர்ந்தார்.
'டேய் பாஸ்கர், அத்த எடுத்தாந்து இன்டிகா பின் சீட்ல வச்சிட்றா. பாரு பழனி, உன் பொறுப்பு. நீ மட்டும்தான் பண்றனு ராவுத்தர்ட்ட சொல்லப்போறேன். சரக்கு போலனா நீ திருடிட்டதாதான் ராவுத்தர் நினைப்பான். நீ எந்த ஜில்லால இருந்தாலும் கத்தி உன்ன தேடிவரும். சொல்லிட்டேன் சொல்லிட்டேன்'.
கேட்டுக்கொண்டிருந்த பழனியின் முகம் சாந்தமாய் எல்லாம் தெரியும் என்பது போல் இருந்தது.
*******************************************
ஆம்பூரில் நேதாஜி ரோட் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் சன்னல் கதவு மறைவில் இறங்கி நின்றுகொண்டு பாக்கேட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி பற்ற வைத்து இரண்டு இழுப்பு இழுத்துவிட்டார் ஏட்டு மாணிக்கம். அவரின் பார்வை சற்று தள்ளி நிறுத்தியிருந்த ஒரு டாடா இன்டிகா காரில் நிலைத்தது.
'யோவ் வேலு, என்னய்யா புது வண்டியா இருக்கு. என்ன கேஸ் இது' எரிச்சல் கலந்த வெறுப்பு கலந்திருந்தது அவரின் குரலில்.
'ஆங், அதுவா, நேத்து சாயந்திரம் அந்த வாணியம்பாடி ஏரியா பெரியவரு கம்ப்ளய்ன்ட் குடுத்தார்ல, அவரோட கார காணோம்னு. அதான் இது. ரெண்டு பசங்க தள்ளிகிட்டு வந்திருக்கானுங்க. கார்ல ஏதோ கோளாறு. பாதில நின்னுடுச்சு. திருட்டு வண்டினு தெரிஞ்சதுக்கப்புறம் நம்ம ஏரியாவா இருந்தா என்ன, அடுத்த ஏரியாவா இருந்தா என்ன?. அதான் டோப் பண்ணி புடிச்சிட்டு வந்துட்டேன் சார்'.
வேலு இப்படி சொல்லிக்கொண்டிருக்கும்போதே வாசலில் அவசரமாய் ஒரு சுமோ வந்து நின்றது. வாடகை வண்டி போலிருந்தது அது. அதிலிருந்து இறங்கிய அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் விறுவிறுவென ஸ்டேஷனுக்குள் வந்துகொண்டிருந்தார்.
சற்று தொலைவில், என்.ஹெச்.46 ல், ஏனைய போலீஸ்காரர்கள் ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி செக் செய்து கொண்டிருக்க, முன் தினம் இன்டிகாவை டோப் செய்து வந்த வண்டி இப்போது ஒரு அரைவட்டம் அடித்துத் திரும்பி, ஒற்றையடிப்பாதையையும் விட அகலத்தில் சற்றே பெரியதான, ஆனால், தார் ரோடு அல்லாத ஒரு பாதை வழியே இறங்கி வேறொரு காரை டோப் செய்யச் சென்றது. போலீஸ் செக்கிங் இல்லாத, இன்டிகாவை இழுத்து வந்த பாதை வழியே விரைவதைப் மாணிக்கம் பார்த்துக்கொண்டிருக்க, பெரியவரைப் பார்த்ததும் முகம் மலர்ந்தார் வேலு.
'சார் சார் வாங்க வாங்க இப்போதான் உங்களப்பத்தி பேசிக்கிட்டிருந்தேன். உங்க கார் இதானா பாருங்க'.
வந்தவர் இன்டிகா காரை அருகில் சென்று ஏற இறங்க சுற்றிலும் பார்த்துவிட்டு கத்தினார் 'அடப்பாவிங்களா, பொண்ணு மாதிரி வச்சிருந்தேன் சார். கோடு போட்ருக்கானுங்க சார். என்னோடதுதான் சார். எங்க சார் கிடச்சிது. எவன் சார் அந்த நாதாரி?'. பெரியவர் அவார்டு ஃபிளிமை மிஞ்சிக்கொண்டு நடித்தார்.
'பொறுங்க பொறுங்க கோவப்படாதீங்க. உங்களோடதுதானே. அப்றம் என்ன. வாங்க. இங்க ஒரு கையெழுத்து போடணும் நீங்க. இப்படி வாங்க' என்றபடியே அவரை உள்ளே அழைத்துப்போனார் வேலு.
'எங்க வேணா போடறேன் சார். யார் சார் அவனுங்க. இவனுங்கள எல்லாம் தூக்குல போடணும் சார். தூக்குறதுக்கு என் கார் தான் கிடைச்சிதா. இந்த கார வாங்க எவ்ளோ கஷ்டப்பட்ருப்பேன். ரெண்டு நாளைக்கு என் கார எனக்கே இல்லனு ஆக்கிட்டானுங்களே சார். யார் சார் அவனுங்க' அவர் ஸ்டேஷனுக்குள் நுழைந்தபடியே ஆக்ரோஷமாய் உறுமிக்கொண்டிருந்தார். கொஞ்சம் விட்டாலும் யாரென்று பார்த்துக் கடித்து குதறிவிடுவார் போலிருந்தது வேலுவிற்கு.
'தோ இவிங்க தான் சார் அவிங்க'
வேலு காட்டிய திசையில் பார்த்தவருக்கு அதிர்ச்சி.
'டேய் பாஸ்கர், பழனி, என்னடா பண்றீங்க இங்க' பெரியவர் கத்தியே விட்டார்.
'ஆங் மாமா...அது வந்து... ம்ம்ம்ம்ம்' அவர்கள் இருவரும் மென்று முழுங்கினார்கள்.
இப்போது வேலு அதிர்ச்சியாய் பார்த்துக்கொண்டிருக்க வந்தவருடன் பாஸ்கரும், பழனியும் கட்டிக்கொண்டு புலம்பிக்கொண்டிருந்தனர். என்ன நடக்கிறதென்று பார்த்தபடி வேலு அமைதியாய் நின்றிருந்தார். அவருக்கு ஓரளவு புரிந்து விட்டது. மாமனின் வண்டியை, சொல்லாமல் கொள்ளாமல் எடுத்து வந்தவர்களை மடக்கி ஸ்டேஷனில் வைத்திருந்திருக்கிறோமென்று.
தவறு நம்முடையது அல்ல. வந்தவர் நேற்று வாணியம்பாடி போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெயின்ட் கொடுத்திருந்தார். வாக்கிடாக்கியில் மெஸேஜ் வந்தது. அதே வண்டி. அதே நம்பர். பார்த்ததும் மடக்கியாகிவிட்டது. இதென்ன ஜோஸியமா, யாருக்கு யார் உறவு என்று பார்த்ததும் கண்டுபிடிக்க. இதற்காக எத்தனை மெனக்கெட வேண்டியிருந்தது. வண்டியை பார்த்தது என். எச் 7 ஹொசூர் கர்னாடகா எல்லைக்குள். பக்கத்து போலீஸ் ஸ்டேஷனுக்குள் போயிருந்தாலோ அல்லது தேசிய நெடுஞ்சாலை வழியே டோப் செய்திருந்தாலோ செக்கிங்கில் மாட்டி, அவர்களின் கேஸாக்கியிருப்பார்கள். அவர்கள் கேஸாகிவிட்டால் தன் பெயர் வராது. வராவிட்டால் எப்படி இந்த வருடம் ப்ரமோஷன் வாங்குவது. தன் கேஸாக இருக்கவேண்டும் என்றுதான், தேசிய நெடுஞ்சாலை வழியே வராமல் ஒதுங்கி வந்தது. போகிற போக்கைப் பார்த்தால் இந்த கேஸு புஸ்ஸாகிவிடும் போல என்று எண்ணியபடியே பார்த்துக்கொண்டிருந்தார் வேலு. சற்றைக்கெல்லாம் அவர்களுக்குள் ஏதேதோ கிசுகிசுத்துக்கொண்டுவிட்டு பெரியவர் அவர்களை சாந்தப்படுத்திவிட்டு வேலுவிடம் திரும்பினார்.
'சார், நம்ம பயக தான். சொல்லாம கொண்டுவந்துட்டானுங்க சார். இவனுங்க எப்பவுமே இப்படிதான் சார். பெரிய தலைவலி சார். ரெண்டு சாத்து சாத்தினாதான் சரிவரும். பாவம் உங்களுக்கு தான் சிரமம் கொடுத்திட்டோம். அவுங்க சார்புல நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் சார். வெரி சாரி சார். நான் குடுத்த கம்ப்ளெயின்ட வாபஸ் வாங்கிக்கிறேன் சார்' என்றார் பெரியவர்.
வேலுவிற்கு சப்பென்றது. இந்தக் காருக்கு ஊரெல்லாம் தேடி அலைந்து, ஹைவேஸில் நிறுத்தியிருந்த காரைப் பார்த்ததும் மடக்கி, முன் சீட், பின் சீட், டிக்கி என்று முழுக்க செக் செய்து ஓடாத காரை டோப் செய்து கொண்டுவந்து ஸ்டேஷனில் நிறுத்தினால், சர்வ சாதாரணமாக கம்ப்ளெயிண்ட் வாபஸ் வாங்குகிறேன் என்கிறான்கள். ம்ம்ம்ம் எல்லாம் தலையெழுத்து என்று சலித்துக்கொண்டபடியே கம்ப்ளெயின்ட் வாபஸ் பெறுவதாக எழுதி கையழுத்து வாங்கிக்கொண்டு நகர்ந்தார் வேலு.
அந்த பெரியவர் இருவரையும் ஸ்டேஷனிலேயே தலையிலும் புரடியிலும் அடித்து திட்டியபடி வாசலுக்கு விரட்டிக்கொண்டிருந்ததை எனக்கென்ன என்றபடியே ஒரு கணம் அலட்சியமாய் பார்த்துவிட்டுத் தன் வேலையில் மூழ்கிப்போனார். அவர்கள் தயாராய் கொண்டுவந்திருந்த சுமோவில் இன்டிகாவை சங்கிலியால் பிணைத்து , பாஸ்கரும் பெரியவரும் சுமோவில் ஏறிக்கொள்ள, பழனி இன்டிகாவில் உட்கார்ந்துகொண்டு ஓட்டிக்கொண்டு போக, இப்போது இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஸ்டேஷனுக்குள் நுழைந்திருந்தார்.
'இதோ பாருங்கய்யா, பி.எம்.டபிள்யூங்குறது ரொம்ப காஸ்ட்லி கார். விலை ஐம்பது லட்சம் இருக்கும். அதோட இஞ்சின் மட்டுமே சுமாரா முப்பது லட்சம் இருக்கும். அத எந்தக் களவானிப் பயலோ பங்களூர்லேர்ந்து லவட்டி வேலூர் வழியா சென்னைக்கு கொண்டு போகப் பாக்கறான்னு நியூஸ் கிடைச்சிருக்கு. நம்ம கிரிமினல்ஸ் லிஸ்ட தரோவா செக் பண்ணியாச்சு. நம்ம மாரிய கூடக் கேட்டுட்டேன். அவன் லோக்கல் ஆளா இருக்கவே முடியாதுன்னு சத்தியம் பண்றான். வேற எவனோ தான் பண்றான்.அலர்ட்டா இருக்கணும். ஒரு வண்டி விடக்கூடாது. புரியிதா. தரோவா செக் பண்ணுங்க போங்க. போய் வேலையப் பாருங்க. வேலு, அந்த ஃபைல பாத்துட்டீங்கல. எதாச்சும் க்ளூ கிடைச்சிதா?'
இன்ஸ்பெக்டர் சுந்தரம் நட்ட நடு ஸ்டேஷனில் நின்று உருமத்துவங்கியிருந்தார்.
*******************************************
சுமோ வேகமெடுக்க, இன்டிகா பின் தொடர வண்டிகள் இரண்டும் ஆம்பூர் வாணியம்பாடி தாண்டி, வேலூரை நோக்கி வேகமெடுத்தது. வேலூருக்கு 3 கிலோமீட்டர் தொலைவில் இடதுபுறம் திரும்பி 1 கிலோமீட்டர் சென்று ஒதுக்குபுறமாய் ஒதுங்கியிருந்த ஒரு வீட்டின் முன் நின்றது சுமோ. நின்ற வண்டியிலிருந்து ஆர்வமாய் இறங்கிய பாஸ்கரும், பெரியவரும் சுமோவுடன் பிணைத்திருந்த இன்டிகாவை தனியே பிரித்துவிட்டனர்.
பெரியவர் அவசரமாக இறங்கி, இன்டிகா காரின் பின் சீட், டிக்கி கதவுகளை திறந்து பார்க்க, காலியாக இருந்தது.
'டேய் பழனி, என்ஜின் எங்க?'. பெரியவர் பரபரத்தார்.
பழனி, இன்டிகாவின் பானட்டை திறக்க, உள்ளே சற்றும் பொறுத்தமில்லாமல், இன்டிகா காரின் இதர உதிரிபாகங்களுடன் இன்டிகா என்ஜின் இருக்கவேண்டிய இடத்தில் பி.எம்.டபிள்யு என்ஜின் கண்சிமிட்டியது.
- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
#நன்றி
உயிர்மை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=3231)
திண்ணை இலக்கிய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=11008013&format=html)
Subscribe to:
Posts (Atom)