Monday, 27 July 2009
திறவாத கதவுகள் - சர்ரியலிஸ கவிதை
வார்த்தைகளைச் சரமாய்க்கோர்த்து
உன் பதில்களுக்கான
கேள்விகளாக்கி
அச்சிலேற்றுகிறேன் மின்னஞ்சலில்...
அவ்வார்த்தைகளின்
கொல்லைப்புரக்கதவு வழியே
ஒடுகிறாய்
தலைவாசல் கதவுகளைத்
தாழிட்டுவிட்டு...
திறக்க சாவியின்றி
தொடர்ந்து தட்டுகிறேன்
அக்கதவுகளை,
வெகுநேரமாய்...
திடீரென்று அவ்வழியேபோன
கருத்த மேகத்திலிருந்து
இறங்கி வருகிறாய்
ஏதும் நடவாததுபோல்...
திறவாத கதவுகளைப்பற்றி
ஏதும் கேளாமல்
மெளனமாய்த் தொடர்கிறேன்
உன்னை...
பின்னாளில் அதே கதவுகளுக்கு
சாவி நீயே தருவாய்
என்று...
- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.(ashwin_i1980@yahoo.co.in)
Saturday, 18 July 2009
விதவை மறுமணம் - விகடன்
விதவை மறுமணம்
http://youthful.vikatan.com/youth/ramprasath13072009.asp
வேலியில்லா பூவையும்,
துடுப்பில்லா மிதவையும்
போலத்தானிந்த
மாங்கல்யமில்லா விதவையும்.
இளம்பெண்ணென்றழைத்த
நாவாலினி கூசாமல்
கைம்பெண்ணென்றழைக்கும்
மூட சமூகமினி
முக்காடிட்டு முகத்தை மூடி
வெட்கமின்றி அவளை
இரவுக்குமழைக்கும்
ஓரக்கண்களால்...
அபசகுனமிவளென்று
ஒதுக்கிவைக்கும்,
அவ்வாறொதுக்குவதே தங்களுக்கும்
அபசகுனமென்றறியாமல்...
நிறங்களை நிராகரிக்கச்சொல்லி,
உப்பில்லா உணவுண்ணச்சொல்லி,
நான்கு சுவர்களுக்குள் அடைந்து
அறுசுவைகளையும் மறந்து
கைதியைப்போலொரு வாழ்க்கை
வாழ்ந்தால் மட்டுமே
உத்தமியென்போமென்கிறது உலகம்...
பட்டமுடித்தபின் பள்ளிப்பாடம்
என்பதுபோல,
மணமுடித்து மனவிளிம்புகளையும்
தாண்டித்தளும்பி நிரையும்
அன்பை உடலில் ஏந்தி
பரிமாரப் பழகியவளுக்கெதற்கு
இந்திரியங்களை அடக்கும்
பயிற்சி மீண்டும்...
வெம்மையின் வெக்கையுள்ளவரை
உடல் தடுமாறும்
உடலில் வேட்கையுள்ளவரை
மனம் தடுமாறும்,
வாழ்க்கை தடம்மாறும்.
மணமுறிந்த பெண்ணுக்கிதனை
மனமுவந்து அளித்திடவேண்டா.
மறுமணமொன்றே
ஈடுசெய்யுமவள் இழந்தவைகளை,
அது முறையாக்குமவள்
உடல் வேட்கைக்கான வடிகாலை.
அஃதொன்றே திருப்பித்தருமவள்
மனம் களைந்தவைகளை.
மணமுறிவென்பதோர்
பக்கத்தின் முடிவே...
அத்தியாயத்தின் அடுத்த பக்கங்களில்
எதிர்பார்ப்புகளைப் புதைத்து வைத்து
வாழ்க்கைப் புத்தகம்
தொடரவே செய்யும்.
அந்தப் பக்கங்களில்
தன் வரிகளைச்சேர்க்கும் உரிமை
அவளுக்கும் உண்டு,
ஓர் ஆணைப்போல...
- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.(ashwin_i1980@yahoo.co.in)http://www.ramprasathkavithaigal.blogspot.com/