எல்லாம் வல்ல இறைவனின் அருளால் 🙏🙏🙏
By God‘s Grace 🙏🙏🙏
பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை. எழுத்தின் மீது தீராக்காதல். எழுத வேண்டும். புத்திசாலித்தனமாக எழுத வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். இவ்வளவே நோக்கம். - எழுத்தாளர் ராம்பிரசாத் SFWA Member
லைக், கமென்ட், & ஷேர்
**************************
இரண்டு நாட்கள் முன்பு என்னுடைய முகநூல் பதிவுகளுக்கான விருப்பக்குறி/பார்வை விழுக்காட்டைப் பகிர்ந்திருந்தேன். நண்பர்கள் பலர் மூலமாக இங்கே 'விருப்பக்குறிகள் கலாச்சாரம்' பயிற்றுவிக்கப்பட்டேன். அது புதிதல்ல. ஏற்கனவே நானும் அறிந்தது தான். பதிவு மூலம் புதிதாகக் கிடைத்தனவற்றை இங்கே பகிர்கிறேன்.
ஒரு கருத்துக்கு எதிர்வினைகள் என்பது, உலகம் முழுவதிலும், இரண்டு விதமாக நடப்பதாகக் கொள்ளலாம்.
1. 'உன் பதிவுக்கு நான் விருப்பக்குறி இடுகிறேன். என் பதிவுக்கு நீ இடு' என்கிற எளிமையான ஒப்பந்தம். இது தான் பொதுவெளியில் பெரிதும் பின்பற்றப்படுகிறது என்பதை நானும் அறிவேன்.
2. கரோனா வைரஸ் பரவியபோது தடுப்பூசி எடுத்துக்கொள்வது பற்றிய பரிந்துரைப் பதிவோ, எந்த ஸ்டாக்கில் பணத்தை முதலீடு செய்யலாம் என்பது குறித்த பரிந்துரைப் பதிவோ மேற்சொன்ன விதத்தில் வேலை செய்யாது. அதற்கு மக்களின் தார்மீக ஆதரவு இருக்கும். ஏனெனில், அவைகளில் மக்கள் தாங்களாகவே முன்வந்து புழங்குகிறார்கள். அது அவர்களுக்கான பொதுவான புழங்குதளமாக இருக்கும். அது சார்ந்த கேள்விகள், ஐயங்கள், விவாதங்கள் ஆகியனவற்றை மேற்கொள்ள இயல்பாகவே அவர்கள் ஒருவருக்கொருவர் லைக், கமென்ட், ஷேர் செய்துகொள்வார்கள். இங்கே, 'உன் பதிவுக்கு நான், என் பதிவுக்கு நீ' என்கிற ஒப்பந்தம் தேவை இல்லை.
2020ல் அறிவியல் புனைவுகள் எழுதத்துவங்கினேன். என் எழுத்தை கண்டெடுத்து, ஊக்குவித்து, வளர்த்தெடுத்தது இதே தமிழ்ச் சமூகம் தான். இவர்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எழுத்து மூலமாகவே அதைத் தீர்க்க முனைவதில் தான் மரபணுக்கள், தீசஸின் கப்பல், கம்ப்யூட்டா என்று அது விரிவடைகிறது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.
நண்பர்களுடன் பேசியபோது, 'சிறுகதைகள் மக்களின் ரசனைக்கு இருந்தால் நல்லாதரவு பெருகும்' என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டது. அது சரிதான். எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், சுஜாதா ஆகியோர் அவ்விதமே இயங்கி வாசகர் பரப்பை அடைந்தனர். இதை எழுத்தாளர் சுஜாதா நேர்காணல்களில் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதே ரூட்டை நாமும் எடுக்கலாம் தான். பிரச்சனை இங்கே தான் துவங்குகிறது எனலாம்.
அவ்விதம் எழுதப்படும் சிறுகதை ஒன்றை அமெரிக்க ஆங்கில அறிவியல் புனைவிதழுக்கு அனுப்பினால், மறுதலிக்கப்படுகிறது. இப்படியாக எழுதப்படும் ஆக்கங்களை, அமெரிக்க ஆங்கில அறிவியல் புனைவிதழ்களுக்குத் தக்கவாறு நீட்டியும், குறைத்தும் தொடர்ந்து செப்பனிட செப்பனிட, அதில் இறுதியாக வரும் வர்ஷனில், தமிழ்மக்களின் ரசனைக்கென சேர்க்கப்பட்டவைகள் எல்லாம் நீக்கப்பட்டிருக்கக் காண்கிறேன். இதில் இருக்கும் consistency நிச்சயமாக இரண்டு கலாச்சாரங்கள் குறித்தும், இலக்கிய வடிவத்தின் இலக்கணக் கூறுகளை இரு கலாச்சாரங்கள் எவ்விதம் கையாள்கின்றன என்பது குறித்தும் ஆழமாக யோசிக்க வைக்கின்றன.
Survival of the Fittest என்பார்கள்.
இப்போது வார்த்தை ஒன்றுக்கு அறுபது சென்ட் ஊதியம் பெரும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன். உலகெங்கிலுமுள்ள அறிவியல் புனைவு எழுத்தாளர்களுக்கான அமைப்பில் உறுப்பினராகியிருக்கிறேன். இதன் மூலம் நெபுலா போன்ற அமெரிக்க விருதுகளைத் தெரிவு செய்யும் இடத்திற்கு நகர்ந்திருக்கிறேன். இது, என்னால் ஏற்கக்கூடிய சவால்களுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது என்பதே இத்தளம் மீது, இப்பாதை மீது பயணம் மேற்கொள்வதில் பேரார்வம் கொள்ள வைக்கிறது.
அறிவியல் புனைவிலக்கியத்தைப் பொறுத்தவரையில், அமெரிக்க மற்றும் சீன அறிவியல் புனைவிலக்கியம் mainstream என்கிற ரீதியில் உலகிற்கே முன்மாதிரியாகச் செயல்படுகின்றன. மாறாக, இந்திய மற்றும் தமிழ் அறிவியல் புனைவிலக்கியத்திற்கென ஒரு தனிப் பாதையும், பார்வையும் ஞானமரபின் வழி வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது.
செண்டினல் தீவு மக்கள் குறித்து இங்கே நினைவூட்டுவது பொறுத்தமாக இருக்குமென்று நம்புகிறேன். செண்டினல் தீவில் உள்ள மக்கள் வெளி உலகுடன் தொடர்பில் இல்லாதவர்கள். தங்களுக்குள்ளே இயங்கிக்கொள்பவர்கள். இன்னமும் வில்லும், கூர் கற்களுடனும் வாழ்வை எதிர்கொள்கிறவர்கள். வெளி உலகை அவர்கள் ஏற்காமல் இருக்கலாம். அது, அவர்களுக்குத் தேவைப்படாமலும் இருக்கலாம். ஆனால், நான் செண்டினல் தீவுக்குள் தேங்கிவிட விரும்பவில்லை. வெளி உலகம் செல்ல விழைகிறேன். வெளி உலகுடனும் போட்டி போட விரும்புகிறேன். அதிலுள்ள சவால்கள், சிக்கல்கள் என் இயல்புடன் பொறுந்துகின்றன.
புதுச்சிக்கல் என்னவென்றால், நான் முழு நேர எழுத்தாளன் இல்லை என்பதுதான். என் பிரதான தொழில், கணினிக்களுக்கு அறிவை வழங்குவது. எழுத்து உபரி நேரங்களில் மட்டுமே. இதுதரும் முதல் சவால் நேரமின்மை. இந்த நேரமின்மையில், தமிழுக்கென ஒரு வர்ஷன், ஆங்கிலத்திற்கென இன்னொரு வர்ஷன் வைத்து இயங்குவது குழப்பங்களுக்கும், தவறுகளுக்கும் வழி வகுக்கும். ஒரே வர்ஷன் தான் என்றால், நான் செண்டினல் தீவை விட்டு வெளியே வந்து வெளி உலகிற்கான வர்ஷனையே உருவாக்க விரும்புகிறேன். ஏனெனில், செண்டினல் கடைசி வரை செண்டினலாக இருக்க வாய்ப்பில்லை. என்றேனும் வெளி உலகிற்கு வந்துதான் ஆக வேண்டும் என்கிற தர்க்கப் பார்வை தான்.
நான், அந்த வெளிஉலகிற்கு மற்ற செண்டினல்வாசிகளைக் காட்டிலும் சற்று முன்பேயே வந்துவிடுகிறேன் என்பது மட்டும் தான் ஒரே வித்தியாசம். இந்த முறையில், தமிழுக்கு, சர்வதேச தரத்திலான சிறுகதைகள் கிடைக்கும் என்பது ஒரு குறிப்பிடத்தகுந்த சாத்தியம்.
ஆக, எப்படி யோசித்தாலும் வெளி உலகுடன் இணைந்து இயைந்து செல்வதே என் சூழலுக்குப்பொறுந்தும் என்றே கணிக்கிறேன். நான் எக்காரணங்களால், இவ்வழியைத் தெரிவு செய்கிறேனோ அதே காரணங்களுக்காக, அதே வழியை மற்றவர்களும் தெரிவு செய்வதே அவர்களுக்கும் தொலை நோக்குப் பார்வையில் பலனளிக்கும் என்றே நம்புகிறேன். ஒரு கருத்தை, ஒரு தளத்தை பகிர்ந்துகொள்ளும் எவருக்கும் அத்தளம் குறித்த, அதன் செயல்பாடுகள், அதன் பயன்பாடுகள், சாதக பாதகங்கள், கேள்விகள், ஐயங்கள், விவாதங்கள் ஆகியனவற்றை மேற்கொள்ள இயல்பாகவே அவர்கள் ஒருவருக்கொருவர் லைக், கமென்ட், ஷேர் செய்துகொள்வார்கள். இல்லையா? அந்தப் பின்னணியில் தான், என் பதிவுகளுக்குக் காணப்படாத வாசகர் ஆதரவு, என் கருத்தை, தளத்தை 'எவரும் பகிரவில்லையோ' என்ற அவதானிப்பையே தருகிறது. நான் மட்டும் தனியனாய், ஒரு தளத்தில் பயணிக்கிறேனோ என்ற எண்ணத்தையே விதைக்கிறது.
இதைத்தான் இரண்டு நாளுக்கு முன்னான பதிவிலும் பகிர்ந்தேன். ஆக, கேள்வி,
"நான் ஏன் ஒரு தளத்தில் தனியனாய் பயணிக்கிறேன்?" என்பதுதான்.
"நான் பயணிக்கும் தளத்தில் நான் காணும் நற்பயன்கள், நற்பயன்களாகப் பிறருக்கு ஏன் இல்லை?" என்பதுதான்.
நான் மக்களின் நல்லாதரவை வேண்டுகிறேன் தான். ஆனால், மக்கள் என் தளத்தைத் தங்கள் தளமாகவும் ஏற்கும்வரை, என் பாதையைத் தங்கள் பாதையாக கொள்ளும் வரை அது மெல்ல மெல்லத்தான் சாத்தியப்படும் என்பதையும் புரிந்துவைத்திருக்கிறேன்.
அறிவிப்பு!!
சர்வதேச அளவில் அறிவியல் புனைவிதழ்கள் குறித்து நமக்கெல்லாம் ஒரு பொதுவான பரிச்சயம் இருக்கிறது. Analog, Asimov, Clarkesworld போன்றவை அவற்றுள் சில.
இவை எதனால் பிரபல்யமான இதழ்களாக இருக்கின்றன? வார்த்தை ஒன்றுக்கு எட்டு சென்ட் வீதம் எழுத்தாளர்களுக்கு வெகுமதி வழங்குவதால். அதென்ன கணக்கு வார்த்தைக்கு எட்டு சென்ட்? இதை நிர்ணயிப்பது யார்? அதென்ன சொல்லி வைத்தாற்போல் Analog, Asimov, Apex போன்று எல்லா இதழ்களிலும் ஒரே வெகுமதி: ஒரு வார்த்தைக்கு ஒரு சென்ட்?
இதற்குக் காரணம், ஒரு அமைப்பு. அதன் பெயர் Science Fiction and Fantasy Writer's Association. சுருக்கமாக, SFWA. மேற்சொன்ன இதழ்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துவது இந்த SFWA தான். இந்த இயக்கம் தான் சர்வதேச தரத்திலான அறிவியல் புனைவுகளுக்கான இலக்கிய தரம் நிர்ணயித்தல், இலக்கிய இதழ்களை ஒருங்கிணைத்தல், அறிவியல் புனைவெழுத்தாளர்களுக்கான வருவாயை/ஆக்கத்திற்கான சன்மானத்தை நிர்ணயித்தல், அது எழுத்தாளரைச் சென்றடைகிறதா என ஊர்ஜிதம் செய்தல், என்பன போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்து முறையாக நிர்வகிக்கிறது.
வார்த்தைக்கு எட்டு சென்ட் என்பது இந்த அமைப்பு நிர்ணயிக்கும் விலை/சன்மானம் தான். இத்தகு இதழ்களை Professional Market என்றும், இதில் விலைபோகும் எழுத்துக்களை Professional Sales என்றும், இத்தரத்திலான ஆக்கத்தை எழுதிய எழுத்தாளரை, Professional Writer அல்லது Pro-Writer என்றும் விளிப்பது சர்வதேச அறிவியல் புனைவிலக்கிய வெளியில் நடைமுறை தான். அதே போல, இந்த அமைப்பில், இந்த விலையில் ஆக்கத்தை விற்பனை செய்வது, இந்த அமைப்பில் உள்ள எல்லா இதழ்களின் தரத்தை எட்டியதாகவே கருதப்படுகிறது.
சமீபத்தில் எனது 'Mismatch' சிறுகதையை இந்த முறையில் Protocolized இதழுக்கு விற்ற வகையில், இந்தத் தரத்தை எட்டியிருக்கிறேன் என்பதை இணைய நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
இத்தருணத்தில் ஈதனைத்தும், எல்லாம் வல்ல இறைவனின் அருளன்றி வேறல்ல என்பது திண்ணம். இறைவனுக்கும், இந்த இயற்கைக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
ஆதலால், இனி வரும் காலங்களில் என்னை 'Professional Writer' அல்லது 'Pro-Writer' என்று விளிப்பது பொறுத்தமாக இருக்குமென்பதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட, தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களின் பிரதிநிதியாக, சர்வதேச அறிவியல் புனைவிலக்கிய அமைப்பின் உறுப்பினராக உருவாகியிருப்பது, உலகம் முழுவதும் பரவி விரிந்திருக்கும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விடயம் மட்டுமன்றி, சர்வதேச அரங்கில் நிகழ்காலத் தமிழ்ச்சமூகத்தின் அறிவியல் தேடலுக்கான அடையாளமாகக் கொள்ளலாம் என்பது என் பரிந்துரை.
பொதுவிலேயே எனது வாசிப்பு குறைவு தான். இதில் யார் கண் பட்டதோ தெரியவில்லை. இந்த இயக்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் அமெரிக்காவில் வழங்கப்படும் 'Nebula Awards' போன்ற பல விருதுகளுக்கு வாக்களித்து விருதாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கடமை உள்ளவர்கள் என்பதால், சக வாக்காளர்களுடன் விவாதங்களில் ஈடுபட ஏதுவாக இருக்கவேண்டி, சர்வதேச அறிவியல் புனைவிலக்கியம், அதன் சரித்திரம், பூகோலம் எல்லாவற்றையும் அவசரஅவசரமாக தேர்வுக்குப் படிப்பது போல் படித்துக்கொண்டிருக்கிறேன்.
இது, சில காலத்திற்கு தமிழில் எழுதுவதை சற்று சிக்கலாக்கும் என்றே கருதுகிறேன். ஆயினும், தொடர்ந்து சிறுகதைகள் கொணர முயல்கிறேன். நண்பர்கள் பொறுத்தருள்க. எழுத்து முழு நேரப் பணி இல்லை என்பதால், எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் மேலாண்மை செய்வதில் விழி பிதுங்குகிறது. எனினும் முயற்சிக்கிறேன். நன்றி.
****PROFESSIONAL SALES****
--------------------------------------------------
For a few months now, I have had to keep a secret. Naturally, I was itching to tell it to the whole world. Well, the time is here now.
My science fiction story was accepted in Protocolized a few months ago. I am beyond excited to say that the story is out now. Here's the link. Go read!
https://protocolized.summerofprotocols.com/p/mismatch
Another important part with this is, this is a 'professional sale' (well above pro-rates).
இணைய நண்பர்களுக்கு,
நான் வாசித்த எழுத்துக்கள் - 3
சுஜாதா, பாலகுமாரன் என்று வாசிப்பு வழி எழுத்துக்கள் நுழைந்திருந்த காலம் அது. கீற்றுவில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். Speculative Fiction வகையறாக்கள் தான். அப்போது உயிர்மை பதிப்பகம் உயிரோசை என்றொரு இணைய வார இதழ் துவங்கினார்கள். அதில் எழுதத்துவங்கியிருந்தேன்.
சீனியர்களுக்கு மரியாதை தர வேண்டும் என்பது கல்லூரி முதலாம் ஆண்டில் கற்ற பாலபாடம்.
தமிழ் எழுத்துலகின் மும்மூர்த்திகளான சாரு, ஜெமோ, எஸ்.ரா மூவரையும் ஒரே நேரத்தில் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்போது பணி நிமித்தம் லண்டனில் இருந்தேன். அதிகாலை ஐந்தரை மணிக்கே அலுவலகம் வந்துவிடுவேன். அப்போது அலுவலகமே வெறிச்சோடிக்கிடக்கும். மடிக்கணினியைத் திறந்ததுமே சாரு, ஜெயமோகன், எஸ்.ரா பக்கங்களை ஏதோ அலுவலகத்துக்கு வந்தால் அடையாள அட்டையைத் தேய்ப்பது போல், தினசரி இந்த மூவரின் இணைய பக்கங்களை வாசித்துவிட்டுத்தான் அந்த நாளே துவங்கும்.
துரதிருஷ்டம் என்னவென்றால், அப்போது உடன் பணியில் இருந்தவர்களில் யாருக்குமே வாசிப்புப் பழக்கம் இருக்கவில்லை. அதனால், வாசிப்பது, எனக்குள் அசை போடுவது, இணையத்தில் மற்றவர்கள் விமர்சனங்களைப் படிப்பது, எழுதுவது என்று இருந்த காலகட்டம்.
சாருவின் நான் லீனியர் எழுத்து, எழுத்தையே வேறு விதமாகப் பார்க்க அணுக வைத்தது. அவருடைய ஜீரோ டிகிரி நூலை வாங்கி வாசிக்க வைத்திருந்தேன். அம்மா இரண்டு பக்கங்கள் புரட்டிப் பார்த்துவிட்டு, கடுமையாகத் திட்டினார். பின், ஒளித்து மறைத்துத்தான் படித்து முடிக்க வேண்டி இருந்தது. ஜெமோ பக்கங்களில் நிறைய இலக்கிய சிறுகதைகள், இலக்கிய சர்ச்சைகள், விமர்சனங்கள் பகிரப்படும். எஸ்.ராவின் எனது இந்தியா போன்ற நூல்களைத் தேடி வாங்கி வாசித்தேன். கே.கே.நகரில் இருந்த மறைந்த எழுத்தாளர் ஞானி அவர்களின் கேணி இலக்கிய சந்திப்பு நிகழ்வில் எஸ்.ராவை ஒரே ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அப்போது அவர் தன் எழுத்துக்கென 'தேசாந்திரி' பதிப்பகம் துவங்கியிருந்தார். அதற்குள் பணி நிமித்தமாக அமெரிக்கா வரவேண்டியதாகிவிட்டது.
அமெரிக்கா வந்த பிறகு இணையம் மட்டுமே வழியாகிப்போனது. ஆதலால், கண்ணில் படுவது எல்லாவற்றையும் வாசிக்கத்துவங்கினேன். கிட்டத்தட்ட, தமிழ்ச்சூழலில் நடப்பில் எழுதும் எல்லா எழுத்தாளர்களையும், குறைந்தபட்சம் அவர்களின் ஒரே ஒரு ஆக்கத்தையாவது இணையமென்னும் மாபெரும் கடலில் இருந்து பொறுக்கியெடுத்து நான் ஒரே ஒரு முறையேனும் வாசித்திருப்பேன் என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். ஆனால், என்னால் எதைச் சொல்ல முடியாதென்றால், இத்தனை எழுத்தாளர்கள் குறித்து, நான் வாசிக்க நேர்ந்த அவர்களின் அந்த ஒரு ஆக்கத்தை வைத்து என்னால் எந்த தீர்மானத்துக்கு வர முடியாது என்பது தான். ஏனெனில், இங்கே அமெரிக்காவில் வேலையை தக்க வைக்கும் பிரயத்தனத்திலேயே பெரும்பான்மை நேரங்கள் கழிந்துவிடுகிறது. வாசிக்கக் கிடைக்கும் நேரத்தில் பெருமளவு எழுத்திற்கும், மொழிபெயர்ப்புக்கும் போய் விடுகிறது. இந்தப் பின்னணியில், வாசிக்க நேரமே இருப்பதில்லை.
கூட்டிக் கழித்துக் கணக்குப் போட்டுப் பார்த்தால் எனக்குக் கிடைப்பது இதுதான். இதுவரையில் எழுதியவர்கள் எல்லோரையும் வாசித்த பிறகு தான் எழுத வர வேண்டும் என்றால், அதற்கு ஆயுள் போதாது. வாசிப்பே இல்லாமல் இருத்தலும் சரியில்லை. ஆக, வாசிப்பது பாதி, எழுத்து மீதி என்பதுதான் சரியான விகிதாச்சாரம். தமிழ் இலக்கிய உலகம் என்பது ஒரு பரந்துபட்ட களம். அதில் தேர்ச்சி என்றொரு நிலையே கிடையாது. நாம் எல்லோரும் மாணவர்களே. எல்லாம் வல்ல இறைவன் மட்டுமே எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்ற ஒரே ஒருவர். எஞ்சிய எல்லோரும் 'முயற்சிப்பவர்கள்' மட்டுமே. ஆகையால், காலத்தின் போக்கினூடே எழுத்தோடு கிடைக்கிற நேரத்தில், தேவைக்கு ஏற்ப வாசித்தல் தான் எனக்குச் சரியாக வருகிறது. அதை தான் நானும் செயல்படுத்துகிறேன்.
சொல்வனம் 351வது இதழில் வெளியான எனது 'அடுத்த பரிணாமம்' சிறுகதை.
எனது சிறுகதையைத் தெரிவு செய்து வெளியிடும் சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
'கம்யூட்டா'வில் மொத்தம் பத்து சிறுகதைகள். அவற்றில் மூன்று ஏற்கனவே அமெரிக்க அறிபுனை இதழாசிரியர்களுக்குப் பகிரப்பட்டு, நல்ல விமர்சனங்கள் பெற்றுவிட்டது.
உதாரணமாக,
'கூடை மனிதன்' சிறுகதைக்கு L.Ron Hubbardல் (2024 லேயே) Honorable Mention கிடைத்தது.
'மடக்கை' சிறுகதைக்கு TCL இதழிலும்,
'பரிச்சயமற்ற மாறிலி' சிறுகதைக்கு Orion's Belt இதழிலும் நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. (அவற்றை, வாசகர்கள் கவனத்துக்கென, கம்ப்யூட்டா நூலின் கடைசிப் பக்கங்களில் இணைத்திருக்கிறேன்).
சிறுகதைகளை நாம் என்னவாக வேண்டுமானாலும் அடையாளப்படுத்தலாம். அதனை, துறை சார்ந்த நபர்களும், இலக்கிய பரிச்சயம் கொண்டவர்களும் வழிமொழிய வேண்டுமே? அதற்குத்தான்.
இனி வரும் காலங்களில், எஞ்சிய சிறுகதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க திட்டம் உள்ளது. பணிகளை மெதுவாகத்தான் மேற்கொள்ள முடியும். ஏனெனில், எழுத்து பகுதி நேரம் தான் அல்லவா?.
இந்தச் சிறுகதைகளை எழுதி நாளாகிறது. எழுதிய காலகட்டத்தில், இணையத்தில் சிறுகதைகளைப் பகிர்வதால் சில ஏமாற்றங்களைச் சந்தித்திருந்ததால், வெகுவாக மனமுடைந்து போயிருந்தேன். அந்த சமயத்தில் எழுதப்பட்ட காரணத்தால் இச்சிறுகதைகளுக்கு என் மடிக்கணிணியை விட்டு வெளியே வர வாய்ப்பமையவில்லை. தவிரவும், 2024 இறுதிக்குள் இத்தொகுப்போ, மொழிபெயர்ப்புப் பணிகளோ நிறைவாகவில்லை என்பதுவும் ஒரு காரணம். இடைப்பட்ட 2025ன் முற்பகுதியை, மொழிபெயர்ப்புகளை ஆங்கில ஊடகங்களுக்கு அனுப்பி அங்கிருந்து என்ன பதில் வருகிறது என்று பார்க்க பயன்படுத்திக்கொண்டேன். ஊடகங்களிலிடமிருந்து நேர்மறையான விமர்சனங்கள் வரத்துவங்கியிருப்பதில் மகிழ்ச்சியே.
இத்தொகுப்பை வெளிக்கொணர உதவும் படைப்பு பதிப்பகத்தாருக்கு எனது நன்றிகள்.
'Computa' has ten stories - three of them have already gotten good reviews from various American science fiction magazines.
For example,
'Koodai Manithan(The Bucket Man)' received an Honorable Mention in L.Ron Hubbard last year,
'Madakkai(The Rhythm Log Residency)' from TCL magazine and
'Parichayamatra Maarili(Unknown Variable)' from Orion's Belt Magazine. I have attached them at the trailing end of the book.
You may ask why? Anybody can claim anything; all that matters is what the subject matter experts say about the work. I plan to translate the remaining stories one by one and get them all acknowledged by SMEs, but it will be a slow process, as writing isn't my full-time job.
This book should have been released to readers last year. I was somewhat disheartened by the plagiarism targeting freely shared original works online—no wonder these works were shelved and didn't reach readers for over a year. Neither the collection nor the translations were ready by the end of 2024, which was another reason. I literally tried to utilize the first half of 2025 to share the translated works with sci-fi magazines and see what they have to say about them. I am glad I have been receiving positive feedback.
Hearty thanks to Padaippu for bringing out this book.
Social media influencers குறித்த "வா தமிழா வா" நிகழ்ச்சி வரவேற்கத்தக்கது.
தங்களிடம் ஏதோவொரு திறமை இருக்கிறது என்று நம்புபவர்களுக்கு, அதனை சோதித்துப் பார்க்க நிச்சயம் ஒரு தளம் தேவை. இன்றைக்கு சமூக ஊடகங்கள் வளர்ந்திருக்கிறது. நான் கல்லூரி படிக்கையிலெல்லாம் இந்த ஊடகங்களெல்லாம் இல்லையே என்ற வருத்தம் எனக்கு எப்போதும் இருக்கிறது. நான் கல்லூரி முடித்த 2002ம் ஆண்டில் 1100 நோக்கியா தான் சந்தைக்கு வந்திருந்தது. இரண்டே ஆண்டுகளில் வீட்டுக் கடன், கார் கடன் என்கிற சுழற்சியில் சிக்கியிருந்தேன். எழுத்து மட்டுமே கிடைத்த சொற்ப பகுதி நேரத்தில் முயன்று பார்க்கக்கூடிய ஒன்றாக அமைந்தது. கல்லூரியில் வெட்டி நேரங்கள் நிறைய கிடைக்கும். இப்போதெல்லாம் அந்த நேரத்தைப் பயன்படுத்தி குறும்படங்கள் என்று இறங்கிவிடுகிறார்கள். மைக்செட் ஷ்ரிராம், ப்ரதீப் ரங்கநாதன் போன்றோர் கல்லூரி காலங்களிலேயே வாய்ப்பைப் பயன்படுத்தி அரை இயக்குனர் ஆகிவிடுகிறார்கள். அந்த வாய்ப்பெல்லாம் எனக்கு இருக்கவில்லை என்ற வருத்தம் தான்.
சமூக ஊடகங்கள் மக்களிடையே காட்சி ஊடகங்களைப் பழக்கப்படுத்திவிட்டன. மக்களும் அதற்கு எளிதாகப் பழகிவிட்டார்கள். ஆறு திரும்பும் திசையெல்லாம் சரியானதாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், ஆற்றின் திசையில் தான் மனித நாகரீகங்கள் தழைக்க ஏதுவாகிறது இல்லையா? நாகரீகங்கள் தழைத்தபிறகு, திசை தவறானது என்றறிந்து என்ன பிரயோஜனம்?
சமூக ஊடகங்களில் திறமை பழகுதலும், அத்திறமை கனிந்து மக்களின் பயன்பாட்டுக்கு ஏதுவாகுதலும் இணையும் புள்ளியில் நல்ல திறமைகள் சமூகத்திற்கு வாய்க்கின்றன. எந்தப் புள்ளியிலும் இணையாத போது, அது சுதி சேராத இசை போல் அப்படி அப்படியே கலைந்துவிடுகிறது. அடையாளச்சிக்கலுக்குள் சிக்கிவிடுகிறது. எதைத் தேடி வந்தார்களோ அதை விட்டுவிட்டு, ஆள் சேர்ப்பில் இறங்கிவிடுகிறார்கள்.
அமெரிக்காவின் ஒன்லி ஃபான்ஸுக்கு நிகராக, பெண்கள் இன்ஸ்டாகிராமில் நிர்வாணம் காட்டுகிறார்கள். ஒன்லி ஃபான்ஸிலாவது சம்பாதிக்க வழி இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் அது எல்லோருக்கும் சாத்தியமில்லை. பெயரைக் கெடுத்துக்கொள்கிறார்கள். அது தலையெழுத்தையே தீர்மானித்துவிடுகிறது.
மற்றபடி சமூக ஊடகத்தை திறமையை வெளிப்படுத்த நாடுபவர்களில் சொற்பமானவர்களே, தங்கள் இலக்கைக்கண்டடைகிறார்கள். எஞ்சியவர்கள் கிடைத்ததை இலக்காக்கிக்கொள்கிறார்கள். கிடைத்ததை இலக்காக்கிக்கொள்பவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
திறமை என்று தாங்கள் நினைக்கும் ஒன்று உண்மையிலேயே இருப்பின், இலக்கை கண்டடைவீர்கள். இலக்கை அடைய முடியவில்லை என்றால் இதற்கு அர்த்தம் நீங்கள் திறமை அற்றவர் என்பதல்ல. உங்களுக்கு வேறொரு திறமை இருக்கலாம் என்பதுதான் அர்த்தம். அது என்ன என்ற தேடலில் இறங்குவது ஒரு நல்ல அணுகுமுறை என்று எனக்குத் தோன்றும். இதன் மூலம் நாம் தேங்கி நிற்கவேண்டியதில்லை.
இணையத்தில் இப்படி 'தேங்கி' நிற்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். உண்மையில், 'தேங்கி'க்கிடந்தாலும் ஆபாசமே கூட பார்வையாளர்கள் இன்றித்தான் கிடக்கிறது. ( என்னுடைய இன்ஸ்டா பக்கத்துக்கு இருநூறு ஆயிரம் ஃபாலோயர்கள் என்று பீத்த வேண்டியதில்லை. ஏனெனில், அந்த இருநூறு ஆயிரம் ஃபாலோயர்கள் எல்லா ஆபாச இன்ஸ்டா பக்கத்திற்கும் இருப்பதைப் பார்த்தால், ஒரே இன்ஸ்டா பயனர் எல்லாவற்றிலும் ஃபாலோயராக இருப்பதன்று வேறு மார்க்கமில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.) ஆக, ஆபாசமாகவே இருந்தாலும் எத்தனையைத்தான் பார்ப்பது? ஆபாசத்துக்கான கவர்ச்சியையே வீழ்த்தியதில் இந்தத் 'தேக்க'த்திற்கு நிறைய பங்கிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.
சமூக ஊடகத்தில் திறமையைக் காட்ட முனைவோர்க்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம்:
1. தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
2. சவால்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
3. திறமையை வெளிக்காட்டுகையில், நம்மைச் சுற்றி ஒரு கூட்டம் கூடும் தான். ஆனால், கூட்டத்தை தக்கவைக்கவென இறங்காதீர்கள். கூடுபவனே தொடர்ந்து கூடினால், அவனும் வளரவில்லை. நாமும் வளரவில்லை என்று பொருள். தினம் தினம் புதுப் புதுக் கூட்டம் கூடினாலும் அது சரியல்ல. ஆக, கூட்டத்தைத் தக்க வைக்கவென பிரயனத்தபட இறங்காதீர்கள். திறமை கூட்டத்தை உருவாக்க வேண்டுமே ஒழிய கூட்டம் திறமையை அல்ல.
4. நம் இலக்குகளை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். கூட்டம் அல்ல. அதைப் புரிந்துகொள்ளுங்கள்.
5. கூட்டமே கூடாமல் இருப்பது ஒரு வகையில் நல்லது. புதிய புதிய முயற்சிகளில் நாம் இறங்க முடியும். அனானிமஸ் ஆக இருப்பது பல வழிகளில் நல்லது.
சமீபத்திய சிறுகதைகளுக்கு வந்த பின்னூட்டங்கள்:
அறுதி விடியல்:
டோரோத்தி:
https://vasagasalai.com/116-story-ram-prasad/
பின்னூட்டமிட்ட அறிவியல் புனைவு வாசகர்களுக்கு எனது நன்றிகள் 🙏🙏🙏
சொல்வனம் 349வது இதழில், எனது சிறுகதை 'துரதிருஷ்டம்' சிறுகதை வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தெரிவு செய்த சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்.
சிறுகதையை வாசிக்க, பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்:
வாசகசாலை 116வது இதழ் சிறுகதைகள்
******************************************
ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெளியாகியிருக்கிறது வாசகசாலையின் 116வது இதழ்.
ஜெயபால் பழனியாண்டி எழுதியிருக்கும் பூச்செடி, ஒரு ஃபீல்-குட் கதை. பூச்சி ஒன்று இறந்து போகிறது. இரண்டு பெண் பிள்ளைகள் அதனை அடக்கம் செய்யும் காட்சிதான் கதை. சிறார்களுக்கே உரித்தான காட்சிகளோடு அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது கதை.
//மரணத்திற்குப் பிறகும் குழந்தைகளால் கொண்டாடப்படுகிறோம் என்பதை அறியாமலேயே மரணித்துப் போகின்றன பூச்சிகள்// என்று முடிக்கிறார் ஆசிரியர்.
*****************************
மொட்டு மலர் அலர் சிறுகதையில் ஆசிரியர் கமலதேவி கிராம வாழ்வை அப்படியே நம்மை வாழ வைத்திருக்கிறார். வாசிக்க வாசிக்க, கிராமத்தில் நாமும் ஓர் அங்கமாகவே ஆகிவிட்ட ஒரு உணர்வு எஞ்சுகிறது. சிரமேற்கொண்டு நேரமெடுத்து காட்சிகளை வர்ணிக்க உழைத்திருப்பது கதையை வாசிக்கையிலேயே தெரிகிறது.
*****************************
பாலு எழுதியிருக்கும் 'மரணத்துளிகள் பல கேள்விகளை எழுப்பியது. உண்மையாகவே இப்படி ஒரு சுகவீனம் இருக்கிறதா? இப்படி சுகவீனப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்களா? அப்படி ஒரு சுகவீனப்பட்ட பெண்ணின் குடும்பம் எப்படிப்பட்ட துன்பங்களுக்கு உள்ளாகும் என்கிற ரீதியில் அமைந்த விவரணைகள் கதையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் சென்றுவிடுகின்றன. இறுதியில் கதையின் திருப்பமும் அருமை.
*****************************
இராஜலட்சுமி எழுதியிருக்கும் தெய்வானை சிறுகதையும் கிராமப் பின்னணி கொண்ட சிறுகதைதான். கதாபாத்திரங்களின் இயல்பில், தெய்வானைக்கு இறுதியில் என்ன நடக்கிறதோ அது மட்டும் தான் நடக்க முடியும் என்ற ஸ்திதி இருப்பது சிறப்பாக இருக்கிறது. கிராமங்களில் இப்படித்தான். //இதுக்கு நல்லது கெட்டது பாத்துச் செய்ய யாருமில்லாமதான்...// இப்படி எல்லா தலைமுறைகளிலும் யாரேனும் சொல்லப்படுவார்கள் என்பது உலகமே அறிந்த ரகசியம் தான். இது நிச்சயமாக சமூக அமைப்பின் தோல்வி தான். இல்லையா?
*****************************
தாழப்பறா சிறுகதை வெள்ளிப்பட்டறையில் ஊத்து வேலைக்கு வரும் ஒருவர் பற்றிய கதை. பற்பல வேலைகள் செய்துவிட்டு எதிலும் லயிக்காமல் வேலை மாறிக்கொண்டே வருகிறார். வெள்ளிப்பட்டறை வேலைகள் குறித்த விவரணை எனக்குத்தான் புரியவில்லை.கதாசிரியர் கவனத்துடன் எழுதியிருப்பதாகத்தான் தெரிகிறது.
*****************************
இதிரிஸ் யாகூப் எழுதியிருக்கும் அமானிதங்கள் ஒரு இஸ்லாம் மதத்தைச் சார்ந்த குடும்பமொன்றில் சகோதரிகளின் திருமணத்தின் நிமித்தம் அல்லலுறுபவனின் இக்கட்டை காட்சிப்படுத்துகிறது. பேச்சுவழக்கிலான உரையாடல்கள் அருமை. கபால், கல்பை வாஜிபாயிருச்சி, அஸர் ஆகிய வார்த்தைகள் எனக்குப் புதிது.
இப்போதைக்கு இவ்வளவு தான் வாசிக்க நேரம் கிட்டியது. எஞ்சிய சிறுகதைகள் வாசித்ததும் எழுதுகிறேன்.
பிரபஞ்சத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள் என்று அறிவியல் உலகில் பரவலாக ஒரு கருத்து உண்டு. ஆம். கணக்குகளின் பிரகாரம் அது அவ்விதம் தான். இதன் அடிப்படையில் தான் Big Bang Model
முன்வைக்கப்படுகிறது.
ஆனால், இந்தக் கருதுகோளில் கல்லெறியும் வகையில், பிரபஞ்சத்தின் மிக மிகப் பழமையான நட்சத்திரம் HD 140283ன் வயது 14.5 பில்லியன் ஆண்டுகள் என்று கணித்திருக்கிறார்கள். தூக்கிவாரிப்போடுகிறது இல்லையா?
ஆம். லிப்ரா நட்சத்திரக்கூட்டத்தில் தான் இருக்கிறது இந்த அரதப் பழசான நட்சத்திரம். இதற்கு ஒரு செல்லப்பெயரும் உண்டு. "Methuselah".
வானிலை ஆராய்ச்சியில் இது ஒரு பாராடாக்ஸ் என்கிறார்கள். தூரக் கணக்கிடல், வேதியியல் காரணிகள், மற்றும் வானியல் மாதிரிகள் ஆகியவற்றை வைத்து நாம் வயதைக் கணக்கிடும் அளவீடுகளில் ஏற்படும் சன்னமான குறை, இந்த வித்தியாசத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினாலும், இப்போதுவரை எவ்விதமான வலுவான காரணங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இத்தனைக்கும் இந்த நட்சத்திரம் பூமியிலிருந்து 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் தான் உள்ளது. இவ்வளவு பக்கத்தில் இருக்கிறதே அப்படியானால், பூமியும் அத்தனை பழசானதா என்றால், அதுதான் இல்லை. பூமியின் வயது 4.5 பில்லியன் ஆண்டுகள் என்று தான் கணக்கிடப்பட்டிருக்கிறது. அதாவது இந்த அரதப்பழைய நட்சத்திரம் உருவாகி சுமார் பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு தான் பூமி உருவாகியிருக்கிறது.
சொல்வனம் 348வது இதழில், எனது சிறுகதை 'அறுதி விடியல்' சிறுகதை வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தெரிவு செய்த சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்.
சிறுகதையை வாசிக்க, பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்:
ஆணவக்கொலை
**********************
சில பேரெல்லாம் பாப்பதற்கு நவ நாகரீகமாக உடை அணிந்து, சிந்தனைச் செல்வர்கள் போல் தோற்றமளிப்பார்கள். நெருங்கிப் பார்த்தால் தான் தெரியும், அது ஒரு சாக்கடை என்பது.
பலரெல்லாம் ஒரு குடும்பமாகவே மிகவும் Toxicகாகத்தான் இருப்பார்கள். நாம் நெருங்கி விடக்கூடாது. சூதனமாக ஒதுங்கிச் சென்று விடவேண்டும்.
"சாதியாவது மண்ணாவது" என்று சாதிவெறியர்கள் கூட, பேசக் கற்றுக்கொண்டுவிடுவது, சமூகப் புழக்கத்திற்கு மட்டுமே. ஒரு நடிகன் வந்து "என்னை வாழ வைக்கும் தெய்வம்" என்று பொதுமேடையில் மைக் முன் பேசினால், அது ஜோடனை என்று நாம் தான் புரிந்துகொள்ள வேண்டும். வேற்று மொழிக்காரர்கள் உள்ளூர் வந்து "வந்தாரை வாழ வைக்கும் ஊர்" என்று சொன்னால், அவன் நம்மூரைப் புகழ்கிறான் என்று அர்த்தமல்ல. தன் புழக்கத்தற்கு, பிழைப்பிற்கு அந்த ஊரைத் தயார் செய்கிறான் என்று அர்த்தம். இதையெல்லாம் யாரும் சொல்லித்தர மாட்டார்கள். சூதனத்தை நாம் தான் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான காலம் தான் பதின்ம மற்றும் இருபதுகள் வயது. இந்த வயதில் காதல் எல்லாம் பெரும்பாலும் ஏமாற்றத்திற்குத்தான் இட்டுச்செல்லும்.
காதல் ஒரு நல்ல உணர்வு தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அதை இக்காலகட்டத்தில் உண்மையாகச் செய்வது யார்? காதலன் கொல்லப்பட்ட பிறகு, அவனை யார் என்றே தெரியாது என்று சொல்வதெல்லாம் என்ன ரகமான காதல்? இப்படி இருக்கும் நபர்களுக்காக உயிர் விடுவதெல்லாம் என்ன மடத்தனமான காதல்?
சென்ற மாதங்களில் ஒரு ஐடி நிறுவனத்தில் காதலித்த பெண் வேறு நபருடன் ஹோட்டல் சென்றார் என்ற காரணத்திற்காய் ஒருவர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இதெல்லாம் என்ன மடத்தனமான காதல்? என்ன கண்மூடித்தனமான கேனத்தனமான காதல்? இக்காலத்தில் உண்மைக் காதலுக்கெல்லாம் தகுதியான ஆட்கள் மிகவும் குறைவு. நாம் தான் அந்தக் காதலர்கள் என்று நாமாக நினைத்துக்கொள்வதெல்லாம் delusionல் வேற லெவல்.
மாதம் இரண்டு லட்சம் ஊதியம் வாங்கும் இடத்திற்கு நகர்ந்த பிறகு, இரண்டு லட்சம் ஒரு மாதத்திற்குப் போதாதா என்ற எண்ணத்தில், வருமானத்திற்குள் வாழ்ந்தால் போதும் என்கிற 'போதுமென்கிற மனமே.....' என்ற எண்ணத்தில், பெண் தேடப்போனால், 'வேலைக்குப் போகாத பெண் வேண்டுமா? என்ன ஒரு ஆணாதிக்கம்?' என்பார்கள். ஒரு ஷோவில் "ஒரு ஸ்டீரியோடைப்பை உடைச்சிட்டு சமூகத்திற்கு பயப்படாம எவன் வரானோ அவன் கம்பீரமான பையன்" என்று ஒரு பெண் சொல்லிக்கொண்டிருந்தார். இன்னொரு ஷோவில், "கணவனைப் பிரிந்த அன்னையர்களை மறுமணம் செய்பவன் தான் உண்மையான ஆண்" என்று இன்னொரு பெண் சொன்னார். ஆக, நீங்கள் நீங்களாகவே இருக்க அனுமதிக்காத சமூகம் தான் இது. இதில் எவன் நல்லவன்? எவன் கெட்டவன்? அதைச் சொல்லப்போவது யார்? அவர்களின் யோக்கியதை என்ன?
நம்மை வேறு யாரோவாக இருக்கச் சொல்லும் சமூகத்திற்காக வளைந்து கொடுத்துக்கொண்டே இருப்பதற்கு,நாம் நாமாக இருந்துவிட்டு போயிடலாம்.
நம்மை நம்பி வயதான பெற்றவர்கள் இருக்கிறார்கள். பதின்ம மற்றும் இருபதுகள் வயதுகளை, சுய முன்னேற்றத்திற்கும், சமூக அங்கீகாரத்திற்கும், மரியாதைக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும், பெற்றவர்களைக் காப்பாற்றவும் பயன்படுத்துங்கள். இதுவும் ஒரு விதத்தில் காதல் தான். தன் சுயம் மீதான காதல். இந்த உலகம் 'காதலில் விழவில்லை' என்றால் ஏளனமாகத்தான் பார்க்கும். காதலில் விழுமளவிற்கு இங்கே யார் தகுதியாக இருக்கிறார்கள் என்ற கேள்வியை நாம் தான் எழுப்பிக்கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட முறையில், என்னைக் கேட்டால், யாருமே தகுதியில்லை என்று எல்லோருமே நினைத்துக்கொண்டு அவரவர் வேலையில் இயங்குவது ஒரு நல்ல strategy என்பேன். இந்த நினைப்பு தவறென்றால் எவரேனும் 'வாழ்ந்து காட்டி' நிரூபித்துக்கொள்ளட்டும். அப்படி 'வாழ்ந்து காட்ட' எவருமே இல்லையென்றால், ரொம்ப நல்லதாகிவிட்டது. அதுதான் அவரவர் வேலையில் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கிறோமே. சுய முன்னேற்றமாவது மிஞ்சும்.
விழித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.
Radiosynthesis
Photosynthesis தெரியும். அதென்ன Radiosynthesis?
செர்னோபில் ரியாக்டர் சுவற்றில் பூஞ்சைக் காளான் வளர்வதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? கதிர்வீச்சு அதிகம் உள்ள இடங்களில் உயிர் வளர்ச்சி சாத்தியமில்லை. ஏனெனில், தொடர் கதிர்வீச்சில் உயிர்களில் பிறழ்வுகள் ஏற்பட்டு, வளர்ச்சி தடைபட்டுவிடுவது தான்.
ஆனால், இந்தப் பூஞ்சைக் காளான், நாளடைவில், கதிர்வீச்சுக்கான எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டிருந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எப்படி? தாவரங்கள் சூரிய ஒளியிலிருந்து உணவைத் தயாரிப்பது போல, இந்தப் பூஞ்சைக் காளானும் கதிர்வீச்சிலிருந்து சக்தியைப் பெறக் கற்றுக்கொண்டுவிட்டது.
எப்படி? நம் உடலில் உள்ள மெலனின் தான். அதே மெலனின் இந்தப் பூஞ்சைக் காளானிடமும் இருக்கிறது. அதிக அளவிலான மெலனினைப் பயன்படுத்தி கதிர்வீச்சை தடுத்து, ஆக்கப்பூர்வமான சக்தியாக மாற்றுகிறது. வினோதம் தான் இல்லையா?
மற்றுமொரு youtube shorts.
https://www.youtube.com/shorts/C-5Nlp-onlo
சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கும், சரஸ்வதி தியாகராஜன் Saraswathi Thiagarajan அவர்களுக்கும் எனது நன்றிகள் 🙏🙏🙏
ஜப்பான் தமிழ்ச் சங்கத்திலிருந்து யாரேனும் நட்பு வட்டத்தில் இருக்கிறீர்களா?
இந்தப் பரிமாற்றத்தைக் கடக்க நேர்ந்தால், மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ளவும். ramprasath.ram@gmail.com
வடஅமெரிக்காவிலிருந்து வெளியாகும் “தென்றல்” இதழில் வெளியான எனது நேர்காணல்..
https://www.tamilonline.com/mobile/article.aspx?aid=15707
தென்றல் ஆசிரியர் குழுவுக்கும், மதுரபாரதி அவர்களுக்கும், சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்
காலங்கடத்தி
அப்போது பத்தாவது முடித்துவிட்டு பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். வீட்டிலேயே தண்டால் பஸ்கி எடுத்துக்கொண்டிருந்ததில் போதாமை ஏற்பட்டு ஜிம்முக்குச் செல்லலாம் என்று முடிவானது.
நூறு ரூபாய் தான் மாதம். அப்பா தரும் பாக்கேட் மணியில் ஜிம். அந்த ஜிம்முக்கு பெரும்பாலும் சைதாப்பேட்டை காய்கறி மார்கெட்டில் வேலை பார்ப்பவர்கள் வருவார்கள். ஜிம் ட்ரெயினர், தமிழ்நாடு ஆணழகன் போட்டியாளர் என்றார்கள். ஜிம் பாலபாடம் அவரிடம் தான். நானும் அண்ணனும் தவறாமல் செல்வோம். பண்ணிரண்டாம் வகுப்பு முடித்து பொறியியல் சேர்ந்திருந்தேன். ட்ரெயினர் என்னை 'எஞ்சினியர்' என்று அழைக்கத்துவங்கியிருந்தார்.
ஜிம்மில் முதலில் கண்டடைவது Discipline தான். அதற்காகவே ஒவ்வொருவரும் ஜிம் செல்ல வேண்டும் என்பது என் பரிந்துரை. சத்தான உணவு. நாள் ஒன்றுக்கு 15-17 முட்டை. காலையில் பழைய சோறு, கேழவரகு கஞ்சி. ப்ரோட்டீன் நிறைந்த உணவுகள். சோளம். காய்கறி. உலர் பழங்கள். கோழி இறைச்சி. உடலின் சக்தியை வெளியேற்றும் எந்தப் பழக்கமும் அறவே கூடாது. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே செல்லலாம்.
அந்த நினைவுகளையெல்லாம் கிளறிவிட்டுவிட்டது Alappuzha Gymkhana திரைப்படம். திரைப்படத்தின் இறுதியில் சற்று கமர்ஷியலாக்கிவிட்டார்கள் என்றபோதிலும், பெரும்பான்மைக்கு உள்ளூர் ஜிம்,அதற்குச் செல்லும் ஆண்களின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் என்று கலவையாகத் தந்திருக்கிறார்கள். Naslen Gafoorந் 'ப்ரேமலு'வை ஒரு நூறு முறையாவது பார்த்திருப்பேன்.
சரி, இந்தப்படத்தில் என்னதான் பண்ணி வைத்திருக்கிறான் என்று பார்த்தால், உண்மையாகவே படத்திற்காக உடலளவில் நன்றாகவே உழைத்திருப்பது தெரிகிறது.
வெறுமனே ஜிம் போனோமா, யார் பலசாலி என்று ஈகோ பார்த்து அடித்துக்கொண்டோமா, ஏரியாவில் கெத்து காட்டுவது என்றெல்லாம் இல்லாமல், இந்த விளையாட்டை வைத்து எப்படி அடுத்த கட்டம் நகர்வது என்று யோசிக்கும் நாயகர்களாகக் காட்டியிருப்பதில் சற்று ஒன்ற முடிந்தது. நான் ஜிம் செல்லத்துவங்கியபோது, பாடி பில்டிங் துறையில் செல்லலாமா என்றொரு யோசனை இருந்தது. அதற்கேற்றார்போல், உடலில் ஆங்காங்கே cuts வைத்து, arms, chest என்று மெருகேறத்துவங்கியபோது, நிஜமாகவே அந்தத் துறையில் scope இருப்பதாகப் பட்டு, நாள் ஒன்றுக்கு பதினைந்து மணி நேரம் செலவிடக் கூட தயாராக இருந்தேன். மாநில அளவில் செயலாற்றி Sports quotaல் சீட் என்று யோசிப்பதெல்லாம் கச்சிதமாக உண்மை தான். அப்போது, அந்த வயதில் அப்படித்தான் தோன்றும். ஆலோசனையும் அந்த ரீதியில் தான் கிடைக்கப்பெறும். பிறபாடு பொறியியல், இறுதி ஆண்டு, அப்படி இப்படி என்று அதிலிருந்து படிப்படியாக ஃபோகஸ் மாறி கணிணித்துறைக்குள் வந்து நின்றது.
விதி. வேறென்ன சொல்ல?
ஆக, படத்தில் பல இடங்களை பால்யத்தோடு பொறுத்திப்பார்க்க முடிந்தது. இத்தனை வருடங்களில், சில விடயங்கள் மாறவே இல்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.
எதற்காக இல்லாவிட்டாலும், ஜிம், நமக்குள் ஏற்றும் அந்த Disciplineக்காகவே, பதின் பருவத்தில் உள்ளவர்கள் ஜிம் செல்ல வேண்டும் என்பது என் ஆலோசனை. எல்லோருக்கும் வாழ்க்கை எதிர்பாப்புக்கேற்றார்போல் அமையாது. பலருக்கு, பல சமயங்களில், வாழ்க்கையில் எந்தக் கன்ட்ரோலும் இருக்காது. அதுபாட்டுக்கு அவசர அவசரமாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து கொண்டே இருக்கும். அதன் போக்கில் போனால், வேறொரு இடத்துக்கு நம்மைக் கடத்திக்கொண்டு போய் விட்டுவிடும். அதைத் தவிர்க்க வேண்டுமானால், ஒரு 'காலங்கடத்தி' வேண்டும். அது, நமக்குள் ஆன்ம பலம் தருவதாகவும் இருக்க வேண்டும். தன்னம்பிக்கை உயர்த்துவதாகவும் இருக்கவேண்டும். எதிர்காலத்தை எதிர்கொள்ள வலு கூட்டுவதாகவும் இருக்க வேண்டும். இதற்கெல்லாம், ஜிம் ஒரு கச்சிதமாக 'காலங்கடத்தி' என்பேன்.
ஜிம் பழகுங்கள். இளமையிலேயே ஜிம் பழகுவது சாலச்சிறப்பு. எல்லோரும் பழகுவது வெகு உத்தமம். ஜிம் பழகுவதாலேயே எல்லாவற்றுக்கும் முஷ்டியை உயர்த்த வேண்டியதில்லை என்ற முதிர்ச்சியும் இருக்க வேண்டும் தான். எதற்கு முஷ்டியைப் பயன்படுத்த வேண்டும், எதற்கு மூளையைப் பயன்படுத்தினாலேயே போதும் என்கிற பாகுபாட்டை நாம் புரிந்துகொண்டாலே போதும். மற்றபடி, பதின் பருவத்தில், எதிர்காலத்திற்கென நம்மைத் தயார் செய்வதில், மிக முக்கிய இடம் ஜிம்மிற்கு உண்டு. ஜிம், ஒரு அதி முக்கியமான புள்ளி என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
சமீபமாக, சூர்யா சேதுபதி சந்திக்கும் ட்ரால் பெரிதாக ஆச்சர்யமூட்டவில்லை.
சொல்லப்போனால், நம்மை யார் தான் சரியாக புரிந்து வைத்திருக்கிறார்கள்? நெருங்கிய சொந்தங்கள் என்று நாம் நினைப்பவர்கள் கூட, அந்தப்பக்கம் போனால், நம்மைப் பற்றி வேறு விதமாகத்தான் பேசுவார்கள். இல்லை என்று யாராவது ஒருவர் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்கிறாரென்றால், விவரம் தெரியாமல் சொல்கிறார் என்று தானே பொருள்?
அதெல்லாம் நமக்குத் தெரியவராதவரைக்கும் தான் சொந்தங்களாக இருக்க முடியும். அடுத்தவர் மனக்குரல்கள் நமக்குக் கேட்டுவிட்டால், இங்கே நண்பன், உற்றார், உறவினர், சொந்தங்கள் என்று எந்த உறவும் எவருக்கும் இருக்காது.
மறதியும், டெலிபதி தெரியாமல் இருப்பதுவும் தான், நம்மை சக மனிதர்களுடன் நட்புறவாக வாழ வைக்கிறது என்றால் அது மிகையில்லை.
இப்படிச் சொல்வதால், விஜய் சேதுபதியின் மகனுக்காக வரிந்து கட்டுகிறேன் என்று எண்ண வேண்டாம். அது நோக்கமில்லை. உண்மையிலேயே, நம்மை முழுமையாக, துல்லியமாகப் புரிந்து வைத்திருப்பவர் நாம் மட்டும் தான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. நாம் என்ன நினைத்து ஒன்றைச் செய்தோம், அதை மற்றவர்கள் எப்படியெல்லாம் புரிந்துகொண்டார்கள் என்பதெல்லாம் நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆண் துணை இல்லாமல் இருக்கும் பெண் என்றால் வெகுஜனப் பார்வை என்ன? கருப்பாக இருப்பவன் மீதான மற்றவர்களின் அணுகுமுறை என்ன? எளியவன் மீது அதிகாரம் மிக்கவனுக்கு இருக்கும் பார்வை என்ன? துல்லியமான புரிதலின் அடிப்படையிலா இதெல்லாம் நடக்கிறது? அஜித்குமார், ம்குமார் போன்றவர்கள் யார்?
மற்றவர்களிடம் இருப்பதெல்லாம் அவரவர் பார்வையில் நாம் பயன்படக்கூடிய ஒரு கோணம் மட்டுமே. அந்தக் கோணத்தின் வழி மட்டுமே நம்மைப் புரிந்து வைத்திருப்பார்கள். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மைக் முன்னால் நடிக்கும் பல நடிகர்கள் இருக்கிறார்கள். மைக்கில் சொல்வதற்கெண்று ஒத்திகை பார்க்கப்பட்ட வரிகளை மனனம் செய்து ஒப்புவிப்பவர்கள் இருக்கிறார்கள். ஒருமுறை, ஷாருக்கானிடம் 'ஜோக்கர்கள் யார்?' என்று கேட்டபோது 'Voters' என்றார். அது நகைச்சுவைக்குச் சொல்லப்பட்ட பதில் அல்ல. ஒரு தயாரிப்புடனே மைக்குகளை அண்டுவார்கள். காமிரா முன்னால் நிற்பார்கள். சூர்யா அப்படி தயார் செய்தது போல் தோன்றவில்லை. அப்படித் தயார் செய்திருந்திருந்தால் இப்படி வாயில் பபுள்கம்முடன் வந்து மீடியாக்களுக்குக் கன்டன்ட் கொடுத்திருக்க மாட்டார் என்கிற அளவில் மட்டுமே எனக்குப் புரிகிறது.
நம் போன்றே எவரேனும் எதையேனும் யோசித்திருந்தால் 'அட!' என்று பார்ப்போமல்லவா? அது போல, வெகு சமீபத்தில் பார்த்த அறிவியல் புனைவுத் திரைப்படம் 'The Silent Planet'.
2024ம் வருடம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. நான் சொல்வது என்னவென்றால், நீங்கள் இந்தத் திரைப்படத்தை நேரம் கிடைத்தால் பாருங்கள். அப்படிப் பார்த்தவர்கள், சொல்வனம் இதழில் நவம்பர் 2024ல் வெளியான எனது 'நவீன சிறைச்சாலைத் தத்துவம்' சிறுகதையையும் வாசியுங்கள்.
சுட்டி இங்கே:
முடிந்தால், இவ்விரண்டில் எது நன்றாக இருக்கிறது என்று கமெண்ட் இடுங்கள். என் ஒபினியன் ஒரு பக்கம் இருக்கட்டும். திரைப்படத்தைப் பார்க்கவும் எனது சிறுகதையை வாசிக்கவும் செய்தவர்களின் ஒபினியன் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். முடிந்தால் செய்யவும். நன்றி.
"இரண்டாம் அடுக்குப் பிழைத்தல் விதிகள்" சிறுகதைக்கெனவான புனைவுவனம் நேர்காணலில் நான் பகிர்ந்தவற்றை வைத்து ஒரு சிறிய Reel/shorts உருவாக்கப்பட்டிருக்கிறது. Reel/shorts உருவாக்கிய சரஸ்வதி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். பின் வருவது அதன் சுட்டி.
https://www.youtube.com/shorts/CWZ8H2Yzb1I
2016ல், அன்றைக்கு வழக்கிலிருந்த Dating Trend ன் அடிப்படையில் ஒரு புனைவு எழுதலாம் என்று அமர்ந்தபோது, பலவாறாக யோசித்ததின் பலனாக, முடிவில், "இதை ஏன் சமூகக் கதையாக எழுதவேண்டும்? இதற்கு வேறொரு வடிவம் தேவை" என்று உணர்ந்த போது, அது தானாகவே கணித ரீதியில் அமைந்த ஒரு நான்-லீனியர் கதையாக உருவெடுத்தது.
அதில் வரும் 100:93 விகிதாச்சாரம், அதன் அடிப்படையில், அமைந்த எஞ்சிய கணக்குகள் எல்லாமும் தானாகவே ஒரு நூல் பிடித்தார்போல் ஒரு வடிவத்தில் அமைந்தன. அப்படி எழுதியதுதான் "உங்கள் எண் என்ன?" நூல்.
போலவே, 'பிரதியெடுக்காதே' சிறுகதையும். ஆண்-பெண் இடையிலான ஒருவருக்கொருவர் பொறுந்திப் போதல் நிமித்தம் மேற்கொள்ளப்படும் முயல்வுகள், அதன் பின் விளைவாக எழும் சமூகக் குற்றங்கள், போதாமைகள், இயலாமைகள் ஆகியன குறித்து ஒரு கதை எழுத அமர்ந்து, பிறகு, இதை ஏன் சமூகக் கதையாக எழுத வேண்டும் என்று தோன்றியதன் பலனாகவே, அது அறிவியல் புனைவாக விரிவடைந்தது. பார்க்கப்போனால், ஆண்-பெண் உறவுச் சிக்கல்களின் 99% விழுக்காடு பிரச்சனைகளை ஒரு கழுகுப்பார்வையில் பார்த்திட ஒருவர் இவ்விரண்டு ஆக்கங்களையும் வாசித்தால் மட்டுமே போதும். (இதன் பொருள், மற்ற/மற்றவர் ஆக்கங்களை வாசிக்க வேண்டியதில்லை என்பதில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். நான் அந்த அர்த்தத்தில் இவ்விதம் சொல்லவுமில்லை. தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.)
பல சமயங்களில், பல சமூகப் பிரச்சனைகளைக் குறித்து யோசித்தால், இயல்பாகவே, அது ஒரு அறிவியல் புனைவுக்கே என்னை இறுதியில் இட்டுச்சென்றுவிடுகிறது. 2020 துவங்கி, இப்படித் தோன்றி எழுதிய சிறுகதைகளின் ஒட்டுமொத்த தொகுப்பாகத்தான் 'மரபணுக்கள்' தொகுப்பு உருவாகியது எனலாம். 'மரபணுக்கள்' தொகுப்பை வாசியுங்கள் என்று நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவைகள் தொடும் சமூகப் பிரச்சனைகள் ஏராளம். 'பிரதியெடுக்காதே' சிறுகதை தான் 'மரபணுக்கள்' தொகுப்பின் முதல் கதை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
மனிதத் தவறுகள்.
*********************சொல்வனம் இதழின் "புனைவுவனம் - ஆசிரியரை சந்திப்போம்" நிகழ்ச்சியில், சொல்வனம் இதழில் வெளியான எனது "இரண்டாம் அடுக்குப் பிழைத்தல் விதிகள்" சிறுகதை குறித்து நேர்காணல் நடந்தது. திருமதி சரஸ்வதி தியாகராஜன் அவர்களின் கேள்விகளுக்கு பதில்கள் வழி சிறுகதை உருவாக்கம், சிறுகதைக்கான காரணிகள் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்திருக்கிறேன்.
இந்த நிகழ்வுக்கென சொல்வனம் இதழாசிரியர்களுக்கும், திருமதி சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கும், ஒருங்கிணைத்த பாஸ்டன் பாலா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
https://www.youtube.com/watch?v=8hE_Q3bNcyA
வேற்று கிரகத்தில் உயிர்கள்
K2-18b கிரகம் இருப்பது 124 ஒளி ஆண்டுகள் தொலைவில், அதுவும் leo நட்சத்திரக் கூட்டத்தில்.
இந்தக் கிரகம் இப்போது இணைய வெளியில் பேசுபொருளாகியிருக்கிறது. ஏன் தெரியுமா? ஒரு இந்திய ஆராய்ச்சியாளரால், K2-18b கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான ஆதாரமான DMS அதாவது dimethyl sulphide கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக உலவும் செய்திகள் இன்றைய முகநூல் வெளியை ஆக்ரமித்திருக்கின்றன.
கண்டு சொன்னவர் ஒரு இந்தியர் என்பதுவும், இந்தச் செய்தி வைரல் ஆனதற்கு ஒரு காரணம்.
உடனே இணையமெங்கும் fermi paradoxக்கு பதில் கிடைத்துவிட்டது, K2-18b கிரகத்திற்கு probe அனுப்ப முடிவு செய்திருக்கிறது நாசா என்றெல்லாம் சூடாக செய்திகள் பரவத் துவங்கிவிட்டது ஒரு பக்கமென்றால், இன்னொரு பக்கம், 124 ஆண்டுகளுக்கு முன்னான ஒளியை வைத்துக்கொண்டு, இப்போதே நல்ல நிலையில் இருக்கும் பூமியை சரிசெய்வதை விட்டுவிட்டு, புதிய கிரகம் எப்போது தாவலாம் என்று ஆளாய்ப் பறக்கிறார்கள் என்று கேலியும் கிண்டலும் கூட இணையத்தில் அதிகம் காண முடிகிறது.
DMS எனப்படும் dimethyl sulphide மட்டுமே உயிர்கள் இருப்பதற்கான ஆதாரமாகக் கொண்டு விட முடியாது. அது, உயிர்கள் இருப்பதால் மட்டுமே வெளியிடப்படும் வேதிப்பொருள் இல்லை. இந்த வேதிப்பொருள் இயற்கையான முறையிலும் வெளியாகலாம். இதே வேதிப்பொருள் 67P/Churyumov-Gerasimenko காமட்டில் கூட கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அங்கே உயிர்கள் என்று எதுவும் இல்லை. ஒரு நட்சத்திரத்தின் ஃபோடான்கள், கிரகத்தின் வான்வெளியில் உள்ள வேதிப்பொருட்களுடன் மோதுகையில் கூட DMS வெளிப்படுகிறது என்பதுவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். ஆக, DMS இருப்பதே உயிர்கள் இருப்பதற்கான சமிஞை என்று எடுத்துக்கொள்ள முடியாது என்பதே அறுதி உண்மை.
நமக்குத் தொடர்ந்து தகவல்கள் தேவை. அது தற்போது நம்மிடம் இல்லை. அதற்கு இன்னும் மென்மேலும் ஆராய்ச்சிகள் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு இன்னும் அதிகம் செலவாகும். இன்றோ நாளையோ சாத்தியப்பட்டுவிடும் காரியம் அல்ல. ஒளி ஒரு நொடியில் சென்றடையும் தூரமான சனிக்கிரகத்திற்கு, நம்மிடம் இருக்கும் அதி வேகமான விண்கலன் செல்ல சுமார் ஏழு வருடங்கள் ஆகும். உதாரணம்: Cassini. இதுதான் நம்மிடம் இருக்கும் உச்ச தொழில் நுட்பத்தின் வேகம்.
அப்படியிருக்கையில், 124 ஒளி ஆண்டுகள் தூரத்தை நாம் சென்றடையத் தேவையான தொழில் நுட்பம் இன்னும் சில தலைமுறைகளுக்குக் கூட சாத்தியமில்லை. ஒருக்கால் இன்னும் இருபது ஆண்டுகளில் அதை மனித இனம் செய்துவிடமுடியும் என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொண்டாலும், அதுவரை நம் பூமி, குறைந்தபட்சம் இப்போது இருப்பதைப் போல, தொடர வேண்டும். அதுவே கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இதுதான் நிதர்சனம். ஆகையால், நாம் எல்லோரும் தரையில் நடப்போமாக.
மரபணுக்கள்- அறிவியல் கதைகள் - Boje Bojan
மரபணுக்கள் - ராம் பிரசாத் - அறிவியல் சிறுகதை தொகுப்பு - பதிப்பகம் , படைப்பு - பக்கங்கள் 131- முதல் பதிப்பு 2024
மரபணுக்கள்- அறிவியல் கதைகள்
ஆசிரியர் பற்றி :
எழுத்தாளர் ராம் பிரசாத் தற்கால இளம் அறிவியல் எழுத்தாளர்களில் ஒருவர் பல அறிவியல் கதைகள் சிறுகதைகள் புனைவுகள் ஆகிவற்றை எழுதிஉள்ளார் . ஏற்கனவே இவர் எழுதி இருக்கும் வாவ் சிக்னல் மற்றும் புரதான ஏலியன் நூல்கள் புகழ் பெற்றவை அதிலும் வாவ் சிக்னல் பாராட்டு மற்றும் விருது பெற்ற நூல். தமிழ் மட்டும் இல்லாமல் ஆங்கிலத்திலம் இவரது புத்தகங்கள் இருக்கின்றது.
புத்தகம் பற்றி :
மொத்தம் 10 தலைப்புகளில் 130 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் ஆசிரியர் எழுதிய மற்ற புத்தகங்களில் இருந்து வேறு பட்டு நிற்கிறது. அதற்கு காரணம் பொதுவாக அறிவியல் கதை எழுதும் எழுத்தாளர்கள் பலவேறு தலைப்புகளில் இருந்து பல சிறுகதைகளை தொகுத்து ஒரு நூலாக எடுத்து வருவார்கள் . ஆனால் இந்த புத்தகத்தை பொறுத்த வரை எல்லாமே மரபணு அதாவது gene என்ற ஒற்றை கருவை வைத்து கொண்டு 10 விதமான கதைகளை சொல்லி இருக்கிறார். இதற்க்கே ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டு சொல்ல வேண்டும்.
"Genes are not our fate, but they are our starting point. The choices we make shape our destiny."
என்ற ரிச்சர்ட் டார்க்கின் வரிகளுக்கு ஏற்ப மரபணுக்கள் பற்றி பேசி இருப்பதே இது நூலின் முக்கியமான பலமாகும். ஒவ்வொரு கதையிலும் மரபணு தொடர்பான விஞ்ஞான தத்துவங்கள் மட்டுமின்றி, அதனால் மனித வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும் உணர்வுப்பூர்வமான கோணத்தில் பேசப்படுகின்றன.
இந்த புத்தகத்தில் உள்ள கதைகள் சிலவற்றை பார்ப்போம்
ஷேசம்:
பொதுவாக ஒரு ஆணும் பெண்ணும் சேரும் போது குழந்தைகளுக்கு அவர்கள் ரெண்டு பேரின் மரபணு தான் வரும் ஆனால் எதிர் வரும் காலங்களில் modified genetic என்ஜினீயர் மூலம் வேறு ஒருவர் மரபணுவோ அல்லது விலங்குகளின் மரபணுக்கள் மனித குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர் விருப்பம் உடன் செலுத்த முடியும். அப்படி பட்ட கதை தான் இது கதை படி நாயகன் steward க்கு ஷேசத்தின் அதாவது பாம்பின் மரபணு செலுத்த பட்டு இருக்கும். அதனால் அவன் கண்கள் மனிதன் கண்கள் போல் இல்லாம பாம்பின் கண்கள் போல் இருக்கிறது இதனால் ஏற்படும் விளைவு என்ன. இதை தீர்க அவனது காதலி எடுக்கும் முயற்சி என்ன. கடைசியில் என்ன நடந்து என்பதை படிக்க படிக்க விறுவிறுபாக இருக்கிறது.
சரோஜாதேவி:
பொதுவாக சரோஜா தேவி என்ற பெயர் சற்று சர்ச்சையான பெயராக இருந்துஉள்ளது. அது ஏன் அதற்கு இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்பதை புத்தகம் படித்த பிறகு புரிந்து கொள்ள முடியும். ஒரு விதத்தில் எழுத்தாளர் ராம் அவர்களை பாராட்டி ஆக வேண்டும். சற்று மாரி இருந்தாலும் கதை கருவே மாரி இருக்கும். அப்படி இல்லாமல் சரியாக கதை சொல்லி இருக்கிறார்.
கதையின் கரு ஒரு அனாதை விடுதியில் மன்சூர் என்ற பையனை சோதிக்க ஒரு மனநல மருத்துவர் ஒருவரை அழைத்து வருகிறார்கள். யார் அந்த பையன்? ஏன் அவனுக்கு சிகிச்சை அதன் பின் நடந்தது என்ன என்பதை அறிவியல் ரீதியாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
பச்சிலை & மாற்று தீர்வு
இந்த இரண்டு கதைகளும் தனித்துவம் கொண்டவை. அறிவியல் சார்ந்த ஆழமான கருத்துக்கள், விறுவிறுப்பான கதைக்களம் ஆகியவை வாசகர்களை ஈர்க்கும்.
கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது.
மரபணுக்கள் - ஸ்ரீநிவாஸ் பிரபு
Semi-Pro & Pro Sales