என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Thursday, 20 May 2021

26.05.2021 ஆனந்த விகடன் இதழில் என் கவிதை

 26.05.2021 தேதியிட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழில் சொல்வனம் பகுதியில் 'பழி பாவம்' என்ற தலைப்பிலான கவிதை வெளியாகியிருக்கிறது.

எனது கவிதையைத் தேர்வு செய்து வெளியிட்ட ஆனந்த விகடன் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.






Wednesday, 12 May 2021

வாவ் சிக்னல் தொகுப்பின் மீது கல்லூரி மாணவி ஆராய்ச்சிக்கட்டுரை

வாவ் சிக்னல் தொகுப்பின் மீது கல்லூரி மாணவி ஆராய்ச்சிக்கட்டுரை


நம்மூரில், வாசிப்பு என்றால் பாடப் புத்தகங்களோடு நின்றுவிட வேண்டும் என்பது  தான் பல குடும்பங்களில் எதிர்பார்ப்பு. இதற்காகக் குடும்ப அமைப்புகளைக் குறை சொல்வதற்கில்லை.  சமீபத்தில் ஒரு வாசகி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது "குடும்பக் கதைகள், செக்ஸ், சினிமா பொருளாதாரம் ... தான் அதிகம் மக்கள் எழுதுறாங்க, வாசிக்கிறாங்க" என்றார். இந்தப் பின்னணியில் பதிப்பகங்களே கூட அறிவியல்  புனைவுகள், கணிதப் புனைவுகள் என்றால் பதிப்பிக்க அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. 'யார் சார் வாங்குவா?" என்று பதில் வரும்.

இதன் பின்விளைவு என்னவென்றால், தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் பரிச்சயம் இருப்பதில்லை, அறிவியல் மாணவர்கள் தமிழில் இயங்குவதில்லை. இரண்டும் ரயில் தண்டவாளங்கள் போல ஒட்டாமல் பயணிக்கின்றன. தமிழில் அறிவியல் புனைவுகள் சுத்தமான தமிழில் எழுதப்பட இயலாமல் போனதன் மிக முக்கியமான காரணம் இதுவாகத்தான் இருக்க முடியும். 

இந்தப் பின்னணியில் தமிழ்ச் சமூகம் அறிவியல் நூல்களை, கணிதப் புனைவுகளை வாசித்துப் பழக வேண்டும் என்று குரல் எழுப்பினால், "ஏன் பாஸ், உங்க புக்கை யாரும் படிக்கலைன்னு வருத்தமா?" என்று பதில் வருகிறது. சமூக இயக்கத்தை ஒரு சமூக நலன் கருதி, ஒரு தொலை நோக்குடன் ஒரு வாதத்தை முன்வைத்தால், இதே தமிழ் சமூகம், அதையே ஒரு பவுன்சராக்கி கேள்வி எழுப்புபவனை வாயை மூடிக்கொள்ள நிர்பந்திப்பதை, தமிழ்ச் சமூகமாகப் பார்த்து புரிந்துகொண்டால் தான் உண்டு. போகட்டும்.. 

'வந்தாரை வாழ வைக்கும்' தமிழகமென்று நாம் தான் தவறாக  நினைத்துக்கொண்டிருக்கிறோம்... 'வந்தவரை மட்டும் தான் வாழவைப்பார்கள்' போல. 

தமிழ் - நவீன அறிவியல் என்கிற இந்த இணைப்பை யாரேனும் சாத்தியப்படுத்துகிறார்களா என்று கவனித்துக்கொண்டே இருந்தேன். 

விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் (மகளிர்) கல்லூரி தமிழ்த்துறையில் 'வாவ் சிக்னல்' சிறுகதைத் தொகுப்பை ஆராய்ச்சிக்கென எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரியவரும் முதல் முயற்சி இது என்பது தான் சற்று நெருடலாக இருக்கிறது. இந்த விஷயத்தில் நான் அறியாமையில் இருப்பதாக யாரேனும் நிரூபித்தால் சந்தோஷம் தான்.

மற்றபடி, என் நூல் ஒன்று ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதற்காக இதைச் சொல்லவில்லை. உண்மையில், தமிழ் மாணவராக இருந்தால் அறிவியல் குறிப்புகள் எழுதவும், அறிவியல் மாணவராக இருந்தால் தமிழில் எழுதிடவும் ஒரு பாடமாக, குறைத்தபட்சம் ஒரு ப்ராஜக்ட் போன்று நடத்திக்கொள்ள எல்லா கல்லூரிகளும் முன் வரவேண்டும் என்பது என் பரிந்துரை.

அதற்கு முதல் கட்டமாகவே  தமிழ் மாணவராக இருந்தால் அறிவியல் குறிப்புகள் எழுதவும், அறிவியல் மாணவராக இருந்தால்  நவீன அறிவியலை தமிழில் எழுதிடவும் ஒரு பாடமாக அமைய வேண்டும். இந்தப் புரிதலை 'விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் (மகளிர்) கல்லூரி தமிழ்த்துறை' சாத்தியப்படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதற்குக் , கல்லூரியின் துறை சார் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த பாராட்டுக்களும், பங்குபெறும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களும். 

முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் தன் கைப்பட எழுதியிருக்கும் குறிப்பை இங்கே பகிர்வது பொறுத்தமாக இருக்குமென்று எண்ணுகிறேன். பல பக்கங்கள் அடங்கிய குறிப்பில் ஒன்றிரண்டு பக்கங்களை மட்டுமே பகிர்கிறேன்.