என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday, 21 November 2010

வசீகரத்தினை இழந்துவிடும் பூக்கள்


வசீகரத்தினை இழந்துவிடும் பூக்கள்

அரும்புகையிலேயே
வசீகரத்தினை இழந்துவிடும் பூக்கள்
வாசங்களின் சமத்துவங்களை
புறந்தள்ளி விடுகின்றன...

வாசங்களின் சமத்துவங்களை
ஏற்கமுடியாதென வாதம்
செய்கின்றன...


வாசங்களுக்கப்பால்
மொழியை பிரதானமாக்க
முயல்கின்றன...

வாசங்களைத் தேடி
அலையும் சுரும்புகளுக்கு
மொழி தேவையற்றதாகிவிடுகிறது...


வாசங்களின் விதிகளின்
ஆளுமைகளை பூக்களே
முடிவு செய்கின்றன...


- ‍ ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
திண்ணை இலக்கிய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=31011215&format=html)

Sunday, 14 November 2010

தொலையும் சூட்சுமங்கள்


தொலையும் சூட்சுமங்கள்

வாசங்களைத் துரத்திவரும்
வண்டுக்கூட்டங்களில்
இடம்பெயர்தலின் சூட்சுமங்களைத்
தொலைத்துவிடுகின்றன பூக்கள்...


வாசங்களின் எல்லைகளைக் கடந்து
பயணிக்கும் வல்லமைகொண்ட‌
வண்டுகளின் முகவரிகள்
பூக்களிடம் இருப்பதில்லை...


தொலைக்கப்பட்ட சூட்சுமங்கள்
மறைத்துவிடுகின்றன சில கோணங்களை...
தொலைக்கப்பட்ட சூட்சுமங்கள்
மறைத்துவிடுகின்றன சில அறிமுகங்களை...


கிணற்றுத்தவளையின் உலகில்
சங்கமிக்கிறது வாசங்களை விரவும்
பூக்களின் கண்ணோட்டங்கள்...


- ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)

#நன்றி
திண்ணை இலக்கிய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=31011148&format=html)