Sunday, 24 October 2010
திமிர்க் காற்றும், விளை நிலமும்
திமிர்க் காற்றும், விளை நிலமும்
இடம்பெயர்ந்தறியா விளைநிலத்தை
தேடி வந்து விதைகளைத் தூவிச்செல்கிறது
வஞ்சக வானம் விதைத்த
பெருஞ்சீற்றத் திமிர் பிடித்த காற்று...
பாலின வேறுபாட்டின் மங்கலான ஒளியில்
நெல்லெனப் பதரைத் தாங்கிய விதைகளை
விழுங்கி பசலை கொள்கின்றது
விளை நிலம்...
விதைக்கப்பட்ட விதைகள்
பதரென உமிழ்கின்றன
ஒரு வீணடித்த தலைமுறையை...
ஆங்கொரு மூலையில்,
விளை நிலங்களை ஒத்துவிடும்
தலைமுறையை தேடி உருவாகிறது
சீற்றத்திமிர் கொண்ட காற்று
மிகச்சிறியதொரு சுழலென...
- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
# நன்றி
திண்ணை இலக்கிய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=310102415&format=html)
வார்ப்பு கவிதைகள் இதழ்(http://vaarppu.com/view/2290/)
Monday, 4 October 2010
இறக்கைகளுக்கான செய்முறை விளக்கங்கள்
இறக்கைகளுக்கான செய்முறை விளக்கங்கள்
வண்டுகளையொத்த இறக்கைகள் இன்றி
பறக்க முயற்சிக்கின்றன பூக்கள்...
வலுவில்லாத பூவிதழ்களால்
பெருமுயற்சிசெய்து இரண்டொரு முறை
பறக்கவும் செய்கின்றன அவைகள்...
தின்மை அடைத்த காற்றின்வெளி
பூக்களுக்காய் செய்த உதவிகள்
கரைந்து விடுகின்றன கவனிப்புகளின்றி...
புதுப்பித்தலின் படையெடுப்புக்களில்
மரணித்துவிடும் வாசங்களைப் பற்றிய
அக்கறைகள் உயிருடன் புதைக்கப்பட்டுள்ளன...
பூவிதழ்களுக்காய் வாசங்களை மீட்டெடுக்கும்
இறக்கைகளுக்கான செய்முறை விளக்கங்களின்
ஒரு பகுதி வண்டுகளுடன் கிடைக்கலாம்...
- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
#நன்றி
உயிரோசை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=3462)
Subscribe to:
Posts (Atom)