நான் எப்போதும் சொல்வதுதான். இந்த இயற்கை எல்லா அறிவாளிகளையும் ஒரே ஜாதிக்குள் போடுவதில்லை. அப்படி ஒரு ஜீனியஸ், தாழ்ந்த குலத்தில் பிறந்தால் என்னாகும்?
நல்ல திறமைசாலி, அறிவாளி இருந்தால், ஒரு அமைப்பு அவனை முதலில் கடை நிலையில் தான் அமர்த்தப்பார்க்கும். அப்போதுதான், அவனை சக்கையாகப் பிழிந்து வேலை வாங்கி, அவன் பெயரை எடுத்துவிட்டு தன் பெயரைப் போட்டுக்கொள்ள முடியும். பெரும்பாலான அமைப்புகளில் இதுதான் நடக்கிறது. தகுதிக்கு பொருந்தாத இடம் தான் clue. அது ஒரு எச்சரிக்கை மணி. தகுதிக்குக் குறைந்த எதுவாகினும், அது பதவியோ, இருக்கையோ எதுவாகினும் ஏற்கக் கூடாது. ஆனால், அய்யன்மணியின் சூழல் அவனை ஏற்க வைத்துவிடுகிறது.
சரி. அமைப்பை நிறுவும் அளவுக்கு பொருளாதார சுதந்திரமும், அதிகாரத்தின் ஆதரவும் இருப்பவர்கள் ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும்? கண்டுபிடிப்புகளை ஏன் திருடவேண்டும்? அவர்களே கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாமே?
அதுதான் இல்லை. comfort zoneல் மூளைச்சூட்டின் வேகம் குறைவாகவே இருக்கும். இன்னும் சொல்லப்போனால், சூடே இருக்காது. நீங்கள் வளர வேண்டுமென்றால், திறமையானவராக மாற வேண்டுமென்றால், நீங்கள் சவால்களைச் சுமக்க வேண்டும். அதற்கென உழைக்க வேண்டும். மிகக்குறைந்த உள்ளீட்டை வைத்துக்கொண்டு, எதிர்பார்க்கப்பட்ட விளைவுகளை உருவாக்க வல்லவராக உருவாக வேண்டுமென்றால், comfort zone உதவாது.
அமைப்பை நிறுவும் அளவுக்கு பொருளாதார சுதந்திரமும், அதிகாரத்தின் ஆதரவும் இருப்பவர்கள் ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும்? கண்டுபிடிப்புகளை ஏன் திருடவேண்டும்? அவர்களே கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாமே? என்றால் இது நல்ல கேள்வி தான். ஒருகாலத்தில் 96% மதிப்பெண் எடுத்து, பொறியியல் மருத்துவம் பயின்றவர்கள் தான் பின்னாளில், ஆச்சர்யங்களை நேர்மையாக உருவாக்க இயலாமல் போய், அழுத்தங்களை, கேள்விகளை எதிர்கொள்ள, திருட்டில் இறங்குகிறார்கள், வெகு ஜனத்தை ஏமாற்றும் போலி பிம்பங்களை உருவாக்குவதில் தொலைகிறார்கள் என்பது சோகமான உண்மை. இதற்காக இவர்கள் செய்யும் அரசியல்கள், வாட்ஸாப் குழுக்களில் போட்டுக்கொள்ளும் சண்டைகள், அடிக்கும் லூட்டிகளில் செலவிடும் நேரத்தை உருப்படியாக ஒரு திறனை உருவாக்கிக்கொள்ளச் செலவு செய்தால், காலப்போக்கில், ஒரு ஆச்சர்யத்தை உருவாக்க நேர்மையாகவே தகுதிபெறும் வாய்ப்புகள் பெறுகும் என்பது இவர்களுக்கு என் பரிந்துரை.
இந்தப் பின்னணியில் பால்ய வயது ஏன் காதல்களுக்கு மிக மோசமான வயது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
பொதுவாக அதிகம் மதிப்பெண் வாங்கும் ஆண் பிள்ளைகள் மீது பள்ளியிலேயே ஈர்ப்பு வரும். ஆனால், பிற்காலத்தில் இப்படியாக மதிப்பெண் வாங்கிய ஒருவர் நேர்மையாகவே ஆச்சர்யங்களை உருவாக்க வல்லவராவார் என்பதற்கான சாத்தியங்கள் 2%க்கும் குறைவாக உள்ளது என்பதுதான் உண்மை. ஆனால், பெண்கள் இயல்பிலேயே மொழித்திறன் வாய்ந்தவர்கள். உண்மைக்கும், நேர்மைக்கும் மிகவும் அருகாமையில் அமர்பவர்கள். திறமையை வைத்து ஈர்த்துவிட்டு பின்னாளில், போலித்தனம் சாக்கு போக்கு என்று ஒரு ஆண் மாறுகையில் அவன் இயல்பாகவே பெண்ணின் POVல் தன் மதிப்பை இழந்துவிடுகிறான். இப்படியான காதல்கள் பிற்காலத்தில் மிக அவலட்சணமாகத் தோன்றவே வாய்ப்பதிகம்.
போலவே, பள்ளியில் ஆவரேஜ் மதிப்பெண் வாங்கி, பெண்களை ஈர்க்க முடியாமல் திணறுபவர் வளர வளர ஆளுமை மிக்க மனிதராக உருவெடுக்கவும் அதே 2%க்கும் குறைவான சாத்தியங்களே உள்ளன. பள்ளி நாட்களில் காலம் அவருக்கு சாதகமாக அமையவில்லை என்பதற்காக அவரை ஒதுக்குவது, உங்கள் வாழ் நாள் தவறாகவும் அமைந்துவிடலாம். இதனாலேயே பால்ய வயதில் காதல்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனெனில், யார் எப்படி வளர்ந்து வருவார் என்பது முழுக்க முழுக்க காலத்தின் கையில் தான் உள்ளது.
ஆச்சார்யாவை விட அவரிடம் வேலை பார்க்கும் அய்யன்மணிக்கு அறிவுக்கூர்மை அதிகம் இருக்கிறது. அதை ஆச்சார்யா வீணடிக்கிறார். அங்கீகரிக்க மறுக்கிறார்.
அய்யன்மணி தன் ஐந்து வயது மகனை ஜீனியஸாகத் தோன்ற வைக்கிறான். படம் டார்க் காமெடி ரகம் என்பதால் பொது ஜனத்திற்கு அய்யன்மணியிடம் உள்ள ஜீனியஸ்தனத்தை கண்டுகொள்ளத் திராணியில்லை என்பதை இப்படி காமெடி அடித்திருக்கிறார்கள் என்றே புரிந்துகொள்கிறேன். ஆனால், அய்யன்மணி அளவிற்கு அவனது மகன் அந்த ஐந்து வயதில் வெளிப்படவில்லை என்பதாகக் காட்டப்படும் காட்சிகளை, its too soon என்ற அடிப்படையில் கடந்து போகிறேன். அவர் வளர்ந்தால் ஒருவேளை தன் தந்தை அய்யன்மணியைப் போலவே வளர்ந்து வரலாம். அய்யன்மணியிம் 50% மரபணுவை சுமக்கிறார் அல்லவா?
ஆச்சார்யாவுக்கு நடப்பதெல்லாம் தெரிகிறது. ஆனாலும் அந்தக் கட்டமைப்பு தரும் சுகத்திலிருந்து வெளியே வர விருப்பமில்லை. கட்டமைப்புக்குள் இருந்தபடி அந்த ஆச்சர்யத்தை உருவாக்க முடியுமா என்பதிலேயே தன் கவனங்களைத் தொலைக்கிறார். இறுதியில் அவர் தொலைந்தே போகிறார்.
அய்யன் மணி இறுதிக்காட்சியில் தன் மனைவியிடம் சொல்லும் டயலாக் எபிக் ரகம்.
எல்லா ஆரவாரத்திற்கும் மத்தியில், எங்கோ ஒரு மூலையில், இருக்கிறதா இல்லையா என்று சந்தேகிக்கும் அளவிற்கு ஒரு பேரமைதி குடிகொண்டிருக்கிறது. அத்தனை ஆரவாரத்திலும் அந்தப் பேரமைதி ஒரு சிறு சலனம் கூட இல்லாமல் தொடர்ந்து உயிர்த்திருக்கிறது. அந்த உயிர்ப்பு தான் ஜீனியஸ். அதைக் கண்டுகொள்ள பெரிய ஞானம் தேவையில்லை. ஆரவாரங்களுக்கு நடுவே அந்தப் பேரமைதியை அடையாளம் காணத்தெரிந்தால் போதும். பார்க்கப்போனால் இன்றிருக்கும் சமூக இயல்பிற்கு, இதுதான் tough job ஆக இருக்கும்.
ஆரவாரத்திலேயே புழங்கி, அதிலேயே தொலைபவர்களுக்கு: அய்யன்மணி சொல்வது போல், I can't deal with primitive minds like these என்பதுதான் எல்லா ஜீனியஸ்களின் விமர்சனமாக இருக்குமென்பதை திரையிலேயே காட்டிவிட்டார்கள்.
திரைப்படம் netflixல் தமிழிலேயே இருக்கிறது. நவாஜுதின் சித்திக் அருமையாக நடித்திருக்கிறார். மிகவும் முக்கியமான திரைப்படம்.