என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday, 28 February 2017

01.03.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை

01.03.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை

இந்த வாரம் ஆனந்த விகடன் இதழில் சொல்வனம் பகுதியில் எனது "இசை" கவிதை வெளியாகியிருக்கிறது. பிரதிகள் இங்கே..




எனது கவிதையை வெளியிட தேர்வு செய்த ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...


Thursday, 9 February 2017

15.02.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை

15.02.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை


Thursday, 2 February 2017

உங்கள் எண் என்ன - விமர்சனம் - 3

உங்கள் எண் என்ன - விமர்சனம் - 3

கண்ணன் ராமசாமி:

முன்னுரை:
இந்த ஆண்டு நான் முதலில் வாசித்த புத்தகமாக இந்தப் புத்தகம் விளங்குவது பல விசித்திரமான எண்ணங்களை உருவாக்கித் தந்திருக்கின்றது. இந்தியாவின் முதல் Mathematical fiction இது தான் என்கிற பதாகையைத் தாங்கி வந்திருக்கும் இதன் எழுத்தாளர் திரு. ராம் பிரசாத், திரு.கவுதம சித்தார்த்தனின் பரிந்துரையின் பேரில் எனக்கு அறிமுகமானார். எனக்கு கணிதப்புனைவாக ஒரு கதை சொல்ல வேண்டும் என்று பல நாட்களாக ஒரு ஓரத்தில் ஆசை இருந்து வந்தது. இந்த உணர்வே, இவர் என்னிடம் இந்த நாவலைப் பற்றிப் பேசிய பிறகு தான் நினைவுக்கு வந்தது. அதுவரை வாகனத்தில் செல்லும் போது எங்கேயோ டயரில் மாட்டி இழுத்து வரப்பட்ட துணிக் கிழிசலைப் போல நான் இதனை தாங்கி வந்திருக்கிறேன்.
நான் ஏன் Mathematical fiction எழுத ஆசைப்பட்டேன்? வெகு ஜன சினிமாக்கள் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று சொல்லும் போதெல்லாம் கலைத் துறை தொடர்பான திறமைகளைப் பற்றி மட்டுமே பேசுகின்றன எனும் ஆதங்கம் என் மனதளவில் இருந்து வந்தது. இதையும் தாண்டி மக்களால் சாதிக்க முடியாதா என்கிற கேள்வி என் மனதில் எழுந்தது.
இந்தியாவில் படித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளிடம் பிடித்த பாடம் எதுவெனக் கேட்டால் கண்டிப்பாக பலர் கணிதம் இல்லை என்பார்கள். அதற்குக் காரணம், அது வாழ்க்கையில் இருந்து அந்நியப்பட்டுக் கிடப்பதால் தான் என்பார்கள். 
வானத்தில் வர்ண ஜாலம் புரிய சூரியன், நீர்த் துகள்களை பட்டகமாக (Prism) உபயோகித்துக் கொள்ளும் நிஜத்தை கண் கூடாக பார்த்த யாருக்கும், இயற்பியலில் Dispersion of light ஐ பற்றிப் படிக்கும் போது சுவை மிக்கதாக இருக்கும். ஆனால் முழுவதுமாக எண்களாலும், சமன்பாட்டாலும், தியரங்களாலும் இறுகிக் கிடக்கும் மண் மேட்டினைப் போன்ற கணிதத்தை, இளக்கி சுலபமாகப் புரிந்து கொள்ள நிஜ உலக ஒப்பீடுகள் இல்லாமல் இருப்பதே பாலைவன வரட்சியை ஒத்த நிலைமையினை இந்தத் துறைக்குள் புகுத்தியிருக்கிறது. 
இன்று வரையில் இந்திய மொழிகளில் ஒரு முயற்சி கூட இந்த விரிவான பரப்பில் இல்லை என்றால், இத்தகைய வரண்ட நிலத்திலிருந்து ஈரத்தைத் தோண்டிக் கண்டுபிடிக்கும் செயல் கடினமானதாக இருக்கும் எனும் காரணமே சட்டென நினைவுக்கு வருகிறது. இதன் காரணமாகவே, உலக அளவில் எழுதப்பட்ட Mathematical fiction கள் எல்லாமும் சுவாரசியம் குன்றி விடுமோ என்கிற பயத்தை நிறப்பிக் கொள்ள, மக்களால் சுலபத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய Crime மற்றும் Bio fiction ஆகிய ஜானர்களுக்குள் அடங்கி விடுகின்றன. இதையும் மீறிப் போனால் Space travel தொடர்பான, Sci-fic கதைகளாக இருக்கின்றன. 
ஆனால், மனித உணர்வுகளையும், அதிலும் ஆண் பெண் உரவில் ஏற்படும் விரிசல்களைப் பேசி, அதனை நேரடியாக கணிதத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் மூலமாக அல்லாமல் ஒப்பீட்டளவில் சில வார்த்தைகளை எடுத்துக் கொண்டு, அந்த வார்த்தைகளின் மூலமாக கதை சொல்ல முயற்சித்திருக்கும் இந்த நாவலின் சாதனை அசாத்தியமானது. 
ஆங்கிலத்தில் Mathematical fiction என்று தேடினால் சுமார் 65 புத்தகங்கள் கிடைக்கின்றன. கணிதம் கற்பிக்கப்படும் முறையில் ஆங்கிலமும், இலத்தீனமும், ரோமன் எழுத்துக்களும் எண்களும் மிகுந்திருப்பதால் இந்த எண்ணிக்கை குறைவு என்றே கூறுவேன். தமிழில் ஒரு கணிதப் புனைவு எழுத வேண்டும் என்றால் ஒட்டு மொத்தமாக பொருள் மாறாது தமிழில் மொழிப்பெயர்க்கும் வேலை கடினமானதாகவும் அயற்சியூட்டக் கூடியதாகவும் இருக்கும். ஆனால் இதை இந்தப் புத்தகத்தை எழுதியுள்ள ராம்பிரசாத் அனாயாசமாக கடந்து வந்திருக்கிறார். கணிதத்தின் கோட்பாடுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு, அவற்றின் மாறிலிகளுக்குள் மனிதர்களையும் சூழ்நிலைகளையும் பொருத்தி, இந்தக் கதையை சுவை குன்றாது படைத்திருக்கிறார்.
மேஜிகல் ரியலிசம்:
கதைக்கு பதிப்பாளர் கொடுத்துள்ள முன்னுரையில்,
ஐந்து கதாப்பாத்திரங்களுக்குள் நிகழும் ஒரு வரிக் கதையானாலும் அதனை விளக்க எடுத்துக் கொண்ட களமும், உணர்வுகளை பிரதிபலிக்கும் ஆழமான விவாதங்களும் இதனை வித்யாசமான படைப்பாக முன்னிருத்துகிறது என்று சொல்கிறார்கள். இந்த முன்னோட்டம் கதையிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்கிற சரியான அறிவிப்பாக உள்ளது. எனக்கும் பல இடங்களில், செல்வத்தின் உணர்வுகளை அவன் வெளிப்படுத்தும் விதம் பிடித்திருந்தது.
உதாரணமாக, தன்னுடைய மனைவியின் கள்ளக் காதலை அவன் அறிந்த பிறகு, கதவை பூட்டி வைக்க இனி தேவையில்லை என்று அவன் எண்ணுவது, அவள் ஏன் தன்னை ஏமாற்றினாள் என்று யோசிக்கையில், தன்னிடம் ஏதேனும் குறை இருக்கிறதா என்று அவன் யோசிக்கும் விதம், இப்படியாக ஒரு ஆணின் பார்வையை நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார் ராம் பிரசாத். பதிப்பாளரின் கருத்துத்தோடு சேர்ந்து மற்றொரு அறிவிப்பையும் கொடுக்கத் தோன்றுகிறது. 
இந்தக் கதை கள்ள உரவு தொடர்பான களத்தை விவரித்து தொடங்கி வைத்த பிற்பாடு, கொலம்பஸ் எனும் அமானுஷ்ய மனிதன் செல்வம் என்கிற நாயகனுக்கு அறிமுகம் ஆவதில் இருந்து ஒரு வகையான மேஜிகல் ரியலிச தளத்திற்கு மாறுகிறது. மனைவி கள்ள உரவு கொள்வதை எவ்வாறு எதிர் நோக்க வேண்டும் என்கிற வித்யாசமான பார்வையை கணிதத்தின் துணை கொண்டு, அவர்களது நிலைப்பாட்டில் இருந்து பல அர்த்தங்களை (இங்கே அர்த்தம் என்கிற வார்த்தை ஒரு மாறிலியாக வருகிறது) எடுத்துக் கொண்டு விளக்குகிறான் கொலம்பஸ். ராம் பிரசாத் இந்த வித்யாசமான பார்வையினை, ஒரு புத்தகத்தை புரட்டி செல்வம் தெரிந்து கொண்டான் என்று எழுதியிருக்கவும் முடியும். ஆனால், கொலம்பஸ் என்கிற பெயரை வரலாற்றிலிருந்து கடன் வாங்கிக் கொண்டு, தான் கண்டுபிடித்த ஒரு தியரியை முன்வைப்பதன் மூலம் எழுத்தாளர் மேஜிகல் ரியலிசத்தை கதையின் சுவாரசியத்திற்காக உபயோகித்திருக்கிறார். ஆனால், இது கதையை நகர்த்துவதற்கு மட்டும் தான் பயன்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகு, கதையின் பிற்பாதியில் விவாதங்களாகவும், விளக்கங்களாகவும் கடக்கிறது. பெரிதாக கதையில் எந்த திருப்பங்களும் இல்லை. மேஜிகல் ரியலிசத்தை மேலும் உபயோகித்து, கதையை இன்னமும் சுவாரசியமாக எடுத்துச் சென்றிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
சிறப்பம்சம்:
இந்தக் கதை ஒரு வரியில் முடிந்து விட்டாலும், சமூகத்தில் நடந்த பல்வேறு கள்ள உரவு, கற்பழிப்பு, ஆணவக் கொலை தொடர்பான உதாரணங்கள், அவை ஏன் நிகழ்ந்தன என்பதைப் பற்றிய விவாதங்கள் வழி நெடுகிலும் நிறைந்துள்ளன. சாதியின் குறியீடுகளான நிற வேற்றுமை, பொருளாதார ஏற்றத் தாழ்வு, படிப்பு, வேலை, சூழல், வாழ்விடம், திறமைகள் ஆகியவை ஆண் பெண் உரவில் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்று ஒவ்வொன்றையும் ஒவ்வொரு மாறிலியாக கருதிக் கொண்டு, அதன் அடிப்படையில் அறிவியல் ரீதியாக பாலியல் தேர்வு நிகழ வேண்டும் என்று பேசுகிறது நாவல். இது தான் இக்கதையை சிறப்பானதாக மாற்றும் கூறு.
கணிதம்:
கணிதத்தின் பல கூறுகளை இந்தக் கதையில் காண முடிகிறது. இதை வாசிப்பவர்களுக்கு, பள்ளியில் படித்த பல கோட்பாடுகள் நினைவுக்கு வரும் என்பதை, செல்வத்தின் வாயாலேயே சொல்லி விடுகிறார் எழுத்தாளர்.
சரி, தவறு என்பதே ரிலேடிவிட்டி (சார்பியல்) தான் என்பது,
மனிதர்களின் அனுபவம் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட தொகுதி (finite set) என்று சில உதாரணங்களின் மூலம் விளக்குவது,
உடற்பயிற்சிக்கும் வரைபடக் கோட்பாட்டிற்கும் ஒப்புமையைக் கொண்டு வருவது,
இந்த உடலின் செல் இயக்கத்தை கணிதத்தின் மூலம் கணக்கிடுவது, மரத்தின் இலைகளின் எண்ணிக்கை என்பது Fibonacci எண் என்பது,
இப்படியாக அனைத்தும் கதையின் ஓட்டத்தில் படிக்கையில் சுவாரசியத்தை அள்ளி விடுகின்றன.
மேலும், கொலம்பஸ் தன்னுடைய RODE என்று பெயரிடப்பட்ட அட்டவனையை செல்வத்தின் வாழ்க்கையோடு பொருத்தி விளக்கும் போது, சரியான இடை வெளியில், மனிதர்கள் எல்லாம் படிமங்களைப் போலத் தான், அனைத்துமே முரண் இருமைகள் தான் என்பதாக, கணிதத்தின் பல்வேறு கோணங்களை விளக்கிக் கொண்டே போகிறான். ஒவ்வொரு மனிதரும் எடுக்கும் முடிவுகள் எவ்வாறு அவர்களை ஒரு சூழ்நிலையை நோக்கி உந்தித்
தள்ளுகின்றன என்பதற்கும் ஒரு வரைபடத்தை வரையும் இடத்தில், விதியை மதியால் விளக்க முனைகிறான் கொலம்பஸ். இளவரசன், கோகுல் ராஜ் கொலை வழக்குகளுக்கும், நிர்பயா கற்பழிப்பு வழக்குக்கும் கூட இந்த அட்டவனையை பயன்படுத்தினால் அவசியமே இருந்திருக்காது என்பது கொலம்பஸின் வாதம். அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் சார்த்தருடன் கூட்டு சேரும் டார்வின் தான் சரியான வழி என்பதும் கொலம்பஸின் முடிவு. இந்த அட்டவணையின் உதவியோடு, ஒரு மாற்றுத் திறனாளி அல்லது வேறு வகையில் பாதிக்கப் பட்டவர்கள் கூட துணை தேடலாம் என்பது, எல்லோரையும் உட்படுத்திய ஒரு வழியாக இதனை நம்ப வைக்கிறது.
கணிதத்தை சுலபமாக புரிய வைக்க முடியுமா?
தன்னுடைய அட்டவனையை கொலம்பஸ் சுலபமாக புரிய வைக்க நிறைய முயற்சி எடுக்கிறான். மக்களுக்கு அந்நியமான கணிதத்தை, அவர்களுக்கு நெருக்கமான துரௌபதி கதையோடு பொருத்தி விளக்கும் இடம் அட்டகாசமாக உள்ளது. இந்த இடத்திலேயே, ஒரு பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ, அவள்/அவனுடைய அர்த்தத்திற்கு பொருந்தும்படியான ஒரு துணை அமைவது முக்கியம் என்பதை புரிய வைத்து விடுகிறான் கொலம்பஸ். மேலும், இந்த அட்டவனையை திரும்பத் திரும்ப ஒரு குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல கொலம்பஸ் செல்வத்திற்கு சொல்லிக் கொடுக்கிறான். இது ஒரு புதிய முயற்சி என்பதால், இத்தகைய விவரமான விளக்கங்கள் தேவை தான்.
பிறகு, ஒரு பெண் தன்னிடம் இருந்து விலக முடிவெடுத்து விட்ட பிறகு அவளை மன்னிப்பதன் மூலம் அந்தப் பெண்ணுக்கும் தனக்கும் தேவையான சரியான துணையை நெருங்க முடியாமல் போவதற்கு அந்த ஆண் காரணமாகி விடுவதை, யதார்த்தப் பின்னணியில் இருந்து கொண்டும், பொதுவான கருத்தோட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து கொண்டும் விளக்க முற்படுகிறான் கொலம்பஸ். இதற்கு சுவாரசியமாக Anti- relationship by deadlock என்றொரு terminology ஐயும் கொடுத்து விடுகிறான். யதார்த்தப் பின்னணியில் இருந்து கொண்டு அவன் விளக்கும் 1000 ஆண்களுக்கு 930 பெண்கள் எனும் கணக்கை நாம் பல இடங்களில் கவனித்திருக்கிறோம். ஆயினும், ஆண் பெண் உரவை இந்த ஒரு பின்னணியில் இருந்து நம்மால் ஏன் சிந்திக்க முடியாமல் போனது எனும் கேள்வியை நம் மனதில் இக்கதை எழுப்பாமல் இல்லை.
விமர்சனம்:
கதையின் பல சிறப்பம்சங்களை நாம் பார்த்துவிட்ட நிலையில், சில விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டி இருக்கிறது.
எந்த ஒரு படைப்புக்கும் மேல் சட்டையைக் காட்டிலும் அடிப்படையான ஆழம் மிக்கதான கருத்தாக்கம் தான் மிக முக்கியமானது. இந்த நாவலின் பரிந்துரையின் படி, பாலியல் தேர்வு முறையில் கொலம்பஸ் - ன் சார்ட் எல்லா வகையான உரவுச் சிக்கல்களுக்கும் வழி சொல்கிறது என்றாலும், இந்தக் குறிப்பிட்ட கதையில் ஆணாதிக்கம், பெண்ணியம் குறித்த புரிதலின்மை ஆங்காங்கே தென்படுகின்றன. 
அந்த அட்டவனையை யார் எப்படி உபயோகிக்கிறார்களோ, அவ்வாறு அது பாலியல் தேர்வினை மாற்றிச் சொல்லும். ஒரு மனிதரின் குறிப்பிட்ட சில அர்த்தங்கள் மற்றொரு பெண்ணிற்கு ஒத்துப் போதலின் விளைவே நல்ல உரவுக்கு அடித்தளம் என்றாலும், இருவருக்கும் இடையிலான முரணான அர்த்தங்களை கண்டுபிடிப்பது என்கிற வேலையில் தான் சிக்கலே உள்ளது.
உதாரணத்திற்கு,
1.    செல்வா தன்னுடைய மனைவி சரளா எதிர் வீட்டு மாதவனுடன் கள்ள உரவு கொண்டது ஏன் என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்கிறான். அவனுக்கு இன அடையாளம், கருமை நிறம் முதலான சில அர்த்தங்கள் கிடைக்கின்றன. கதை முடிவு வரை உண்மையான அர்த்தத்தை சரளாவின் வாயால் அவன் கேட்கவே இல்லை. கள்ள உரவு கொண்ட சரளா சொல்லும் உப்புக்கு சப்பில்லாத காரணம், அவளுடைய மனதை அறிய முடியாத ஒரு ஆணின் பார்வை, வாசகருக்கு ஏதேனும் சொல்ல வேண்டுமே என்று எண்ணி உருவாக்கப்பட்டதாகவே கருத முடிகிறது. ஒரு பேச்சுக்கு, இந்தக் கதையில் வாழும் கதாபாத்திரங்கள் நிஜ வாழ்வில் இருந்தால் இதைத் தாண்டிய மற்றொரு முடிவு சாத்தியமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. அதே நேரம் செல்வத்தை காட்டிலும் மாதவன் எந்த விதத்திலும் மேலானவன் இல்லை எனும் முடிவும் செல்வத்திற்குத் தோதாகவே உருவாக்கப் பட்டிருக்கிறது. இது கதையில் வரும் ஆணின் பார்வைக்கு தோதாக வாசகரை தயார் படுத்தும் முயற்சி என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.
2.    செல்வம் தன்னுடைய பெண்ணியம் குறித்தான பார்வையை சரளா ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அவளுடைய புரிதலின்மை என்கிறான். இந்த எண்ணம் அவனை ஆணாதிக்கம் என்கிற ஒன்று இல்லவே இல்லை என்று முடிவு செய்ய வைக்கிறது. ஒரு பெண் ஆடை அணியும் போது அவளை வரம்புகளை பின்பற்றச் செய்ய வேண்டும் என்கிற செல்வத்தின் வேட்கை ஒரு ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தான் என்று அவனுக்குத் தோன்றவே இல்லை. மேலும் கற்பழிப்புக்கான காரணங்கள் யாவை என்கிற அறிவியல் பூர்வமான ஆய்வில் செல்வம் இறங்கவே இல்லை.
மாற்றுக் கருத்துகள்:
“நவீனமாக ஆடை அணிவதற்கென்ன? எல்லாம் நம்ம கிட்ட தானே இருக்கு?” என்று சரளா சொல்வதை நவீனத்துவவாதிகளின் போலிப் பரப்புரையாக நினைத்து செல்வம் உதாசீனப் படுத்தி விடுகிறான். அவன் நவீன ஆடையால் கவனச் சிதறல் ஏற்பட்டு படிப்பு கெட்டுப் போகலாம் என்று சொல்லும் போது, இதே குறைபாடுகள், நுகர்வுக் கலாச்சாரத்தால் தூக்கிச் செல்லப்பட்ட உலகில் உள்ள ஆணுக்கு இருந்தும், அவன் சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரத்தை அனுபவிப்பது எப்படி? என்கிற கேள்விக்குள் அவன் செல்லவில்லை.
தன் நிற, இன அடையாளத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் ஒரு ஆண், அதில் இருந்து விடுபட்டு படிப்பில் முன்னுக்கு வர வேண்டும் என்று எண்ணுவது தவறில்லை என்கிறான் செல்வம். ஆனால், பல ஆண்டுகளாக ஆணின் பேச்சை கேட்டு நடப்பதே பெண்ணுக்கு நல்லது என்கிற பரப்புரையை வைத்தே பெண்ணின் மீதான பிடிமானத்தை ஆண் விட்டுக் கொடுக்காமல் வைத்திருக்கிறான் என்பதை செல்வம் அறியவில்லை. அத்தகைய பிடிமானத்தை உடைத்து எறிந்து, தன்னுடைய நலனை தானே காத்துக்கொள்ள பெண்ணுக்கு திராணி இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பெண்களும் இருக்கிறார்கள் என்று செல்வம் யோசிக்கவில்லை.
கற்பழிப்பு வழக்குகளில் ஈடுபட்டவர்கள் எதற்காக ஒரு பெண்ணை தன் வசப் படுத்துகின்றனர் என்பதற்கு அவர்களின் வாக்குமூலங்களே சாட்சியாக உள்ளன. பொதுவாக கற்பழிப்புகள், நான்கு வகையான காரணங்களால் நிகழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1. ஆண் பெண்ணின் மீது செலுத்தும் ஆதிக்கம்- தனக்கு அடங்காதவள் என்கிற ஆதிக்க இழப்பினால் உண்டாவது
2. ஒரு பெண்னை அடைய வேண்டும் என்று முடிவு செய்த ஆண், இருவரும் ஒன்றாக சந்திக்கும் போது சூழலை தனக்குச் சாதகமாக ஏற்படுத்திக் கொள்வது - Acquaintance rape. இதில் போதையால் கட்டுப்பாடு இழப்பு முதலான காரணங்களும் அடக்கம்.
3. ஒரு பெண்ணை/ஆணை கொடுமை செய்ய வேண்டும் என்று வேண்டுமென்றே இயங்குவது- Sadist rape, குழந்தைகளை வன்கொடுமைக்குள்ளாக்குவது, மத/இன காரணங்களுக்காக செய்வது, போர் சமயத்தில் நிகழும் கற்பழிப்புகள் ஆகியவையும் இதில் அடக்கம்.
4. பாலியல் வேட்கையை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு செய்யப் படும் கற்பழிப்பு. இதற்கு ஆங்கிலத்தில் Sexual gratification என்று பெயர்.
இவ்வாறாக அனைத்து வன்கொடுமைகளுக்கும் தொடர்புடைய குற்றவாளியின் மன நிலையே காரணம் என்பதும், அந்த குற்றவாளிகளை எங்கோ ஓர் இடத்தில் சந்திக்கும் பெண்கள் அணியும் உடை என்பது, அந்தக் குற்றவாளியின் தவறை மறைக்க எடுத்துக் கொள்ளப்படும் மேலோட்டமான காரணம் மட்டுமே என்பதும் சாட்சியங்களின் மூலம் நிரூபனமான உண்மை. 
இவற்றை அறியாமல் ஒரு பாலியல் வண்புணர்வுக்கு உடை தான் காரணம் என்றும், அதன் அடிப்படையில் பாசம்/பாதுகாப்பு என்கிற போர்வையில் தன்னுடன் வாழும் பெண்களுக்கு அறிவுரையின் பெயரில் கட்டுப்பாடுகளை விதிப்பதும் தவறு என்று செல்வத்திற்கு தோன்றவே இல்லை.
உதாரணங்கள்:
செல்வத்தின் பெண்ணியம் குறித்த பொதுவான புரிதலின்மைகளுக்கு கதையில் பல இடங்களில் உதாரணங்கள் இருக்கின்றன.
1.    ஒரு பெண் தனித்துவமாக முடிவெடுக்கிறாள் என்று புரிய வைக்க முயற்சிக்கும் போது, பெண்ணின் அதிகார மையமான அப்பா, அவளுடைய துணையை தேர்ந்தெடுக்கும் போது, பெண் தேர்வு செய்யும் படிப்பை மனதில் வைத்தே முடிவெடுக்க வேண்டியிருக்கிறது என்பதை காரணமாக சொல்கிறான் கொலம்பஸ். ஆனால், இங்கே சமூகத்தில் பி.ஈ, மெடிக்கல் எனும் இரண்டு ஆதிக்க படிப்புகளை மட்டுமே பெண்களும் ஆண்களும் தேர்வு செய்கிறார்கள் என்பதிலேயே கடிவாளம் இடப்பட்ட குதிரைகளாகத் தான் அவர்கள் வலம் வருகிறார்கள் எனும் உண்மை ஒளிந்திருப்பதை கொலம்பஸ் கவனிக்க வில்லை. சரளா, பி.ஈ அல்லாது ஒரு model/air hostess/actor/journalist என்று போயிருந்தால் அவளுடைய அப்பா அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பார் என்பதை கொலம்பஸ்-ற்கு சொல்ல அங்கு ஆளில்லை.
2.    ஐ.டி துறையில் வேலை பார்க்கும் செல்வம், தனக்குத் தெரிந்த பார்வையை மட்டும் கொண்டு, அங்கே பெண்கள் எல்லோரும் மென்மையாக நடத்தப் படுகிறார்கள் என்று குறிப்பிடுகிறான். ஐ.டி துறையில் மேனேஜர் முதலான மேலதிகாரிகளின் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் பெண்களை செல்வம் பார்த்திருக்கவில்லை என்பது இங்கே புரிகிறது. Women cell எனும் கருத்தாக்கம் சேவைத் துறையில் சம்பிரதாயமாகி விட்டதற்கு எதிராகவே தொழிற் சங்கங்கள் வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்தன. இதையும் செல்வம் அறியவில்லை.
3.    சரளாவின் கள்ள உரவை, அவள் நவீன உடை அணிய விரும்பும் விடயத்தை கவனித்திருந்தால் முன்பே ஊகித்திருக்க முடியும் என்று கொலம்பஸ் கூறுகிறான். இதன் மூலம், நவீன உடை அணியும் விருப்பம் என்பது கள்ள உரவை நாடும் விருப்பத்தோடு தவறாக ஒப்புமை படுத்தப் படுகிறது. நவீன உடை அணியாத குடும்ப அமைப்பில் கள்ள உறவே இல்லை எனும் அர்த்தத்திற்கும் இந்த ஒப்புமை வழி வகுக்கிறது. பெண்களுக்கு நிகராக இன்று நவீன உடை அணியும் (FCUK ஜெட்டி எனக்கு நினைவுக்கு வருகிறது) ஆண்கள் எல்லோரும் கள்ள உறவு கொள்கிறார்களா என்கிற கேள்வியை கோலம்பசிஸ்-இடம் கேட்கத் தோன்றுகிறது.
4.    இவை அனைத்துக்கும் மேலாக, அறிவியல் கோட்பாடுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தக் கதைக்கு கரும்புள்ளியாக ஒரு தவறான கருத்து கொலம்பஸ்-ஆல் முன்வைக்கப் படுகிறது. 420 முட்டைகளைக் கொண்ட ஒரு பெண், தன்னை விட தகுதி குறைந்த ஆணின் வித்திடம் தன் முட்டைகளை ஒப்படைக்கும் போது, நல்ல வித்து உருவாகக் கூடிய சாத்தியக் கூறுகளில் 50% குறைகிறது என்று தான் அர்த்தம் என்கிறான் கொலம்பஸ். இந்தக் கருத்தை அவன் டார்வினின் கோட்பாட்டில் இருந்து கடன் வாங்கி இருப்பது புரிகிறது. ஆனால், இந்தக் கோட்பாட்டை வைத்து தான் ரத்தக் கலப்பு கூடாது என்று ஹிட்லர் வாதிட்டான் என்பதை கொலம்பஸ் யோசிக்கத் தவறி விட்டான். ஹிட்லருடைய இந்தக் கருத்துக்கும், பொதுவாக கறுப்பர்களுக்கும், ஆசியர்களுக்கும் எதிரான கருத்து வன்முறைக்கும் அடிப்படையான டார்வினின் கருத்து முழுமையற்றது என்பதால் அதை அவரே ‘பீகல்’ என்கிற கப்பலில் பயணம் செய்து திருத்த முனைந்தார் என்பதை கொலம்பஸ் படித்து அறியவில்லை. டார்வினின் சமகாலத்து விஞ்ஞானியான க்ரேகர் மெண்டலின் “Law of Inheritence” தத்துவம், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் குணங்களும், திறமைகளும், பகுதியாக பிரிக்கப் படாமல், மொத்தமாக (100%) பிள்ளைகளின் மேல் கடத்தப்படும் என்பதை நிரூபித்திருக்கிறது என்பதை கொலம்பஸ் அறியவில்லை.    
இந்த உதாரணங்களின் மூலம் என்ன அறிய முடிகிறது என்றால்,
செல்வத்தின் “தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வின் (Selective research)” அடிப்படையில் அவன் உருவாக்கிக் கொண்ட சில கோட்பாடுகளை சரளா ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு அவளுடைய பொதுச் சிந்தனை குறைபாட்டை காரணமாக சொல்கிறான் செல்வம். தன்னைப் போன்று அவள் படித்து சிலவற்றை தெரிந்து கொள்ளவில்லை என்கிறான். அவனில் இருந்து பிரிந்த Conscience ஆக நான் பார்க்கும் கொலம்பஸின் வாயால், தன்னை தானே ஒரு கற்பூர புத்தி என்று அவனே சொல்லிக் கொள்கிறான். அதனால் ஆணாதிக்கம் என்று ஒன்று இல்லவே இல்லை என்றும் எல்லாம் அர்த்தங்களின் பொருந்தாமை என்கிறான்.
சரி தவறு என்பதே ரிலேடிவிட்டி எனும் கருத்து முழுமையாக ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. ஒரு சிங்கம் அதிகாரப் போட்டியில் மற்றொரு சிங்கத்தை கொல்வது என்பது தவறல்ல எனக் கூறலாம். அது மனிதனின் பார்வையில் தான் தவறு எனலாம். ஆனால், ஆறறிவுள்ள மனிதனுக்கு மற்றொரு மனிதனை கொலை செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இல்லாத பட்சத்தில், சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவன் செய்யும் செய்கையை சரி தவறு என்று பிரிப்பது தானே சரியான பார்வையாக இருக்க முடியும்?
அது போல, பெண்களுக்கு எதிரான ஆண்களின் ஆதிக்கம் என்பது தவிர்த்து விடக் கூடியது என்பதாலேயே அது தவறான செய்கையாக அறியப் படுகிறது.
இத்தகைய பேச்சுக்களை வைத்து செல்வம் தன்னுடைய தவறான பொதுக் சிந்தனை அறிவை வெளிக்காட்டுகிறான். ஒருவன் எதையுமே படிக்காமல் கருத்துச் சொல்வது எவ்வாறு ஆபத்தோ அதைக் காட்டிலும் தவறானதை படித்ததால் உருவாகும் கொள்கை பிடிப்பு அதிக நாசங்களை உருவாக்கும் என்பதை அறியாதவனாக இருக்கிறான் செல்வம். ஒரு பெண் கவிதை கூட்டத்தை வெறுக்கிறாள் என்பதற்கு, அவள் காணும் வெகு ஜன கேளிக்கைகளுக்கும், கவிதையின் ஆழமான ரசனைகளுக்குமான வேறுபாட்டை அறியும் சூழலை இச்சமூகம் சிறு வயதில் இருந்து ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்கிற காரணம் செல்வத்திற்கு புரியவில்லை. இத்தகைய வேறுபாட்டினை ஆண் சமூகத்தில் இருந்து பிரியும் தனிநபர்கள் சுய தேடலின் விளைவாக தெரிந்து கொள்வதற்கு பின்னால் அவர்கள் தங்களுடைய குடும்பங்களில் அனுபவிக்கும் ஆதிக்கமும், சுதந்திரமுமே காரணம் என்பதையும் உணரவில்லை. அடக்குமுறைக்கு உள்ளாகும் பெண், தன் சுற்றுப் புறத்திலும் அத்தகைய பெண்களையே பார்க்கிறாள். ஆனால், ஒரு ஆண் தன் வாழ்நாளில், சுதந்திரமான ஒரு ஆணையாவது பார்த்து விடுகிறான். இதுவும் அவனுடைய கருத்து விஸ்தரிப்புக்கு காரணமாக அமைகிறது.
இவ்வளவு பெரியதான புரிதலின்மைகளின் அடிப்படையில் காணும் போது, அவனுக்கும் சரளாவுக்கு இடையில் ஆணாதிக்கம் மட்டும் தான் பிரச்சனை என்றும் ஆகலாம். செல்வம் தான் ஒரு தாழ்ந்த சாதி என்பதாலும், சாதியை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலும், சரளா ஒரு மேல் சாதிக்காரி என்பதாலும் தனக்கு ஆணாதிக்கம் இல்லை என்று நினைத்து விட முடியாது. ஆணாதிக்கம் எனும் கோட்பாடு மேலும் ஆழமான விவாதங்களைக் கோருகிறது என்பதை செல்வம் உணரவில்லை.
செல்வம் தவறை ஒப்புக்கொள்ள மாட்டான் என்பதால் சரளா அவனை வேண்டுமென்றே திருப்திப் படுத்த ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தை சொல்லியிருக்கலாம். இப்படியாக இக்கதைக்குள் பல சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், ஒன்று மட்டும் தெளிவு!
கொலம்பஸ் முன்வைக்கும் RODE அட்டவணை தவறாக சொல்லப் போவதில்லை. நான் முன்பு கூறியதைப் போலவே, இதன் கணிதப் பார்வை முழுமையானதாக இருக்கிறது!
ஆனால் அந்த சார்ட் ஐ பயன்படுத்தும் தவறான மனிதப் புரிதல்கள் தான் சிக்கலை ஏற்படுத்துகின்றன என்பது இந்த நாவலின் பரிந்துரையும் முழுமையான தீர்வுகளை தந்துவிடப் போவதில்லை என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. 
இந்த அட்டவனையை உருவாக்கிய கொலம்பஸ்-ஐ போல,
இந்தச் சார்டை உபயோகித்து பிற்காலத்தில் குடும்பநல வழக்குகளில் தீர்ப்பு சொல்லும் நீதிபதியின் சிந்தனையின் முடிவை பொருத்து சூழ்நிலைகள் விடப்படும் என்கிற ஆபத்து இடையில் நிற்காமல் இல்லை.
இரண்டு மாறுபட்ட வழக்குகளில், ஒன்றில் தீர்ப்பு இவ்வாறு வருகிறது.
நிற வேற்றுமைக்கு எதிராக கருப்பு-வெள்ளை ஜோடி ஒன்று நிர்வாணமாக ஒரு பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறது. இது நோக்கத்தை முன்வைத்து தவறில்லை என்கிறார் ஒரு நீதிபதி.
ஒரு மைனர் பெண்ணை தனிமையில் கற்பழிப்பு செய்துவிட்ட ஆண், அந்தப் பெண்ணின் ஒத்திசைவோடு தான் அந்தச் செயலை செய்தான் என்று அவனை விடுவிக்கிறது மற்றொரு நீதிமன்றம். அந்தப் பெண் பாலியல் குறித்த முழுமையான புரிதலுக்குள் நுழைவதற்கு முன் இந்த முடிவு எப்படி சரி என்கிற கேள்வி அந்த நீதிபதியின் மனதினில் எழவில்லை. இதனால் அனைத்து சட்டங்களும் உடல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகும், சமூக ரீதியில் புறக்கணிக்கப்படும் பெண்ணுக்கு தான் சாதகமாக உள்ளது எனும் வாதமே நீதிபதிகளின் முடிவில் கேள்விக்குள்ளாக்கப் படுகின்றது. 
முடிவு:
முடிவாக, அறிவியல் ரீதியில், பெண்ணியம் சார்ந்து இங்கு நான் குறிப்பிட்ட அனைத்தும் விமர்சனங்கள் மட்டுமே. ஆனால் இவை இந்த புத்தகத்தின் நோக்கத்திற்கு எந்த வகையிலும் எதிரானதாக அறியப்பட வாய்ப்பில்லை. ராம் பிரசாத்தின் இந்த தேடல் கணிதப் புனைவு எனும் புதிய களத்தில் benchmark ஐ அமைத்துக் கொடுத்திருக்கிறது. இது நாவல் வடிவத்தில் மட்டுமில்லாது அறிவியல் அடிப்படையிலும் முக்கிய முயற்சி. அறிவியல் கண்டுபிடிப்புகளில் நேர்மையானவை ஒன்றுக்கு இன்னொனன்று முரணாக இருப்பதில்லை. எல்லா கண்டுபிடிப்புகளும் உண்மையை நோக்கிய ஒரு படி தான் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. அது போல, ஆணும் பெண்ணும் இணைந்து வாழ வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தை வலியுறுத்தும் இந்தப் படைப்பு, உண்மையை நோக்கிய ஒரு படி என்று தீர்க்கமாக சொல்ல முடியும். இந்த வகையில் கொலம்பஸ் ன் அட்டவனையை உபயோகத்துக்கு, தன்னுடைய ஆணாதிக்க சிந்தனை தான் எல்லா பிரச்சனைகளுக்கு காரணம் என்பதை உணர்ந்து, நல்ல துணையை தேடிக் கண்டுபிடிக்கும் செல்வத்தை இரண்டாம் பகுதியில் காட்சிப்படுத்த வேண்டும் என்று எழுத்தாளரை கேட்டுக் கொள்கிறேன்.
பரிந்துரை:
புதிய கருத்தும், வடிவமும், ஒரு முறையல்ல, இருமுறை படிக்கத் தூண்டும் அளவிற்கு சிறந்தவையாக இருக்கின்றன. அதனால், நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.