படுக்கையறைக் கொலை - சிறுகதை
http://www.keetru.com/2009-08-09-04-42-53/2009-08-16-08-14-01/421-2009-09-11-00-54-00.html
'என்ன திமிரு இவளுக்கு? இன்னொரு நாட்டுல இருக்கோம்னு கூட இல்லாம இப்படியா அலைவா ஒரு பொம்பள? இருக்கட்டும். இவள என்ன பண்றென்னு பாரு' மனதிற்க்குள் கருவியபடி வராண்டாவை தாண்டிக் கொண்டிருந்தான் சுனில்.
சுனில் திருமணமானவன். மனைவி பெயர் மது என்கிற மதுமிதா. மதுவை ஒரு ஒவியக்கண்காட்சியில் பார்த்து அவளின் கண்கவர் ஓவியங்கள் பிடித்துப்போய் பெற்றோருடன் பேசி முடித்த திருமணம். சுனிலுக்கு கென்யா நாட்டில் ப்ராஜெக்ட். இருவரும் ஒரே ஐ.டி. நிறுவனத்தில் வேலை என்பதால் இருவருக்கும் ஒரே நாட்டில் ஆன்சைட் பிடிப்பது சுலபமானது. விளைவு, இருவரும் கென்யா நாட்டில். கலவியலுக்கு பெயர் பெற்றவர்கள் கென்யா நாட்டு கருப்பர்கள். கென்யா ஆன்சைட் இவர்கள் எதிர்பாராதது, ஆனால் அதுதான் இருவரும் ஒன்றாய் பறப்பது போல் கிடைத்தது. ஆனால் சுனிலுக்கு ஏனோ இங்கு வருவது மதுவின் ஆசையோ என்றொரு எண்ணம் முதலிலேயே வந்தது. காரணம் இதற்கு உதவிய மதுவின் தோழி, கொஞ்சம் அப்படி இப்படி என்று கேள்விபட்டிருக்கிறான். மதுவிடம் கேட்டபோது யார் எப்படி இருந்தால் என்ன என்பதே பதிலாய் வந்தது. அதை அப்போதைக்கு சுனிலும் விட்டுவிட்டான்.
சுனிலின் தற்போதைய கோபத்திற்கு காரணம், முந்தினம் அவன் பெட்ரூமில் கண்ட காட்சிதான். உண்மையில் அவன் அப்போது வீட்டில் எதிர்பார்க்கப்படாத தருணம். அந்நேரம் அவன் ஆபிஸில் தான் இருப்பான். ஆவளும் தான். அன்று தான் எடுக்க மறந்த ஃபைலை எடுக்க வீட்டுக்கு வந்தவன், காரிடாரில் ஜன்னல் வழியே கண்ட காட்சியில் வந்த துவேஷம் தான் இது. அவன் பார்த்தது, இரவு போல் அடர்த்தியாய் திரைச்சீலையால் மூடிக்கிடந்த பெட்ரூமில் மது ஒரு கறுப்பனோடு கட்டித்தழுவிக்கிடந்த காட்சிதான். திரைச்சீலை ஓரமாய் ஒதுங்கியிருந்த இடைவெளியில் சில நொடிகளே அவன் பார்த்தாலும் அவனை உலுக்கியெடுத்துவிட்டது.
உடனே அவளைக் கொன்று போடத்தோன்றியது. அந்த கறுப்பனை ஒரு விதத்தில் குறை சொல்ல முடியாது. அவனவன் ஃப்ரியாய் கிடைத்தால் பினாயிலைக்கூட குடிக்கிற காலத்தில் தளதள தக்காளியாய் மது மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா எவன் சும்மா இருப்பான். இவளுக்கு எங்கே போச்சு புத்தி. அவளைக்கொன்று போடத்தான் வேண்டும். ஆனால் தான் கொலை கேஸில் மாட்டிவிட்டால், பாதியில் வந்தவளுக்காக தன் எதிர்காலம் சிறையிலா?, அதற்காக அவளை அப்படியே விட்டுவிடுவதா? வேண்டாம், சாவு தான் அவளுக்கு சரி ஆனால் தான் இதில் சம்பந்தப்பட்டு விடக்கூடாது, சுவடே தெரியாமல் காரியம் செய்யவேண்டும். நிமிட நேரத்திற்குள் அவன் மூளை கிரிமினலாக வேளை செய்தது. உடனே ஆபிஸ் திரும்பினான். திரும்பும் வழி முழுதும் அவளை எப்படிக்கொல்லலாம் என்றே சிந்தனை போனது.
வரும் வழியில் அடுக்கு மாடிக்கட்டிடம் கட்டிக்கொண்டிருந்தார்கள். சுனில் மனதில் ஒரு மின்னல் வெட்டியது. மெல்ல அந்த கட்டிடம் முழுக்க சுற்றிப்பார்த்தான். கைதேர்ந்த கொலைகாரனாய் மனம் வேலை செய்தது. ஆபிஸில் வேலையில் மனம் செல்லவில்லை. பேச்சிலராக சுற்றித்திறிந்த காலத்தில் விளையாட்டாய் பழகிய துப்பாக்கி நினைவுக்கு வந்தது. கல்லூரி நாட்களில் செய்த சில எலெக்ட்ரானிக் சமாசாரங்களுடனும் சில புல்லட்களுடன் ப்ளான் ரெடி. சாயந்திரம் 5 மணிக்கே வீட்டிற்கு கிளம்பிவிட்டான். முதலில் அந்த அடுக்கு மாடிக்கட்டிடம் இரண்டாவது மாடி ஏறினான். அங்கிருந்து பார்த்தால், அவன் வீட்டு பெட்ரூம் தெரிந்தது. லாவகமாய் ஒரு டைமருடன், மறக்காமல் சைலன்சருடன், காலை 6 மணிக்கு ஆட்டோமாடிக்காக வேலை செய்வதுபோல் செட் செய்தான். கட்டிடம் கட்டுகிறார்கள். சுவர் வேலை நடக்கிறது. நாளைப்பொழுது விடிந்ததும் சுவர் வைத்து விடுவார்கள்.
ராத்திரி அவள் சன்னலோரம் படுத்திருப்பாள். சரியாய் காலை 6 மணிக்கு துப்பாக்கி வெடிக்கும். அவள் மெளனமாக செத்துப்போவாள். சைலன்சர் பொருத்தியிருப்பதால் சத்தமே கேட்காது. உடனே துப்பாக்கியை அகற்றிவிட வேண்டும். 8 மணிக்கெல்லாம் சுவர் எழுப்பத் தொடங்கிவிடுவார்கள். எப்படியும் இவள் செத்த விவரம் தெரிய குறைந்தது 12 மணி நேரம் ஆகும். அதற்க்குள் எழுப்பப்படும் சுவர் துப்பாக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை மறைத்து விடும். போலீஸ் வந்து பார்த்தால் சின்ன க்ளூ கூட கிடைக்காது. தானும் இந்த 12 மணி நேரம் வெளியில் இருப்பதாய் எவிடன்ஸ் க்ரியேட் செய்து விட்டால் போதும். ப்ளான் சூப்பர். மட மட வென காரியம் முடித்தான். நண்பனுடன் தண்ணி பார்ட்டி என்று அவள் தோழிக்கு வேண்டுமென்றே போன் செய்து மறுநாள்தான் திரும்பப்போவதாக அவளுக்கு கன்வே செய்துவிடும்படி சொல்லி கூடுதல் எவிடன்ஸ் க்ரியேட் செய்துவிட்டு நண்பன் வீட்டுக்கு சென்றுவிட்டான்.
இரவு அவனுக்கு நீளமானதாகக் கழிந்தது. நன்றாக குடித்திருந்த நண்பன் எழுந்திருக்க நேரமாகும். காலை 5 மணிக்கே புறப்பட்டான். அவள் சாவதை பார்த்து ரசிக்கவேண்டும். சத்தமில்லாமல் ரூம் திரும்பவேண்டும். போலீஸ் கேட்டால் அவன் நண்பனும், அவள் தோழியும் தான் எவிடென்ஸ்.
மணி 5:56.
சத்தமில்லாமல் அவன் ப்ளாட் நெருங்கினான். 5:59:59 மணி வரை குண்டு பாயாது. சாகும் முன் கடைசியாக அவளை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது. 5:59:59 க்கு முன் குண்டுக்கு வழிவிட்டு நகர்ந்து விட வேண்டும். அவள் செத்ததும் மறக்காமல் அந்த துப்பாக்கியையும் காலி செய்துவிட வேண்டும். அக்கம் பக்கம் பார்த்தான்.
மணி 5:58:45
மெல்ல காரிடார் தாண்டி சன்னலை நெருங்கினான். திரைச்சீலை அகன்று முழுக்க திறந்திருந்தது. அந்த விடிகாலையிலும் முன்தினம் பார்த்தது போல் அவள் அந்த கருப்பனுடன் கட்டிப்பிடித்து படுத்திருந்தாள்.
மணி 5:59:15
அடிப்பாவி, சண்டாளி..இன்னிக்குமா?
அவனுக்கு ஏதோ வித்தியாசமாய் பட்டது. இவர்கள் ஏன் நேற்று பார்த்த அதே போஸில் படுத்திருக்கிறார்கள். அதுவும் இம்மிகூட ஆடாமல் அசையாமல். ஒரு நிமிடம் மனம் குழம்பியது. அதே நேரம் ஹாலில் யாரோ இருப்பது போல் தோன்ற அங்கே பார்த்தான். மது எதையோ க்ளீன் செய்து கொண்டிருந்தாள். அப்போ இது யார். மீண்டும் படுக்கையை பார்த்தான். மெல்ல விடிந்து கொண்டிருந்த நேரத்தில், மெல்ல பரவிக்கொண்டிருந்த வெளிச்சத்தில் அது தெரிந்தது. அது வண்ணங்களால் வரைந்தெடுக்கப்பட்ட ஒரு மெத்தை விரிப்பு. மது 3டி ஓவியங்கள் வரைவதில் கில்லாடி என்பது நினைவுக்கு வந்தது. வெளிச்சம் பரவ பரவ, அந்த ஓவியம் கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்துகொண்டிருந்தது. இருவர், அரை நிர்வாணமாய், ஒன்று மது, மற்றொன்று, கருப்பனல்ல. வெளிச்சத்தில் அது தன்னைப்போலவே இருந்தது. இருளில் கருப்பாய் தெரிந்திருக்கிறது. 3டி ஓவியம் பார்ப்பதற்கு அச்சு அசலாக இருந்தது. விரிப்பின் வலது ஓரம் பளிச்சிட்டது அந்த வாசகம் 'ஹாப்பி பர்த்டே சுனில்'. சுனிலின் மூளை நினைவடுக்குகளில் அவன் பிறந்த நாளை தேடிக்கொண்டிருந்த நேரத்தில்....
மணி 6:00..... ப்ளப்...
சுனில் சாய்ந்து விழுந்துகொண்டிருந்தான், மண்டையில் குண்டு துளைத்த ஓட்டை வழியே ரத்தம் குபுகுபுவென வந்துகொண்டிருந்தது...
Thursday, 17 September 2009
Subscribe to:
Posts (Atom)