என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday 4 November 2024

ஃபீனிக்ஸ் - சூர்யா சேதுபதி

 ஃபீனிக்ஸ் - சூர்யா சேதுபதி

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடிக்கும் 'ஃபீனிக்ஸ்' திரைப்படத்தின் டீஸர் வெளி வந்தாலும் வந்தது; முகநூல் முழுதும் ட்ரோல் செய்கிறார்கள். 'முடிச்சி விட்றலாம்.. ஃபீனிக்ஸ் மாதிரி வராறா பார்க்கலாம்' என்கிற ரீதியில் அமைந்த கமெண்ட்கள் தான் அதிகம்.

இதை ஏன் சொல்கிறார்கள் என்று தான் புரியவில்லை. எல்லோருக்குமே இது ஒன்று தான் ரூட். யாரையுமே எந்த சமூகமுமே எடுத்த எடுப்பில் ஏற்றுக்கொள்வதில்லை. 45 கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட அர்ஜுன் கபூர்  நடித்த திரைப்படமான 'Lady Killer' வெறும் அறுபதாயிரம் தான் வசூலித்திருக்கிறது. இயக்குனர் பாக்கியராஜின் மகன் சாந்தனு, இயக்குனர் வாசுவின் மகன் சக்தி என்று இப்படி ஏராளமான உதாரணங்கள் சொல்லலாம்.



consistency என்பது ஒரு அசாதாரணமான வார்த்தை. திறமையும், கடினமான உழைப்பும் இருந்தால் மட்டும் தான் யாரொருவரும் வெற்றியில் consistency காட்ட முடியும். எந்தத் துறையிலும் நிலைக்க முடியும். விஜய் சேதுபதியின் மகன் என்பதனால் முதல் வாய்ப்பு வேண்டுமானால் எளிதாக அமைந்து விடலாம். அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமானால், அவர் தான் உழைக்க வேண்டும். தனித்துவம் காட்ட வேண்டும். இது  நம்மில் எல்லோருக்கும் இருக்கும் பொதுவான விதிதான். இப்படி இருப்பதுதான் சிறப்பும் கூட. இப்படியிருக்கையில் இந்தத் ட்ரோல் தேவையில்லை என்றே தோன்றுகிறது.

On the flip side, தகுதியற்றவர்களை, நாற்பது வருடங்களுக்கு முன்பு என்றோ ஒரே ஒரு முறை விழுந்து எழுந்தவர்களை, ஏதோ அவர் ஒவ்வொரு வருடமும் 'விழுந்து எழுபவர்' போல் 'கற்பனையாக' நினைத்துக்கொண்டு 'ஃபீனிக்ஸ்' என்று சொல்லும் அளவுக்கு மீண்டும் மீண்டும் சலிக்காமல் உயர்த்தி விடுகிறார்கள் நம் மக்கள். இத்தனைக்கும் அவர் சகல வசதிகளுடன் ஜம்மென்று தான் இருக்கிறார். இதை வேண்டுமானால், சமூகமாய் நாம் செய்யும் தவறு எனலாம். அதை எவ்வளவு ட்ரோல் செய்தாலும் தகும். ஆனால், அந்த விதமான ட்ரோல்கள் நம் சமூகத்தில் நடப்பதே இல்லை.


Friday 1 November 2024

Allegory SF, F & H Magazine - Honorable Mention

 Allegory Science Fiction, Fantasy & Horror magazine has honored my work 'Sensed Presence' with an 'Honorable Mention' in its 46/73 Issue of 2024.

Just to add to the perspective, I have been informed by the publisher, Ty Drago, that this made into the top 76 / 918 cut.






Wednesday 30 October 2024

வால்பேப்பர்

 Wallpaper

இணையத்தில் உலாவுகையில், கண்ணில் அகப்படும் வால்பேப்பர்களைச் சேகரிக்கும் பழக்கம் உண்டு. வால்பேப்பர்கள் என்றால் அரைகுறை ஆடையில் பெண்கள் அல்ல. பிரபஞ்சம், இயற்கையில் அமைந்த அரூப கணங்கள், மனிதர்கள் செயற்கையாய் அமைத்த கணங்களில் அர்த்தமுள்ளவைகள், இப்படி. சில, அமெரிக்கர்கள் தங்கள் தொலைநோக்கிகளில் படம் பிடித்தவை. சிலவற்றை எடுத்தது யாரென்று தெரியவில்லை. நான் இவற்றை எடுக்கவில்லை என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.
இப்போது சேர்ந்திருப்பவைகளை இங்கே தருகிறேன். பிடித்திருந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நிலா (Moon), சுக்கிரன் (Venus) மற்றும் குரு (Jupiter) ஆகிய கிரகங்கள் ஒன்றாக ஒருங்கே தெரியும் காட்சி. சில சமயங்களில் தமிழ்ப் படங்களில் 'எட்டு கிரகங்களும் ஒன்றாக வரும் நேரம், பிறப்பான்..அவன் அழிவின் உருவாக இருப்பான்' என்றெல்லாம் காட்டுவார்கள். அந்த வசனத்தைக் கேட்டால், உணர்ச்சி மயமாக இருக்கும். உண்மையில் எட்டு கிரகங்களும் நேர் கோட்டில் வர வாய்ப்பே இல்லை. காரணம் ஒவ்வொரு கிரகமும் சூரியனைச் சுற்றும் தளம் (orbital plane) வேறு.
Galactic Arm பின்னணியில் எகிப்தின் பிரமிடு. பிரமிடுகளின் alignment ம் ஒளியின் வேகமும் ஒரே எண்கள் என்கிற தகவலுடன் இப்படம் பார்க்க எப்படி இருக்கிறது என்று நண்பர்கள் சொல்லலாம்.
Tsuchinshan வால் நட்சத்திரம் ஜப்பான் அருகே.
பூமி, அதன் மீது தெரியும் நிலா, பின்னால் Galactic Arm.
கடைசியாக, இது கொஞ்சம் அச்சமூட்டும் படம் தான். விண்களத்துடன் தன்னைப் பிணைக்க எதுவும் இன்றி விண்வெளி வீரர் ப்ரூஸ் செய்த விண்வெளி நடை(spacewalk) தான் இது. இப்படி spacewalk செய்வதில் உள்ள அபாயம் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டுமானால், Sandra Bullock நடித்த Gravity திரைப்படம் பாருங்கள். திரைப்படத்தில் மேட் கோவால்ஸ்கி இப்படித்தான் தொலைந்து போவார். பாவமாக இருக்கும். ஆனால், அந்த நோடியை அவர் ஏற்றுக்கொண்ட விதம் அருமையாக இருந்தது.









Tuesday 29 October 2024

Halloween Comet

 Halloween comet



வரும் அக்டோபர் 31ம் திகதி அமெரிக்காவில் Halloween. தெருவெங்கும் பேய்கள், பூதங்கள், ஜாம்பிக்கள் குறித்த பொம்மைகள் வைக்கத்துவங்கியிருக்கிறார்கள். நம் சூரியக்குடும்பத்துக்கே Halloween இருப்பது தெரியுமா? பெயர் கூட இருக்கிறது. 


Halloween comet.


வேடிக்கையாக இருக்கிறதல்லவா?


ATLAS என்பது ASTEROID TERRESTRIAL-IMPACT LAST ALERT SYSTEM என்பதாகும். அதாவது பூமி மேல் மோத இருக்கும் விண்கற்களை முன்னரே கண்டுபிடித்துச் சொல்லும் கண்காணிப்பு மையம். இதனை, நாசாவுடன் இணைந்து நடத்துகிறது ஹவாய் பல்கலைகழகம்.


இந்தக் கண்காணிப்பு மையம் ஒரு விண்கல்லைக் கடந்த செப்டம்பரில் கண்டுபிடித்தது. பூமி மீது மோதிவிடுமோ என்ற பயம் தான். வேறென்ன? கண்டுபிடித்ததுமே, இது பூமி மீது மோதிவிடுமோ என்ற பயம் எல்லோரையும் தொற்றிக்கொண்டது. அப்போது இதற்கு வைக்கப்பட்ட பெயர் c/2024 s1 என்பதாகும். இதைக் கண்டுபிடித்தபோதே இது ஒரு பெரிய விண்கல் உடைந்ததினால் உருவான சிறு சிறு பாறைகள் என்பது தெரியவந்தது. இது போன்ற பாறைகள் சூரியனைச் சுற்றி வரத்துவங்கிவிடும். அவற்றுள் சிற்சில பூமி மீதும் மோத வாய்ப்பதிகம் தான்.


இதைப் போன்ற இன்னொன்று தான் Tsuchinshan வால் நட்சத்திரம். அது அக்டோபர் மாதம் முழுவதும் வெறும் கண்களுக்கே மங்கலாய்க் காட்சி தந்தது நினைவிருக்கலாம். 



இப்போது செய்தி என்னவென்றால், இந்த C/2024 S1 விண்கல் சூரியனைச் சுற்றி வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூரியனின் ஈர்ப்பு விசையை விட்டு வெளியேற முடியாமல், அதனுள் விழுந்து சுக்கு நூறாகி அப்சர்வேட்டரிக்காரர்கள் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது. இனி இந்த விண்கல்லை track செய்யவேண்டாம் அல்லவா? மாதா மாதம் ஒரு விண்கல் வந்து பீதியைக் கிளப்பினால் வேறு என்னதான் செய்வார்கள் அவர்களும்?


நீங்கள் படத்தில் காண்பது C/2024 S1 விண்கல்லின் core சூரியனின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் இளகி உடைந்து சுக்கு  நூறாகும் காட்சி தான். இப்படி எல்லா கற்களும் சுக்கு நூறாகிவிட்டால் நல்லதுதான் இல்லையா? ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. இப்போதைக்கு பூமியின் மீது மோத வரும் விண்கற்களைத் தாக்கி அழிக்க நம்மிடம் தொழில் நுட்பம் தேவை. அப்படியே தாக்கி அழிக்க முயற்சி எடுத்தாலும், அந்தத் தாக்குதலில் அந்தக் கல் பல துண்டுகளாகி மீண்டும் பூமியிலேயே வந்து விழுவதற்கும் வாய்ப்பதிகம்.


கோடிக்கணக்கான டாலரை செவ்வாய்கிரக ஆராய்ச்சிக்கு நேர்ந்துவிடத்தான் வேண்டுமா? அதற்கு பதில் பூமியைப் பாதுகாக்கக் செலவிடலாமே என்பவர்களுக்கு இந்தப் பதிவு. எல்லா விண்கற்களும் C/2024 S1 போன்றிருக்காது. இதை உலக நாடுகள் உணர்ந்திருப்பதால் தான் சூரியக்குடும்பத்திலேயே வேறெங்கெல்லாம் பரவலாம் என்கிற தேடல் பரவலாக முக்கியத்துவம் பெறுகிறது. பார்க்கப்போனால் அதில் நியாயம் இருக்கிறது என்று தான் நானும் நினைக்கிறேன்.


 

Wednesday 23 October 2024

ஆனந்த விகடனில் எனது கவிதை 'கைத்தட்டல்கள்'

 30.10.2024 தேதியிட்ட இந்த வாரம் ஆனந்த விகடன் இதழில் கவிதைகளுக்கான சொல்வனம் பகுதியில் எனது 'கைத்தட்டல்கள்' கவிதை வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எனது கவிதையைத் தெரிவு செய்த ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.


இதோ உங்கள் பார்வைக்கு எனது கவிதை.




இன்டர்ஸ்டெல்லார் - தெரியாத தகவல்கள்

 புரிந்துகொள்ள மிகவும் சிக்கலான படம் என்றால் அது Interstellar. எனக்கு மிகவும் பிடித்தமான அறிவியல் புனைவுத் திரைப்படமும் கூட. என்னைக்கேட்டால் உண்மைக்கு மிக நெருக்கமாக எடுப்பது என்பார்களே அது போல மிகவும் நெருக்கமாக எடுக்கப்பட்ட படம் இன்டர்ஸ்டெல்லார். அதுகுறித்து சில புதிய தகவல்கள் 



1. இந்தத் திரைப்படத்திற்கு முதலில் எழுதப்பட்ட க்ளைமாக்ஸ், கூப்பர் வார்ம்ஹோலில் விழுவது தானாம். அதன் பிறகே, கூப்பர் தன் மகளின் நினைவுக்கிடங்கல் புகுந்து சில வேலைகளைப் பார்ப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் இந்த இடத்தை சற்றே சொதப்பிவிட்டார்கள் என்பதே என் வாதம். இதன் படி, கூப்பர் தன் மகளுக்கு மார்ஸ் கோட் மூலமாகக் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் கூப்பர் அந்த ரகசிய இடம் செல்வார், அதன் பிறகே விண்வெளி செல்வார். ஆக விண்வெளி செல்வதற்கு அவரை அவரே தூண்டிக்கொண்டதாகத்தான் அர்த்தமாகிறது. பிறகு ஏன் அழுகை?

2. நோலன், டாக்டர் மேனின் கதைக்கு ஒரு prequel எழுதி அதை காமிக் நாவலாக வெளியிட்டிருக்கிறார்.

3. இந்தத் திரைப்படத்தில் முதல் சில காட்சிகளில் வரும் தூசிகளால் ஆன புயலுக்கு cardboard ஐ தூளாக்கிப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

4. இந்தத் திரைப்படத்தில் வரும் TARS ஐ சினிமாவுக்கென்று டம்மியாக உருவாக்காமல் உண்மையாகவே உருவாக்கியிருக்கிறார்கள்.

5. ஜொர்டான் மற்றும் ஹங்கேரியில் திரைப்படமாக்கப்ப 'Martian' திரைப்படம் போல், interstellar திரைப்படத்தைப் கனடாவில் ஷூட் செய்திருக்கிறார்கள். நான் வசிக்கும் ஊரான ஜியார்ஜியாவில் எடுக்கப்பட்ட படம் 'Greenland'.

6. இது ஒரு புதுமையான ரெக்கார்டு. இதுவரை மிக அதிகம் முறை சட்டத்துக்குப் புறம்பாக, நகலெடுக்கப்பட்ட படம் interstellar தானாம். மொத்தம் 46 மில்லியன் முறைகள். இது ஜுராசிக் வோர்ல்டு, ஃபூரியஸ் போன்ற திரைப்படங்களையும் விட அதிகம் என்கிறார்கள்.




Monday 21 October 2024

ஐந்நூறு மீட்டர் அகல தொலைநோக்கி

ஐந்நூறு மீட்டர் அகல தொலைநோக்கி


சீனாவின் FAST தான் உலகின் மிகப்பெரிய தொலை நோக்கி. செல்லமாக 'வானத்தின் கண்' அதாவது 'Sky eye telescope'. இதன் துளை அதாவது aperture சுமார் ஐந்நூறு மீட்டர். (போதுமா!?) இந்தப் படத்தில் பாருங்கள். எத்தனை பிரம்மாண்டமாய் இருக்கிறது? ("இன்னுமா இதையெல்லாம் ப்ளாட்டு போட்டு விக்காம இருக்காய்ங்க?" என்று தானே தோன்றுகிறது?

ஜூன் 14 அன்று சீன ஆராய்ச்சியாளர்கள், இந்தத் தொலை நோக்கியில் வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து சமிஞைகளைப் பெற்றதாகத் அறிவித்திருந்தார்கள். 2019ல் ஒன்றும், 2022ல் இரண்டும்.

குறுகிய கட்டு சமிஞைகள் அதாவது narrow-band signals இயற்கையாக உருவாகுவன அல்ல. அவற்றைச் செயற்கையாக யாரேனும்  உருவாக்க வேண்டும். கிடைத்த சமிஞை அப்படிப்பட்டன என்றதும் சீன ஆராய்ச்சியாளர்கள் குழு துள்ளிக் குதித்தது. சமிஞை கிடைத்த அந்தப் பகுதியையே தொடர்ந்து ஆராய்ந்தது. இரண்டு வருடங்கள் ஆராய்ச்சிக்குப் பின்னர் தெரிய வந்திருப்பது moey moey ரகம்.



அந்த சமிஞைகள் வெறும் Radio signal interference தானாம்.

எல்லா குழப்பமும் தொலை நோக்கியின் அளவிலிருந்து தான் துவங்குகிறதாம். இது போன்ற பாரிய தொலை நோக்கிகள் மிகவும் உணர்திறன் மிக்கதாக இருக்குமாம். அதனால் இவைகள் பூமியிலிருந்து வெளிப்படும் சமிஞைகளையே வேற்று கிரகத்திலிருந்து வந்த சமிஞைகள் போல் கண்டுபிடித்து நம்மை ஏமாற்றுகின்றன என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. 2022ல் கிடைத்த சமிஞைகளை ஆராய்ந்ததில் இந்தக் கூற்றுடன் ஒத்துப்போவதாகத் தெரிய வந்திருக்கிறது. 

என்னடா வேற்று கிரக உயிர்கள் ஆராய்ச்சியை பிடிச்ச சோதனை என்று தானே நினைக்கிறீர்கள்?

சரி. இந்தத் தொலை நோக்கியை சிறிதாக வைத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் நினைப்பதற்கில்லை. விண்வெளியிலிருந்து வரும் சமிஞை அளவு மிகவும் குறைவு. விண்வெளியிளேயே மிகவும் வடிகட்டப்பட்டுத்தான் நம்மை வந்தடைகின்றன. அதிக அளவிலான சமிஞைகள் கிடைத்தால், விஸ்தீரணமாக ஆராய முடியும் என்பதற்காகத்தான் தொலை நோக்கியின் அளவைப் பெரிது படுத்த வேண்டி இருக்கிறது. இப்போது அதிலும் சிக்கல். சிக்கல் என்னவென்றால், நாம் உருவாக்கும் சமிஞைகளையே நாம் முதலில் வடிகட்ட வேண்டும். இதைச் செய்வது எப்படி என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இத்தோல்விகள் மறைமுகமாக உணர்த்தும், fermi paradoxக்கு சொல்லப்படும் விளக்கங்களுள் ஒன்று: ஒரு இனம் வேற்று கிரக உயிர்களைக் கண்டுபிடிக்கும் முன்னரே அழிவை சந்தித்துவிடுவது.

இப்போதைக்கு, ஒன்றை ஆணித்தரமாகச் சொல்ல வேண்டுமானால், இப்படிச் சொல்லலாம். 

"எல்லோரும் இன்புற்று வாழ மட்டுமே இந்த உலகம். எல்லோரிடமும் அன்பு செய்யுங்கள்."

பிக் பாஸ் - so far

 இன்றைய நாளை "தினம் தினம் எதிர்பாராத திருப்பங்களுடன்..." என்று சொல்லி முடிக்கிறார் பிக் பாஸ்.


முதல் வாரத்தில் பட்டிமன்றம் டாஸ்கில் பெண்கள் அணி சார்பில் ஜெயித்தது முத்து.

இரண்டாம் வாரத்தில் பஸ்ஸர் டாஸ்கில் பெண்கள் அணி சார்பில் ஜெயித்தது தீபக். ஆண்கள் பஸ்ஸரை அடிக்கப் பாய்ந்த வேகத்தைப் பார்த்தால், ஆண்கள் மட்டுமே பங்கு பெறும் போட்டி போல் தோன்றாமல் இல்லை.

இந்த வாரத்தில் உணவுக்கான டாஸ்கில் பெண்கள் அணி சார்பில் ஜெயித்தது ஜெஃப்ரீ. ஜெஃப்ரீ மட்டும் ஜெயிக்கவில்லை என்றால் பெண்கள் அணிக்கு அந்த இரண்டாயிரம் கூட கிடைத்திருக்காது.  இதை சவுன்ட் என்கிற செளந்தர்யா, ரஞ்சித்திடம் சொல்லவே செய்துவிட்டார். ஜெஃப்ரீ மட்டும் ஜெயித்திருக்காவிட்டால் சோத்துக்கு சிங்கிதான் என்று...


அடுத்தடுத்த வாரங்களில், பெரும்பான்மையான டாஸ்குகளில் பெண்கள் அணி சார்பில் வென்று தருபவர் ஆணாகத்தான் இருப்பார் என்பதை முன்தீர்மானமாகச் சொல்லிவிடமுடியும்.



இப்படி ஜல்லி அடிக்கும் பிக் பாஸில் ஒரே ஆறுதல், வார இறுதிகளில் வரும் விஜய் சேதுபதி தான். டி20க்கு தோனி விளையாடுவது போல் ஒவ்வொரு பாலையும் சிக்ஸருக்கு விரட்டுகிறார். சிலது ஸ்டேடியத்துக்கு வெளியேயே சென்றும் விடுகிறது.


இதில் என்ன எதிர்பாராத திருப்பங்களுடன்...... தினம் தினம் எதிர்பார்த்த திருப்பங்களுடன் தொடர்கிறது பிக் பாஸ்... ஆண்களா? பெண்களா? என்ற தலைப்புக்கும், டாஸ்க்குகள் நடக்கும் விதத்திற்கும் தொடர்பில்லாமல் எங்கோ எதுவோ துருத்திக்கொண்டே இருக்கிறது.


எனக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் தோணுதா? யாராவது சொல்லுங்க ப்ளீச்...

Sunday 20 October 2024

வீனஸுக்கு களன் அனுப்பும் சீனா

வீனஸ் கிரகத்திலிருந்து காற்றை பூமிக்கு வரவழைக்க முயற்சிகள் எடுக்கத்துவங்கியிருக்கிறது சீனா. 

பூமியிலும் காற்று மாசடைகிறது. தொடர்ந்து மாசடைந்து கொண்டே போனால் ஒரு கட்டத்துக்கு மேல், பூமி வீனஸ் கிரகம் போல் ஆகிவிடும். வீனஸ் கிரகத்தில் என்ன பிரச்சனை? வீனஸ் கிரகத்தை ஒரு அடர்த்தியான கார்பன் டைஆக்ஸைடு படிமம் மூடியிருக்கிறது. இதனால்  ஊடுறுவும் ஒளி கிரகத்தை விட்டு வெளியேற விடாமல், கிரகத்தின் காற்று மண்டலம் தடுக்கையில், அது கிரகத்தின் வெப்ப நிலையை அதிகரிக்கச்செய்கிறது. இதனால் வீனஸ் கிரகத்தில் எப்போதும் சல்ஃப்யூரிக் ஆசிட் மழை தான்.



பூமிக்கும் அந்த நிலை வரலாம். எது, பூமியை, வீனஸ் கிரகம் ஆக விடாமல் தடுக்கும் புள்ளி என்பதைத் தெரிந்துகொள்ளவும், வீனஸ் கிரகத்தின் காற்று மண்டலத்தை ஆராயும் வீனஸ் கிரகத்துக்கு களன் ஒன்றை அனுப்ப முடிவு செய்திருக்கிறது சீனா.


கேட்கவே பகீரென்று இருக்கிறதல்லவா? கேள்வி என்னவென்றால் செவ்வாய் கிரகத்தில் உலவும் சீனாவின் Zhurong போல இது இருக்காது. வீனஸின் காற்று மண்டலம் ஆசிட் மழை , புயல் வீசக்கூடியது. எந்தக் களனை அனுப்பினாலும் அதனைப் பொசுக்கிவிடும் தன்மை அந்தக் காற்று மண்டலத்துக்கு இருக்கிறது. ஆசிட் மழையில் பொசுங்கிவிடாமல், ஆராய்ச்சிக்குத் தேவையான மாதிரிகளைக் களன் சேமித்துவிட்டு பூமிக்குத் திரும்ப வேண்டும். 


இந்த சவால்களை ஏற்கவும், செய்து முடிக்கவும் சீனாவுக்குத் திறமை இருக்கிறது என்று தான் நம்புகிறேன். ஒரு நாள் சீனா இதனைச் செய்து முடிக்கும். மனித இனத்தின் கவனமின்மை, பொறுப்பின்மை ஆகியவற்றை இந்தப் புண்ணிய பூமி இன்னும் எத்தனை காலம் தான் பொறுக்கும் என்பதற்கு திட்டவட்டமான எண்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள நானும் ஆவலாகத்தான் இருக்கிறேன்.