என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

தொலைக்காட்சிகளில்

தமிழ் விருதுகள்

English Awards

இலக்கிய இதழ்கள்

ஆனந்த விகடன்

குங்குமம் வார இதழ்

ராணி வார இதழ்

குமுதம் வார இதழ்

கல்கி

Saturday, 28 December 2024

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்

 அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்




இந்த விவகாரத்தில் 'மாணவி ஏன் அந்த நேரத்தில் மாணவனுடன்...அதனால் தான் எல்லா பிரச்சனையும்' என்கிற ரீதியில் இணையத்தில் பல விமர்சனங்களைப் பார்க்க முடிகிறது.

அது அவருடைய விருப்பமுங்க. அது காதலா இருக்கலாம். காமமாகவே இருந்தாலும், அது அவரது தேர்வு தான் என்றால் அதில் கருத்து சொல்ல நம் யாருக்குமே உரிமை இல்லை. இதற்கெல்லாம் "கர்மா சும்மா விடாது" என்றெல்லாம் பொங்க வேண்டியதில்லை. ஆண்களில் பலர் இளம் வயதில் பல வல்லுறவுகளில் இருந்துவிட்டு, இறுதியில், அதற்கு நேரெதிரான குணாதிசயங்களுடன் கூடிய பெண்ணுடன் செட்டில் ஆகிறவர்கள் இருப்பார்கள். இளம் வயதில் பல்லுறவுகளில் இருந்தவர்கள் ஒருகட்டத்தில் திகட்டிப்போய், எதுவுமே வேண்டாம் என்று சாமியார் போல் சிலர் இருப்பார்கள். போலவே, சிறுவயதிலும் சரி, மத்திம வயதிலும் சரி, பாலைவனமாக எவ்வித உறவுகளும் வாய்க்காமல் காய்ந்து கிடப்பவர்களும் இருப்பார்கள். சிலருக்கு எல்லா வயதுகளிலும் உறவுகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். ஆனால், வைத்து மெயின்டெயின் செய்யததேவையான ஒன்று அவர்களுக்கு எல்லாக் காலத்திலும் வாய்க்காதிருக்கும். இப்படிப் பல permutations and combinations சொல்லலாம்.

மேற்சொன்ன எல்லா சாத்தியங்களிலும் ஆணுக்கு பதிலாக பெண் என்றும் போட்டுக்கொள்ளலாம். அதுவும் தினம் தினம் நடந்துகொண்டு தான் இருக்கிறது.

நெருங்கிச் சென்று பேசிப்பார்த்தால் தான், அவைகளிலிருந்து அவர்களுக்கான take aways என்னென்னவாக இருக்கின்றன என்பது புரியும்.

காதல் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு, அந்த ஏமாற்றம் தந்த கெட்ட அனுபவத்தில் துவண்டு, பின் திருமணத்திற்குப் பிறகு மண வாழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும் பெண்கள் இருக்கிறார்கள். திருமணத்தில் ஏமாற்றப்பட்டு, அந்த ஏமாற்றத்திற்கு பதிலாகப் பல ஆண் துணைகளோடு தரிகெட்டு வாழ்ந்து பழி வாங்கும் பெண்களும் இருக்கிறார்கள்.

வாழ்க்கை ஒருவருக்கு என்ன வைத்திருக்கிறது என்பது தான் இருப்பதிலேயே ஆகச்சிறந்த சஸ்பென்ஸ்.

'இருட்டில் ஆணும் பெண்ணுமாக...' என்று பொறுமாதீர்கள். அடுத்த முறை அப்படி ஒருவரைப் பார்த்தால், வாழ்க்கை இவர்களுக்கு என்ன வைத்திருக்கும் என்ற கேள்வியோடு கடந்து போகப் பழகிவிடுங்கள். 'இருட்டில் ஆணும் பெண்ணுமாக...' என்று நீங்கள் பார்த்தது நிச்சயமாக அவர்களுக்கு நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், யாருக்குமே நிரந்தரமாக இருப்பதில்லை. பலருக்கு வாழ்க்கையில் நடக்கும் ஒரே ஒரு நல்ல விஷயம் அந்த பத்து நிமிஷமாகத்தான் இருக்கும். வாழ்க்கை, அவர்களின் மொத்த வாழ்வுக்குமான ஊக்கத்தை அந்தப் பத்து நிமிஷத்தில் தான் பொதித்து வைத்திருக்கும்.

வாழ்க்கை அவரவர்க்கான அனுபவத்தை, ஏமாற்றத்தை, பாடத்தை, நஷ்டத்தை, அந்தக் கணத்தில் தான் மறைத்தும் வைத்திருக்கிறது. உயிருக்கு உயிராகக் காதலித்து, அக்காதலியுடன் அப்படிப் பல பத்து நிமிஷங்களைச் செலவு செய்திருப்பார் ஒருவர். இறுதியில், கெட்ட நிகழ்வுகளால், அவைகளை மறக்க, முழுக்குடிகாரனாக மாறியிருப்பார். அந்த பத்து நிமிஷம் தான் அவரது வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்திருக்கும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அந்தப் பத்து நிமிஷம் வரமாகவும் இருக்கலாம், ஆலகால விஷமாகவும் அமையலாம்.

Its their moment- not in a fun way but in a fate-way என்பதைப் புரிந்துகொண்டீர்களானால், அடுத்த முறை அவர்களைப் பார்க்கையில், தொந்திரவு செய்துவிடக்கூடாது என்று மட்டும் தான் தோன்றும் உங்களுக்கு. அப்படித் தோன்றிவிட்டால், நீங்கள் மனித வாழ்வை, அதன் சாபக்கேடுகளை, நிலைத்தன்மையின்மையை, கருணையற்ற தன்மையையெல்லாம் சரியாகப் புரிந்துவைத்திருக்கிறீர்கள் என்று பொருள்.




விடுதலை-2

 விடுதலை-2

******************
விடுதலை-2 திரைப்படம் குறித்த விமர்சனங்கள் இணையம் முழுவதும் பெரும்பான்மைக்கு நேர்மறையாகவே எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு சில வாதங்கள், கம்யூனிசம் பற்றி எடுத்த வெற்றிமாறன், தன் சம்பளத்தைத் தன் உதவியாளர்களுடன் பகிர்ந்து கொள்வாறா என்கிற ரீதியில் இருப்பதையும் கவனிக்க முடிந்தது.
இது என்ன கேள்வி? கொலைகாரன் பற்றிப் படமெடுக்க வேண்டுமானால் இயக்குனர் முதலில் கொலை செய்திருக்க வேண்டுமா என்ன?
விடுதலை-1,2 இரண்டுமே 1980, 1990 களின் காலகட்டத்தில் எந்தெந்த சூழல்களில் தமிழ் நாட்டில் கம்யூனிசக் கோட்பாடுகள் புகுந்தன? அவை புகுவதற்கான அடிப்படைக் காரணிகளாக அமைந்த நிகழ்வுகள் யாது? சமூகத்தின் எந்தப் படி நிலையில் இருப்பவர்களால் அது முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது? ஏன் ஏற்கப்பட்டது? அதனால், அவர்களுக்கு நடந்த நன்மை தீமைகள் என்னென்ன? அது குறித்த அவர்களது விமர்சனம்/பார்வை என்னவாக பின்னாளில் உருப்பெற்றது? என்பது குறித்தெல்லாம் விரிவாக, ஒரு மாணவன் இது குறித்த சரித்திரம் பூகோளம் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் பல்லாயிரம் பேர் எழுதிய நூல்களை மணிக்கணக்கில் அயர்ந்து அயர்ந்து வாசிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளாமல், காட்சி வாயிலாக, உரையாடல் வாயிலாக, பாடம் புகட்டும் நோக்கில், மிக மிக விரிவாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இன்றிருக்கும் சமூகம் வெற்றிமாறனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
வெற்றிமாறன் என்றொரு திரைப் படைப்பாளி இல்லாவிட்டால் வேறு எவரும் இந்த ஏரியாவை கையாண்டு திரைப்படம் எடுத்து லாபம் பார்க்க மாட்டார்கள். மாறாக, நடிகைகளின் இடுப்பையும், பிருஷ்டத்தையும் மார்பையும் கிட்டத்தில் காட்டி காசு பார்க்கும் கூட்டமே இங்கு அதிகம். திரைத்துறை அத்தகையது.
தமிழகம் உடைமைத் தத்துவத்தின் அடிப்படையிலமைந்தது. அதன் அடிப்படையிலேயே அதன் பண்பாட்டுக்கூறுகள், கட்டமைப்புகள், பொருளாதாரம், கலாசாரம் ஆகியன கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றன. கேரளாவில் கம்யூனிசம் இருக்கிறதே என்று யாரேனும் சொல்லக்கூடும். தன் குப்பையை அடுத்த மாநிலத்தில் கொட்டு என்று எந்தக் கம்யூனிசமும் சொல்லாது. அப்படிச் சொல்கிறதென்றால் அது போலி கம்யூனிசம், வெறுப்புக் கம்யூனிசம் என்பதை அறிக. விடுதலை-2 அப்படி ஒன்றைக் காட்சிப்படுத்தவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
விடுதலை-2 திரைப்படத்தின் இறுதிக்காட்சிகளில் வாத்தியார் கதாபாத்திரத்தின் வசனங்கள் வாயிலாக, கம்யூனிசத்தைத் தமிழகத்தில் ஏற்றுக்கொண்டவர்கள் அதைச் செயல்படுத்திய விதம், அது போன போக்கு, உருவாக்கிய இழப்புகள், ஆகிய, கம்யூனிச சித்தாந்தத்தை, அதை ஏற்றுக்கொண்ட அப்போதைய வாத்தியார் முதலானவர்கள், எக்காரணத்துக்காக, எதைச் செயல்படுத்த ஏற்றுக்கொண்டார்களோ அது நடக்கவில்லை என்பதை "நம் பாதையை மாற்ற வேண்டும்" என்று சொல்வதம் மூலம் உணர்த்துவதாக அமைகிறது. அதை, திரைப்படத்தின் முக்கியமான பகுதியாகப் பார்க்கிறேன். இருபது ஆண்டுகளாக மேற்கொண்ட கம்யூனிச முயல்வுகள் சென்றடைந்த இடம் உவப்பானதாக இருக்கவில்லை என்ற விமர்சனம் வாத்தியார் வாயிலாக வெளிப்படுகிறது. அதைத்தான் மக்கள் மனதில் திரைப்படம் விதைப்பதாகவும், அந்தப் புள்ளியிலிருந்து மேற்கொண்டு மக்கள் எல்லோரின் நலனுக்கும் என்ன வேண்டுமோ அதை நோக்கி அடுத்தடுத்த கட்ட நகர்வை எல்லோருமாகச் சேர்ந்து மேற்கொள்ளவும் என்ற மறைமுக வேண்டுதலோடு திரைப்படம் முடிந்ததாக நான் பார்க்கிறேன். அந்த வகையில் திரைப்படம் எனக்கு, சம காலத்தின் மிக மிக முக்கியமான படமாகத் தோன்றுகிறது. இக்காரணத்திற்காகவே, இத்திரைப்படத்தை எல்லோரும் ஒருமுறையேனும் பார்க்குமாறு இணைய நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
மற்றபடி, ஏற்கனவே சொன்னது போல, ஒரு கையாலாகாதவனைப் பார்த்தால், கோபமும், எரிச்சலும் வரும். ஆனால், அதிகாரம் என்னும் படிநிலை அடிப்படையிலான இயக்கத்தில், அந்தக் கையாலாகாதத்தன்மை எப்படியெல்லாம் மிக மிக கவனமாக வார்த்தெடுக்கப்படுகிறது என்பதைத் தெளிவாகக் காட்டும் விதத்தில் படத்தில் எல்லா காட்சிகளையும் தேவையான காட்சிகள் என்றே கொள்ள வைக்கிறது. பிறக்கையிலேயே விதி கோரமாகத் தீர்மானிக்கப்பட்டுவிடும் மக்களுக்கு நடக்கும் அட்டூழியங்களை ஆவணப்படுத்தும் வகையில் விடுதலை-2 ஒரு சர்வதேச தரத்திலான படம் என்று தைரியமாகச் சொல்லலாம். பார்க்கவே முடியவில்லை என்றால் அனுபவித்தவர்கள் வலி? அந்த வேதனை? அதற்கு அவர்களின் எதிர்வினை? அது எப்படி நியாயமற்றதாகும்?
பரவலாக தமிழ்ச் சமூகத்தை ஆதி இனம் என்பார்கள். ஒரு ஆதிச் சமூகத்தின் இயல்பு என்ன? மற்ற சமூகங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஒரு நல்ல வளர்ந்த சமூகத்தின் அடையாளமாக, வளர்ந்தவன் சமூகத்தின் கடை நிலையில் இருப்பவனின் வாழ்வை எளிமையானதாக ஆக்கவேண்டும். அது நம் சமூகத்தில் எங்கே நடந்திருக்கிறது? பெரும்பாலும், சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்களைச் சுரண்டும் சமூகமாகத்தான் வளர்ந்த சமூகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. விடுதலை-2 அதை விமர்சனம் செய்யும் விதமாக, அதை உணர்த்தும் விதமாக சரியான நேரத்தில் வெளியாகியிருக்கிறது என்று சொல்லலாம்.



Sunday, 8 December 2024

48வது சென்னைப் புத்தகக் கண்காட்சி

 48வது சென்னைப் புத்தகக் கண்காட்சி  நந்தனத்தில் உள்ள Y.M.C.A உடற்கல்வியியல் கல்லூரியில் டிசம்பர் 27 துவங்கி 12 ஜனவரி 2025 வரை நடைபெற உள்ளதாக பபாசி அறிவித்துள்ளது. 


படைப்பு பதிப்பக வெளியீடாக விற்பனையில் இருக்கும் எனது நூல்களின் பட்டியல் பின்வருமாறு:


1. "வாவ் சிக்னல்" விஞ்ஞானச் சிறுகதைத் தொகுப்பு(2020)

2. "மரபணுக்கள்" விஞ்ஞானச் சிறுகதைத் தொகுப்பு(2024)

3. "தீசஸின் கப்பல்" சிறார்/இளையோர் விஞ்ஞானச் சிறுகதைத் தொகுப்பு(2024)


இவற்றில் "வாவ் சிக்னல்" நூல், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த சிறுகதை நூல் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. "மரபணுக்கள்", "தீசஸின் கப்பல்" ஆகிய இரண்டு நூல்களும் நடப்பாண்டில் வெளியாகும் எனது விஞ்ஞானச் சிறுகதை நூல்கள் ஆகும். 


நாளைய உலகம் அறிவியல் உலகமாகப் பரிணமிக்க என்னாலான சிறு முயற்சிகள் இந்த நூல்கள். அதே  நோக்கத்திற்காய் இந்த  நூல்களுக்குத் தங்கள் நல்லாதரவை நல்குமாறு  இணைய நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். 


பிரதிகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:

ஜின்னா (பதிப்பாளர் - படைப்பு பதிப்பகம்)

Phone: 7338897788/7338847788

படைப்பு நூல் நிலையம்

எண் 3, தரைத்தளம், அஜந்தா டவர்ஸ்,

கார்ப்பரேஷன் காலனி தெரு, கோடம்பாக்கம்

சென்னை - 600024.


ஸ்டால் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.







Friday, 6 December 2024

I miss you guys

பொதுவாக, அறிவியல் புனைவுகள் என்றாலே அதற்குப் பெரிய வாசகர் பரப்பு இருக்காது. காரணம் தெரிந்ததுதானே. அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசிப்பார்கள். அவர்களிலும், வாழ்க்கை தரும் சவால்கள், தினசரிகளில் உள்ள ஒழுங்கின்மைகளில் தொலைபவர்கள் என்று பல விடயங்கள் அத்தொடர் வாசிப்பைக் கலைத்துப் போட முயன்று கொண்டே இருக்கும். 2020களில் என் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து, பின்னூட்டமிட்டவர்களில் பலர் இப்போது முகநூலிலேயே இல்லை அல்லது முகநூலுக்கே வருவதில்லை. அவர்களைக் கவனித்து, தொடர்பு கொண்டு விசாரித்ததில் தெரிய வந்த காரணிகள் பின்வருமாறு:



1. திருமணமானதால் புகுந்த வீடு, மகப்பேறு என்று முகநூல் பக்கமே திரும்ப இயலாமல் பிஸியானவர்கள்,

2. துணைவர்களின் உள்ளீடு காரணமாக முகநூல் வருவதைத் தவிர்ப்பவர்கள்,

3. தெரியாத காரணங்களால் முகநூலையே டிலீட் செய்துவிட்டுப் போனவர்கள்,

4. வயதான தாயைப் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நேரமின்மையால் முகநூல் வர இயலாதவர்கள்,

5. பிள்ளைகளின் கல்வியின் நிமித்தம் வேறு ஊர்களுக்குக் குடிபெயர்ந்து புதிய தினசரிகளில் தொலைந்தவர்கள்,

6. விபத்தில் சிக்கிய குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்ளும் பொருட்டு முகநூலுக்கு நேரம் ஒதுக்க முடியாதவர்கள்,

7. துணைவர்களின் எதிர்ப்பு காரணமாக முகநூல் கணக்கை நீக்கியவர்கள்,

8. கல்லூரிகளில் இறுதியாண்டு என்பதால் பாடங்களில் கவனம் குவிப்பவர்கள்,

9. வேலை இழப்பு (layoff), பணி இட மாற்றம், புதிய வேலை ஆகியவற்றால் முக நூலுக்கு நேரமொதுக்க முடியாதவர்கள்,

10. வங்கி வேலைகளில் தொலைந்தவர்கள்

11. அந்தந்த காலகட்டத்தின் ட்ரெண்ட்களில் பாதை மாறியவர்கள்,

12. மருத்துவர்களின் ஆலோசனையின் பிரகாரம், பரிந்துரைக்கப்பட்ட பயிற்சிகளில் முகநூல் நேரத்தைப் பறிகொடுத்தவர்கள்,

 

இப்படிப் பற்பல காரணிகளால், முகநூலில் அறிபுனை ஆக்கங்கள் வாசிப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது. இவர்கள் அனைவருக்கும், I miss you guys. I hope you overcome your hurdles and get back to sci-fi reading. 

Wednesday, 4 December 2024

தீசஸின் கப்பல் - சிறார்/இளையோர் விஞ்ஞானச் சிறுகதைத் தொகுதி நூல்

தீசஸின் கப்பல் - சிறார்/இளையோர் விஞ்ஞானச் சிறுகதைத் தொகுதி நூல்

படைப்பு பதிப்பக வெளியீடாக எனது "தீசஸின் கப்பல்" என்ற தலைப்பிலான விஞ்ஞானப் புனைவுச் சிறுகதைத் தொகுதி நூல் வெளியாகிறது என்பதை மகிழ்ச்சியுடன் நண்பர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது எனது பதினைந்தாவது நூல். இத்தொகுப்பில் இடம்பெறும் சிறுகதைகள் அனைத்தும் அறிவியல் புனைவுகள் தான் என்றாலும், சிறார் மற்றும் இளையோர்களுக்கான சிறுகதைகளைத் தாங்கி வரும் நூல் என்பதே இந்த நூலின் சிறப்பம்சம் எனலாம்.



ஒரு நாட்டின் எதிர்காலம், அதன் இளைய தலைமுறை - குறிப்பாகப் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள். இனி வரும் காலம் அறிவியலின் காலம் என்று சொல்வதை விடவும், அறிவியலே ஒரு உலகார்ந்த மொழியாக, மதமாக மெல்ல மெல்ல உருமாறிக்கொண்டிருக்கும் காலகட்டத்திற்குள் நாம் ஏற்கனவே பிரவேசித்துவிட்டோம் என்று சொல்லலாம். அதற்கேற்ப, நம் தமிழ்ச் சமூகத்தின் சிறார் மற்றும் இளையோர்களைத் தொடர்ந்து தயார் செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கிறது. கதையாடல்கள் வழி, அறிவியலைத் தங்கள் பொது வாழ்வின் சூழல்களுக்குப் பொருத்திப் பார்க்கவும், சிக்கல்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் தேடவும் மாணவ சமுதாயத்தைத் தயார் செய்ய, பழக்கப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இக்காலகட்டம் அமைந்திருக்கிறது. அதைச் சாத்தியப்படுத்த என்னாலான ஒரு சிறு பங்களிப்பே 'தீசஸின் கப்பல்' நூல் எனலாம்.
பிரதிகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:
ஜின்னா (பதிப்பாளர் - படைப்பு பதிப்பகம்)
Phone: 7338897788/7338847788
படைப்பு நூல் நிலையம்
எண் 3, தரைத்தளம், அஜந்தா டவர்ஸ்,
கார்ப்பரேஷன் காலனி தெரு, கோடம்பாக்கம்
சென்னை - 600024.
படைப்பு பதிப்பகத்தில் கிடைக்கும் எனது பிற விஞ்ஞானச் சிறுகதை நூல்கள்:
1. "வாவ் சிக்னல்" விஞ்ஞானச் சிறுகதைத் தொகுப்பு(2020)
2. "மரபணுக்கள்" விஞ்ஞானச் சிறுகதைத் தொகுப்பு(2024)
3. "தீசஸின் கப்பல்" சிறார்/இளையோர் விஞ்ஞானச் சிறுகதைத் தொகுப்பு(2024)