Wednesday, 1 February 2017

எனது நூல் விற்பனையில் சாதனை

எனது நூல் விற்பனையில் சாதனை

ன்று போட்டுக்கொள்பவர்களை பார்த்தால் சங்கடமாக இருக்கிறது

எனது முதல் நூல் வெளியான போது நூலை வாசித்தவர்கள் பலர் சொன்ன ஒரு பொதுவான விஷயம் " நிறைய வாசியுங்கள்" என்பதுதான். எனது இரண்டாவது நூலின் கதி என்ன என்பது இப்போது நிகழ்காலம். முதல் நூல் 2014ல் வெளியானது. இரண்டாவது நூல் 2016ல். இரண்டுக்கும் நடுவே இந்த இரண்டு ஆண்டுகளில் நான் பெரிதாக வாசிக்கவில்லை என்பது உண்மை.

என் எழுத்து என்பது என் சிந்தனைகளை பதிவு செய்து ஆவணப்படுத்தும் செயல்பாடே என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அதே நேரம், " நிறைய வாசியுங்கள்" என்கிற சொலவடை மீது எனக்கு சொல்வதற்கு சில தகவல்கள் இருக்கின்றன.

தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர்கள் என்று அறியப்பட்டவர்களின் நூல்களையே திரும்ப திரும்ப வாசித்து, தமிழ் இலக்கிய குழுவில் இயங்கும் அந்த 500 பேரும் ஒரு வித 'பழக்கத்துக்கு' ஆளாகியுள்ளனரோ என்று நினைக்க வைக்கிறது எனது இரண்டாவது நூல் "உங்கள் எண் என்ன?" விற்கு கிடைத்த வரவேற்பு,

தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர்கள் எழுதிய எழுத்துக்களை வாசிப்பதை நான் குறை சொல்லவில்லை. அதில் குறை சொல்ல ஒன்றுமில்லை. அவர்களெல்லாம் காலத்தோடு சண்டையிடுபவர்களே. அதை நான் மறுக்கவே இல்லை.

ஆனால் பூமியில் மனித வாழ்க்கை என்பது அகலவாக்கில் பற்பல‌ கோணங்களை நாளுக்கு நாள் உருவாக்கிக்கொண்டே அசுர வேகத்தில் விரிவடைந்துகொண்டிருக்கிறது. இதில் எத்தனை காலத்துக்கு 1960-2000 களின் எழுத்துக்களில் பதியப்பட்ட கோணங்களையே கொண்டு நாம் நாளோருமேனியும் அகண்டு விரியும் உலகின் கோணங்களை பார்ப்பது என்பது என் கேள்வி?

சிந்தனையாளர்களுக்கு வாசிப்பு என்பது ஓரளவுக்கு மேல் தேவையற்ற ஒன்று என்பது என் கருத்து. ஐன்ஸ்டைன் மற்றவர்கள் எழுதியதையே வாசித்துக்கொண்டிருந்திருந்தால் ரிலேட்டிவிட்டி நமக்கு கிடைத்திருக்காது என்பது என் வாதம். ஐன்ஸ்டைன் ஒரு கட்டத்துக்கு மேல் தனக்குள்ளாகவே இயங்கத்துவங்கியிருக்க வேண்டும். குறிப்பாக மற்ற சிந்தனையாளர்களின் எழுத்துக்களை புறமொதுக்கியிருக்கவேண்டும். அப்படித்தான் ரிலேட்டிவிட்டி  உருவாகியிருக்க வேண்டும் என்பது என் வாதம். ஏனெனில் ரிலேட்டிவிட்டியை அவர் கண்டுபிடித்து விளக்கியபோது அது யாருக்குமே முதலில் புரியவில்லை.

எல்லா புத்தகங்களையும் மானாவாரியாக வாசிக்கும் பலரால் ஒரு சிறந்த ஆக்கத்தை உருவாக்கவே முடியாமல், கண்டபடி அலைவுற்று காலத்தை கடத்துவதையும் பார்க்க முடிகிறது. அதே நேரம் மிக மிக உன்னதமான எழுத்தை உருவாக்கியவர்கள் என்று இப்போது அறியப்படுபவர்கள் ஒன்று இயல்பிலேயே அவ்விதமானவர்களாக இருந்திருக்கிறார்கள் அல்லது தான் எழுதுவது இன்னதுதான் என்பதே தெரியாமல் எழுதியவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். உதாரணமாக மெளனியை சொல்லலாம். அவர் 24 கதைகள் தான் எழுதியிருக்கிறார். அவரது முதல்கதையை எழுதியபோது, தான் ஒரு புதிய விதமான எழுத்தை எழுதியிருக்கிறோம் என்பதே அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அதை விமர்சகர்கள் தான் கண்டுணர்ந்து சொன்னார்கள்.

ஒரு சிந்தனையாளன் மிக குறைவாக , அதே நேரம் மிகவும் தெரிவு செய்யப்பட்ட தகவல்களைத்தான் வாசிக்க வேண்டும் என்பதை மிகவும் தீவிரமாக நம்புகிறேன். இந்த வாசிப்பு செயல்பாட்டில் எதை தவிர்க்க வேண்டுமோ அதை அவன் காலத்தே தவிர்ப்பதில் தான் புதிய கண்டுபிடிப்புகள் காலத்தே உருவாகும் வாய்ப்புள்ளதாக நான் நம்புகிறேன்.

இதுகாறும் இவ்வாறு மிக மிக தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களையே வாசித்திருக்கிறேன். கண்டதையும் போட்டு குழப்பிக்கொண்டதில்லை. ஆதலால் என் முதல் நாவலுக்கு வந்த " நிறைய வாசியுங்கள்" என்கிற விமர்சனத்தை நான் தெரிந்தே புறக்கணித்தேன் என்பதை இப்போது என்னால் நினைவு கூற முடிகிறது. பலரது எழுத்துக்கள் குறித்து நான் விமர்சனமும் செய்ததில்லை. வாசித்தால் தானே விமர்சனம் செய்ய?

பதிப்பகங்கள் , எழுத்தாளர்களிடம் " நிறைய வாசியுங்கள்..எல்லாவற்றையும் வாசியுங்கள்.. ஆயிரம் கதைகள் வாசித்தால் தான் எழுத்து வசப்படும்" என்றெல்லாம் சொல்வதற்கு பின்னால், வணிக நோக்கம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். இதே வார்த்தைகள் வாசகனாக மட்டுமே உள்ளவர்களிடம் கூட சொல்லக்கூடாது என்பது என் வாதம். நிலம் மீதான மாஃபியா என்ற ஒரு கருவை வைத்து ஆண்டுக்கு ஐந்து நூல்கள் வெளியாகின்றன. வாசகன் ஒரே விஷயத்தை தெரிந்துகொள்ள ஏன் ஐந்து நூல்களை வாசிக்க வேண்டும், அதுவும் ஆண்டுக்கு ஐந்து என்கிற விகிதத்தில் என்பது என் கேள்வி?

அது நேர விரயம். செல்வினம். இப்படியெல்லாம் டார்ச்சர் செய்தால், தமிழ் குடும்பங்களில் எழுத்து, வாசிப்பு என்றாலே ஏன் அலர்ஜியாகாது? எழுத்தாளன், இப்படியெல்லாம் இயங்கி அறிவு சார் சமூகத்தை மொன்னை சமூகமாக மாற்றி வைத்திருக்கிறோம். புத்தகம் வாசிக்கிறவன் என்றாலே தெரித்து ஓடுகிறார்கள். இந்த ஓட்டத்தில் நல்ல நாவல்களும் கவனக்குவிப்பின்றி போய்விடும் அபாயம் ஏற்படுகிறது.

என் முதல் நூலை சொந்தக்காசை போட்டு புத்தகமாக்கியபோது ஒருவர்  "சொந்தக்காசு போட்டு ஏன் புத்தகமாக்கணும்? அப்படியெல்லாம் செய்யணும்னு அவசியம் இல்லை" என்றார்,

அது தவறு என்று நினைக்கிறேன். வணிக நோக்கமுள்ள பதிப்பகங்கள் மொன்னை எழுத்துக்களை பெரியதாக ப்ரமோட் செய்கின்றன. செல்ஃப் பப்ளிஷிங் நிறுவனங்களின் உள்ளீடு வேறு. இவைகள் மாபெரும் கவனக்குவிப்பை மொன்னை எழுத்துக்கள் மீது பாயச்செய்கின்றன. இந்த புத்தகங்கள் இரண்டு குழப்பங்களை இருபது குழப்பங்களாக பெருக்க மட்டுமே செய்கின்றன. குழு மனப்பான்மையோடு, லாபி செய்கிறவர்கள் ஒருவர் மாற்றி இன்னொருவர் தங்களை தாங்களே முன்னிருத்தி முன்னிருத்தி புதிய எழுத்துக்களை  , புதிய சிந்தனைகளை வரவிடாமலே செய்துவிடுகிறார்கள். இல்லையெனில், என் நூலெல்லாம் ஏன் "தமிழின் முதல் மேத்தமேடிக்கல் ஃபிக்ஷனாக" வரவேண்டும்?

இந்த திணிப்பு, போலித்தனம் போன்றவற்றில் என்னை இணைத்துக்கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. அதே நேரம் எனக்கு எழுத்து பிடிக்கிறது. எழுத வருகிறது. நான் ஒரு சிந்தனையாளன். என் அறிவுத்தேடலின் திசையில் இல்லாத எழுத்தை தற்சமயம் தேவையற்றதென புறமொதுக்கும் நான் பிற்காலத்தில் என்றோ ஒரு நாள் கையிலெடுக்கக்கூடும். இப்போதைக்கு எனக்கு தேவையில்லை. அவ்வளவுதான். என் தேடலின் திசையில் வரும் புத்தகங்களை மட்டுமே வாசிக்கிறேன். எழுதுகிறேன்.

வாசகனை குழப்பி என் நூலை தலையில் கட்ட விரும்பவில்லை. ஆனால் நான் எழுதியது ஒரு புதிய எழுத்து என்கிற தன்னம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதில் புதிய விஷயமொன்றை சொல்லியிருக்கிறேன் அது மக்களுக்கு போய் சேர வேண்டும் என்பது மட்டுமல்லாமல், எழுதியதும் சிந்தித்ததும் நான் என்பதை சரித்திரத்தின் பக்கங்களில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயமும் எனக்கு இருக்கிறது.

என் நூலை யாருமே வாங்கவில்லை என்றாலும் எனக்கு கவலை இல்லை. என் நூல் போல் இந்த வருடத்தில் வந்த வேறு நூல்களே இல்லை என்பதால் என் நூலை வாசிக்காதவர்களுக்குத்தான் நஷ்டம் எனபதோடு நான் அடுத்த நாவலை எழுத போய்விடுவேன்.  ஏனெனில் புத்தகமாக்கிய செலவு எனக்கு நஷ்டமல்ல.

குங்குமம், குமுதம், ஆனந்த விகடன், ராணி, கணையாழி போன்ற பத்திரிக்கைகள் எழுத்தாளனுக்கு பணம் தருகின்றன. ஒரு வருடத்தில் எனது ஆக்கங்கள் பத்திரிக்கைகளில் வெளியாவதற்கு பத்திரிக்கைகள் தரும் சன்மானத்தை அப்படியே இதில் செலவு செய்கிறேன். ஒருவேளை என் நூல்களை வாசகர்கள் வாங்கினால் அதில் வரும் பணத்தை அறக்கட்டளை, ஏழை மாணவர்களுக்கு கல்வி என்கிற ரீதியில் விஸ்தரிக்க திட்டமிருக்கிறது. எழுதி கிடைக்கும் பணத்தை எழுத்திலேயே செலவு செய்கிறேன். அவ்வளவுதான். எழுதிக்கிடைக்கும் பணம் எப்போது நூலாக்கும் செலவு தாண்டி போகிறதோ அப்போது அந்த பணத்தை ஏழை மாணவர்களின் கல்வி, ஏழைகளுக்கான மருத்துவம் போன்ற சமூக நல காரியங்களுக்கு செலவு செய்யும் திட்டமிருக்கிறது.

இதுதான் சரியான அணுகுமுறை என்பது என் வாதம். இதில் வாசகனை பலிகடாவாக்கவில்லை. பதிப்பகத்தின் வணிக நோக்கங்களுக்கு என் எழுத்தை அடகு வைக்கவில்லை. பதிப்பாளருக்கு என்னால் நஷ்டமில்லை. எனக்குமே நஷ்டமில்லை.

"உங்கள் எண் என்ன?" நூலை புத்தகமாக்க அணுகியபோது சில பதிப்பகங்கள் பெரும் தொகை கேட்டன. நான் காதை மூடிக்கொண்டேன். "அமெரிக்காவில இருக்கான்.. பிசினாறியா இருக்கானே" என்று முணுமுணுத்திருக்கக்கூடும்.  அது அல்ல பாயின்ட். ஒரு ஆண்டில் எழுத்தில் கிடைக்கும் வருமானத்தையே நூலின் ப்ரொடக்ஷன் செலவுக்கு திருப்ப திட்டமிட்டிருக்கிறேன். அதுதான் நான் என் நூலை புத்தகமாக்க தர முடிந்த பணம். அதற்கு எந்த பதிப்பகம் ஒத்து வருகிறதோ அந்த பதிப்பகத்தையே தேர்வு செய்கிறேன். என் வரையில் விஷயம் இதுதான்.

பதிப்பகத்தின் பெயர், ரெபுடேஷன் பற்றியெல்லாம் கவலை இல்லை. ஏனெனில் புத்தகத்தில் சரக்கு இருக்கிறது. சரக்கு தேடுபவன் என் புத்தகத்தை கண்டடைவான். அவன் கண்டடைகையில் கையில் கிடைக்க நான்கு பிரதிகள் இருந்தால் போதுமானது. அவ்வளவுதான்.

"உங்கள் எண் என்ன?" சரியாக 125 காப்பிகளே போடப்பட்டது. ஒரு பிரதி 230 ரூபாய். ஆனால் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எல்லோருக்கும் நான் பிரதிகளை இலவசமாகவே வாசிக்க கொடுத்தேன். கூப்பிட்டு கூப்பிட்டு கொடுத்தேன். ஏனெனில் எனக்கு நஷ்டமில்லை. புத்தக திருவிழாவில் விற்றது போக எஞ்சியது நியூ புக் லேண்ட்ஸில் விற்பனைக்கு இருக்கிறது. வருடாவருடம் ஒரு இருபது காப்பிகள் போட்டு விற்பனைக்கு வைக்க திட்டமிட்டிருக்கிறேன்.  ஏனெனில் புதிய எழுத்தை தேடுபவனுக்கு கிடைக்கவேண்டுமே. வருடா வருடம் யாரேனும் தெடுவார்கள். இந்த செலவு ,எனது ஆக்கங்கள் பத்திரிக்கைகளில் வெளியாவதால் கிடைக்கும் சன்மானத்தில் அடங்கும்.

நம்மால் யாருக்கும் எந்த தொந்திரவும் இல்லை, யாரையும் தவறாக வழி நடத்தவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை, யாருக்கும் என்னால் நஷ்டமில்லை, எனக்குமே நஷ்டமில்லை. இது தரும் மன நிம்மதி இருக்கிறதே? அதில் கிடைக்கும் தன்னம்பிக்கை இருக்கிறதே? அது தோற்றுவிக்கும் புதிய சிந்தனைகள் இருக்கிறதே?  Its a BLISS.

No comments: