Saturday, 28 January 2017

நூலின் வெற்றியும் தோல்வியும்

நூலின் வெற்றியும் தோல்வியும்


எழுத்தாளர் மெளனியின் கதையை ஒருவர் வாசித்துவிட்டு அவர் வசிக்கும் ஊருக்கே சென்று அவரை சந்தித்து "உங்கள் கதை ரொம்ப சுமார்..அதை ஏன் இத்தனை சிலாகிக்கிறார்கள்?" என்கிற அர்த்தத்தில் கேட்டாராம்..அதற்கு மெளனி அவரை மீண்டும் அந்த கதையை வாசித்துப்பார்க்க சொன்னாராம்..

பொதுவாக ஒரு பிரபலமானவரின் நூல் வெளியாகிறது என்றால் என்ன நடக்கிறது? அதை ஒரு நூறு பேர் வாங்கி வாசிக்கிறார்கள். அவர்களால் அந்த நூலுக்குள் நுழைந்து வர முடிந்தால், அவர்களால் அந்த நூல் சிலாகிக்கப்படுகிறது. பெறுத்த கவனம் அந்த நூலின் மேல் குவிகிறது. அவர்களால் அந்த நூலுக்குள் நுழைய முடியவில்லை எனில், புறமொதுக்கப்படுகிறது. அவ்வாறு புறமொதுக்கப்படும் ஒன்று வெற்றியடைவது சாத்தியமில்லை.

இந்த இடத்தில் மூன்று விதமான விளைவுகளுக்கு சாத்தியம் இருக்கிறது. ஒன்று, அந்த நூலில் சொல்லப்பட்ட கருத்துக்கள் தவறு என்றால் மறுக்கும் வாதங்கள் முன்வைக்கப்படும். இரண்டாவது, அந்த நூலில் சொல்லப்பட்ட கருத்துக்கள் சரி என்றால் நூல் கொண்டாடப்படும். மூன்றாவதாக‌ அந்த நூல் புரியவே இல்லையென்றால்?

கமலின் பெரும்பாலான படங்கள் அந்த வகையே. மும்பை எக்ஸ்பிரஸ் நானும் பார்த்தேன். உண்மையை சொல்லவேண்டுமானால், "இதெல்லாம் என்ன காமெடி" என்று தான் தோன்றியது. அது ஒரு டார்க் காமெடி வகை என்பதை மூன்று வருடங்களுக்கு பிறகே தெரிந்துகொண்டேன். மீண்டும் அந்த படத்தை பார்த்தபோது நான் முன்பு பார்த்தபோது மொன்னையாக தெரிந்த பல காட்சிகள், டார்க் காமெடி என்கிற ஜானருக்கு தகுதிப்படவென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட காட்சிகள் என்பதையும் அதே காட்சியை வேறு மாதிரி எடுத்தால், அது டார்க் காமெடி என்கிற வகைமையை விட்டு விலகிவிடலாம் என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

டார்க் காமெடி வகைமைக்குள் வரவே அது அவ்விதம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. டார்க் காமெடி என்கிற ஒரே ஒரு தகவலை மட்டும் விட்டுவிட்டு பார்க்கின் அந்த படம் அத்தனை ஈர்க்காது. அதன் காட்சிகள் மிக மிக எளிமையான ரகமாகவும் கூட தெரியலாம்.

ஒரு ஆக்கத்தை நாம் வாசிக்கையில் நமக்கு என்ன தெரிந்திருக்கிறதோ அதை வைத்துத்தான் அணுகுகிறோம்.. நமக்கு அந்த ஆக்கத்தை புரிந்துகொள்ளத்தேவையான தகவல்கள் தெரிந்திருக்கவில்லையெனில் நாம் அந்த ஆக்கத்தை அதன் உண்மையான மதிப்பில் உணர்ந்துகொள்ளப்போவது நடக்கப்போவதில்லை தான்.

அப்படியானால் ஆக்கம்? அவ்வளவுதான் என்று ஓரங்கட்டிவைத்துவிட்டு சென்றுவிட முடியாது.

இங்குதான் அது இயற்கையின் இயங்குமுறையோடு கலக்கிறது. காலம்! அந்த ஆக்கத்தின் மையம் குறித்த புரிந்துணர்வு இல்லாதவர்களால் அது நிகழ் காலத்தில் புறக்கணிக்கப்படலாம். ஆனால் மாற்றம் ஒன்றுதானே மாற்றமே இல்லாதது. காலம் செல்லச்செல்ல அந்த ஆக்கத்தின் மையம் குறித்த புரிந்துணர்வு கொண்டவர்களால் அந்த ஆக்கம் மீண்டும் மீட்டெடுக்கப்படுகிறது. நான் மும்பை எக்ஸ்பிரஸ் குறித்து மூன்று வருடங்கள் கழித்து புரிந்துகொண்டது போல.

அப்படியானால் முதலில் தோல்வியை தழுவிய அந்த ஆக்கத்தின் அப்போதைய நிலைப்பாடு சொல்வது என்ன?

அது ஒரு குறியீடு. எதன் குறியீடு?

அந்த ஆக்கம் வெற்றியடைய தேவையான சூழல் உருவாகியிருக்காததன் குறியீடு.

முழு ஆண்டுத்தேர்வுக்கு இருக்கும் கடைசி பத்து நாட்களில் ஜுரத்தால் அவதிப்பட நேரும் நிலைப்பாடு என்பது ஒரு குறியீடு. அது தேர்வுக்கென கடைசி நிமிடத்தில் படிப்பவர்களையும், வருடம் முழுவதையும் பாடத்தை விருப்பமுடன் படித்தவர்களையும் வேறுபடுத்திக்காட்டும் குறியீடு அது. அந்த கடைசி பத்து நாள் இல்லையென்றால், கடைசி நிமிடத்தில் படிப்பவர்கள் பாசாவது சாத்தியமில்லை. ஆனால் ஆண்டு முழுவதும் படிப்பவன் கடைசி பத்து நாள் படிக்கவில்லை என்றாலும் பாசாகிவிடுவான்.

அந்த பத்து நாள் ஜுரம் தான், உண்மையான மாணவனை, பாடத்தை புரிந்து அணுகும் மாணவனை கண்டுகொள்ள தேவைப்படும் முக்கியமான காரணி ஆகிறது. வெளியான சூட்டோடு புரியாத நூல், பின் தங்கிய வாசகர்களின் குறியீடு. அந்த வாசகர்கள் அப்படியே இருந்துவிடப்போவதில்லை. அந்த நூல் பேசும் கருத்தும் அப்படியே இருந்துவிடப்போவதில்லை. காலத்தின் போக்கில் அந்த கருத்து மெல்ல மெல்ல மேலெழும்பும். அந்த கருத்துக்களுக்கான வாசகன் காலத்தின் போக்கில் உருவாகிறான். அவனது தேடலும், அந்த நூலும் இணையும் புள்ளிதான் அந்த நூலின் வெற்றிக்கான காலகட்டம்.

இந்த ஒன்றுதான் நூலாசிரியனை தீர்க்கதரிசி ஆக்குகிறது. ஐன்ஸ்டைன் ஆக்கப்பட்டது போல. ஐன்ஸ்டைனின் சார்புக்கோட்பாட்டை அவரின் காலகட்டத்தில் புரிந்துகொண்டவர் மிக மிக சிலரே. ஆனால், இயற்பியலில் அவர் இன்றைக்கு தீர்க்கதரிசி. அதை யாராலும் மறுக்க முடியாது.

அப்படியானால், நிகழ்காலத்தில் தோல்வி அடையும் நூலை எழுதிய எழுத்தாளன்?

தனது காலத்தில் உள்ள மனிதர்களைத்தாண்டி சிந்திக்கும் யாரையுமே, காலத்தோடு சண்டையிடுபவர்களாகவே நான் பார்க்கிறேன். அந்த பின்னணியில் அவர்கள் கால பிரயாணிகள் என்றே கொள்கிறேன். ஐன்ஸ்டைன், ராமானுஜன் போன்றவர்கள் என்னளவில் காலப்பயணிகளே.

காலப்பிரயாணம் எல்லோருக்கும் சாத்தியமாகும் ஒன்றல்ல.. காலப்பிரயாணிகள் விதிவிலக்கானவர்கள். சாதாரண மனிதர்களுக்கு பயன்படும் சமூக மதிப்பீடுகள் அவர்களுக்கு செல்லுபடியாகாமல் போகலாம்.

Thursday, 19 January 2017

"உங்கள் எண் என்ன?" நூல் - நியூ புக் லேண்ட்ஸில்

காவ்யா ஸ்டாலில் எனது "உங்கள் எண் என்ன?" நூல் தீர்ந்துவிட்டபடியால், புத்தகம் வேண்டும் வாசகர்கள் நியூ புக் லேண்ட்ஸின் கீழ்க்கண்ட முகவரியில் நூலினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Address: New Book Lands,
No-52-C,Basement,
North Usman Road,
Near Panagal Park Flyover North End,
Thiyagaraya Nagar,
Chennai, Tamil Nadu 600017
Phone: 044 2815 6006

இலவச பிரதிக‌ள் பெற்றவர்களுக்கு:

நண்பர்களுக்கு வாசிக்கவென அவசர அவசரமாக அச்சடிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்ட இலவச பிரதிகளில் ஆங்காங்கே சில ஒற்று பிழைகளும், ஒன்றிரண்டு பக்கங்களும், நூலாசிரியர் குறிப்பும் விடுபட்டுப்போயுள்ளன. விற்பனைக்கென அச்சடிக்கப்பட்ட பிரதிகளில் கூடுமானவரை சரிசெய்திருக்கிறோம். இது உங்கள் தகவலுக்கு. இதையும் மீறி, பதிப்பக - வாசக அரசியல் காரணங்களுக்காய் குறை கூற விரும்பினால் உள்பெட்டியில் வந்து கூறலாமென்றும், பழைய நூலை கொடுத்துவிட்டு புதிய நூலை காசு கொடுத்து பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ;)

Sunday, 1 January 2017

உங்கள் எண் என்ன? புத்தக வெளியீட்டு விழா

உங்கள் எண் என்ன? புத்தக வெளியீட்டு விழா


புத்தக வெளியீட்டு விழாவில் எனது "உங்கள் எண் என்ன?" நாவல் புத்தகத்தை எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன் பெற்றுக்கொண்டார். முன்பேயே சொல்லியிருக்கவில்லை என்றாலும் கடைசி நொடியில் புத்தகத்தை பெற்றுக்கொள்ள முன்வந்ததுடன், விழாவில் பங்கேற்ற அவரது நட்புள்ளத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.