Friday, 16 September 2016

ஆங்கில இதழ்

ஆங்கில இதழ் - Alephi


"இலக்கிய தரம்" என்பதின் மீது எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன.

கிராமம், அதுசார்ந்த வட்டார் வழக்கு, கிராம மனிதர்களையே விளிம்பு நிலை மனிதர்களாக பார்த்தல், அவர்களின் வாழ்க்கை, அதிலிருக்கும் சங்கடங்கள் தோல்விகள், அதன் பின்னே இருக்கும் காரணிகள் என்று தான் இலக்கியத்தை அனேகம் இலக்கிய பத்திரிக்கைகள் வகைப்படுத்துவதாக அவதானிக்கிறேன்.

எனக்கு இதில் உடன்பாடு இல்லை. இயற்பியல், வேதியியல் , கணக்கு பாடங்கள் வராத காரணத்தால் அவைகளை விட்டு ஒதுங்கி வெவ்வேறு துறைகளை தேர்ந்துவிட்டு பிற்பாடு தமிழில் எழுத முடிந்த காரணத்தாலும், சமூக இயக்கம் குறித்த குறை புரிதல்களை மட்டுமே வைத்துக்கொண்டு கூட்டம் சேர்த்து புத்தகம் வெளியிட்டு தன்னைத்தானே "இலக்கியவாதி" என்று பிரகடனப்படுத்திக்கொள்வது நிறைய நடக்கிறது. இந்த குழப்பத்தில் உண்மையிலேயே நன்கு சிந்தனை வளம் கொண்ட சிந்தனாவாதிகள் காணாம்ல் போய்விடுகிறார்கள் அல்லது மழுங்கடிக்கப்படுகிறார்கள்.

பதிப்பகங்களும் வியாபார நோக்கிலேயே செயல்படுகின்றன. விருதுகள் வழங்கி தவறானவர்கள் மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சுகின்றன. இது தவறான அணுகுமுறை என்பதை விளைவுகள் துல்லியமாக‌ காட்டுகின்றன. வெறும் முண்ணூறு பேர் கொண்ட குழுவாகத்தான் தமிழ்இலக்கியம் இயங்குறது. இலக்கியவாதி என்று சொல்லிக்கொள்பவனை கண்டால் எல்லோரும் தெறித்து ஓடுகிறார்கள். இலக்கியம் பேசும் பெண்ணையோ பையனையோ நம்பி பெண் தரவோ , பெண் எடுக்கவோ தயங்குகிறார்கள்.ஒருவர் கன்னத்தில் இன்னொருவர் அறைந்துகொள்கிறார்கள். செருப்பால் அடித்துக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் தீவிர இலக்கிய வாதிகளின் செயல்பாடுகளை கவனித்தால், "இவனுக்கு மன நிலை பிறழ்வோ?" என்று சந்தேகிக்கும் வகைக்கு இருக்கிறது.

இயற்பியல், வேதியியல், கணிதம், சூத்திரங்கள், சமன்பாடுகள் புரிந்திருக்க வேண்டும் என்பது ஒரு தரமான இலக்கியவாதிக்கான இலக்கணமாக நான் பார்க்கிறேன். இதை எங்கு வந்து வேண்டுமானாலும் சொல்லத்தயார்.  இந்த எனது கூற்றை நான் எக்காலத்திலும் மாற்றிக்கொள்ளப்போவதில்லை.

தமிழில் தான் முதலில் எழுதிக்கொண்டிருந்தேன். உயிர்மையின் உயிரோசையில் Speculative Fiction கதைகள் தொடர்ந்து எழுதினேன். ஒருமுறை கவிஞர் மனுஷ்யபுத்திரனை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது என்னிடம் "யாருமே சரியா எழுத மாட்டேங்குறாங்க" என்றார். அப்போது நான் தான் அவரது தளத்தில் கதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். நம்மளைத்தான் சொல்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். அப்போதே நினைத்தேன். அந்த இதழை நிறுத்திவிடுவார்கள் என்று.. சில மாதங்களிலேயே நிறுத்தி விட்டார்கள்..

ஒரு கட்டத்தில் Speculative Fiction தனமான எனது கதைகளுக்கு களம் இல்லாமல் இருந்தது. தமிழில் எழுதினால் மலினமான எழுத்தாளர் என்று முத்திரை குத்தி ஒதுக்கிவிடுவது நடக்கிறது. ஏனென்றால் மேற்சொன்ன காரணம் தான். குழு மனப்பான்மை. ஜாதீய உணர்வுகள். வேதியியல், கணிதம், இயற்பியல், சமன்பாடுகள், சூத்திரங்கள் அறவே வராமை.

பிறகு என் போன்ற‌ கதைகளை வெளியிட எந்த தளமும் இருக்கவில்லை என்பதால் அதையெல்லாம் ஆங்கிலத்தில் மீண்டும் எழுதி ஆங்கில பத்திரிக்கைகளுக்கு அனுப்பினேன்.. பல இதழ்களில் வந்தது..இப்போதும் வந்து கொண்டிருக்கிறது..

உன்னதம் கெளதம சித்தார்த்தன் ஆங்கில இலக்கியத்திற்கென ஒரு இணைய இதழ் துவங்கியிருக்கிறார்.

இணையத்தில் Alephi.com என்பது முகவரி.

நான் எழுதிய Baby என்ற தலைப்பிலான கதை வெளியாகி இருக்கிறது.

http://alephi.com/2016/09/06/baby/

வட இந்தியாவில் சில பத்திரிக்கைகள் இயங்கி வந்தன. இப்போதும் அவற்றுள் சில இயங்குகின்றன.  அமேரிக்காவில் சில இணைய இதழ்கள் இயங்குகின்றன. முகப்பை பார்த்தாலே முகத்தில் அறைந்தார் போல் இருக்கும். Alephi இதழின் தோற்றம் ரம்மியமாக இருக்கிறது.

ஆங்கில இதழ்களில் என்னுடன் எழுதிக்கொண்டிருந்த சிலரை இங்கும் பார்க்க முடிவது மகிழ்ச்சி.. இனி வரும் காலங்களில் மேலும் பார்க்க முடியும் என்றே நம்புகிறேன்.

இப்போதைக்கு என்வகையான‌ கதைகளுக்காக உள் நாட்டில் இயங்கும் இன்னுமொரு தளமாக Alephi.com  ஐ பார்க்கிறேன் எனலாம்.
எழுத்தாளர் கெளதம சித்தார்த்தனின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்களும் பேரன்பும்.

தளம் மென்மேலும் பெரிதாகி வளர வாழ்த்துகிறேன்.

No comments: