Tuesday, 16 August 2016

அரசு பள்ளிகள்

அரசு பள்ளிகள்


"வேலையில்லா பட்டதாரி"  படம் வந்தபோது கூடவே ஒரு சர்ச்சையும் வந்தது.

ராமகிருஷ்ணா பள்ளியில் படித்ததால் தான் வீணாய் போக நேர்ந்ததாக அர்த்தம் தருவது போல் படத்தின் ஹீரோ பேசுவது போல் இருந்த டயலாக்கை சுற்றி தான் சர்ச்சையும். அதெப்படி ராமகிருஷ்ணா பள்ளிகள் பற்றி அப்படி சொல்லலாம் என்று கொந்தளித்தார்கள்.

நான் படம் பார்த்தபோது அப்படி ஒரு டயலாகை கவனித்ததாக நினைவில் இல்லை... (எப்படி இருக்கும்? அமலா பாலை சைட் அடித்தால் எப்படி ஐயா இருக்கும்? என்று நீங்கள் முனகுவது கேட்காமல் இல்லை... ஹிஹிஹி)

உண்மையில் ராமகிருஷ்ணாமிஷன் பள்ளிகள் வேறெந்த அரசு பள்ளிகள் போலத்தாம் இயங்கும். ட்யூஷன் வந்து சேரவைக்க, கடனே என்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள், தேர்வுக்கு மாணவர்களை எப்போதும் தயாராய் வைத்திருக்க மாடல் தேர்வுகள் மற்றும் சிறப்பு பாடவேளைகள் என்றெல்லாம் எதுவும் இல்லாமல் இருப்பது என்று நிறைய சொல்லலாம்.ஆனால் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு இரண்டு பீரியட் ப்ரேயர் இருக்கும். ராமகிருஷ்ண பரமஹம்சரின் துதி பாட வைப்பார்கள். ஆன்மீக வகுப்புகள் என்று பெயர். முக்கால்வாசி பேர் சும்மா குசுகுசுவென்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்க என்னைபோல் அப்பிராணிகள் புதிதாய் ரத்தம் ஏற்றப்பட்ட போர் வீரர்கள் போல் ஒரு அர்த்த புஷ்டியோடு துதி பாடிக்கொண்டிருப்போம்.

குசுகுசுவென்று தங்களுக்குள் முனகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் எங்களை பரிதாபமாக பார்த்துக்கொண்டிருப்பார்கள். எதுவும் சொல்ல மாட்டார்கள். (தேர்வுக்கு காப்பி அடிக்க பேப்பர் தர நாங்கள் தேவை அல்லவா?) அந்த பயம் இருக்கட்டும் என்று நாங்களும் கடமையே கண்ணாய் துதி பாடிவிட்டு அதே உயர் ரத்த வெப்பத்துடனும், புத்துணர்ச்சியுடனும் பள்ளி லைப்ரரிக்கு போய் ஏதேனும் மொக்கை புத்தகத்தை அதீத கடமை உணர்ச்சியுடன் எடுத்து படித்துக்கொண்டிருப்போம்.

அப்போதெல்லாம் பனகல் பார்கில் அமர்ந்து தான் தேர்வுக்கு தயார் செய்வேன். பத்து மணி தேர்வுக்கு 8 மணிக்கு பார்க் போனால் நிழலான எல்லா புதர்களுக்கும் ஜோடி ஜோடியாக அமர்ந்திருப்பார்கள். இடமே கிடைக்காமல் வெய்யிலில் அமர்ந்தே படித்த நினைவும் உண்டு.

நான் பாட்டுக்கும் வளவள என்று பேசிக்கொண்டே செல்கிறேன் பாருங்கள்.... சரி கதைக்கு வருவோம்..

ஆறாவதிலிருந்து பன்னிரண்டாவது வரை தி நகரில் இப்போதிருக்கும் பனகல் பார்க் எதிரால் இருக்கும் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்த முன்னாள் மாணவன் நான். அப்படியொன்றும் மோசமான பள்ளி அல்ல அது. நியாயமாய் வகுப்புகள் நடத்துவார்கள்.

"அறியாமை களைய படிக்க வைக்கிறார்கள். சல்லிசான ஃபீஸில் கிடைக்கும் பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்கிற எண்ணப்பாடு கொண்ட எல்லாருக்கும் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிகளில் தேவைக்கும் அதிகமான வசதிகள் இருக்கின்றன தாம் என்பதை என்னால் ஆணித்தரமாக கூற முடியும்.

நம்மூரில் எந்த உருப்படியான தொழில்துறை வேலைக்கு விண்ணப்பிக்கவும் பத்தாவது பன்னிரண்டாவது பாஸாவது செய்திருக்கவேண்டும் என்கிற போது, கொஞ்சம் முக்கினால் தான் படிப்பு வரும் போன்ற மாணவர்களையும் படிப்பே வராத மாணவர்களையும் எப்படியேனும் பத்தாவது பன்னிரண்டாவது பாஸ் செய்ய வைக்க வேண்டிய முழு பொருப்பையும் ஆசிரியர்களிடமே விட்டுவிடுவது பலன் தரக்கூடியது அல்ல.

ஏனெனில் அரசு பள்ளிகள் என்பது "எல்லோருக்கும் கல்வி" என்கிற அடிப்படையிலிருந்து இயங்குபவை. நன்றாக படிக்கும் மாணவர்கள் இந்த பள்ளிகளில் படிக்க நேர்வது சமூக நிர்பந்தம். படிப்பே வராத மாணவர்கள் இந்த பள்ளிகளில் படிக்க நேர்வது அரசாங்கத்தின் சமூக பார்வை.

பாங்க் உத்தியோகக்காரன், அரசு உத்தியோகக்காரன், ரிக்ஷா தொழிலாளி, மூட்டை தூக்குபவன் என எல்லோரின் பிள்ளைகளும் படிக்க வருவார்கள். படிப்பே வராத, முக்கினால் தான் படிப்பு வரும் என்கிற அளவுகோல்களில் அடங்குபவர்கள் தரும் தலைவலிகளிலேயே நாற்பதுகளில் உள்ள ஆசிரியர்களின் தாவு முதலிரண்டு பீரியடுகளுக்குள்ளே முடிந்துவிடும். மதியம் உணவு உண்டால் பிற்பகுதியில் உடல் மயக்கத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க துவங்கிவிடும்.

என்னை பொருத்த வரையில், அரசு பள்ளிகள் தனியார்களுக்கு எதிராக மக்களுக்கேயென அரசு உருவாக்கி நடத்தும் கல்வியகங்கள். தனியாரிடம் பண பலம் இருக்கிறது. அது இல்லாத இடத்தில் வசதிகள் கூட குறைச்சலாக இருப்பினும் அடைப்படை வசதிகள் நிச்சயம் இருக்கும்.

லாபில் பிப்பட்டில் ஓட்டை, நூலகத்தில் புத்தகம் கிழிந்திருக்கிறது என்பதெல்லாம் சும்மா நம் தவறுகளை மறைக்க சொல்லிக்கொள்ளும் வெற்று வாசகங்கள் என்பதை ராம கிருஷ்ணா பள்ளியின் முன்னாள் மாணவன் என்கிற முறையில் என்னால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியும்.

ராம கிருஷ்ணா பள்ளியில் தான் பன்னிரண்டாவது வரை சுமார் 7 வருடங்கள் படித்தேன். நான் ஆங்கிலத்தில் எழுதும் ஃபிக்ஷன்கள் இங்கே ஆங்கில பதிப்பகங்களின் பத்திரிக்கைகளிலேயே வெளியாகின்றன. நான் இப்போது வசிப்பதும் அமேரிக்காவில் தான். அமேரிக்கர்களுடன் தான். அவர்களுடன் அவர்களது மொழியில் தகவல்கள் பரிமாறிக்கொள்வதில் எனக்கு எவ்வித சிக்கல்களும் இருந்ததில்லை. மேலும் ஆங்கிலமே மொழி தானே. அறிவு அல்லவே.

என்னாலேயே இது முடிகிறது என்றால், ராமகிருஷ்ணாமிஷன் பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொருவராலும் இது முடியும் என்றே எந்த கோயிலிலும் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யத்தயார். தேவைப்படுவதெல்லாம்  "அறியாமை களைய படிக்க வைக்கிறார்கள். சல்லிசான ஃபீஸில் கிடைக்கும் பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்கிற எண்ணப்பாடு நமக்குள் இருந்தால் போதுமானது.

கல்வி என்பது ஒரு வியாபாரமாக, தொழிலாக ஆகிவிட்ட பிறகு ராமகிருஷ்ணா மிஷன் போன்ற அரசு பள்ளிகள் தான் உண்மையான சமூக கடமையுடன், மக்களுக்காக இயங்கும் பள்ளிகள். ஆனால் நாம் மெட்ரிக், சிபிஎஸ்சி பள்ளிகளைத்தான் மரியாதையுடனும் மதிப்புடனும் பார்க்கிறோம்.

வித்தியாசம் பள்ளிகளில் அல்ல, அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடமும், அவர்களுக்கு தரப்பட்ட வாய்ப்பை அவர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதிலும் தான் இருக்கிறது. படிக்கிற பிள்ளை எங்கிருந்தாலும் படிக்கும்.

No comments: