Sunday, 14 August 2016

நா.முத்துகுமார்

நா.முத்துகுமார்

கதைகளை பேசும் விழியருகே..எதை நான் பேச என்னுயிரே .. காதல் சுடுதே..காய்ச்சல் வருதே.. இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல் வானம் வண்ணத்தில் குளிக்கிறதே. - அங்காடி தெரு..

அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது அன்புக்கதை பேசி பேசி விடியிது இரவு.. - வெய்யில்

இது அன்பால் வருகிற அவஸ்தைகளா இல்லை உஇதுவரை சேர்த்த இன்பம் துன்பங்களை உன்னுடன் பகிர்ந்திட துடிக்கிறேன் - கல்லூரி...
ன் மேல் வருகிறா ஆசைகளா..

உன் கண்கள் பார்க்கும் திசையோடு காரணமின்றி திரிகின்றேன்.. உந்தன் பார்வை என் தன் மீது விழ ஏனோ நானும் காத்திருப்பேன்.. - கல்லூரி

வெளியே சொல்லா ரகசியமா என் நெஞ்சில் உருத்துகிறாய் நீ.. சொல்லாமல் யார் மறைத்தாலும் என் கண்ணின் மணிகள் என்னை காட்டிவிடும் - கல்லூரி..

இரவும் விடியவில்லையே..அது விடிந்தால் பகலும் முடிவதில்லையே, பூந்தளிரே.. - மதராசபட்டினம்

நேற்று தேவையில்லை.. நாளை தேவையில்லை.. இன்று இந்த நொடி போதுமே - மதராஸபட்டினம்

நான் கேட்கும் அழகான சங்கீதங்கள் நீ எந்தன் பெயர் சொல்லும் பொழுதல்லவா - கற்றது தமிழ்

என் வரையில் இந்த வரிகளுக்காகவென்றே ஆயிரம் முறைகளேனும் நான் கேட்ட பாடல்களில் வெகு சில இவைகள்.

நா.முத்துகுமாரின் மரணம் உண்மையிலேயே இழப்பு தான்.

திறமைகள் மிகப்பல இருக்கும் நபர்களை அத்திறமைகளுள் ஏதோவொன்று தன் வசப்படுத்திக்கொள்ளும். அப்படி வசப்படுத்திக்கொள்கையில், அந்த திறமை தரும் வாய்ப்புகளினூடே நாம் பயணிக்க நேரும். ஆன்மாவின் விருப்பம் என்ற ஒன்று இருக்கிறது. நமக்கிருக்கும் திறமைகள் எல்லாவற்றுக்கும் நம் ஆன்மாவோடு உள்ள‌ தொடர்பில் சதவிகித வித்தியாசங்கள் இருக்கலாம்.

நாமும் கவிதைகள் எழுதிகிறோம். கவிதைகளின் கட்டமைப்பு, குறியீடுகள், உருவகங்கள் நமக்கும் வசப்படுகின்றன. அதற்கும் நம் ஆன்மாவுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. ஆனால், நம்மை வசப்படுத்திக்கொள்ளும் திறமை என்பது பொருண்மை உலகில் பிழைப்பதற்கென நாமாக வலிந்து நமக்குள்ளே தினித்துக்கொள்ளும் திறமை தான்.

எவ்வித காம்ப்ரமைஸும் இல்லாமல் நம் ஆன்மாவோடு தொடர்புடைய ஒரு திறமையை ஒட்டியே நமது பொருண்மை உலகின் பிழைத்திருக்கும் வழியையும் உருவாக்கிக்கொள்வது எல்லோருக்கும் சாத்தியப்படுவதில்லை. கவிதைகளில் அப்படி சாத்தியப்ப்பட்டவர்கள் வாலி, கண்ணதாசன் என்று நிறைய சொல்லலாம். சமகாலத்தில் அப்படி இருந்தவர் தான் நா.முத்துகுமார். ஆன்மாவுக்கு நெருக்கமான திறமையிலேயே தனது பொருண்மை உலகின் பிழைத்திருத்தலுக்கான பாதையையும் உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்த ஒரு சிலரில் இவரும் ஒருவர் என்று தான் நான் அவரை பார்க்கிறேன்.

பொருண்மை உலகின் முந்தீர்மானங்களில் விவரம் தெரியவரும் முன்பே எனது மூளையை கம்ப்யூட்டருக்கு ஒப்புக்கொடுத்துவிட்ட துர்பாக்கியசாலி நான் என்கிற எண்ணம் எனக்குள் எப்போதுமே உண்டு. அதை மிக தீவிரமாக நம்பவும் செய்கிறேன் நான். அதில் மறைக்க எதுவும் இல்லை. எனது ஆன்மா எந்த இழப்பை குறித்து தவிக்கிறது என்பதை உணர்வதிலிருந்து இந்த கம்ப்யூட்டர் தினமும் என்னை தந்திரமாக திசை திருப்பிக்கொண்டே இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.  அந்த இழப்பு குறித்து நான் வருத்தப்ப்படும் காலத்தை அது வெகுவாக தாமதப்படுத்துகிறது என்பது நிஜம்.

நா.முத்துகுமாரின் 41வயதில் மரணம் என்பதை ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. கண்ணதாசன் வாலி போல் இன்னும் முப்பது நாற்பது வருடங்கள் என் போன்ற துர்பாக்கிய ஜீவன்கள் ஆன்மாவோடு தொடர்பு கொள்ள இன்னும் இன்னும் பல வரிகளை அவர் எழுதியிருக்கலாம்.

ஆன்மாவோடு எப்போதும் தொடர்பிலிருந்த ஒருவரை மிகவும் பிடித்துப்போய் ஆன்மா தன்னுடனேயே அவரை அழைத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டதோ என்னமோ? நா.முத்துகுமாரின் மரணத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்...

No comments: