Friday, 12 August 2016

எழுத்தாளர் சுஜாதா


எழுத்தாளர் சுஜாதா


எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்த நாள் அல்லது மறைந்த நாளுக்கு சமீபமாக இந்த பதிவை வலையேற்றினால் உடனே ஆளாளுக்கு 'ஜனனம் மரணத்தில் தான் மனுஷப்பய நினைப்பு வருது பயபுள்ளைக்கு" என்று முகனூலில் ஸ்டேடர் போடக்கூடும். அதனால் காத்திருக்காமல் எழுதிவிடுகிறேன்.

எழுத்தாளர் சுஜாதா மேல் ஒரு தனி ..................... பாசமா, அன்பா, மரியாதையா, க்ரேஸா... என்னவென்று சொல்லத்தெரியவில்லை. அந்த மனுஷன் ஒரு ராட்சஸன்.. ராட்சஸந்தான்.. அப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது.

இலக்கியம் புரிகிறது. ஆனால் அதை வைத்து புரியாமலே எழுதி எழுதி " நீ நெருங்கவே முடியாத அளவுக்கு நானெல்லாம் பெரிய இலக்கியவாதியாக்கும்" என்று காலரை தூக்கிவிடவில்லை. தனக்கு புரிந்ததை எல்லோருக்கும் புரியவைத்தார்.. காலம் முழுவதும் அதற்கெனவே உழைத்தார்.அவருடைய பல ஆக்கங்களில் இலக்கிய மதிப்பு இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.. ஆனால் இலக்கிய மதிப்புள்ள ஆக்கங்களால் இதுவரை இந்த சமூகத்துக்கு என்ன நன்மை நடந்திருக்கிறது? அட அவ்வளவு ஏன்.. இலக்கிய எழுத்தையே உயிர்மூச்சாய் கட்டிக்கொண்டு அழுதவரெல்லாம் எங்கே என்னவானார்கள்? ஒரு கவிஞர் வருமை காரணமாக இறந்தார்.

குறைந்தபட்சம் ஒரு சுய ஒழுக்கத்தை கூட நிலை நாட்ட முடிந்ததில்லை. கவிஞர்கள் சந்தித்தால் கைகலப்பாகிவிடுகிறது. சாராய பாட்டில்கள் உடைந்து ஒழுகுகின்றன. அறிவு சார் தளம் என்பது உண்மையில் என்ன என்கிற கேள்வி எழுகிறது. அறிவு சார் தளத்தில் இருப்பவனை ஏன் வறுமை நெருங்குகிறது? வறுமை விரட்ட முடியாத ஒரு தளம் எப்படி அறிவு சார் தளமாகிறது? வறுமையை விரட்ட அறிவுக்கு தகுதியில்லை என்று அர்த்தம் கொள்ள வேண்டுமா? வறுமையையே விரட்ட முடியாத அறிவு இருந்தென்ன? அது எதற்காகும்?

சுஜாதா எனக்கு ஆதர்சம்.

பொறியியல் படித்தார். பொறுப்பாய் வேலை. வயிற்று பிழைப்புக்கு ஒரு வேலை. எஞ்சிய நேரத்தில் அறிவு தேடலுக்கு ஒரு தளம். அதையே சாதனையாக்கிக்கொள்ள துடிக்கும் முனைப்பு. 'எழுத்தால் நாசமானான்' என்கிற பெயர் எடுக்கவில்லை. எழுத்துக்கே ஒரு ஸ்டான்டர்டு சுஜாதாவால் வந்தது. உடனே தீவிர இலக்கிய காவலர்கள் எழுந்து 'ஸ்டான்டர்டு' என்றால் என்ன தெரியுமா? என்று முழங்குவார்கள்.

என்னை பொறுத்தவரை வாழவைக்காத ஸ்டான்டர்டு, ஸ்டான்டர்டு இல்லை. அவ்வளவுதான். டாட்.

சுஜாதாவின் அனைத்து ஆக்கங்களும் வாசித்திருக்கிறேன். ஒரு எழுத்தாளரின் எழுத்தை அதிகம் வாசிப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. நமது எழுத்தில் அவரது வாசம் வீசிவிடக்கூடும். அது நடக்கக்கூடாது. நடந்துவிட்டால், 'அவரை காப்பி அடிக்கிறான்' என்பார்கள். எனது ஆக்கங்களை என் வகையிலேயே தான் இதுகாறும் எழுதியிருக்கிறேன்.

நம்மூரில் ஒருவர் மருத்துவராக இருந்தால் பொறியாளராக இருக்க வாய்ப்பில்லை. பொறியாளராக இருந்தால் சார்டர்டு அக்கவுன்டன்ட் ஆக இருக்க வாய்ப்பில்லை. அதுதான் பத்தாவதிலேயே பிரித்துவிடுகிறார்களே. ஆனால், எந்த ஒரு விஷயம் குறித்தும் பார்பட்சமின்றி தெளிவாக அறுதியிட எல்லா துறைகள் சார்ந்த அடிப்படை புரிதல் தேவைப்படுகிறது. சுஜாதாவிடம் அது இருந்தது.

ஏன் எதற்கு எப்படியில் ஒரு முறை ஒரு வாசகர் ஜாதகம் குறித்து கேள்வி கேட்கிறார்.

ஜாதகம் சரியா தவறா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். மனித வாழ்வை பிரபஞ்ச இயக்கங்களோடு தொடர்புபடுத்துவது எனக்கு பிடிக்கிறது என்கிற அர்த்தத்தில் அதற்கு சுஜாதா பதில் அளித்திருந்தார்.

உண்மையில் அவர் ஒரு அபூர்வம் தான் எல்லா பொறியியல் பட்டதாரிகளுக்கும் உயிரியலில் ஆர்வம் இருக்காது. எத்தனை மருத்துவர்களுக்கு டையோடு என்றால் என்ன என்று தெரியும்? எத்தனை அக்கவுண்டன்ட்களுக்கு ஒரு செல்லில் இருக்கும் ஏலியன் பற்றி தெரியும்? இப்படி தெரிவது சாதாரண காரியம் அல்ல. ஒரு ஜிம் பாய், படிப்பாளியாக இருப்பதில்லை. ஒரு பொறியியல் பட்டதாரி கவிஞனாகவும் இருப்பது எல்லா இடங்களிலும் நடப்பதில்லை.

சுஜாதா ஒரு கலவை. அவருக்கு கணிதமும் வரும். கம்ப்யூட்டரும் வரும். பயாலஜி, இயற்பியல், வேதியியல் கூட வரும். சுஜாதா ஒரு உண்மையான அறிவுத்தேடல்வாதி. இந்த வாதிகளிடம் ஒரு பிரச்சனை இருக்கிறது. அது அடுத்தென்ன என்கிற தேடல். சுஜாதா அடுத்தடுத்து என்று போய்க்கொண்டே இருந்தார். நின்று நிதானித்து ஒரு துறையை எடுத்துக்கொண்டு ஆராய்வதில் பல துறை சார்ந்த தகவலகளின் இழப்பு அவரால் கொடுக்க முடியாத விலையாகத்தான் இருந்திருக்க‌வேண்டும்.

அவர் ஒரு துறையில் ஆராய்ச்சி என்று தேங்கியிருந்தால் நிச்சயம் ஏதோவொரு உண்மையை கண்டுபிடித்திருப்பார். ஆனால் இடைப்பட்ட காலத்தில் அந்த உண்மைக்கு செலவு செய்த காலத்தில் பலவற்றை அவர் இழந்திருக்ககூடும். அந்த உண்மை அந்த இழப்புகளுக்கு ஈடாக இல்லாமல் போக அதிகமான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்பதை அவரது அதீத புத்திசாலித்தனம் முன்கூட்டியே கண்டுகொண்டிருக்கவேண்டும்.  சாதுர்யமாக அந்த ஏரியாவுக்குள் போகாமல் தவிர்த்துவிட்டார் என்றே நான் திடமாக நம்புகிறேன்.

மற்றபடி அவரது சிந்தனா முறை என்பது இலக்கிய மதிப்பீடுகளுக்கு மிக மிக பக்கம் தான். அவருக்கு எதுவோ தெரிந்திருக்கிறது. அது அவரை தீவிர இலக்கியத்தின் பால் நெருங்க அணுமதிக்கவில்லை. அதை அவர் துல்லியமாக உணர்ந்தும் இருந்திருக்கவேண்டும். இதுதான் அவர் குறித்த என் புரிதல்.

அழுது வடியும் இலக்கியவாதியாக இருப்பதா? சிரித்து வாழும் வெற்றியாளனாக இருப்பதா? என்கிற கேள்வி வருகையில்  அவருக்கு தெரிந்திருந்த 'அந்த ஏதோ ஒன்று' அவரை வெற்றியாளனாகவே இருந்துவிட பணித்திருக்கிறது.

அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்காத என் போன்ற அவரின் தீவிர அபிமானிகளுக்காக அவர் எண்ணற்ற ஆக்கங்களை விட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய நாவல்களை வாசிக்கையில் அவரே அருகில் இருந்து சிரித்துக்கொண்டே கதை சொல்வது போலிருக்கும். சுஜாதா சுஜாதா தான். சுஜாதாவின் இடம் இனி எப்போதும் யாராலும் நிரப்பப்படபோவதே இல்லை.

No comments: