Thursday, 7 July 2016

எழுதிக்கொண்டிருக்கும் நாவல்

எழுதிக்கொண்டிருக்கும் நாவல்எழுதிக்கொண்டிருக்கும் நாவல் வளர்ந்து வரும் விதம் மிக மிக உவப்பாக இருக்கிறது. இது என் வகையான நாவல். என்னால் இப்படித்தான் சிந்திக்க முடிகிறது. இவ்விதமாகத்தான் எழுத முடிகிறது. இவ்விதமாகத்தான் எனக்கு எழுத வருகிறது. அதை ஒப்புக்கொள்வதில் வருத்தமேதும் இல்லை.

150 பக்கங்களில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது இப்போது 160 தாண்டி விட்டது. முறையாக ஒரு புத்தகமாக்கவென நாவலை format செய்யும் பட்சத்தில், இன்னும் அதிக பக்கங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கிறேன். எனது முதல் நாவலை விடவும் இது பெரியது தான். எனது முதல் நாவல் ஒரு play school என்றால் இது ஒரு பொறியியல் தொழில் நுட்ப கல்லூரி என்று வைத்துக்கொள்ளலாம்.

அலுவலகத்தில் வேலை செய்து கொண்டே இருப்பேன். திடீரென்று ஏதேனும் தோன்றும். வேலைக்கு நடுவில் நாவலை நோண்டிக்கொண்டிருக்க முடியாது. அலைபேசியில் குறித்து வைத்துக்கொள்வேன். மாலை 4 மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பும்போதே மனதுக்குள் ஓட ஆரம்பித்துவிடும். குறித்துவைத்துக்கொண்டதை வார்த்தைகளாக்குவது. அதை சேர்ப்பதற்கு பொருத்தமான இடத்தை நாவலில் தேட வேண்டும்.

Fiction எழுதுவதில் இந்த சிரமம் இருக்கிறது. விவாத பொருளுக்கேற்ப நாமாக உருவாக்கும் கதைக்களம் தானே. திடீரென்று ஒன்றை சேர்ப்பதானால், எந்த இடத்தில் சேர்ப்பது என்பதை கண்டுபிடிக்க நாவல் முழுவது மீண்டும் ஒரு முறை கண்களை மேய விட வேண்டும். மீண்டும் மீண்டும் மேய விடுவதால் நாவலுக்குள் இருக்கும் சிறுசிறு எழுத்துப்பிழைகள், ஒற்று பிழைகள் கவனத்தில் பதியாது. ஆனால் கவனம், குறித்துவைத்ததை வார்த்தகளாக்குவதிலேயே இருக்கும்.

எழுதுபவரைத்தவிர வேறொருவரிடம் நாவலை வாசிக்க தருவது ஒரு உத்தி. அவர் படிக்கையில் புதியதாக இருக்கும். நம் கவனத்தில் பதியாத தவறுகள் அவருடைய கவனத்தில் பதியலாம். இங்கே அமேரிக்காவில் தமிழ் வாசிக்க தெரிந்த தமிழர்களையே பார்ப்பது அபூர்வமாக இருக்கிறது. நான்கு வரிகளுக்கு மேல் இருந்தால் 'பாஸ்.... இவ்ளோ பெரிசா இருந்தா எப்படி பாஸ். ' என்பார்கள். அவர்களிடம் 160 பக்கங்கள் கொடுத்தால் என்னாகும்? அறையை காலி செய்துவிட்டு போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. போகும்போது நான்கு பேரிடம் வத்தி வைத்துவிட்டு போய் விடுவார்கள். அப்புறம் ஒரு பயல் அறையை பகிர வரமாட்டான். இதற்கெல்லாம் பயப்பட வேண்டி இருக்கிறது.

இப்போதுவரை நான் ஒருவனே அதை மீள மீள வாசித்து ரிவ்யூ செய்து கொண்டிருக்கிறேன். சமயங்களில் ஆயாசமாக இருக்கிறது. தவறுகளே இல்லாத மாதிரி இருந்து ஏமாற்றுகிறது. நிச்சயம் தவறுகள், எழுத்துப்பிழைகள், ஒற்று பிழைகள் இருக்கலாம். என் கண்ணுக்கு படமாட்டேன் என்கிறது. திரும்ப திரும்ப அதன் முகத்திலேயே விழிப்பதாலா தெரியவில்லை.

யாரிடமாவது தந்து படிக்க சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு முன்பு இதற்கு copyright/patent வாங்க வேண்டும். சென்னையில் நந்தனத்தில் உள்ள நிறுவனத்தை அணுகியிருக்கிறேன். கூகிலில் தேடித்தான் இந்த நிறுவனத்தை தேர்ந்தெடுத்தேன். ரூ.8500 ஆகுமாம். நான்கு பிரதிகள் தர வேண்டும் என்கிறார்கள். காப்புரிமை எடுக்க வேறு ஏதேனும் நிறுவனங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் இருந்தால் தெரிவிக்கவும். உதவியாக இருக்கும்.

Copyright க்கு Apply செய்த பின்னரே நண்பர்கள் யாரிடமேனும் நாவலை வாசிக்க தருவது என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன். இந்த அணுகுமுறை சரியா தெரியவில்லை. எனக்காய் தோன்றிய ஒன்று தான். வேறு ஏதேனும் உருப்படியான அணுகுமுறை இருந்தால் நண்பர்கள் பகிரலாம்.

நாவல் முழுமையாக தயாராகிவிட்டது என்று  சொல்ல முடியவில்லை. ஏ.ஆர் ரகுமான் சொல்வது போல கடைசி நிமிடம் வரை ஏதேனும் நாவலில் சேர்க்க தோன்றிக்கொண்டே இருக்கிறது. இப்படி தோன்றுவதையெல்லாம் சேர்த்துக்கொண்டே இருந்தால் என்றைக்குமே முழுமை என்ற ஒரு நிலைப்பாடு வராது. ஆதலால் ஒரு கட்டத்துக்கு மேல் தோன்றுவதை அடுத்த நாவலுக்கென்று சேர்த்துக்கொள்ள இருக்கிறேன். ஆதலால் எழுதிக்கொண்டிருக்கும் நாவல் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டதென கொள்ளலாம் தான்.

எப்படியாகினும் முதலில் காப்புரிமை அதாவது Copyright. மற்றதெல்லாம் அப்புறம் தான்

No comments: