Thursday, 21 July 2016

ரஜினியை நாம் ஏன் நேசிக்கிறோம்

ரஜினியை நாம் ஏன் நேசிக்கிறோம்


கபாலி நாளை ரிலீஸ்.. தமிழகமே அதிருது என்கிறார்கள். அமேரிக்காவில் என் ப்ராஜெக்டில் வேலை செய்பவன் நேற்று மெசெஞ்சரில் வந்து 'கபாலி முதல் நாள் முதல் ஷோ போறியா' என்றான். இல்லை என்றேன். அந்த பக்கமிருந்து பேச்சே இல்லை.

'1975 லேயே கமல் பெரிய ஆளு.. அவரு நினைச்சிருந்தா இந்த ரஜினிக்கு சான்ஸ் குடுக்காதீங்கன்னு சொல்லிருக்க முடியும்' என்று கமலின் ஐம்பதாண்டு கால விழாவில் ரஜினியே சொன்னார். ரஜினி என்கிற தனி மனிதனின் பின்னால் ஏன் இத்தனை கொண்டாட்டம்? இது என்ன விதமான விசை?

ரஜினி என்கிற விசையை புரிந்து கொள்ள நாம் அவர் வளர்ந்த கால கட்டத்தை கவனிக்க வேண்டும். ரஜினி என்றில்லை. அதற்கு முந்தைய தலைமுறையான எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தை எடுத்துக்கொண்டோமேயானால், புனித பிம்பத்தை கட்டமைத்து கட்டமைத்தே மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார் எம்.ஜி. ஆர். அப்போது தொழில் துறை அத்தனை வளராத காலம். தொழிற்புரட்சி வந்த காலம் 1980களில். அப்போது ரஜினி கமல் உருவாகியாகிவிட்டது.

மக்களின் மன நிலையில் பெரிய மாற்றங்கள் வர துவங்கிவிட்டிருந்தன. தனியார் மயம் ஆகத்துவங்கியிருந்தது. அதற்கு முன் வரை அரசு வேலை என்றால் வாழ்க்கை செட்டில். அதை அண்டியவன் வெற்றியாளன் என்கிற ரீதியில் இருந்தது சமூகம். வாழ்க்கை அத்தனை வேகமாக இல்லை. திருச்சியிலிருந்து கடிதம் போட்டால், சென்னை வர ஒரு வாரமாகிவிடும். கடிதத்துக்கு பதில் எழுதி அது திருச்சி வர 15 நாளாகிவிடும். அதிர்ச்சியோ, துக்கமோ மனதை உடனடியாக தாக்கிவிடாத ஆமை வேகத்தில் எல்லாம் நிகழ்ந்துகொண்டிருந்தன. ' நல்லது நடக்கும்' என்கிற புனித பிம்பத்திலேயே இருக்க எல்லோராலும் முடிந்தது. ஆகையால் புனித பிம்பத்தை கட்டமைத்த எம்.ஜி.ஆர் மக்கள் நாயகனாக பார்க்கப்பட்டார்.

1980 களுக்கு பிறகு அப்படி இல்லை. தனியார் உள்ளே வந்தது. சிந்தனை போக்குகள் மாறின. அவசரம் கூடியது. வேகம் கூடியது. செய்த காரியத்தின் பலன் உடனுக்குடன் கிடைத்தது. ' நல்லது நடக்கும்' என்று காத்திருக்க அவகாசமில்லை. முந்தினவன் வெற்றியாளன் என்றானது. முந்த தெரியாத சாமாண்யர்கள் எண்ணிக்கையில் பெருகினார்கள். புனித பிம்பங்கள் ஏமாற்றத்துக்கு இட்டு சென்றன. அதனால் புனித பிம்பங்களுக்கு அர்த்தமில்லாது போனது. புனித பிம்பங்கள் காலாவதியாகின. முதலாளி பலசாலி ஆனான். அவனால் சீண்டப்படும் தொழிலாளியின் மனதுக்குள் முதலாளியை பந்தாடும் வேட்கை வளரத்துவங்கியது. சாமாண்யனிடன் அசகாய சூரத்தனங்கள் இருப்பது வசீகரித்தது.

ரஜினி தனது ஒவ்வொரு படத்திலும் இடைவேளை வரை சாமான்யனின் கஷ்டங்களை தாங்குவார். இந்த இடைவேளை வரை, சாமான்யன் ரஜினியை தனது பிம்பமாகவே பார்த்தான். இடைவேளைக்கு பிறகு ரஜினி விஸ்வரூபம் எடுப்பார். 'பாட்ஷா' படத்தை சொல்லலாம். இடைவேளை வரை நாயடி வாங்கும் ஹீரோ வில்லனிடம் 'டேய், இது நாள் வரை நீ பாத்தது என்னை இல்லேடா.. உண்மையான என்னை உன்னால நெருங்க கூட முடியாது.. எனக்கு இன்னொரு பக்கம் இருக்கு' என்பார்.

இதை தனது ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமாக ரஜினி காட்டினார். தர்மதுரை, மாப்பிள்ளை, பணக்காரன், அண்ணாமலை என இந்த பட்டியல் நீளும்.

அதே நேரம் ரஜினியை விடவும் ஒரு படி மேலே இருந்த கமல் என்கிற கலைஞன் கலையில் அடுத்தடுத்த படிகள் தாண்டினார். கலையை புரிந்து கொள்ள அறிவு தேவைப்பட்டது. சாமான்யன் ஒரு கட்டத்துக்கு மேல் தொடர முடியாத ஆளாகிப்போனார் கமல். அது ரஜினிக்கு பெரிதும் உதவியது. எண்ணிக்கையில் மிக அதிகம் உள்ள ஒரு கட்டத்துக்கு மேல் பயணிக்க முடியாத ரசிகர்களின் பேராதரவு ரஜினிக்கு கிடைத்தது. இந்தி, வங்காளம் என்றெல்லாம் பறந்து பறந்து நடித்துக்கொண்டிருந்த போது, ரஜினி தமிழகத்தில் தனக்கென ஓரிடம் பிடித்து வேகமாய் வளர, தனது இடம் குறித்த பதட்டத்துடன் கமல் தமிழ் திரையுலகின் மீது தனது ஒட்டுமொத்த கவனத்தை திருப்பியது ஒரு மோசமான முடிவு. இல்லையெனில், கமல் அமிதாபுக்கு இணையாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ ஆகியிருக்கலாம்.

அகில இந்திய அளவில் போட்டி போட வட இந்தியர்களின் நிறமும், நடிப்பும், இன்ன பிற திறமைகளும் கமலுக்குத்தான் சாதகமாக இருந்திருக்கும். அப்படியே அவர் அங்கிருந்து ஹாலிவுட் சென்றிருக்கலாம்.

பத்து வருடங்களுக்கு பிறகு ரஜினி போல் ஒருவர் சினிமாவில் நுழைந்தால் ரஜினி அளவிற்கு வெல்ல முடியாது. ஏனெனில் அப்போது காலகட்டம் வேறாகியிருக்கும். ரசனை மாறியிருக்கும். ரஜினி இந்த காலகட்டத்தின் மன நிலைக்கு உவப்பாக இருக்கிறார். கால் நூற்றாண்டுக்கு பிறகும் எம்.ஜி.ஆரை இப்போதும் நாம் நினைவு கூர்வது போல் ரஜினியை கால் நூற்றாண்டுக்கு பிறகு நாம் நினைவு கூர்வோம் என்று எனக்கு தோன்றவில்லை. ரஜினி ஒரு ட்ரண்ட் மட்டுமே. ஆனால் அதே கால் நூற்றாண்டுக்கு பிறகும் கமலை நினைவு கூராமல் நம்மால் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். அந்த வகையில் கமல் தன்னை ட்ரன்டுக்கு எதிராகத்தான் சினிமாவில் பதிய வைத்துக்கொண்டிருக்கிறார். 

Wednesday, 13 July 2016

காப்புரிமை

காப்புரிமை


எழுதிக்கொண்டிருக்கும் புதிய நாவலுக்கு காப்புரிமைக்கு விண்ணப்பம் செய்தாகிவிட்டது. கொளுத்துகிற வெய்யிலில் அம்பத்தூரிலிருந்து பைக்கில் நந்தனம் சென்று அலையோ அலையென்று அலைந்து கண்டுபிடித்தே விட்டேன். ரூ7500 பிடுங்கிக்கொண்டார்கள். மூன்று பிரதிகள் கேட்டிருந்தார்கள். கொண்டு போயிருந்தேன். அதற்கே ரூ1500 ஆகிவிட்டது. ஆக மொத்தம் ரூ9000.  

இதற்கு முன் எழுதி வெளியான நாவல் தொகுதிக்கு இத்தனை மெனக்கெட்டு இப்படி காப்புரிமை வாங்கியிருக்கவில்லை. ஆதலால் இப்போது வாங்குவது முதல் அனுபவம் தான். வாய்ப்பு கிடைக்கும்போது இப்படியெல்லாம் செய்து பார்த்துக்கொள்வது தினப்படிக்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது.

இருப்பினும் நாவலை எந்த பதிப்பாளராவது விருப்பமுடன் வாங்கவில்லையென்றால் பரணில் போட்டுவிட்டு அடுத்த நாவலை எழுத துவங்கிவிட வேண்டும் என்றிருக்கிறேன். புத்தகமாக வெளிவருவதா முக்கியம்? எழுதுவது அல்லவா முக்கியம்? அதில் செலவிடும் நேரம் அல்லவா முக்கியம்? அதனுள் போகும் தர்க்க விவாதங்கள், கேள்விகள், அதற்கான விடைகள் என்று விரியும் தேடல் அல்லவா முக்கியம்? தேவியின் கண்மணியிலோ , ராணி முத்துவிலோ நீட்டினால் 'ஏம்ப்பா, எங்க பத்திரிக்கை சர்க்குலேஷன் பத்தி ஏதாவது தெரியுமா உனக்கு? முதல்ல சர்குலேஷன் டீடெய்ல்ஸ் தெரிஞ்சிக்கிட்டு அப்ரோச் பண்ணுப்பா..' என்று நிச்சயமாக சொல்வார்கள். அங்கே போய்விடக்கூடாது என்கிற தெளிவு மட்டும் இருக்கிறது.

எனது முதல் நாவலை அங்கே தான் கொடுத்தேன். உண்மையில் நாவல்கள், புத்தகங்கள், பதிப்பகங்கள், அவற்றின் இயங்குமுறை, கட்டமைப்பு குறித்த எவ்வித புரிதலும் இல்லாமல், நாவல் புனைய மட்டும் முடிந்துவிட்ட தருணத்தில் மிக மிக அமெச்சூர் தனமான முயற்சி என்று தான் சொல்ல வேண்டும். அவர்களின் சர்குலேஷன் தெரியாமல் அப்ரோச் செய்திருந்தேன். இந்த முறை அதை செய்வதற்கில்லை. அவர்களுக்கு சில பல லட்சங்களை தாண்டக்கூடிய மிகப்பெரிய சர்குலேஷன் இருக்கிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய உண்மை.

நாவலின் ஃபான்ட் எல்லாம் குறைத்து ஒரு மாதிரி அட்ஜஸ்ட் செய்து 130 பக்கங்கள் வரும் அளவிற்கு கொத்தியிருக்கிறேன். பக்கங்கள் குறைந்தால் புத்தகமாக கொண்டு வரும் பட்சத்தில் விலை குறையும். வாங்குவார்கள். நூறு ரூபாய்க்குள் இருந்தால் , பதிப்பகத்தின் பெயருக்காகவாவது 'போய் தொலைகிறது' என்று வாங்குவார்கள். அந்த ஒரு வாய்ப்பைத்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதெல்லாம் அந்த நாவலை ஏதாவது ஒரு பதிப்பகம் புத்தகமாக்க முன்வரும் பட்சத்தில் தான். இல்லையென்றால் இந்த கவலையெல்லாம் பட வேண்டியதில்லை. எனது கொள்ளுப்பேரன் என்றாவது பரண் மீதிருந்து கிளம்பும் தூசியில் தும்மிக்கொண்டும், இருமிக்கொண்டும் அதை எடுத்து பிரித்து பார்த்துவிட்டு, 'Mom, What language is this anyway?' என்று கேட்பதில் அதன் ஆயுசு முடிந்துவிடலாம்.

எப்படியாகினும், முன்பே சொன்னது போல, புத்தகம், பதிப்பகம் என்பதெல்லாம் கூட அடுத்தபடி தான். எழுதுவது தான் முக்கியம். அதனூடாக தர்க்க விவாதங்கள், விளக்கங்கள், பார்வைகள், கோண்ங்கள் இவைகள் தான் முக்கியம்.

Thursday, 7 July 2016

எழுதிக்கொண்டிருக்கும் நாவல்

எழுதிக்கொண்டிருக்கும் நாவல்எழுதிக்கொண்டிருக்கும் நாவல் வளர்ந்து வரும் விதம் மிக மிக உவப்பாக இருக்கிறது. இது என் வகையான நாவல். என்னால் இப்படித்தான் சிந்திக்க முடிகிறது. இவ்விதமாகத்தான் எழுத முடிகிறது. இவ்விதமாகத்தான் எனக்கு எழுத வருகிறது. அதை ஒப்புக்கொள்வதில் வருத்தமேதும் இல்லை.

150 பக்கங்களில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது இப்போது 160 தாண்டி விட்டது. முறையாக ஒரு புத்தகமாக்கவென நாவலை format செய்யும் பட்சத்தில், இன்னும் அதிக பக்கங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கிறேன். எனது முதல் நாவலை விடவும் இது பெரியது தான். எனது முதல் நாவல் ஒரு play school என்றால் இது ஒரு பொறியியல் தொழில் நுட்ப கல்லூரி என்று வைத்துக்கொள்ளலாம்.

அலுவலகத்தில் வேலை செய்து கொண்டே இருப்பேன். திடீரென்று ஏதேனும் தோன்றும். வேலைக்கு நடுவில் நாவலை நோண்டிக்கொண்டிருக்க முடியாது. அலைபேசியில் குறித்து வைத்துக்கொள்வேன். மாலை 4 மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பும்போதே மனதுக்குள் ஓட ஆரம்பித்துவிடும். குறித்துவைத்துக்கொண்டதை வார்த்தைகளாக்குவது. அதை சேர்ப்பதற்கு பொருத்தமான இடத்தை நாவலில் தேட வேண்டும்.

Fiction எழுதுவதில் இந்த சிரமம் இருக்கிறது. விவாத பொருளுக்கேற்ப நாமாக உருவாக்கும் கதைக்களம் தானே. திடீரென்று ஒன்றை சேர்ப்பதானால், எந்த இடத்தில் சேர்ப்பது என்பதை கண்டுபிடிக்க நாவல் முழுவது மீண்டும் ஒரு முறை கண்களை மேய விட வேண்டும். மீண்டும் மீண்டும் மேய விடுவதால் நாவலுக்குள் இருக்கும் சிறுசிறு எழுத்துப்பிழைகள், ஒற்று பிழைகள் கவனத்தில் பதியாது. ஆனால் கவனம், குறித்துவைத்ததை வார்த்தகளாக்குவதிலேயே இருக்கும்.

எழுதுபவரைத்தவிர வேறொருவரிடம் நாவலை வாசிக்க தருவது ஒரு உத்தி. அவர் படிக்கையில் புதியதாக இருக்கும். நம் கவனத்தில் பதியாத தவறுகள் அவருடைய கவனத்தில் பதியலாம். இங்கே அமேரிக்காவில் தமிழ் வாசிக்க தெரிந்த தமிழர்களையே பார்ப்பது அபூர்வமாக இருக்கிறது. நான்கு வரிகளுக்கு மேல் இருந்தால் 'பாஸ்.... இவ்ளோ பெரிசா இருந்தா எப்படி பாஸ். ' என்பார்கள். அவர்களிடம் 160 பக்கங்கள் கொடுத்தால் என்னாகும்? அறையை காலி செய்துவிட்டு போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. போகும்போது நான்கு பேரிடம் வத்தி வைத்துவிட்டு போய் விடுவார்கள். அப்புறம் ஒரு பயல் அறையை பகிர வரமாட்டான். இதற்கெல்லாம் பயப்பட வேண்டி இருக்கிறது.

இப்போதுவரை நான் ஒருவனே அதை மீள மீள வாசித்து ரிவ்யூ செய்து கொண்டிருக்கிறேன். சமயங்களில் ஆயாசமாக இருக்கிறது. தவறுகளே இல்லாத மாதிரி இருந்து ஏமாற்றுகிறது. நிச்சயம் தவறுகள், எழுத்துப்பிழைகள், ஒற்று பிழைகள் இருக்கலாம். என் கண்ணுக்கு படமாட்டேன் என்கிறது. திரும்ப திரும்ப அதன் முகத்திலேயே விழிப்பதாலா தெரியவில்லை.

யாரிடமாவது தந்து படிக்க சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு முன்பு இதற்கு copyright/patent வாங்க வேண்டும். சென்னையில் நந்தனத்தில் உள்ள நிறுவனத்தை அணுகியிருக்கிறேன். கூகிலில் தேடித்தான் இந்த நிறுவனத்தை தேர்ந்தெடுத்தேன். ரூ.8500 ஆகுமாம். நான்கு பிரதிகள் தர வேண்டும் என்கிறார்கள். காப்புரிமை எடுக்க வேறு ஏதேனும் நிறுவனங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் இருந்தால் தெரிவிக்கவும். உதவியாக இருக்கும்.

Copyright க்கு Apply செய்த பின்னரே நண்பர்கள் யாரிடமேனும் நாவலை வாசிக்க தருவது என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன். இந்த அணுகுமுறை சரியா தெரியவில்லை. எனக்காய் தோன்றிய ஒன்று தான். வேறு ஏதேனும் உருப்படியான அணுகுமுறை இருந்தால் நண்பர்கள் பகிரலாம்.

நாவல் முழுமையாக தயாராகிவிட்டது என்று  சொல்ல முடியவில்லை. ஏ.ஆர் ரகுமான் சொல்வது போல கடைசி நிமிடம் வரை ஏதேனும் நாவலில் சேர்க்க தோன்றிக்கொண்டே இருக்கிறது. இப்படி தோன்றுவதையெல்லாம் சேர்த்துக்கொண்டே இருந்தால் என்றைக்குமே முழுமை என்ற ஒரு நிலைப்பாடு வராது. ஆதலால் ஒரு கட்டத்துக்கு மேல் தோன்றுவதை அடுத்த நாவலுக்கென்று சேர்த்துக்கொள்ள இருக்கிறேன். ஆதலால் எழுதிக்கொண்டிருக்கும் நாவல் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டதென கொள்ளலாம் தான்.

எப்படியாகினும் முதலில் காப்புரிமை அதாவது Copyright. மற்றதெல்லாம் அப்புறம் தான்

Sunday, 3 July 2016

Fiction எழுதுவது எத்தனை கடினம்?

Fiction எழுதுவது எத்தனை கடினம்?

இந்த நாள், மூன்று வருடங்கள் முன்பு மேற்கண்ட இந்த செய்தி பத்திரிக்கையில் வந்தது.விஷயம் இதுதான். 2010ல் ஒரு கதை எழுதினேன். மலேசியா சிங்கப்பூரில் வெளியாகும் 'வல்லினம்' இதழில் இந்த கதையை வெளியிட்டிருந்தார்கள்.


எழுதிய போது Fiction என்று தான் இருந்தது. ஆனால், இந்த தினத்துக்கு பிறகு அது Fiction இல்லை என்றாகிவிட்டது.

வாசித்துப்பாருங்கள். கதை நிஜமான கதை இது.