Tuesday, 14 June 2016

Martian

Martian


இன்று மீண்டும் மார்ஷியன் படம் பார்த்தேன். இப்படியாக இந்த படம் பார்ப்பது எத்தனையாவது முறை என்று மறந்துவிட்டது.  கணக்கு வைத்துக்கொள்ளவில்லை.

பொதுவாக அறிவியல் புனைவுக்கதைகள் என்றால் எனக்கு இஷ்டம். மார்ஸ் கிட்டத்தட்ட பூமியைப்போலத்தான். சூரியனை சுற்றி வர கிட்டத்தட்ட 600+ நாட்கள் எடுத்துக்கொள்கிறது. இது ஏனெனில் பூமியை விட இது தள்ளி இருப்பதால் தான். இருப்பினும் கோல்டிலாக் ஸோனுக்கு அருகாமையில் இருப்பதால் இதில் மனிதர்கள் குடியேற தகுதியான புவியியல் இருக்கலாம் என்கிற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது.

மார்ஸ் கிரகம் அதன் சுற்றுவட்டப்பாதையில் ஓரிடத்தில் பூமிக்கு அருகாமையிலும் ஓரிடத்தில் வெகு தொலைவிலும் வந்து போகும். எப்போது பூமிக்கு மிக அருகாமையில் வருகிறதோ அப்போது மார்ஸுக்கு அனுப்பவேண்டிய ராக்கேட்டுகளை அனுப்பினால் தூரம் குறைவாக இருப்பதால் மிக அதிக எரிபொருள் செலவின்றி போய் விடலாம் என்று மார்ஸ் ஆராய்ச்சிக்கென அனுப்பப்படும் ஆளில்லா ரோவர்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அது ஒரு புத்திசாலித்தனமும் கூட.


பூமியில் மார்ஸ் கிரகத்தின் கற்கள் விழுந்திருக்கின்றன. அதிலிருந்து தான்  முதன் முதலாக ஒரு செல் உயிரினம் பூமியை வந்தடைந்திருக்கும் என்று ஒரு தியரி இருக்கிறது. வசீகரமான தியரி தான்.

மார்ஸில் உங்கள் எடை மூன்றில் ஒரு பங்குதான். மார்ஸில் ஈர்ப்பு விசை குறைவு. காற்று மண்டலமும் அத்தனை தின்மையாக இல்லை. மார்ஸ் குறித்த இந்த படம் அதிகம் ஈர்க்கிறது. ஸ்டார் வார்ஸ் போல் அதீத ஃபாண்டஸி இதில் இல்லை. எல்லாமே மனித உழைப்பில் நிஜமாவதற்கு மிக மிக அருகாமையில் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.ஒரு வேற்று கிரகம் என்பதே நிறைய எதிர்பார்ப்புகளை திணிக்கிறது. இது இயல்புதான். இந்த இயல்புக்கு ஒரு காலத்தில் மிக அதிக விலை இருந்தது.

பூமியிலிருந்து மார்ஸை பார்த்தால் அது மைக்கேல் ஜாக்சன் போல் மூன் வாக் செய்வதை பார்க்கலாம். துவக்கத்தில் பல ஆராய்ச்சியாளர்களை குழப்பியது மார்ஸின் இந்த மூன் வாக் தான். சில கிரேக்க வானியலாளர்கள் இதை வைத்துத்தான் பூமியை மையமாக வைத்து இன்ன பிற கோள்கள் சுற்றுகின்றன என்று தவறாக கணக்கிட்டார்கள்.
வெகு ஜனம் அதைத்தான் நம்பிக்கொண்டிருந்தது வெகு காலத்திற்கு. கிரகணங்களின் போது உயிர் பலி எல்லாம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அது மூன் வாக் தான் என்பதை வெகு ஜனத்திற்கு எப்போதுமே பிடிக்காத அதீத புத்திசாலிகள் தான் கண்டுபிடித்தார்கள். அந்த அதிபுத்திசாலிகள் தான் பல உயிர்கள் கிரகணங்களின் போது வெகு ஜனத்திடமிருந்து கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட காரணமானார்கள்.

ஆனாலும் அதிபுத்திசாலிகளை வெகு ஜனம் என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை. இப்போதும் அப்படித்தான். இந்த உண்மைகளை வெளிப்படுத்தும் முயற்சியில் மரணத்தை தழுவியர்கள் ஏராளம். சாக்ரடீஸ், இத்தாலியின் புருனோ என்று சரித்திரத்தை புரட்டினால் ஏகப்பட்ட பெயர்கள் சிக்கலாம். இந்த ப்டத்தை பார்க்கையில் இவர்களை பற்றிய அனுதாபம் எழுகிறது.

வெகு ஜனத்திற்கு உண்மைகள் தேவையில்லை. அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பாத அந்த உண்மையில் தான் அவர்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. இயற்கையின் வினோதம் என்னவெனில், தங்களின் வாழ்வாதார உண்மைகளை தெரிந்துகொள்வதிலிருந்து விலகி நிற்கச்செய்யும் தன்மை தான் இவர்களை இவர்களாக மாற்றுகிறது.

சரி அதை விடுங்கள்.. ஒரு உபரித்தகவல் சொல்கிறேன்.. இந்த படத்தில் வரும் மார்ஸ் கிரகத்தின் காட்சிகள் உண்மையில் மார்ஸ் அல்ல. ஜோர்டான் நாட்டுக்கு சென்றீர்களானால், இந்த குன்றுகளையும், மணல் பரப்புகளையும் கண்முன்னே பார்க்கலாம்.

No comments: