Monday, 13 June 2016

நாவல்

நாவல்


கிட்டத்தட்ட ஆறு மாதங்கள்.

ஒரு நாளுக்கு 24 மணி நேரம். 8 மணி நேரம் தூக்கம். 9 மணி நேரம் அலுவலக வேலை. எஞ்சிய 7 மணி நேரத்தில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி. உணவு, இயற்கை அழைப்புகள், தேனீர், சமையல் என்று ஒரு மூன்று மணி நேரம் போய்விடும். மீதமுள்ள மூன்று மணி நேரத்தில் அவ்வப்போது பார்த்த படங்களுக்கான விமர்சனம், கவிதைகள், கட்டுரைகள், ஒரு பக்க கதைகள் என்று தின்றது போக கடந்த ஆறு மாதத்தில் கணிசமான நேரத்தை கபளீகரம் செய்து உருவாகியிருக்கிறது ஒரு நாவல்.

இப்போதைக்கு 150 பக்கங்கள் வந்திருக்கிறது. 2015ல் எழுதிய இரண்டு குறு நாவல்கள் அவ்வளவு திருப்தியளிக்காததால், டெக்னிக்கலாக பார்க்கின் இது எனது மூன்றாவது நாவல். இன்னும் சரியாக சொல்லவேண்டுமானால் எனது மூன்றாவது குழந்தை. பதிப்பாளர் கிடைக்கும் பட்சத்தில் இரண்டாவது புத்தகம். அதையெல்லாம் விடுங்கள். அதெல்லாம் மற்றவர்களுக்கு புத்தகத்தின் கருத்துக்களை விவாதப்பொருளாக கொண்டு சேர்க்கும் முறை.

தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் திருப்தியளிக்கிறது இந்த‌ நாவல். கருத்து குப்பைகளை உருவாக்க விருப்பமில்லை. ஏற்கனவே சொன்னதையோ, மற்றவர்கள் சொன்னதையோ மீண்டும் வேறொரு வார்த்தையில் சொல்ல முயற்சிக்கவில்லை.  நாவல் உருவாகியிருக்கும் விதத்தில் மனம் நிறைவாக இருக்கிறது. என் வகையான நாவல். எனக்கு இப்படியான நாவல்கள் எழுதவே விருப்பம். அந்த விருப்பத்தை ஒட்டியே உருவாகியிருக்கிறது இந்த நாவல்.

ராணி முத்து, தேவியின் கண்மணியில் தந்தால் "முந்நூறு பேர் மட்டும் வாசிச்சா எங்க பத்திரிக்கையை இழுத்து மூடுறதைத்தவிர வேற வழி இல்லைப்பா" என்று பதில் நிச்சயமாக வரும்.  எந்த பதிப்பகத்தை அணுகலாம் என்று உள்ளுக்குள் யோசனையாக இருக்கிறது. யாரேனும் கிடைப்பார்கள்.

முதல் புத்தகம் வெளியிட்ட போது அத்தனை விவரம் தெரிந்திருக்கவில்லை. விவரம் தெரிந்து கொள்வதற்காகவே முதல் புத்தகம் வெளியிட்டேன் என்று கூட சொல்லலாம். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. இருந்தாலும் புத்தக வெளியீடு, புத்தக கண்காட்சிகள் எல்லாம் எப்படி இயங்குகிறது என்பதை தெரிந்துகொள்ள முதல் புத்தக வெளியீடுதான் உதவியது. இப்போது ஓரளவிற்கு ஐடியா இருக்கிறது.

எனக்கு நட்பு வட்டம் அதிகம் இல்லை. ஏதோ நான்கைந்து பேரை தெரியும். எனக்குத்தான் அவர்களை தெரியும். அவ்வளவுதான். அமேரிக்கா வந்து இரண்டு வருடம் ஆகப்போகிறது. அந்த நான்கைந்து பேரும்  இந்நேரம் என்னை மறந்திருப்பார்கள். ஆனால் அதையெல்லாம் பார்த்தால் எதையும் செய்ய முடியாது என்பதுவும் தெரியும்.

நல்லவேளையாக புத்தகம் வெளியிட்டுத்தான் வயிற்றை கழுவவேண்டும் என்று இல்லை. ஆண்டவன் புண்ணியத்தில் வயிறு வளர்க்க கைவசம் வேறு வேலை இருக்கிறது. ஆதலால் முடிந்தவரை நாவலின் விவாதப்பொருளுக்கென டிமான்ட் இருந்தால் மட்டுமே புத்தகமாக்குவது என்று இருக்கிறேன். டிமான்ட் எதுவும் இல்லையென்றால், ஏற்கனவே மூட்டை கட்டிய இரண்டு குறு நாவலோடு இதுவும் சேர்ந்துகொள்ளும். அவ்வளவுதான்.

ஆனால் நாவல் திருப்தியாக வந்திருக்கிறது. நிச்சயம் டிமாண்ட் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

என் வீட்டில் நான் மட்டும் தான் இப்படி காகிதத்தின் பின்னால் அலைகிறேன். முதல் மூன்று ராங்கிற்குள் வந்துவிடுவேன் என்பதால் என்னை எட்டாவது படிக்கும்போதே தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்கள். பள்ளிக்கூடம், பொறியியல் படிப்பு பின்பு ஐடி கம்பெனியில் வேலை பிறகு அதிகம் தாகமெடுத்து, இலக்கியம், கவிதை கட்டுரை என்று நாவல் வரை வந்தாகிவிட்டது. பின்னால் திரும்பி பார்த்தால் 'இதெல்லாம் உன்கிட்ட யார் கேட்டது?' என்று உரத்து சத்தம் கேட்கிறது.

நாம் எல்லோரும் பிறந்து வளர்கையில் பெற்றோர் சொல்வதை கேட்டு, பிறகு வாத்தியார் சொல்வதை கேட்டு என்று தான் வளர்கிறோம். இதெல்லாம் சொந்தக்காலில் நிற்கும் வரை தான். சொந்தக்காலில் நின்றுவிட்ட பிறகு அதுவரை நமக்குள் உறங்கும் சுயம் வெளிவந்துவிடும். ஒரு கட்டத்துக்கு மேல் நமது சுயம் தான் நம்மை வழி நடத்துகிறது. நாம் செல்ல வேண்டிய பாதையை தீர்மானிக்கிறது. அதில் தான் ஒருவனுடைய‌ ஒரிஜினாலிட்டி வெளியே வரும். அதை மாற்ற யாராலும் முடியாது.

ரஜினிகாந்த் நடிக்க வந்தது, ஏ.ஆர்.ரகுமான் மேற்கத்தைய இசைக்கு போனது, அம்பேத்கர் சட்டம் படித்து எழுதியது, பவர் ஸ்டார் மொக்கை வாங்குவது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சுயம். நமது சுயம் எத்திசையில் நம்மை செலுத்துகிறதோ அத்திசையில் தான் நாம் போயாகவேண்டும்.

'இதெல்லாம் உன்கிட்ட யாரு கேட்டா?' இந்த கேள்விக்கு

'எனக்கு இதான் வருது.. நான் என்ன செய்ய?' இதுதான் பதில். வேறொன்றும் சொல்வதற்கில்லை.


No comments: