Tuesday, 8 March 2016

Toyota Corolla

Toyota Corolla


இரண்டு நாட்களாக Atlanta வில் உள்ள Toyota showroom களுக்கு அலைந்து கொண்டிருக்கிறேன். இங்கே பக்கத்தில் Roswell road ல் ஒரு ஷோரூம் இருக்கிறது. அழைத்தேன். வீட்டிற்க்கே வந்து பிக்கப் செய்துகொண்டார்கள்..

முதலில் ஆப்பிரிக்க கறுப்பியோ, பிரேசில் கட்டழகியோ வருவாள் என்று தான் நினைத்தேன்.. ம்ஹும்.. துருவ் பட்டேல் என்று ஒரு மும்பைக்காரன் தான் வந்தான். ஆறு மாதங்கள் முன்பு தான் விற்பனை பிரதிநிதியாக சேர்ந்திருக்கிறான். இங்கே பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாக படித்துக்கொண்டே வேலை செய்கிறான்.

இந்திய முகத்தை பார்த்ததும்  எவன் எவனையோ நம்புவதற்கு இந்தியனை நம்பலாம் என்று தோன்றியது.

அழைத்துப்போய் காரை காட்டினான். ஒரு Test Drive போனேன். இங்கே கார்கள் எல்லாம் ஆட்டோமெடிக் தான். கியரெல்லாம் கிடையாது. பிரேக், ஆக்ஸிலரேட்டர். அவ்வளவுதான். ஏற்கனவே சென்னையில் கடந்த பத்து வருடங்களாக கார் ஓட்டி பழகியிருக்கிறேன். ஆதலால் பிரச்சனை இல்லை. என்ன ஒன்று? காரை வலது பக்கம் ஓட்ட வேண்டும். கியரை வலது கையால் மாற்ற வேண்டும். இடது பக்கம் ஸ்டியரிங் இருக்கும்.

இங்கே அமேரிக்காவில் கார் இல்லாமல் எதுவும் முடியாது. கிட்டத்தட்ட ஸ்தம்பித்த கதைதான். எல்லாவற்றுக்கும் ஊபரை நம்பிக் கொண்டிருக்க‌ முடியாது. Camry வாங்க போனவன் நான். Corolla ல் தேங்கிவிட்டேன். அதிலேயே எல்லா வசதிகளும் தேவைக்கு மேலேயே இருந்தது. விலையும் கைக்கு அடக்கம். Camry ல் கொஞ்சமே கொஞ்சம் இடம் அதிகம். இடமென்றால், கால் இன்னும் கொஞ்சம் நீட்டிக்கொள்ளலாம். அவ்வளவுதான். என்ஜின், குதிரை திறம் என்று சிற்சில வேறுபாடுகள் இருந்தாலும் நான் ஒன்றும் ரேஸில் பங்கேற்க பயனபடுத்தப்போவதில்லை என்பதில் அதெல்லாம் அடிபட்டுவிடும்.

எல்லாம் பேசிவிட்டு விலை எத்தனை என்றேன். என் பாங்க் தகவல்கள், சோஷியல் செக்யூரிட்டி எண், லைசன்ஸு எல்லாம் வாங்கிக்கொண்டு உள்ளே போனான். இங்கே எல்லாவற்றுக்கும் Credit History என்று ஒன்று இருக்கிறது. அது இருந்தால் நல்ல குறைவான வட்டியில் லோன் கிடைக்கும். எந்த விலை உயர்ந்த பொருள் வாங்க வேண்டுமென்றாலும் Credit History இருக்கவேண்டும். இது இந்த கிரிக்கெட்டில் Duckworth Lewis method என்று சொல்வார்களே.. அது போல.. எப்படி கணக்கிடுகிறார்கள் என்பது எவனுக்கும் முழுசாக தெரியாது..

உள்ளே போனவன் ஒரு பத்து நிமிடத்தில் வந்தான்.

விலை 17,790 டாலர் என்றான். நிச்சயம் இது அதிகம் என்று தோன்றியது. ஏனெனில் போவதற்கு முன்பே நண்பர்களை அணுகி சமீபமாக இந்த காரை வாங்கிய விலையை தெரிந்து வைத்திருந்தேன். நான் வேறு டீலர்களுக்கு போய்விடுவேனோ என்று பயப்பட்டிருப்பான் போல.

"Credit History குறைவாக இருப்பதால் எங்களால் இந்த விலையை குறைக்க முடியாது..உங்களுக்கு ஒரு ஐடியா தருகிறேன்.. நீங்கள் அடிக்கடி Credit History பார்க்காதீர்கள். ஒவ்வொரு முறை பார்க்கையிலும் Credit History குறையும்" என்றான். தழை திங்கும் ஆடு போல் மண்டையை மண்டையை ஆட்டிவிட்டு எழுந்து வந்துவிட்டேன்.

வீட்டுக்கு வந்ததும் வேறொரு  டீலரிடம் கேட்டேன். அதே தான். லைசன்ஸு, சோஷியல் செக்யூரிட்டு எண் எல்லாம் இவர்கள் பங்குக்கு ஒரு முறை வாங்கினார்கள். விலை 17, 290 என்று பதில் வந்தது. 500 டாலர்கள்!!

இதை அந்த துருவ் படெலிடம் சொன்னேன். அவ்வளவுதான்.

முதலில், ' நீங்கள் என்னிடம் வாங்குவதாக உறுதி அளித்தீர்களே' என்றான்.

"எல்லா டீலரக்ளை விடவும் குறைவாக தருவதாக நீ கூடத்தான் உறுதி அளித்தாய்" என்றேன் பதிலுக்கு. என்னென்னவோ பேசிப்பார்த்தான். நான் மசியவே இல்லை. பிறகு தடாலடியாக காலில் விழுந்துவிட்டான். காலில் என்றால் காலில் அல்ல. கிட்டத்தட்ட... "நாம் ஒரே நாட்டை சேர்ந்தவர்கள். அண்ணன் தம்பி போல. தயவுசெய்து உதவி செய்.." என்கிற ரீதியில் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை என குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருக்கிறான்.

மும்பைக்காரர்கள் பிஸினஸ் என்று வந்துவிட்டால், காலில் கூட விழுவார்கள் என்பது சரியாகத்தான் இருக்கிறது. நானா மசிகிற ஆள்!!. அவன் சொன்னது போல், Credit History செக் செய்தால் எல்லாம் உடனே குறையாது. நான் வேறு டீலர்களிடம் சென்று விடக்கூடாதென்று பொய் சொல்லியிருக்கிறான்.

ஆனால், நம்மூர்க்காரர்கள் வெளி நாட்டுக்கு வந்தும் இங்கே சக இந்தியன் மீது எமோஷனல் அட்டாக் செய்ய முயல்வதும், ஏமாற்றுவதும் அசூயையாக‌ இருக்கிறது. பாதி ஆங்கிலம், பாதி இந்தியில் எமோஷனல் ஹத்யாச்சார் என்பார்கள்.. நம்மூர்க்காரர்களை நம்புவதை விட, பேசாமல் அமேரிக்கனையே நம்பிவிடலாம் போல. விதிகளுக்கு பயப்படுவார்கள். அவன் விலை குறைத்தால் ஒழிய நான் வாங்குவதாக இல்லை.

"இந்தி கற்றுக்கொள்ளாதவர்கள் வெள்ளத்தில் மூழ்கினால் தான் என்ன?" என்று கேட்ட மும்பைக்கார ஜாதி தானே இவனும். உள்ளுக்குள் என்ன நினைத்துக்கொண்டிருப்பான் என்று தெரியாதா?! அதிலும் படேல் சமூகத்தவன். இங்கே அமேரிக்காவில் வியாபாரம் செய்யும் இந்தியர்களில் பட்டேல் சமூகத்தினர் கிட்டத்தட்ட அறுபது சதம். மீதி குஜராத்திகள். நானா சிக்குவேன்?.. "இந்த தில்லாலங்கடி வேலை எங்களுக்கும் தெரியும்" என்று இருக்கிறேன்.. விலை குறைக்கிறானா பார்க்கலாம்...

பட்டேல் என்றவுடன் நியாபகம் வருகிறது. கொஞ்ச நாள் முன்பு வரை, ஹர்திக் பட்டேல் என்றொருவர் பட்டேல் இனத்தவறுக்கு இட ஒதுக்கீடு என்று கத்திக்கொண்டிருந்தார். அவரை இப்போது ஊடகங்களில் காணோம். அவருக்கு பதிலா கன்னையா குமார். அஃப்சல் குரு, வெமுலா அது இது என எல்லார் பெயரையும் இழுத்து கூட்டாஞ்சோறாக்கி டிஃபரண்டாக ஊடகங்களில் தோன்றுகிறார். இவரும் காணாமல் போய்விடுவார். நாளை, வேறொரு மொன்னையா குமார் வருவார். அல்லது ஒரு சுமார் மூஞ்சி குமார். இப்படி புகழ் வெளிச்சம் படுகிறவனையெல்லாம் வாழ்க்கையில் வெற்றிபெற்றவனாக பார்க்கத்தான் நம் சமூகமும் பழகி இருக்கிறது.

எல்லாம் ஊடக பசி. வேறொன்றும் இல்லை. ரோட்டில் துப்பிவிட்டு, பூச்சிகளுக்கு டிஃபன் போட்டேன் கதைதான். வாழ்க ஜன நாயகம்.

ஆனால், இந்த இழவெடுத்த ஊடக பசியில், அடிப்படையிலேயே குளறுபடியாய் இருக்கிறவன்கள் எல்லாம் கொஞ்சம் புகழ் வெளிச்சத்துக்கு அவ்வப்போது வந்துவிட்டு, அதை வைத்தே வாழ்வதைத்தான் பார்க்க சகிக்கவில்லை.

பின் நவீனத்துவ மற்றும் இருத்தலிய உலகில் இதையெல்லாம் சத்தம் போட்டு சொல்லவும் பயமாக இருக்கிறது. "ஏன் அவனெல்லாம் வாழக்கூடாதா?" என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்து விடுவார்கள். எதற்கு வம்பு!!


No comments: