Wednesday, 2 March 2016

சிராய்ப்புகள், கீறல்கள்

சிராய்ப்புகள், கீறல்கள் 
சென்னை அம்பத்தூர் தான் என் வீடு என்பதால் இன்று தினமலரின் பின்வரும் இந்தச் செய்தி ஈர்த்தது.இதெல்லாம் 'Anything is fair in love and war' கேஸ் தான்.

இதில் பாதிக்கப்பட்டது மணமகன் என்று நீங்கள் நினைத்தால்.............. So Sad!!

22 வயதிலேயே பிறந்த வீடு, புகுந்த வீடு என இரு வீட்டாரின் எதிர்ப்பையும் சம்பாதித்து எதிரிகளாக்கிகொள்வதால், காதலன் ஒருவனே அந்த பெண்ணின் சகல எதிர்பார்ப்புகளுக்கும் ஒரே இலக்காகிவிடுகிறான். இது ஆணின் பக்கம் ரிஸ்க்.

பெற்றவர்கள், புகுந்த வீடு என இரு குடும்பங்களையும் எதிர்த்து காதலனை நம்பி செல்கையில் , காதலன் உத்தமனாக இருந்தால் தான் போச்சு. இல்லையென்றால், அடுத்த நொடி மும்பையின் சோனாகாச்சிக்கோ, கொல்கட்டாவில் எதோவொருகாச்சிக்கோதான் கொத்தடிமையாக போக வேண்டி வரும். இது பெண்ணின் பக்கம் இருக்கும் ரிஸ்க். உத்தமன் ஏன் ஓடவேண்டும்? காதலியை இன்னொருத்தன் மணம் செய்யும் வரை ஏன் விடவேண்டும்? என்கிற கேள்வியெல்லாம் பகுத்தறிவுக்கானது.

அப்படியானால், சேஃப் யார் என்றால், மணமகன் தான். இந்த இரண்டு ரிஸ்குமே இல்லை. தலை முழுகிவிட்டு அடுத்த மணமகளை தேடி முறையாக செட்டில் ஆகலாம்.

ஆனால், நம்மூரில் வெகு ஜனத்தின் பார்வை என்பது மொன்னையானது. மணமகனை ஏதோ இழந்தவன் போலவும், துர்பாக்கியசாலி போலவும், ஓடியவனை வெற்றியாளன் போலவும், ஓடிய பெண்ணை 'சரியான ஆணை தேர்வு செய்தவள்' போலவும் அர்த்தப்படுத்துவார்கள்.

ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால், புதிதாக வரும் பெண்/ஆண், மணமகனின்/மணமகளின் முதல் திருமண கசப்பான அனுபவத்தை புரிந்துகொள்ளும் முதிர்ச்சியுடன் இருக்க வேண்டும். சொல்வது எளிது.

பெண்களும் இப்போதெல்லாம் அதிகம் சம்பாதிக்கிறார்கள். 'இரண்டாவதாக' செல்ல யோசிக்கிறார்கள். ' நான் ஏன் ஒருத்தருக்கு இரண்டாவதா போகணும்?' என்கிற கேள்வி மேலோட்டமான பார்த்தால் நியாயமாக தெரியலாம். ஆனால், இந்த கேள்வி தான் பெண்களுக்கு வேறு பல பிரச்சனைகளை தந்துவிடுகிறது. 'இரண்டாவது' என்றாலும் மணமகன், பொருளாதாரம், கல்வி, உயரம், வாழ்க்கை முறை, குடும்ப பின்னணி என எல்லாமும் பொருந்துகிற பட்சத்தில் அந்த மணமகனை தேர்வு செய்வதால் 'இரண்டாவது' என்பது காலப்போக்கில் ஒரு குறையாவதில்லை. அது ஒரு விபத்தாக ஏற்கப்பட்டு, மறக்கப்பட்டுவிடுகிறது.

மாறாக, பொருளாதாரம், கல்வி, உயரம், வாழ்க்கை முறை, குடும்ப பின்னணி என எல்லாமும் பொருந்துகிற பட்சத்திலும் 'இரண்டாவது' இடத்திற்கு போக மனம் ஒப்பாமல் போவதால்,  பொறுத்தமான வரன்களுக்காய் 30 வயது தாண்டியும் காத்திருக்க வேண்டி வருகிறது. 32 வயது ஆணுக்கு 27 வயது பெண்களே தயாராய் இருக்கும்போதும் ' 27 வயதுள்ள பெண்களே கிடைக்கும் போது நான் ஏன் 30 வயதுப்பெண்ணை தேர்வு செய்ய வேண்டும்?' என்கிற கேள்வியை அவனும் எழுப்புகிறான். இதனால் கால தாமதம் ஆவதுடன், பொறுத்தமான மணமகன்களை இழக்க நேரிடுவதால், 'முதலாவது' என்று பொறுத்தமற்ற மணமகனிடம் சென்று சேர்வதில் முடிகிறது. பிறகென்ன, வேலியில் போன ஓணானை வேட்டிக்குள் விட்ட கதைதான்.

'முதலாவது' , 'இரண்டாவது' என்பதெல்லாம் பிரச்சனை இல்லை.

பொருளாதாரம், கல்வி, குடும்பப்பின்னணி, சிந்தனா முறை போன்றவைகளிலெல்லாம் பொறுந்துகிற வரன்களின் எண்ணிக்கை குறைவு. இதுதான்  காரணம்.  இதெல்லாம் கணவன் மனைவி உறவில் சந்தோஷத்திற்கும், நிம்மதியான வாழ்க்கைக்கும் மிக மிக பிரதானம். இவைகளை 'இரண்டாம்'/'முதலாம்' இடங்களுக்காக விட்டுத்தருவது பெரும்பாலும் பிரச்சனையில் தான் போய் முடிகிறது.

பங்களூர் கோகுல் போன்றவர்கள் எல்லாம் அப்படி வந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.

இன்றைய அவசர யுகத்தில் நாம் ஒதுங்கி போனாலும், தறிகெட்டு வளர்ந்தவர்களால் நமக்கும் லேசாக சில சிராய்ப்புகள், கீறல்கள் நேரவே செய்கிறது. பொருளாதாரம், கல்வி, சிந்தனாமுறை போன்றவைகளை, இந்த லேசான சிராய்ப்புகளுக்காகவும், கீறல்களுக்காக புறக்கணித்தால் நல்ல வரன்களை மற்றவர்களுக்கு தாரைவார்த்ததாகத்தான் அர்த்தமாகி விடுகிறது.

பொருளாதாரம், கல்வி, குடும்பப்பின்னணி போன்றவைகளுக்கெல்லாம் ஒரு உழைப்பும், அர்ப்பணிப்பும், திட்டமும், ஒருங்கிணைப்பும் தேவைப்படுகிறது. இவைகளை காலத்தே செய்து பெருக்கிக்கொண்டவர்களை அந்த உழைப்பும், அர்ப்பணிப்பும், எப்போதும் காவல் காக்கும், துணை இருக்கும். இதை இரு பாலரும் புரிந்துகொண்டாலே போதும்.

No comments: